தாய்மையின் வீரம்
உதகமண்டலத்தில் டாக்டர் பரமேஷ் வைத்தியநாதன் சிறந்த இருதய அறுவைசிகிச்சை நிபுணர்.ஐம்பத்தைந்து வயதான அவர் இதுவரை பல சிக்கலானஅறுவை சிகிச்சைகள் செய்து பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.
ஒவ்வொருவரும் டாகடர் பரமேஷின் அப்பாயின்ட்மென்ட் கிடைத்ததுமே தான் பிழைத்துவிட்ட மாதிரியே சந்தோஷப்படுவார்கள்.இனிப்ரச்னையில்லை டாக்டர் காப்பாத்திவிடுவார் என்று நிம்மதி அடைவார்கள்.அப்படிப்பட்ட கைராசியான டாகடர் அவர்.அவரைவிடஅனுபவம் வாய்ந்த டாகடர்கள் கூட
தங்களிடம் வரும் சிக்கலான கேஸ்களை இவரிடம் அனுப்பி வைப்பார்கள்.
இந்த டாக்டருக்கு இருமகன்கள்.இருவருமே டாக்டர் படிப்புதான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பரமேஷின் நிலை இப்படியா இருந்தது.
சரியாக சொல்ல வேண்டுமென்றால் முதன் முதலில் முழு தன்னம்பிக்கையுடன் பொறுப்புடனும் டாக்டர் பரமேஷ் செய்த இருதய அறுவைசிகிச்சையில் ஒரு சிறுவன் மரணம் அடைந்தான்.ஏற்கனவே மரபு வழியில் அந்த சிறுவனுக்கு பல உடல்நலக் குறைபாடுகள்இருந்தன.ஆனால் மகனின் துயரச் செய்தியைக் கேட்டு அந்த சிறுவனின் தாய் கதறி அழுதாள்.
“ பல வருஷம் தவமா தவமிருந்து பொறந்தானே. இவனோட அப்பாவும் இருதய ப்ரசனையால போன மாசம் தான் இறந்துட்டாரு.என்ஒரே பையனயும் கொன்னுட்டியே நீ நல்லா இருப்பியா” என்று சாபம் வேறு கொடுத்தாள்.
பரமேஷ் ப்ரொசிஜர்ஸ் எல்லாமே மிகச்சரியாக செய்திருந்தான். பல பெரிய டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்யும்போதுபக்கத்திலிருந்து பார்த்த அனுபவம் தந்த நம்பிக்கையுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் அவன் செய்த முதல் ஆபரேஷன் அது. கொலைசெய்துவிட்ட பீதி மனதில் பரவியது.
மருத்துவ படிப்பில் மிகுந்த ஆர்வமும் மனித்த்தன்மையும் கொண்ட பரமேஷின் தன்னம்பிக்கை ஆட்டம் கண்டது.உடனடியாக வீட்டிற்குப்போய் விடவேண்டும் என்று தோன்றியது.தலைசுற்ற ஆரம்பித்தது.
முதன் முதலில் இப்படி ஒரு அறுவை சிகிச்சை செய்து மனதளவில் பாதிக்கப்பட்ட டாக்டர் பரமேஷ்
அதிலிருந்து மீண்டு வருமுன் அன்றிரவே அவசர கேஸாக இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தது. பரமேஷ் தன்னால் முடியவே முடியாது என்று மறுத்துப் பார்த்தான்.
ஆனால் மற்ற டாக்டரகளோ இறந்துவிட்ட அந்த சிறுவனின் உடல்நிலை ஏறகனவே மோசமாகத் தான் இருந்தது.கடைசி முயற்சியாகத்தான் அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இருதய சிகிச்சையை அவன் உடல் தாங்கவில்லை என்று எவ்வளவோஎடுத்துசொல்லியும் பரமேஷ் மனதளவில் தேறவேயில்லை.
ஆனால்… அவனுடைய சொந்த மருத்துவமனையாக இருந்தாலும் அந்த சிக்கலான அறுவை சிகிச்சையை செய்ய நிறையஆராய்ச்சிகள் செய்த அவனே சரியானவன் என்று மற்ற டாக்டர்கள் கூறிவிட்டனர்.
அதனால் மூன்று மணி நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் பரமேஷே ஆபரேஷன் செய்ய வேண்டி வந்தது.வேறு வழியில்லாமல் ஆபரேஷன்தியேட்டருக்கு வந்தவனுக்கு மனதில் இறந்துவிட்ட சிறுவனின் தாயின் முகம் வந்து வந்து மிரட்டியது.பயத்தில் அவனது கைகள்நடுங்கின. கண்கள் இருட்டிக் கொண்டுவந்தது.
எழுபது வயதான இருதய நோயாளி அவர்.
நெஞ்சுவலி காரணமாக மயங்கி மாடிப்படியிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு இரத்தம் அதிகமாக வெளியேறிவிட்ட நிலையில்தான் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு அவசரமாக இரத்தம் ஏற்றி தலையிலும் முறிந்து போன கால்களிலும் இருதயத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முறையும் அவசர சிக்கலான கேஸான அந்த எழுபது வயது இருதய நோயாளி பிழைக்கவில்லை.
அடுத்தடுத்த இந்த இரண்டு மரணங்களும் எப்போதுமே படிப்பிலும் ஆராய்ச்சியிலும் முதல் மாணவனாக வலம் வந்துகொண்டிருந்தடாக்டர் பரமேஷுக்கு அத்தனை வருடங்கள் பாடுபட்டு படித்த படிப்பே வெறுத்தது.
மருத்துவக் கல்லூரியில் வாங்கிய பதக்கங்கள் ஆராய்ச்சிக்காக வாங்கிய விருதுகள் எல்லாவற்றையும் தூக்கி கண்ணில் படாமல்சூட்கேசுகளில் போட்டு பூட்டிவைத்துவிட்டான்.
தான் டாக்டர் தொழிலுக்கே லாயக்கேயில்லை என்று மனதில் தீவிரமாக நினைத்தான்.இனியும் அறுவை சிகிச்சை செய்து பலரையும்கொல்ல அவன் விரும்பவில்லை.
பரமேஷின் அப்பா வைரநகை வியாபாரி .அம்மா கடவுள் பக்தி நிரம்பிய பெண்மணி.
அவளுடைய வளர்ப்பும் பரமேஷின் இந்த நிலைக்கு காரணம் என்று சொல்லலாம்.தன்னை அண்டியவர்களை
ஒருநாளும் புறக்கணிக்காமல் அவர்களது நியாயமான தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்அம்மா.குழந்தைகளையும் நிறைய சமூக சேவைகள் செய்ய வைப்பாள்.
அவளால் தன் மகனின் மனநிலையை நன்றாக ப்புரிந்து கொள்ள முடிந்தது.
தந்தையார் பரமேஷின் இந்த நிலையை எதிர்பார்க்கவே இல்லை.
அதேசமயம் தன்மகனை தொந்தரவும் செய்யவில்லை. அவன் மனதை ஆறுதல் படுத்த அவனுடைய கைகளாலேயே பல ஏழைச்சிறுவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் வாங்கிக் கொடுக்க வைத்தார். ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு மகனை அழைத்துப்போனார் பலமணி நேரம் அவர்களுக்கு பணிவிடை செய்யவும் ஊக்குவித்தர்.
ஆனால் நான்கு மாதங்கள் ஓடின. டாக்டர் பரமேஷின் மனநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.டாக்டர் என்ற வார்த்தையைக்கேட்டாலே நடுங்கினான்.
பரமேஷின் தங்கை திவ்யா வுக்கு இது தாங்க முடியாத மன வருத்தத்தைக் கொடுத்தது.
திவ்யா மகப்பேறு மருத்துவம் படித்துக் கொண்டிருந்தாள்.
பரமேஷும் திவ்யாவும் அவர்களே விருப்பப்பட்டுதான் மருத்துவப்படிப்பைத் தேர்ந்தெடுத்தனர்.
யாரிடமும் பேசாமல் குற்றவுணர்ச்சியுடன் தனியாகவே வாழும் மகனைப் பார்த்து அம்மாவுக்கு ஒரே வேதனை.
எத்தனையோ இரவுகள் அவன் தூங்காமல் படித்திருக்கிறான? மகனின் ஆராய்ச்சி வெற்றிபெற தினமும் மனம் உருகி கடவுளிடம்விரதங்களும் பிரார்த்தனைகளும் செய்திருக்கிறாள் அம்மா.எல்லாம் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் அம்மாவின் மனதில் பொங்கியது.
தான் கைராசி இல்லாதவன் என்று நினைத்தான் அவன். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு
அவர்களுடைய பங்களாவில் தனிமையிலேயே வாழ ஆரம்பித்துவிட்டான்.அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான்அவர்களுடைய சொந்த மருத்துவமனையும் இருந்தது.
வீட்டிலேயே வாழ்வதால் எப்போதும் சாப்பாட்டு நேரம் தூக்க நேரம் தவிர எப்போதுமே பால்கனியில் உட்கார்ந்து கொண்டிருப்பான்அவன்.
அவர்கள் வீட்டு பால்கனியிலிருந்து பார்ககும் போது ஊட்டி மலையின் அழகு கண்களுக்கும் மனதுக்கும் இதமாக இருந்ததுபரமேஷுக்கு.
அந்த சூழ்நிலையை அவன் தினமும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். வலது பக்கத்திலேதான் அவன் படித்த ஊட்டி ப்ப்லிக்ஸ்கூல் இருந்தது. பள்ளியில் காலையில் ப்ரேயர் முடிந்த பள்ளிக் கட்டிடத்துக்கு முன்பகுதியில் வரிசையாக அந்தப் பள்ளியின் பஸ்கள்நிறுத்தப்பட்டிருக்கும். பரமேஷுக்கு அந்த பள்ளியின் விளையாட்டு மைதானமும் நன்றாக தெரிந்தது.மாணவர்கள் குளிர்தாங்குவதற்காக முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் மற்றும் ஷூக்கள் அடங்கிய யூனிபார்மில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
மற்றொரு பக்கத்தில மேலே முழுக்க ப்லாஸ்டிக்க சாக்கால் கூரை வேய்ந்திருந்த மலைச்சரிவில் சரிவில் ஸட்ராபெரிபயிரிடப்பட்டிருந்தது. பழங்கள் நன்கு பழுத்து வாசனை வீசியது.
எதிரில் கொஞ்ச தூரத்தில் தெரிந்த டீ பேக்டரியிலிருந்து பல விதமான ஹெர்பல் டீக்களின் மணம் வந்து கொண்டே இருந்தது.
சற்று தொலைவில் தெரிந்த மைசூர் மகராஜாவின் பூந்தோட்டம் பார்ப்பதற்கு மரத்தில் ஆங்காங்கே கொத்து கொத்தாக பூக்கள்தொங்குவது போல அந்த மலைச்சரிவிலே விதவிதமான வண்ண மலர்களின் கூட்டம் கண்களைக் கவர்ந்து இழுத்தது.
மலைச் சரிவில் வீடுகள் இருந்த போதிலும் அதிக மழைபெய்தாலும் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கிவிடாமல் அழகாக வழி அமைத்துஆறுகளில் கலக்கும்படி அமைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகள் அவனை கவர்ந்து இழுத்தன.
தினமும் பல மணிநேரம் பால்கனியில் குளிரில் நடுங்கிக்கொண்டே இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டு உடகார்ந்திருப்பான்அவன்.அவனுடையஅப்பாவோ அம்மாவோ தங்கையோ வந்து பார்த்து அவனை அழைத்துவந்தால்தான் உண்டு.ஆனால்
மறந்துபோய்கூட அவர்களுடைய சொந்தமருத்துவ மனையை பரமேஷ் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் தான் பரமேஷின் அம்மாவிற்கு கவலை அதிகமாகி நெஞ்சுவலி வந்தது.
பயத்துடன் அம்மாவைப் பார்த்தான் பரமேஷ்.
“என்னன்னு டெஸ்ட் பண்ணிப் பாரேன்டா “ என்றாள் அவனுடைய அம்மா.
“வெறும் கண்ணுல பாத்தா என்ன தெரிஞ்சிடும்மா நல்ல டாக்டர்கிட்ட போம்மா” என்றான் பரமேஷ்.
மகனை கண்களை குறுக்கி உற்றுப் பார்த்துவிட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பெருமூச்சுவிட்டாள் அம்மா.
ஹாஸ்பிடலுக்குப் போகாமல் அப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டது.
“அம்மா ஹாஸ்பிடல் போகலாம். “ என்று வற்புறுத்தினாள் திவ்யா.
பரமேஷின் நடவடிக்கைகளால் அம்மா மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டாள்.அதனால்தான் அம்மாவிற்கு இருதயத்தில் ப்ரச்னைவந்துவிட்டது என்று புரிந்து கொண்டுவிட்டாள் திவ்யா.அம்மாவை கண்ணுங்கருத்துமாக பார்த்துக் கொண்டாள் அவள்.
அடிக்கடி வலியில் துடித்தாள் அம்மா. அப்பாவும் மகளும் சேர்ந்து தங்களுடைய ஹாஸ்பிடலுக்கு அவளைஅழைத்துப்போனார்கள்.பரமேஷ் இதற்குக் கூட ஹாஸ்பிடல் பக்கமே வரவில்லை.
அங்கிருந்த டாக்டர் பரசோதித்துவிட்டு ஆரம்ப நிலை இருதய நோய் ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக அட்மிஷன் செய்து அறுவைசிகிச்சை செய்தால் சரிப்படுத்திவிடலாம் என்றும் சொல்லிவிட்டார்.
ஆபரேஷன் செய்ய் குடும்பத்தினர் திவ்யாவும் அப்பாவும் ஒப்புக் கொண்டனர்.
ஆனால்…
“எனக்கு ஆபரேஷனும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.ஆபரேஷன் பண்ணி சாகர்த விட இப்படியே சாகறேன் “
என்று சொல்லி அடம்பிடித்து வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டாள் அம்மா.
வீட்டில் பரமேஷ் எப்போதும் போல தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான்.
வலியைப் பொறுத்துக் கொண்டு ஒரு மாதம் ஓட்டிவிட்டாள் அம்மா.
ஆனால் முன்பெல்லாம் வாரத்திற்கு இரண்டு முறை என்று வந்த வலி இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு இருமுறை வந்தது அவளால்வலியைத் தாங்கவே முடியவில்லை.
ஒரு சில நாட்களிலேயே தொடர்ச்சியான வலியாகிவிட்டது.
புரண்டு அழ ஆரம்பித்தாள்.உடலும் இளைத்து துரும்பாகிவிட்டாள். துடிக்க ஆரம்பித்தாள் அம்மா.
அப்பா தனக்குத் தெரிந்த சிறந்த இருதய அறுவை சிகிச்சை டாக்டரை வீட்டிற்கே அழைத்து வந்தார்.
அவர் கைராசியான அனுபவம் மிகுந்த டாக்டர்.
அம்மாவை பரிசோதித்தார்.கிழிந்த நாறுபோல் இருந்த அம்மா வலி தாங்க முடியாமல் கதறி கதறிஅழுதுகொண்டிருந்தாள்.எப்பொழுதும் போல் அம்மாவின் பக்கத்தில் செய்வதறியாது பரமேஷ் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான்.
பரிசோதித்துப்பார்த்த டாக்டர் சொன்னார்.
“உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவில்லையென்றால் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் அதனால் இப்போதே மருத்துவமனைக்குகொண்டுவாருங்கள் “என்றார்.
அம்மாவின் கண்கள் வலிதாங்காமல் கண்ணீரை பெறுக்கின.அந்த நிலையிலும்
“நான் ஆபரேஷன் பண்ணிக்கவே மாட்டேன்.” என்று அழுது அடம்பிடித்தாள் அம்மா.
அந்த டாகடர் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.பிறகு ஒப்புக்கு நான்கு வலிநிவாரணிகளை மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு போய்விட்டார்.
திவ்யாவிற்கு என்ன செய்வதென்று புரியாமல் அப்பாவின் தோளில் விழுந்து கதறினாள் அவரும் அடக்கி வைத்திருந்த துயரத்தை கண்ணீராய் ப்பொழிந்தார்.
“பரமேஷ் ….” என்று தலையை குனிந்துகொண்டு உட்கார்ந்திருந்த மகனை வேதனையான குரலில் அழைத்தாள் அம்மா.
அவன் கண்ணீருடன் அம்மாவிடம் வந்தான்.
“எனக்கு நீ ஆபரேஷன் பண்றயாப்பா ” என்றாள் திவ்யாவுக்கே தூக்கிவாரிப் போட்டது.
“நானா” நடுங்கினான் பரமேஷ்.
“ஆமாம்பா ரொம்ப வலிப்பா” என்றாள் அம்மா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு
“நான் ஆபரேஷன் பண்ணா நீ செத்துப் போய்டுவம்மா. “என்றான் மகன்.
“ஆபரேஷன் பண்ணலனாலும் நான் செத்துதான்டா போவேன். அத மறந்துடாத.
தாங்க முடியாத வலியோட வாழர்து மரணத்தை விடக் கொடுமையானதுடா.
மத்தவாளோட வலிய போக்கி அவாள வாழ வைக்கத் தானேடா நீ டாக்டருக்கு படிச்ச.” என்றாள் அம்மா.
“வேற ஒரு நல்ல டாக்டர பாக்கலாம்மா” பிடிவாதம் பிடித்தான் பரமேஷ்.
“ரொம்ப இளகிய மனசு படைச்சவனா உன்ன நான் வளத்துட்டேனேடா…
அதனால ஆபரேஷனே பண்ணாம வலில துடிச்சே நான் செத்துப்போய்ட்டேன்னு வச்சுக்கோ.
இருதயநோய் சம்மந்தமா ஆராய்ச்சி படிப்பெல்லாம் படிச்சிருந்தும்… நம்மள பெத்து வளத்து ஆளாக்கின அம்மாவ வலில துடிக்கவிட்டிருக்காம ஒரே ஒரு ஆபரேஷன் பண்ணி பாத்திருக்கலாமோனு பிற்காலத்துல உன் மனசாட்சியே உன்ன கேள்விகேட்குமே. கடைசி அவரை மனசாட்சிக்கு பயந்தே வாழப்போறயா என்ன?
ஒரு வேளை என் விதி முடியனும்னு இருந்தா….
யாரோ ஒரு டாக்டர் கையால ஆபரேஷன் பண்ணி நான் சாகர்த விட உன் கையாலயே அது நடக்கட்டும்டா. என் கடைசி ஆசையும்இதுதான்.நிறைவேத்துடா ” அம்மா முனகி முனகி பேசிவிட்டு வலிதாங்க முடியாமல் மயங்கிவிட்டாள்.
“அண்ணா,தயவு செய்து அம்மாவோட கடைசி ஆசையையாவது நிறைவேத்து.போற உயிர் உன் கையிலயே போகட்டும்.அம்மாவோடஆத்மா அப்போதான் சாந்தி அடையும்.சீக்கிரம் அண்ணா.ப்ளீஸ்” அழுதுகொண்டே அவனைப் பிடித்து உலுக்கினாள் தங்கை.அப்பாநிலைகுலைந்து போய்விட்டார்..
கடைசி ஆசை என்ற வார்த்தை அவனையும் உலுக்கியிருக்கவேண்டும்.பரபரப்பானான் பரமேஷ்.
உடனடியாக வீட்டுக்கு ப்பக்கத்திலிருந்த தங்களுடைய மருத்துவனைக்கு அம்மாவை ஆம்புலன்ஸில் அழைத்துப் போனான். அப்பாவும்திவ்யாவும் சில பணியாளர்களை அழைத்துக் கொண்டு உடன் கிளம்பினார்கள்.
“தாங்க முடியாத வலியோட வாழர்து மரணத்தை விடக் கொடுமையானது.” என்ற வார்த்தை அவனை மாற்றியது.
அவனுக்கு பயமோ பதட்டமோ ஏற்படவில்லை.அவன் கைகள் நடுங்கவில்லை.மனம் படபடப்பாக இல்லை.தெளிவாக சிந்தித்தான்.
ஆபரேஷன் முடிந்தது.
பரமேஷுக்கு தன்னுடைய அறுவை சிகிச்சையில் மிகச்சிறந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
திவ்யாவும் அப்பாவும் பதட்டமாக இருந்தனர்.
அவர்களுக்கும் பரமேஷ் தான் தைரியம் சொன்னான்.
மற்ற நோயாளிகளையும் போய்ப் பார்த்து அறுவை சிகிச்சைகள் அளிக்க ஆரம்பித்தான்.
இந்த சூழ்நிலையிலும் பரமேஷின் நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு பெரிய ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும ஏற்படுத்தியது.
“கடவுளே என் அம்மா மீண்டும் எழுந்து அண்ணாவின் இந்த அழகிய மாற்றத்தைப் பார்க்க வேண்டுமே.” என்று திவ்யா வேண்டிக்கொண்டாள்.
ஒரு வாரம் ஓடிவிட்டது.
அம்மா வலி நீங்கி பிழைத்துவிட்டாள். தன் கண்ணை மட்டுமல்ல தன் மகனின் அறிவுக் கண்களையும் திறந்துவிட்டாள்.
அனைவரும் பரமேஷைப் பாராட்டினர்.
கொடுமையான வலியைத் தாங்கிக் கொண்டு
அவளுடைய உயிரையே பணயம் வைத்து மகனுடைய தன்னம்பிக்கையை மீட்க ப்போராடியிருக்கிறாள் அந்த வெளி உலகம் தெறியாதஅம்மா என்று ஆராய்ச்சி படிப்பு படித்த பரமேஷுக்குப் புரிந்துவிட்டது.
கலங்கிய கண்களுடன் அம்மாவைப் பார்த்தான்.
“அழாதேடா என்னதான் நீ காப்பாத்திட்டியே இப்போ எனக்கு வலியே இல்லடா.“ என்றாள் அம்மா புன்னகையுடன் மெல்லிய குரலில்.
“இல்ல அம்மா.நான் உன்ன காப்பாத்தல.எனக்கு தன்னம்பிக்கை வரணும்னு நீயேதான் உன் உயிரையே தியாகம் பண்ணதுணிஞ்சிருக்கம்மா.எனக்காக மாசக் கணக்கில கொடுமையான வலிய நீ அனுபவிச்சிட்டம்மா…ஆரம்பத்துலயே நான் இந்தஆபரேஷனை செஞ்சிருக்கனும்” அம்மாவின் கைகளை தன் இருகரங்களாலும் பற்றிக் கொண்டு அழுதான் பரமேஷ்.
“உனக்குள்ள இருக்கிற திறமையான டாக்டர வெளில கொண்டுவர எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிது.இதுக்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும். ஆனா…உன்னோட மனசுல எழுந்துட்ட அதிர்ச்சியைப் போக்கத்தான் ரொம்ப நாள் தேவைபட்டுடுத்து.
நல்லவேளை நானும் பிழைச்சிட்டேன்.” அம்மா புன்னகையுடன் கூறினாள்.திவ்யாவும் அப்பாவும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
No comments:
Post a Comment