“இந்தாத்துல எனக்கு மட்டும் தான் எல்லாக்கடமையும் இருக்கு.
நான் மட்டும்காத்தாலயே குளிச்சுட்டு காபி போடனும்.
“மன்னி,உங்க கையால காபி தர்றேளானு” காலங்காத்தால எழுந்து தன் பொண்டாட்டிய மட்டும் தூங்க விட்டுட்டு
என்ன ஐஸ் வெச்சு வேல வாங்கறேர் உங்க தம்பி.
காபி கடை ஓயர்துக்குள்ளயே நம்ம அப்பா விடுவிடுனு குளிச்சுட்டு வந்து
“ஏம்மா பெருமாள் மோடைல கோலத்தை போடலயேங்கறார்.”
அம்மாதான் விளக்கேத்தி கோலம்போடுவேர்.கால் உடைஞ்சதுலேந்து பாவம் அவரால ரொம்ப நேரம் நிக்க முடியாது.
அதனால அவசர கோலத்தை அள்ளி தெளிச்சுட்டு வெளக்கேத்திட்டு வந்து குக்கரை அடுப்புல ஏத்தி,காய்கறிகளை நறுக்க ஆரம்பிச்சா…உங்கசீமந்த புத்திரி கையில சீப்பும் தேங்காய் எண்ணெயுமா வந்து நிக்கறா.
அவசர அவசரமா அடுப்புல கொழம்பு கொதிக்கிற கேப்புல.அவளுக்கு தல பின்னனும்.
இது கூட பரவாயில்லன்னா..உங்க தம்பி என் சமையல பண்ற கிண்டல் இருக்கே.
பொங்கல் பண்ணினா.. என்ன மன்னி நம்மாத்துல இன்னிக்கு ப்ரேக்பாஸட் கூழான்னு கேக்கறேர்.
நான் தளிகை பண்ற சேப்பங்கிழங்கை ராஜாக்கள் யாராவது பாத்திருந்தா.தன்னோட கோட்டைக்கு மதில்சுவர் கட்றதுக்குஎடுத்துன்டு போயிருப்பாளாம்….அடுப்பே திருப்பதி ஆம்படையானே ஶ்ரீநிவாசன்னு இருக்கற என் பொழப்பு எப்படிலாம் சிரிப்பா சிரிக்கர்து பாருங்கோன்னா…இப்பொழுதெல்லாம் இரவில் ருக்மணி தன் கணவன் வாசுதேவனின் புலம்பிக் கொண்டிருந்தாள்.
உண்மைதான் தம்பியின் பொண்டாட்டி வேலைக்குப் போவதால் ஆத்தில் அவள் ஒரு வேலையும் செய்வதில்லை.பாவம்ருக்மிணிஅவளுக்கு அம்மா அப்பா இல்லை.அண்ணா மட்டும் தான்.
தம்பி பொண்டாட்டியை பார்க்க வரும் அவளுடைய அம்மா கூட ருக்மணியை மதிப்பதில்லை என்று வாசுவுக்கு தோன்றியது.
வாசுவின் அம்மாவிற்கு கால் உடைந்தபோது கூட ருக்மிணிதான் மூன்று மாதங்கள்
சாத்த்தை கலந்து ரூமுக்கே கொண்டுபோய் கொடுப்பது பெட்பேன் வைப்பது எல்லாமே செய்தாள்.
இங்கிருந்து தனிக்குடித்தனம் போகலாம் என்றாலும் அவள் ஒத்துக் கொள்வதில்லை.அவளுக்கு எல்லாரும் வேண்டும் ஆனால்அவளைக் கொஞ்சம் மதிக்கவேண்டும் அவ்வளவுதான்.
முதலில் நாம் மதிப்போம் என்று நினைத்து அவளை சினிமாவிற்கு அழைத்தான் வாசு.
“வேண்டாம்னா படத்துக்குப் போயிட்டு வந்தா தலைவலிக்கும்.அப்புறம் ஆத்துக்குப் போனா தலைய கீழ சாய்க்க முடியுமோ? எல்லாரும் என்னை பிலுபிலுனு பிடிச்சின்டுடுவா”என்றாள்.
அவளைப் பார்க்கவே வாசுவுக்கு பாவமாக இருந்தது.
“சரி வர்ற சனிக்கிழை சாயங்காலம பீச்சுக்கு போகலாம் “ என்றான்.
“வேண்டாம்னா சனிக்கிழமை சாயங்காலம் ராதுவுக்கு அபேகஸ் க்லாஸ் இருக்கு” என்றாள்.
“ஞாயித்துக்கிழமை போகலாமா?” என்றான் வாசு.
“வேண்டாம்னா ஞாயித்துக் கிழமை நாலறை ஆறு பக்கத்துல இருக்க கோயில்ல ராகு கால விளக்கேத்தனும்.”
“அப்போ எந்த கிழமைதான் போறது” என்றான் வாசு.
“ஏன்னா கோச்சிக்கறேள்.வெள்ளிக்கிழமை ஆத்துல வெளக்கேத்திட்டு கிளம்பலாம்” கடைசியாக யோசனை சொன்னாள்ருக்மிணி.
ஒரு வழியாக அந்த வெள்ளிக்கிழமை கிளம்பியபோது
மிகச்சரியாக வாசுவின் அம்மாவிற்கு பீபி அதிகமாகி மயக்கம் வந்துவிட்டது.
ருக்மிணி எல்லாவற்றையும் மறந்துவிட்டு மாமியாரைப் பார்க்கப் போய்விட்டாள்.
அடுத்த வெள்ளிக்கிழமை வாசுவே பிஸியாகி ஆபிஸிலிருந்து லேட்டாக வந்ததால் ப்லான் சொதப்பலாகிவிட்டது.
மூன்று வெள்ளிக்கிழை எந்த ப்ரச்னையும் இல்லை.அதனால் அவளை பீச்சுக்கு அழைத்துக் கொண்டு போனான்..
ஆத்தில் எல்லோரிடமும் நண்பனுக்கு உடம்பு சரியில்லை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்னான்..
பீச்சில் கூட்டமே இல்லை.”சுண்டல் வாங்கலாமா”என்றான் வாசு.
“அவிச்சது வேண்டாம்னா வறுத்த வேர்க்கடலை வாங்குங்கோ “ என்றாள் ருக்மிணி.
அங்கே போய் மணலில் உட்கார்ந்து ருக்மிணியின் மடியில் தலைசாய்த்து அவள் கொஞ்சி கொஞ்சிப் பேசுவதை ரசிக்கவேண்டும் என்று வாசுவின் மனம் துடித்தது.
அவளை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு ஓடினான் வாசு.
“ஏன்னா இந்த இடம் இவ்வளவு நன்னார்க்கே.இனிமே அடிக்கடி அழைச்சுன்டு வாங்கோ” என்றாள் குழந்தையாக.அவளைஉட்கார வைத்து அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு “தினமும் அழைச்சின்டு வரேன்.போதுமா?” என்று அன்பாகபேசினான்.
கடல் காற்றில் அவள் தலைமுடி கலைந்து நெற்றியில் சுருளாக விழுந்தது.
சந்தோஷத்தில் அகல விரிந்த கண்கள்.தீர்க்கமான நாசி.சிரிக்கும்போது தெரியும் சிங்கப்பல்.
ப்யூட்டி பாரலர் போகாமல் பவுடர் பூச்சு கூட இல்லாமல் நிலவொளியில் ஜொலிக்கும் தன் மனைவியைப் பார்த்து பூரித்துப்போனான் வாசு.
தன்னுடைய நீளமான விரல்களால் கடல் மண்ணை அளைந்தாள். வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் நிலவையும்குதூகலமாக பார்த்து ரசித்தாள்.
ச்ச இவ்வளவு நாளா இந்த யோசணை வராம போச்சே என்று தன்னைத் தானே குத்தம் சொல்லிக் கொண்டான்.
“ஏன்னா,அப்பாவுக்கு சுகர் மாத்திரை குடுத்திருப்பாளோ?” மணி ஏழு ஆகிவிட்டதை கவனித்துவிட்டுக் கேட்டாள்.
“எல்லாம் அம்மா பாத்துப்பா”
“அம்மாவுக்கே உடம்பு நன்னா இல்லன்னா.நம்ம குழந்தை வேற சாப்பிடப் படுத்துமே எப்படி சமாளிக்கறாளோ பாவம் அம்மா.” என்று மாமியாரை நினைத்துக் கவலைப்பட்டாள்.
“அம்மா ஏற்கனவே ரெண்டு பிள்ளைகள வளத்தவா அவாளுக்குத் தெரியாதா?
நம்ம ராதுவுக்கும் பாட்டிக்கு முடியலனு தெரியும் அதனால படுத்தாது”
“அப்போ என்ன மட்டும் படுத்தர்தே” குரலில் தாழ்வுமனப்பான்மை சொட்டியது
“நீன்னா அம்மா உங்கிட்ட செல்லம் கொஞ்சர்து” என்றான் வாசு என்ற அவனின் பதிலால் பரிபூரண திருப்தி அடைந்தாள்.
குளிர்வது போல இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கொண்டு வாசுவின் தோளில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
“இன்னிக்கு உங்க தம்பி ஆம்படையாதான் இராத்திரி பாத்திரம் தேச்சாகனும்.பண்ணட்டும் பண்ணட்டும்.அப்போதான் என்கஷ்டம் புரியும்.” ருக்மிணி சந்தோஷமாக சொன்னாள்.
“ஏன்னா கடல் தண்ணில இறங்கலாமா” என்று அவள் கேட்டதற்கு
“தாராளமா” என்றான் வாசு.
செருப்புகளைக் கழட்டிப் போட்டுவிட்டு தண்ணீரிலிறங்கி புடவையை சற்று தூக்கிப் பிடித்துக் கொண்டு
குழந்தை போல அங்கும் இங்கும் ஓடினாள்.
“நீங்களும் வாங்கோ “ என்றாள்.
அலைகள் அவள் கால்களை நெருங்க வரும் போது எகிறி குதித்தாள்.
எல்லாமே பத்து நிமிடங்கள் தான்.
அம்மாவிடமிருந்து போன் வந்தது.
குழந்தை படுத்தர்தோ என்னமோ என்று கவலைப்பட்டாள்.
அலையின் சத்தம் கேட்காத இடத்திற்கு போய் நின்றுகொண்டு பிறகு தான் இன்கமிங் காலை எடுத்துப் பேசினான்.பக்கதில்யாரும் இல்லாத்தால் ஸ்பீக்கரில் பேசினான் வாசு.
“சொல்லும்மா “என்றான் வாசு
“குழந்தைக்கு சாதம் குடுத்துட்டேன். இராத்திரி டிபன் பத்தி சொல்லலாம்னு பண்ணேன்.” என்றாள் அம்மா.
“மணி ஏழேகால் தான் ஆகர்து.அதுக்குள்ள என்ன டிபன். இன்னும் ஒரு மணி நேரத்துல ஆத்துக்கே வந்து சாப்பிடறோம்”
“அதுக்கில்லடா சின்னவன் ஆம்படையாளுக்கு உடம்பு நன்னா இல்லயாம்.” என்றாள் அம்மா.
“என்னாச்சு” என்றான் வாசு.
“எல்லாம் நல்ல சமாச்சாரம்தான்.ரெண்டு வருஷமா பகவானை வேண்டின்டதுக்கு பலன் கிடைச்சிருக்கு.”
மாமியார் சொன்னதும் இதற்குமேல் ருக்மிணியால்அமைதியாக இருக்க முடியவில்லை.
சடாரென்று போனைக் கைகளில் வாங்கிப் பேசினாள்,ருக்மிணி.
“அவ எதாவது சாப்பிட்டாளோ?கார்த்தாலயே தல சுத்தர்துனு வெறும் மோர் சாதம் போதும்னுட்டாளே.நீங்க கவலயே படாதீங்கோ இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்போம்மா.” என்றாள் ருக்மிணி.
“.அவ எதுவும் வேண்டாம்னு தூங்கப்போய்ட்டாம்மா.
சின்னவன் போன் பண்ணான்.
நீங்க வெளில போயிருக்க விஷயத்த சொன்னேன்.அவனுக்கு ஆபிஸ்ல நிறைய வேலஇருக்காம்.வரலேட்டாகுமாம்..
அதனால எனக்காக காத்துன்டுருக்க வேண்டாம்.சீக்கிரமா வேலய முடிச்சுட்டு படுத்துடும்மா உனக்கே பீபிரொம்ப ஜாஸ்தியா இருக்கு.மறக்காம மாத்திரைய சாப்பிடுனு சொல்லிட்டு இப்பதான் போனை வச்சான்” என்று மாமியார் அம்மாசொன்னதும் ருக்மிணியின் முகம் வாடிவிட்டது.
“நீங்க பாத்திரமெல்லாம் தேய்க்காதீங்கோ. அப்படியே போட்டு வைங்கோ நான் வந்து பாத்துக்கறேன்.” என்றாள்.
“ ருக்கூ….ஒரு நாள் பாத்திரம் தேய்க்கர்தால என்ன ஆயிடும்மா?அதுவுமில்லாம ராது சமத்து என்ன அலையவிடாம சாப்டுடுத்து. டயர்டா இருக்கு பாட்டி நாளைக்கு லிவுதானே நாளைக்கு படிக்கிறேன்னு டீவி பாத்துன்டே தூங்கியே போயிடுத்து. சின்னவகிட்டேந்து நல்ல சேதி வந்ததுமே அப்பா இன்னிக்கு அவரே சுகர் மாத்திரையை எடுத்து சாப்பிட்டேர்.
உங்களுக்கு இட்லி பண்ணி ஹாட் கேஸ்ல வெச்சுட்டேன்.தொட்டுக்க இன்னிக்கு வெள்ளிக்கிழமனு காத்தால நீ பண்ணபருப்பு குழம்பு இருக்கு.அப்பாவுக்கு கொத்தமல்லி சட்னி அரைச்சேன்.அதுல கொஞ்சம் உனக்கு பிடிக்குமேனு எடுத்துடைனிங் டேபிள் மேல வெச்சிருக்கேன் மா.
நீதான் எல்லா பாத்திரத்தயும் சாயங்காலமே தேச்சுப் போட்டுட்டியே.
நாலே நாலு இட்லி தட்டு அத அலம்பரது ப்ரமாதமான வேலயா என்ன? நான் பாத்துக்கறேன்.
அவசரமே இல்ல போன காரியத்தை முடிச்சுன்டு நிதானமா வாங்கோ” என்றாள் மாமியார்.
போன் பேசி முடித்ததும் வாசுவை தரதரவென்றுஇழுத்துக்கொண்டு வந்து ஸ்கூட்டரை ஸ்டாரட் செய்ய சொல்லி பின்னால் ஏறிக்கொண்டாள் ருகமிணி.
சற்று தூரம் வரும்வரை அமைதியாக இருந்தவள்.
“பார்த்தீங்களான்னா
ஒருநாள் கூட நம்மால சந்தோஷமா இருக்க முடியல பாருங்கோ…இந்தாத்துல எனக்கு மட்டும் தான் எல்லாக்கடமையும்இருக்கு. நான்னா எல்லாருக்கும் இளக்காரம் தான்.”
ருக்மிணி ருக்மிணி புலம்ப ஆரம்பித்தாள்.பாவம் ருக்கு.
No comments:
Post a Comment