Sunday, August 7, 2022

தாயும் மகளும்


நான் வந்த வாடகை  டாக்சி இறங்க வேண்டிய இடம் வந்ததும் ஓரமாக நின்றது.

கண்களை இடுக்கிக்கொண்டுபடித்து முடித்தேன்.

“பத்மாவதி முதியோர் இல்லம்” இந்த பெயர்ப்பலகை என்னை வரவேற்கிறதா?பயமுறுத்துகிறதாபுரியவில்லை.அறுபது வயது வரை குடும்பத்தைவிட்டு தனியாக இருந்ததேயில்லை.மனதில் பதற்றமாக இருந்தது.


காரில் கம்மென்று மணம் வீச வேண்டும் என்று வாசனை திரவியத்தைகாருக்குள்தெளித்திருந்தார் டிரைவர்.  ரோஜாவின் வாசம் என் நாசியில் புகுந்து மூளையில் எதையோ தொட்டு எழுப்பியது.


 ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த  என் தங்கையின மகன் ,பின் சீட்டில் இருந்த என்னைத்திரும்பி பாரத்தான் . நான் கண் ஜாடைக்காட்டி.னேன்.


அவனுக்குப்   புரியாமல் “என்ன பெரியம்மா ?“ என்றான். வயதான டிரைவர் என்னை திரும்பிப் பார்ததார்.


கிளம்புவதற்கு   இரண்டு மணிநேரம் முன்னர்தான் அவனிடம்   நான் படித்து படித்து சொன்னேன். முதியோர் இல்லத்தில்  இருப்பவர்களுக்கு  எனக்கு குழந்தைகள்  இல்லை  என்ற உண்மை தெரிந்துவிடக் கூடாது என்றும் என் தங்கையின் மகனான அவன் என் சொந்த  மகன் போலத்தான் அவர்கள் எதிரில் பேச வேண்டும் என்றெல்லாம் சொல்லித்தான் அழைத்து வந்திருந்தேன்.

எனக்கு யாருமேயில்லை என்று அவர்கள் நினைத்துவிடக் கூடாது என்று நினைத்தேன்.


ஆனால் அவனோ வந்ததும் வராத்துமாக  “பெரியம்மா” என்று கூப்பிட்டுவிட்டான்.

ஒருவேளை காருக்குள் பேசியது வெளியில் கேட்டிருக்குமோ?பதட்டமாக இருந்தது.


நான் வலியமுயற்சிஎடுத்து என் உதிர்ந்துவிட்ட கடவாய் பற்களின் ஈறுகளை அழுந்த கடித்து என்முகத்தை இறுக்கமாக்கி கோபத்தை வெளிக்காட்ட முயன்று தோற்றுவிட்டேன்அந்த ஏசியிலும் நான் அணிந்திருந்த ப்யூர் காட்டன் புடவை வழக்கத்திற்கு மாறாக கொதிப்பது போலிருந்தது.


“சாரி பெரியம்மா இல்ல… வந்து… அம்மா.” என்று  என் கோபத்தை பார்த்ததும் மீண்டும்  தடுமாறினான்  அவன்.

  

டிரைவர் வித்தியாசமாக பார்ப்தை பொருட்படுத்தாமல்

“இடம் வந்திடுத்து போலிருக்கேப்பா.”  என்று எரிச்சலான குரலில்  பேச்சை மாற்றினேன். அதை

புரிந்து கொண்டவனாய் நான் ஏற்கனவே அவனிடம்கொடுத்திருந்த மொத்தபணத்தில் டிரைவருக்கு கொடுக்கவேண்டிய பணத்தை மட்டும் எண்ணிக் கொடுத்தான்.பிறகு

கார் டிக்கியிலிருந்த  என்னுடைய  பெட்டிகளை தூக்கிக் கொண்டு உள்ளே போனான்.


என்னை அங்கே சேர்த்துவிட்டு சற்று சோகமானான்  அவன்.   

உண்மையிலேயே பிரிவு ஆற்றாமை போலவே இருந்தது.


பணியாளர்கள் என்னைப் பார்ப்பதை புரிந்து கொண்டேன்.

ஏற்கனவே நாங்கள் பேசி வைத்திருந்தபடி அவனிடம்   பேச ஆரம்பித்தேன்.


“உன் பொண்டாட்டி   வேற ஒரே அழுகையா அழறா. அதனால தான் இன்னிக்கு அவளையும் உன் பொண்ணையும் வரவேண்டாம்னு சொன்னேன்.நீயும் அழுதா எப்படி?


என் கடம முடிஞ்சிது நான் ஓய்வெடுக்க இங்கவந்துட்டேன்.

அழாதேடா , வீடியோ கால் பேசலாம்ஒண்ணும ப்ரசனை இல்ல.தைரியமாஇருக்கனும்.

. “ என்று  உரக்கப் பேசினேன்.


பிறகு அவனுக்கு மட்டும் கேட்கும்படி குரலை தாழ்த்தி ரகசிமாக  சொன்னேன்.

“உங்கப்பா போய் ஒரு வருஷமாச்சு.ஒங்கம்மாவ நன்னா பாத்துக்கோ.அவ ஒரு சொகமும் அனுபவிக்கல.கிராமத்துல 

அவள உங்க பாட்டி படுத்தி எடுத்தா. ரொம்பக் காலம் வெறகடுப்புல தான் தளிகை பண்ணின்டு இருந்தா, பாவம்.எதோ உன்னால கொஞ்சமாவது  சுகப்பட்ட்டும். “              சொல்லிவிட்டு உள்ளே போகத் திரும்பினேன்.

அவனும் வெளியே போனவன் மீண்டும் ஓடிவந்தான்.


இல்லத்திற்கு கட்டியது போக மீதமிருந்த பணத்தை எடுத்து என் கையில் திணித்தான்.

அது என் பணம்தான் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்

“எதுக்குடா இதெல்லாம்” என்று சொல்லிக் கொண்டே வாங்கிக் கொண்டேன்.


ஆனால் அவனோ.  “ஆறு மாசம் கழிச்சி வருவேன் நீ கண்டிப்பா ஆத்துக்கே வந்துடனும்” என்று   உணமையான பாசத்தோடு  சொல்லிவிட்டு ப்போய்விட்டான்.

நல்லவன் தான் பாவம் என்று நினைத்துக் கொண்டேன்.


என்னையே பார்ததுக் கொண்டிருந்த பணியாளர்கள்  அனைவரும் இவனை  என் மகன் என்றே நினைத்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் செல்லும் அவனை மரியாதையுடன் பார்த்தது திருப்தியாகவும்  பாதுகாப்பாகவும் இருந்தது.

அவன் போனதும் ஒரு பணியாளர்  துணையுடன் உள்ளே வந்தேன்.


அந்த வராண்டாவில் திருப்பதி பாலாஜியும் பத்மாவதியும் பெரிய போட்டோவில் பெரிய பெரிய மாலைகளுடன் ஊதுவத்தி மணக்க இரண்டு பக்கமும ஆளுயர குத்து விள்க்குகள் ஒளிர கருணை பொங்கும் கண்களுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்கள். கைகுவித்து வணங்கினேன்.


இது தான் prayer hall என்ற அந்தப் பணியாளர் மெலிந்த தேகத்துடன்  இருந்தாள்.இறுக்கமான முகம். 

அடர்த்தி குறைந்த ஆனால் நீளமாக வளர்ந்திருந்த தலைமுடியை மழமழ வென்று வாரி பின்னலிட்டிருந்தாள். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு அதன் மேல் விபூதியும் அணிந்திருந்தாள்.உச்சியில் குங்கும்ம் வைத்திருந்தாள்.

மூக்கின் இடது பக்கத்தில் மருவே மூக்குத்தி போலிருக்க மாநிறமாய் இருந்த அந்த பணியாளருக்கு முப்பதுக்கு மேல் வயதிருக்கும்சுடிதார்அணிந்து கொண்டு அதற்குமேல் வெளிர் நீல நிறத்தில் காப்பக பெயர் பதித்த சட்டையும் அணிந்திருந்தாள்.


நன்றாக நடந்த என்னை தாங்கிபிடித்துக் கொண்டாள்.

நான் சிரித்து கொண்டே “ உன் பெரென்னம்மா என்றேன்.”

 “என் பேரு விஜயலஷ்மிங்கம்மா” என்றாள்.

“ விஜயலஷ்மி என்னால நல்லா நடக்க முடியும் எனக்கு எந்த நோயுமில்ல” என்று

நான் சொன்னதும் என் கைகளை பிடித்திருந்த அவள் கைகள்விலகினாலும் அவள் கண்களில் ஜாக்ரதை உணர்வு பரவி நின்றது.அவளுடைய பொறுப்புணர்ச்சி என் மனதை கவர்ந்தது.


“்அம்மா இங்க நீங்க சுதந்திரமா இருக்கலாம்.உங்களுக்கு பிடிச்ச உணவை 

முதல் நாளே சாயந்தரம் அஞ்சு மணிக்குள்ள சொல்லிடுங்கம்மா.மறுநாள் பரமாறுவோம்.

வெந்நீர் எப்பயும் கிடைக்கும்.இங்க உங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.

அவங்க கூட வெளில போகலாம்.ஆனா முன்னாடியே போற டைம் வர்ற டைம் லொகேஷன் சொல்லிடுங்க .

கொஞ்சம் லேட்டானாலும் நாங்க உங்கள தேடி வருவோம்.நீங்க உங்க

உறவுக்காரங்க வீட்டுக்கு போகலாம்.எத்தனை  நாள் தங்கறீங்கனு சொல்லிடுங்க.

ஒருவேளை மாற்றங்கள் இருந்தாகொஞ்சம் முன்னதாவே சொல்லிடுங்க.

பேசிக்கொண்டே வந்தவள்.டைனிங் ஹாலுக்குள் அழைத்துச் சென்றாள்.

வரிசையாக கல்யாண பந்திபோல நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டிருந்தன.

அங்கே சுவற்றில்  ராதையும் கண்ணனும் ந்ந்தவன்தில் அமர்ந்து கொண்டிருப்பதை பொலவும் கன்றுக்குட்டி கண்ணனின் பாத்த்தில் தலைவைத்து ராதையின் மடியில் படுத்திருப்பது போலவும் இருந்த பெரிய  படம் ரொம்ப அழகாக இருந்தது.

“உங்களுக்கு விருப்பமானால் இங்கு வந்து சாப்பிடலாம் அல்லது உங்கள் அறையிலேயே கூட சாப்பிடலாம் என்றாள்.அங்கிருந்து வெளியே வந்தவளை பின்பற்றி நடந்தேன் அங்கே வரிசையாக  கழிப்பறைகள் இருந்தன.அங்கே நின்றாள்.


“அம்மா இங்கே நிறைய பாத்ரூம்கள் இருக்கு.இது பெண்களுக்கான பகுதி.என்று சொல்லிவிட்டு என் அறைக்குள் என்னை அழைத்து வந்தாள்.

இதோ,ஒரு நிமிஷத்துல வரேம்மா“என்று சொல்லிவிட்டு போனாள்.


எனக்கான அறையில் மேலே பேன் ஓடிக் கொண்டிருந்தது. ஜன்னல் திறந்தே இருந்தது.ஜன்னலுக்கீழே மெத்தை.   

ஜன்னல் வழியாக டைனிங் ஹால் தெரிந்தது. 

மெத்தையும் வெளிர் நீல நிற உரை போடப்பட்டிருந்தது.சாப்பிட படிக்க வசதியாக பக்கத்தில் சிறு டேபிள்.  என் துணிகளை வைத்துக் கொள்ள அலமாரி.  கூப்பிட்ட குரலுக்கு பணியாளர்கள்இருக்கிறார்கள்.

இது போதுமே எனக்கு.


என் தங்கையின் மகன் ஏசி அறை புக் செய்ய விரும்பினான்.நான் தான் தடுத்துவிட்டேன்.ஏசி எனக்கு ஆகாது.

வீட்டில்  பேனையே அதிக வேகமாக சுழல விட்டால் பிடிக்காது.மெல்லிய இதமான காற்று இருக்க வேண்டும் எனக்கு.


இதற்குமேல் வேறென்ன தேவை


வாழ்க்கையை எளிமையாக வாழ்ந்தே பழகிவிட்டது.

கல்லூரி முடித்ததுமே என்னை விட பத்து வயது மூத்தவரான 

அரசாங்க வேலையிலிருந்தவரைத்  திருமணம் செய்து வைத்தார்கள்.

புகுந்தவீடும் கொஞ்சம் வசதிக்குறைவு தான்.

மாமனார் இல்லை. அவருடைய இரண்டு  தங்கைகளுக்கும் கல்யாணம், சீமந்தம் ,பிள்ளைபெறவு என்று பணம் கரைந்துவிட்டது. வாடகை வீட்டிலேயே வாழ்க்கை ஓடிவிட்டது.


நாங்கள் சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டோம்.

எனக்கு ஒரு தங்கை.ஒரு தம்பி.


என் கணவருக்கு ரிடையர்மென்ட் ஆகி கிடைத்த பணம் தான் அவரது  ஆஸ்பிட்டல் செலவுக்கு பயன்பட்டது.மீதிப் பணம் என் பேரில் வங்கியில் பத்திரமாக இருக்கிறது.

உறவினர்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பதால் என் சொற்ப பணமோ ஆதரவோ அவர்களுக்கு த்தேவைப்படவில்லை.


சொல்லப்போனால்  எனக்கென்று யாருமே இல்லை..பென்ஷன் பணத்தை இங்கு கொடுத்துவிட்டு மருத்துவசெலவுக்கு என்சேமிப்பை நம்பியிருக்கிறேன்.மருத்துவ செலவே வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டும் இருக்கிறேன்.


இனி வாழ்க்கையின் எஞ்சிய வருடங்களை புது மனிதர்களுடன் இந்த நான்கு சுவற்றுக்குள் கழிக்க வேண்டும் என்றஎண்ணம் சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது.ஆனால்…

வேறுவழியில்லையே….

 

யோசித்துக் கொண்டிருந்த போது…


அம்மா” என்ற குரலுடன் திறந்திருந்த கதவை தட்டினாள்  விஜயலஷ்மி.நான் வெளியே வந்தேன்.

கொஞ்ச நேரம் தோட்டத்துக்கு ப்போகலாமா? அங்க நிறைய பேர் இருக்காங்க. உங்களுக்கும் அவங்களோட பேசினா நல்லா இருக்கும்.” சொல்லிவிட்டு உதடுகளைஇறுக்க மூடினாள்.வார்ததைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசுவது அவளது சுபாவம் போலும்.

சரிம்மா.அதுவும் நல்லதுதான்”என்றேன்.   


விஜயலஷ்மியின் வழிகாட்டுதலில் மீண்டும் கழிப்பிடங்கள் குடிநீர் குழாய்கள் இவற்றைத் தாண்டியதும்  சற்று பெரிய தோட்டம்.இரண்டு பக்கமும் மாமரங்கள் வேப்பமரங்கள் தென்னை மரங்கள் என அடுத்தடுத்து ஒரு ஒழுங்குடன் நின்றிருந்தன. 


பறவைகளின் ஒலிகள்.இதமானகாற்று வீசியது. நடுவில் சிமெண்ட் நடைபாதை.அதன் முடிவில் விநாயகர் கோவில். அந்த கோவிலின் வாசலில் சிறுமண்டபம் இருந்தது. மண்டபத்தில் வலதுபக்கத்திலிருந்த இரண்டு தூணகளுக்கு நடுவே வெண்கலமணிகளை    ஒரு ஓரமாக   கைக்கு எட்டும் தூரத்தில்  இரும்புச்சங்கிலியில் கோர்த்து  தொங்கவிட்டிருந்தார்கள்.  


காற்றில் அசையும் போது மணியோசை கேட்டது.அருகே மருதாணிச்செடி கம்மென்று வாசணை வீசியது.  மல்லிகை ரோஜா பூச்செடிகள் சூழ அந்த இடம் ந்ந்தவனம் போல இருந்தது. அம்மா,இங்ககொஞ்ச நேரம் இருங்க எதாவது வேணும்னா கூப்பிடுங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்  விஜயலஷ்மி.


என்னைப்போல பலர் அங்கிருந்தனர்.……அங்கே இருந்த பெஞ்சில் 

போய் உட்காரந்தேன்.



என்னைப் பார்த்து ஒரு சிலர் சினேகமாக சிரித்தார்கள்.விசாரித்தார்கள்.

என் கணவர் இறந்த பின் என் ஒரேமகன் அமெரிக்கா போகுமுன் என்னை இங்கு வந்து சேர்த்தான் என்று அறிமுகப்படுத்தினேன்.

அவர்கள் ஆளாளுக்கு  ஒரு கதை சொல்ல ஆரம்பித்ததில்  ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை.



இரண்டு முறை சற்று உடம்பு சரியில்லாதபோதும்த ம்பியை  தொந்தரவு செய்யக் கூடாதென்று நான் அவனுக்கு போன் செய்யவில்லை.

ஆனால் விஜயலஷ்மியை இன்னும் கொஞ்ச நேரம் இருக்கசொன்னேன்.

தன் கணவனிடம் கேட்டுவிட்டு வருவதாக சொன்னாள். அவன் சம்மதித்துவிட்டான் போலிருந்தது.ஆறு  மணிக்குப் போனவள்அ ரைமணியில் திரும்பி வந்தாள்.


இரவு  ஒன்பது மணிவரை இருந்தவள் மறுநாள் அதிகாலையிலேயே நான்  கேட்காமலேயே வந்து என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.இரண்டு மூன்று நாட்கள் அவளை தொந்தரவு செய்தேன்.பிறகு எனக்கு உடம்பு   சரியாகிவிட்டது. அதற்காக அவளிடம் பணம் கொடுத்தேன்ஆ.னால் அவள் வங்கவில்லை.எங்கம்மாக்கு செஞ்ச மாதிரி நினைச்சிக்கறேன் என்று சொல்லிவிட்டாள்.


விஜயலஷ்மியின்  மீது இனம்புரியாத பாசம் எனக்குள் ஏற்பட்டது.

அநாவசியமான ஒரு பேச்சு பேசமாட்டாள்.சுறுசுறுப்பாய் இருப்பாள்.

என்னைத் தவிர இன்னும் ஐந்து முதியவர்களையும் அவள் பராமரிப்பது பிறகுதான்   எனக்குப் புரிந்தது.



“இந்தாம்மா விஜி….எத்தன தடவ கூப்பிடர்து…சுலபத்துல வரமாட்டேங்கறயே…

கத்தி கத்தி தொண்ட தண்ணியே வத்திப் போகுது…” என்று மற்றவர்கள் குறைகூறும் போதும் அவள் முகம் கோணாது.எப்போதும் போல அதே

பரிதாபமாகவும்அவள் முகம் காட்சியளித்ததே இல்லை.ஆனால் அவர்கள் இட்ட வேலையை தவறாமல் செய்வாள்.


இந்த வயதில் இவ்வளவு சகிப்புத் தன்மையா? எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

வயதானவர்களை பராமரிப்பதற்கு அர்ப்பணிப்பு உணர்வு தேவை.அது அவளிடம் நிறையவே இருந்தது.

காலையில் எட்டுமணிக்கு வருவாள்.மாலை ஆறுமணிக்கு  டாணென்று ஓடிப்போய் விடுவாள்.குழந்தைகளுக்கு சமைக்க வேண்டுமாம்.


ஞாயிற்றுக்கிழமையும் அதே நேரத்திற்கு எக்ஸ்ட்ரா வரும்படி கிடைக்குமே என்று வருவாள்.


கணவன் வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்வானாம்.  

ஆக வாரத்திற்கு ஏழு நாளும் உழைக்கும் உழைப்பாளி அவள்.

ஆனால் தினமும் மஞ்சள் பூசி குளித்துவிட்டு நெற்றியில் அடர்த்தியான மெரூன்கலர் ஸ்டிக்கர் பொட்டுக்கு மேலே விபூதிக் கீற்றும்  துலங்க வருவாள்.கைகளில் பலாஸ்டிக் வளையல்கள் மின்னும்.

காலில் சலங்கை இல்லாத கொலுசும் சிறிய சலங்கை வைத்த மெட்டியும் போட்டிருப்பாள்.

ஆனால் நடக்கம்போது சத்தமே கேட்காது.


வேறு பல பணியாளர்களும் இன்முகத்துடன்  வேலை செய்தனர்.



 ஆனால், அவள் பக்கத்திலிருக்கும்போதெல்லாம் என்னுடைய தனிமையை விரட்டினாள்.

அதிகம் பேசாமல் பார்வையிலேயே புரிந்துகொள்வாள்.நல்ல குடும்பப்பாங்கான பெண்.

மூன்று மாதங்களிலேயே என் மனம் அவள்பின்னால் ஓடிவிட்டது.அவளுடைய சிறிய புன்னகையை  கூட நான் பெரிதாக மதித்தேன்.


குடும்ப வருமானத்திற்காக இந்த  வேலையில் இருக்கும் கஷ்டங்களை  அனுசரித்துக் கொண்டு அவள் போராடுகிறாள் என்று புரிந்தது.அவளுக்கு பெற்றோரில்லையாம்.

சுமாரான ஆனால் அழுக்கில்லாமால் துவைத்த சுடிதார் தான்அணிந்து வருகிறாள்.


அவள் எல்லோரையும் போலத்தான் என்னிடமும் பழகினாள்.பணம் கொடுத்தால் வாங்க மாட்டாள் அதனால்  என் சக்திக்கு தகுந்தது

எதாவது அவளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.


ஆனால், ஒரு நாள் இரவு உணவு சாப்பிடும் போது என்  பக்கத்து அறையில் இருந்த வயதான பெண்மணியிடம் விஜயலஷ்மியைப் பற்றி நான் பேச ஆரம்பித்தேன். அந்த நேரம் விஜயலஷ்மி வீட்டிற்குப்போய்விட்டாள்.


 அந்த வயதான பெண்மணி சொன்னாள்.

“யாரையும் முழுக்க நம்பிடாத. எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ ” என்றாள்.என்னால் அந்தப் பெண்மணி சொன்னதை ஏற்க  முடியவில்லை.


அன்றைக்கென்று பார்த்து  என் தம்பி வந்தான்.

தன் பெண்ணிற்கு நிச்சயதார்த்தம்திடீரென்று ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று வந்த கையோடு என்னையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.


விஜயலஷ்மி வந்தால் சொல்லும்படி மற்றவர்களிடம்  சொல்லிவிட்டு வந்தேன்.


ஒரு வாரம் ஓடிவிட்டது.நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்துவிட்டது. மீண்டும் இல்லத்திற்கு வருவதற்குமுன்  நான் என் தம்பியுடன் விஜயலஷ்மிக்கு சுடிதார் வாங்க கடைக்கு போனேன்.



“யாருக்கு அக்கா நாலு சுடிதார் வாங்கற” என்று  தம்பி  கேட்டான்..   ஏற்கனவே  விஜயலஷ்மியைப் பற்றி   நான்அவனிடம் சொல்லியிருந்ததால்  “நம்ம விஜயலஷ்மிக்குத் தான்” என்றேன் உரிமையுடன்.


நான் சொல்லி முடிக்குமுன் அந்த கடையிலேயே  விஜயலஷ்மியை பார்த்தேன்.


அவள் என்னை கவனிக்கவில்லை.நான் வேண்டுமென்றே இன்னும் நாலு டிசைன் தேடுவது போல அவளை கவனித்தேன்.


அவளுடன் அவளைவிட  சிறிய வயதில்   ஒரு இளம்பெண் அவள்  இடுப்பில் ஒரு வயது குழந்தையுடன்  வந்திருந்தாள்.


கவனித்துப் பார்த்தபோது விஜயலஷ்மி

குழந்தைக்கு  அவள் துணிவாங்க வந்திருப்பது தெரிந்தது.


“உனக்கு தெரியுமே  ஆறுமாசம் முன்னாடிதான்   நம்ம  பெரிய அத்தை மருமக ரெண்டு குழந்தைங்களயும் தவிக்க விட்டுட்டு கொரோனால இறந்துட்டா. அதான் உன்ன   ரெண்டாந்தாரமா கேக்கறாங்க அத்தை.உன் பதில கேட்க சொன்னாங்க” என்றாள் வந்தவள்.


“அதெல்லாம் பேசற இடமா இது?” என்று கடிந்து கொண்டாள் விஜயலஷ்மி.


“ வேற என்னக்கா பண்றது? நீ தங்கற ஹாஸ்டல் ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்கள உள்ள விட மாட்டாங்க.வெளிலதான் உன்ன பாக்க முடியர்து


“போன மாசம் ஊருக்கு நீ வரலயாம்.அதான் போன்ல அத்தை  எங்கிட்ட சொன்னாங்க. உன்ன நினைச்சி ரொம்ப கவலயார்க்கு.அப்பா அம்மா உயிரோட  இருந்திருந்தா    ஊருக்கு போயிருப்ப.எனக்குனு நீதானேக்கா இருக்க”

விஜயலஷ்மி பதிலே சொல்லாமல் ஒரு சட்டையை எடுத்து குழந்தையின் மேல் வைத்து க்கொண்டே

ஒரு வார்த்தை கூட அவள் கேட்டதற்கு விஜயலஷ்மி  பதிலே பேசவில்லை.ஆனால் 

“இந்த துணி பிடிச்சிருக்கா” என்று பேச்சை மாற்றினாள்.


“தேங்க்ஸ்  அக்கா. இவனோட   மொத பொறந்த நாளைக்கு  உன் ராசியான கையால.

துணி வாங்கி குடுத்திட்டக்கா,  நீ  வேலைக்குப் போய் எனக்கு கல்யாணம் செஞ்சி வச்சதே போதும்.இனிமே பணத்தை அநாவசியமா  செலவு பண்ணாதக்கா.

உன்னோட எதிர்காலத்துக்காக சேத்து வச்சிக்கோக்கா.”கண்களை துடைத்துக் கொண்டே அக்கறையுடன்   சொன்னாள் வந்த பெண்.

“என் எதிர்காலமா?

“  எனக்குனு இனி  யார் இருக்கா? புள்ளயா குட்டியா?      

உங்களுக்கு  காசு  செலவு பண்ணாம வேற எதுக்கு நான் உழைக்கிறேன்.

 என் ஹாஸ்டல் போன்ந ம்பர் வெச்சிருக்கல்ல?

ஒம்பதரைக்குள்ள போலனா என்னயே  உள்ள விட  மாட்டாங்க.

நான் உங்கள  பஸ் ஏத்தி விட்டுர்றேன்.சீக்கிரம் கிளம்பு.

ஊருக்குப் போனதுமே  போன் பண்ணனும் மறக்காம”

 என்று சற்று உரக்கவே பேசி விட்டு யதேச்சையாகத்  திரும்பிய விஜயலஷ்மி   மிக அருகில்  என்னைப் பார்த்ததும் அப்படியே மிரண்டுபோய் நின்றுவிட்டாள்.


நான் அவளைப் நேருக்கு நேராகப்  பார்த்தேன்.

 பக்கத்தில்என் தம்பி     இருந்ததால்    எதுவுமே பேசாமல்   துணி பார்சலை எடுத்துக் கொண்டு  என் தம்பியுடன் பத்மாவதி  இல்லத்திற்கே வந்தேன்.


 அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.

வெகு நேரம் யோசித்தேன்.

மனதில் ஏமாற்றம் தோன்றியது.

 எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒரு அம்மாவிற்கு செய்வது போல சரியான நேரத்தில் 

எனக்கு அவள் செய்த உதவிகளை மட்டும் பலமுறை  நினைத்துப் பார்த்தேன்.விஜயலஷ்மி மிக உயர்ந்த மனம் படைத்தவள்.

 அவளுடைய சொந்த விஷயங்களை பற்றி ஆராய்ச்சி செய்ய நான் யார் என்று நினைத்துக் கொண்டேன்.


மறுநாள் எப்பொழுதும் போல வந்துவிட்டாள் விஜி.

என் அறைக்குள் வந்தவள் முகத்தில் வழக்கமான களையே இல்லை.ஏதோ குற்றவுணர்ச்சி தெரிந்தது.


“விஜயலஷ்மி இதை உனக்காக வாங்கினேன்.” என்று சொல்லி நான் வாங்கிய  துணிகளை  அவளிடம்  கொடுத்தேன்.  வேண்டாம் என்று மறுக்காமல்இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டாள்.

பிறகு என்ன நினைத்தாளோ?

“அம்மா,.உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசனும் “என்றாள் தயக்கத்துடன்.

“சொல்லும்மா “ என்றேன் நான் உண்மையான அக்கறையுடன்.


“என் தங்கச்சி பொறந்ததுமே என்அம்மா இறந்துட்டாங்க.எனக்கு அப்போ பத்து வயசு. அப்பா கூலி வேலை செஞ்சாரு.  தனியா கஷ்டபட்டு    என்ன   பத்தாம் க்ளாஸ் வரைக்கும் படிக்க வச்சாரு. அதுக்குமேல வெளியூர் போய்படிக்க வசதியில்ல.அதனால வீட்டு வேல செய்ய போய்ட்டேன்.

பதினெட்டு வயசு முடிஞ்சதும்   கடன வாங்கி   எனக்கு  கல்யாணம் செஞ்சு வெச்சாரு அப்பா”


ஆனா…

ஆறு வருஷம் ஆகியும்  எங்களுக்கு குழந்தை பிறக்கல.

டாக்டர் எனக்கு  தான்  குறையிருக்குனு சொன்னாங்க. ட்ரீட்மெனட் குடுத்தா கண்டிப்பா குழந்தை பிறக்கும்னு சொன்னாங்க.ஆனா,

எங்க மாமியார் வீட்டுல எங்க அப்பாதான் ட்ரீட்மென்ட்க்கு ஆகற முழு செலவும் குடுக்கனும்னு ஒரே டார்ச்சரபண்ணாங்க.


எங்கப்பா ஏழை.என் தங்கச்சிக்கு  வேற கல்யாணம் பண்ணனும்.

அவரால என்ன செய்ய முடியும்.யோசிச்சு பாத்தேன்.

வேற வழியில்லாம என் புருசனை நான் விவாகரத்து பண்ணிட்டேன். அந்த சின்ன வயசுலயே என் வாழ்க்கை இப்படி போயிடுச்சேன்ற  வருத்ததுல அப்பா மாரடைப்புல இறந்துட்டாரு.

என் தங்கச்சிய காப்பாத்தனுமே.அதனால

பழசயெல்லாம் கெட்ட கனவா நினைச்சி மறந்துட்டு  உழைச்சி கௌரவமா வாழனும்னு முடிவு செஞ்சேன்..

கிராமத்துல கல்யாணத்துக்கு. முன்னாடி  போஸ்ட் மாஸ்டர் வீட்டுல    நான் வீட்டு வேலசெஞ்சுகிட்டிருந்தேன். அவரோட  சம்சாரம்தான்  என் மேல இரக்கப்பட்டு  அவங்களுக்கு தெரிஞ்சவங்க மூலமா  இந்த வேலைல சேத்துவிட்டாங்க. 

முதல்ல 

ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து என்  தங்கச்சிய கூட வச்சிக்கிட்டு அவள ப்லஸ் டூ வரை படிக்க  வெச்சேன்.டெய்லரிங் க்லாஸ் அனுப்பினேன்.அவ விரும்பினவனுக்கே கல்யாணமும் செஞ்சு வச்சேன்.அவ கல்யாணம் முடிஞ்சதும் நான்   ஹாஸ்டலுக்கு வந்துட்டேன்.


ஏற்கனவே இரக்கமில்லாத ஒரு    குடும்பத்துல நுழைஞ்சி  என் மீது உயிரையே வெச்சிருந்த  அப்பாவை இழந்துட்டேன்.

இனி இன்னொரு திருமணத்தை செய்யர்துக்கு பதிலா இங்கே என்னைப் போலவே உறவுகளை பிரிஞ்சி வாழறவங்களுக்கு  பணிவிடை செய்து இதுல வர்ற பணமும் மனநிறைவுமே போதும்னு நினைக்கிறேன்மா.


விவாகரத்து ஆனவளா வெளில காட்டினா ஆண்களோட தொந்தரவு வரும்னு நினைச்சித்தான் நான் பொய் சொல்லிட்டு இருக்கேன்மா.

என்ன மன்னிடுங்கம்மா.”

 மெல்லிய குரலில் தெளிவாகப் பேசினாள்.


இவளைப் போல தானே நானும் என்  மகன் அமெரிக்காவில் இருப்பதாக பொய் சொல்கிறேன்.

கணவன்  மற்றும் குழந்தைகள் இருப்பதாக அவள் பொய்  சொன்னதில்  அவளுக்கு  ஒரு பாதுகாப்பும்இருப்பது புரிந்தது.

“ நீ எந்த தவறும் செய்யலம்மா.எதுக்கு   மன்னிப்பு கேட்கனும்.


நாமே  ரெண்டு பேருமே ஒரே  நிலைமைல தான் வாழறோம்மா.

யாருக்கும் பாரமா இல்லாம

நம்மை காப்பாத்திக்கனும்னு நாமே   ஒரு பாதுகாப்பு சுவரை எழுப்பிட்டு அதுக்குள்ள வாழறோம்.

எனக்கும் குழந்தைகள் இல்ல விஜி.

இனி நீ எனக்கு மகள் நான் உனக்கு தாய்.”

என்று  தாய்மையுடன்  அவள் கைகளை பிடித்துக் கொண்டேன்.இப்போது இருவர்  கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.





No comments:

Post a Comment