வினயா மீண்டும் முழுகாமல் இருக்கிறாள் என்ற உண்மை தெரிந்ததிலிருந்து மகேஷுக்கு சற்று கலக்கமாக இருந்தது.
வினயாவும் மகேஷும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
இருவரும் தூரத்து சொந்தம் தான்.அதனால் பெற்றோர் சம்மத்ம் சுலபமாகவே கிடைத்துவிட்டது.
மகேஷ் கம்ப்யூட்டர் என்ஜினியர்.பிரபல ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தான்.
வினயாவின் பிஎட் படிப்பு முடிந்ததும் திருமணம் நடந்தது.
திருமணமானவுடன் புகுந்த வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பள்ளியில் வினயாவுக்கு வேலை கிடைத்துவிட்டது.
இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை தீப்தாவிற்கு தற்போது ஐந்தாவது வயது நடக்கிறது.
வங்கி கடனில் சொந்த வீடும் வாங்கியாகிவிட்டது. இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லைதான்.ஆனால் கொஞ்ச நாட்களாகவே அவன் குழம்பிப் போயிருக்கிறான்.
அதுவும் இன்று வினயாவின் போன் கால் வந்ததும் ஏதோ ஒன்று அவன் மனதைக் குடைந்தது.
உச்சி வெயிலின் வேகம் தெரியாதபடி சென்ட்ரலைஸ்ட் ஏசிசில்லென்றது.
அலுவலகத்தில் பெரிய வேலைகள் எதுவுமில்லை.
ஆனாலும் வினயாவிடம் தான் மிகவும் பிஸியாக இருப்பதாகவும் பிறகு உன்னைக் கூப்பிடுகிறேன் என்றுசொல்லிவிட்டான்.
சுற்றுமுற்றும் பார்த்தான்.இரண்டாயிரம் சதுரடியில் இருந்தது அந்த ஆபிஸ். வழவழவென்று நீல நீறத்தில் பெயின்ட்செய்யப்பட்ட மரத்தாலான இடுப்பு உயர தடுப்புகளாலான கேபின்கள்.அதற்குள்ளிருந்த மனித மூளைகள் வேகவேகமாக செயல்பட்டு கம்ப்யூட்டரை வேலை வாங்கிக்கொண்டிருந்தன.
மகேஷுக்கு மனம் சஞ்சலமாக இருந்தது.
கண்கள் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்ததால் எந்தக் காரணமும் இல்லாமல் அவன் கைகைளில் பிடித்திருந்த மௌஸை அங்குமிங்கும் வெறுமனே அசைத்துக் கொண்டிருந்தான். தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும்.நன்றாக பாலிஷ் போட்ட ஷூவை டேபிளுக்கு கீழே அங்கும் இங்கும் தேய்த்தான்.
தன்னுடைய மூன்று அண்ணாக்களுக்குமே முதல் குழந்தை பிள்ளையாகவும் அடுத்தது பெண்ணாகவும் பிறந்துவிட்டிருந்ததால்மகேஷ் தனக்கும் தலைச்சன் குழந்தை பிள்ளையாகத்தான் பிறக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிட்டான்.
ஆனால் குழந்தை தீப்தாவின் மனதை வருடும் பார்வையை பார்த்தும் தந்தைப் பாசத்தில் உருகித்தான் போனான். இந்த குழந்தையைப்போய் இப்படி நினைத்து விட்டோமே என்று மனதிற்குள் அழுதான்.
தீப்தாவிற்கு எதிராகத் தோன்றிய அந்த எண்ணங்களை நினைத்தபோதெல்லாம் அவனுக்கே அருவருப்பாகத்தான் இருக்கும்.அதை மறைக்க தீப்தாவிடமே அதிக நேரம் செலவழிப்பான். யாரும் பார்க்காத சந்தர்ப்பங்களில் அவளதுபிஞ்சுக்கைகளைப் பிடித்து தன் கன்னத்தில் அவளுக்கு வலிக்காதபடி அறைந்து கொள்வான்.தீப்தா “அப்பா அப்பா” என்றுஅவன் கன்னங்களில் தன் முகத்தை வைத்து தேய்த்து அவனை அடிக்க விடாமல் தடுப்பாள்.
அவனுக்கும் தீப்தாவிற்குமான இந்த அழகிய பாசத்தைப் பார்த்து வீடே பொறாமைப்பட்டது.
வினயா பெருமையில் திளைத்தாள். தன் கணவனுக்கு பெண் குழந்தையின் மேல் இவ்வளவு பாசமா?
அடுத்ததும் பெண்ணாகவே பிறக்கவேண்டும் என்று கூட வேண்டிக்கொண்டாள்.
அதனால்தான் எப்படியோ முயற்சி செய்து தன் வயிற்றில் இருப்பது பெண்தான் என்று கண்டுபிடித்துவிட்டாள். அவனுக்குத்தான் முதலில் சொல்லவேண்டும் என்று ஆவலுடன்போன் செய்தாள். ஆனால், அவளிடம் மகேஷ் சரியாக பேசவில்லை.அவன் மனப்போராட்டத்தை புரிந்து கொள்ளாமல் அவர் ரொம்ப பிஸி என்றுதான் நினைத்தாள் வினயா.
மகேஷின் கவலைக்கு இதுதான் காரணம்.
மகேஷ் வீட்டில் வரிசையாக மூன்று அண்ணன்களுக்கு பிறகு மகேஷ் நான்காவது பிள்ளை.கடைக்குட்டி.
ஆனால் வினயாவின் வீட்டில் ஐந்து பெண்கள். ஆறாவதாக ஒரேஒரு ஆண் பிள்ளை.வினயா ஐந்தாவது பெண்.
கல்யாணத்திறகு வந்த அவனுடைய நண்பன் சொன்னான்.
“நான் ஒண்ணு கவனிச்சேன்.தப்பா நினைக்கலன்னா சொல்றேன்” என்று பீடிகையோடு ஆரம்பித்தான்.
“என்னடா விஷயம் சொல்லு “ சிரித்துக் கொண்டே கேட்டான் மகேஷ்.
“இல்ல உங்க மூணு மன்னிகளுக்குமே கூடப் பிறந்தவா ரெண்டு அண்ணாக்கள் மட்டும் தானா? அக்கா தங்கைகள் யாரும் இல்லயா?” என்றான்.
“ஆமாம் மூணு பேருக்குமே அக்கா தங்கைகள் கிடையாது.பெரிய மன்னிக்கு ரெண்டு அண்ணா.
ரெண்டாவது மன்னிக்கு ரெண்டும் தம்பி.மூணாவது மன்னிக்கு ஒரு அண்ணா ஒருதம்பி.ஏன் கேக்கற என்றான்”
“ஒண்ணுமில்ல அதான் அவா மூணு பேருக்கும்
ஆணொன்னு பெண்ணொண்ணா பொறந்திருக்கு.”
ஆனா உனக்கோ எனக்கு அமைஞ்சா மாதிரியே… பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கற வரனா அமைஞ்சிருக்கு.
அதனால எனக்கு மூணும் பெண் குழந்தையா பிறந்திருக்கு.
என் அனுபவத்துல சொல்றேன். உனக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு குறைவுதான் “ என்றான்.
தன்னுடைய காதல் திருமணத்தில்இப்படி ஒரு வில்லங்கமா? என்று நினைத்தான் மகேஷ்.
அப்பா ப்ரன்டின் பேச்சை கவனித்து விட்டார்.
அதனால் மகேஷை த் தனியாக அழைத்துச் சென்று
அப்பா சொன்னார் “அவன் எதோ அபிஷ்டு மாதிரி பேசறான்.
இதோ பாருடா பகவான் முடிவு பண்ற விஷயம்தான் கல்யாணம் குழந்தை எல்லாமே.
அவர் குடுக்கர்த பிரசாதமா ஏத்துக்கனும்.” என்றார் உறுதியான குரலில்.
ஆனால..
இப்போது நண்பன் சொன்னது போலவே இரண்டாவதும் பெண் குழந்தை தான் என்று ஊர்ஜிதமாகிவிட்டது.
இந்நேரம் அம்மாவிற்கும் தெரிந்திருக்கும்.அவன் நினைப்பதற்குள் போன் வந்தது அப்பாவிடமிருந்து.
இவன் ஊகித்துவிட்டான்.
“ஹலோ “என்றான் போனை எடுத்து
“வினயா போன் பண்ணாளா?” என்றார் எடுத்தெடுப்பில்
“ம்ம்ம”
“எதையும் போட்டுக் குழப்பிக்காத”
“….”
“சீக்கிரம் ஆத்துக்கு அவா”
““
“”
“……”
“சரி நேர்ல பேசலாம்”என்று போனை வைத்துவிட்டார்.
மாலையில் ஆபிஸிலிருந்து சீக்கிரமாக கிளம்பியவன் வீட்டுக்குப் போகாமல் நேராக பீச்சுக்குப் போனான்.
அவ்வளவாக கூட்டமில்லை. அப்படியே மணலில் படுத்து அண்ணாந்து வானத்தைப் பார்த்தான்.
மேகம் எதுவுமில்லாமல் வானம் பளிச்சென்றிருந்தது.நட்சத்திரக் கூட்டங்களை பார்த்துக் கொண்டு யோசித்தான். அலையின் இரைச்சலை விட அவன் மனம் வேகமாக இறைந்தது.
பெண் குழந்தைகளுக்கு நான் எதிரியா என்ன .
ஏன் இந்த கலக்கம் எனக்கு?என் குழந்தை எதுவாக இருக்க வேண்டும் என்று யார் தீர்மானிக்க வேண்டும்? நானா? இயற்கையா?
என் பெற்றோரின் அன்பின் அடையாளமாய் நான் பிறக்கவில்லையா ?
அவர்கள் தீர்மானம் செய்தா நான் பிறந்தேன் ?
ஒருவேளை நான பெண்ணாக பிறந்திருந்தால் இந்த அம்மா என்னை பற்றிவருத்தப்பட்டிருப்பாளா?
பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தான்.
“சார் சுண்டல் சார் சுண்டல்” குரல் கேட்டு நிமார்ந்தான்.
சுண்டல் விற்கும் பையன் பனிரென்டு வயது இருக்கும் .
முகம் கழுவி தலையை அழுத்தி வாரி இருந்தான்.கிழியாத ஆனால் சற்று அழுக்கான பேண்ட் சட்டையில் இருந்தான். இடுப்பில் சிறுகுழந்தையை வேறு வைத்திருந்தான். குழந்தைக்கு எட்டு மாதம் இருக்கும்.
மஞ்சள் வண்ணத்தில் வெள்ளை பூப்போட்ட கவுனும் முட்டிவரை நீண்ட வெளிர் பச்சை நிற கால்சட்டையும் அணிந்திருந்தது.அதன் தலையில் முடி அதிகம் இல்லை.
சிறுவன் அவனுடைய உடைக்கு சம்மந்தமே இல்லாமல் வலது
கையில் வைத்திருந்த சிறிய புத்தம்புது எவர்சில்வர் தூக்கை மகேஷின் முன் வைத்தான்.
பிறகு அவன் எதிரே இடுப்பில் குழந்தையுடன் மெல்ல முட்டி போட்டு குழந்தையின் கால்கள் மண்ணில் பட்டுவிடாதபடி அதை தன் மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தான்.தூக்கின் ஒரு முனையில் கயிறு கட்டிய புது கரண்டி ஒன்று அதன்மூடியிலிருந்த கைப்பிடிக்குள்சொருகியிருந்தது.
சார் சுண்டல் சார் வியாபாரமே இல்ல சார். என்று கெஞ்சினான்.ஆனால்,
மகேஷு் சுண்டல் சாப்பிடும் மனநிலையில் இல்லை.
வேண்டாம் என்று சொல்லலாம் என்று யோசித்தபோது குழந்தை அழுத்து.
அந்தசிறுவன் தன்னுடைய பிஞ்சுத் தோள்களில் தொங்கிய பையிலிருந்து புத்தம்புது பீடிங் பாட்டிலை எடுத்தான்.
அது முழுக்கபால் இருந்தது அதை குழந்தையின் வாயில் வைத்து சற்று சாய்த்து பிடித்தான்.
அழுகை அடங்கி அண்ணனின் முகத்தை பாரத்தபடியே அது பாலை குடிக்க ஆரம்பித்தது.மகிழ்ச்சியில் காலால் அவன் வயிற்றை உதைத்தது.
மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தான்.”சார் சுண்டல் சார்” என்றான்.
மகேசுக்கு ஆச்சர்யமும் சந்தேகமும் வந்தது.
“ டேய் இந்த குழந்தை யாரோடது. இந்த புதுவாளி யாரோடது. உன்ன பாத்தா ஒரு மாதிரியா இருக்கே” என்றான் சந்தேகத்துடன் மிரட்டும் குரலில்.
அந்தச்சிறுவனோ துளியும் பயப்படாமல் அதேசமயத்தில் வேலை ஆகவேண்டுமேயென்று கோபமும் படாமல் பேசினான்.
“ இது என் தங்கச்சி சார். என் அப்பா ஒரு பெரிய பாங்க் ஆபிஸர் வீட்டுல செக்கூரிடி வேல பாத்தாரு. அதே வீட்டுல தான் எங்க அம்மாவுக்கும் அந்த வீட்டு பெரியம்மாவ பாத்துக்கற வேலை.பாப்பாவும் அம்மா கூடவே அங்க இருக்கும்.அப்பாவும் குழந்தய பாத்துக்குவாரு. நல்லாத்தான் இருந்துச்சி சார். திடீர்னு மூணு மாசத்துக்கு முன்னாடி அப்பா செத்துட்டாரு. ஆனா, ஆபிஸர் வீட்டம்மா ரொம்ப நல்லவங்க சார்.
குழந்தய இப்பயும் அங்கயே இருக்கட்டும்னு சொல்றாங்க.இந்தபீடிங் பாட்டில்
கூட அவங்கதான் தந்தாங்க. ஸ்கூல்தொறந்ததும் எனக்கு படிக்க புஸ்தகம் யூனிபாரம் எல்லாம் வாங்கி குடுத்தாங்க.
அப்பா இறந்தப்புறம்அவங்க தான் வீட்டுல சமையல்காரம்மாகிட்ட சொல்லி சுண்டல் செஞ்சு தராங்க.பீச்ல வித்து கிடைக்கற காசுல அவங்ககிட்ட பட்டாணி மட்டும் வாங்கிக் குடுப்பேன சார் மீதி எங்களுக்கு தான். என் தங்கச்சிக்கு இந்த காசுலதான் சார் பால் வாங்குவேன்.இன்னிக்கு வியாரமே இல்ல சார்” அவன் கண்கள்கெஞ்சின.
குழந்தையை உற்றுப் பார்த்தான் மகேஷ்.
குழந்தையின் நிறமும் சிறுவனின் நிறமும் முகச்சாயலும் நன்றாக ஒத்துப் போயிருந்தது மட்டுமல்ல.அண்ணனின் அரவணைப்பில் குழந்தை சற்றுவசதியாகவே தோளில் சாய்ந்திருந்ததை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சுவிட்டான் மகேஷ்.
“இந்தமாதிரி பண்றதுக்கு பதிலா அவங்களே குழந்தைக்கு பால்கூட வாங்கிக் குடுக்கலாமே? உனக்கும் அலைச்சல் மிச்சம்.” என்றான் மகேஷ்.
“அது தப்பு சார். இனிமே நான் இப்படியே உழைச்சி பழகினா தான் நல் லதுனு எங்கம்மா சொல்றாங்க சார்.
அந்த வீடலதான் எங்கம்மாவுக்கு மதியம் சாப்பாடு குடுத்து சம்பளம் குடுக்கறாங்க. குழந்தைய்யும் கூடவே வச்சிக்கலாம்னும்சொல்றாங்களே இதுவே போதும் சார்.”
பெரிய மனிதனைப் போல பேசினான்.
“சரி நீ சாப்பிட்டியா “அந்தப் பையனை அக்கறையுடன் கேட்டான் மகேஷ்.
“மதியம் பள்ளிக்கூடத்துல சாப்பிடுவேன் சார்.இராவுக்கு அம்மா சமைப்பாங்க.
அந்த நேரத்துல தான் நான் குழந்தைய தூக்கிட்டு வியாபாரம் பண்ணுவேன்.பக்கத்துல தான் சார் வீடு” என்று தன்கைகைளை ஒரு பக்கத்தில் காட்டினான்.அவன் சுட்டிக்காட்டிய இடம் சற்று தொலைவு தான்.
“அப்போ லீவு நாள்ல உனக்கு சாப்பாடு?” மகேஷ் கவலையோடு கேட்டான்.
“அம்மா காசு குடுத்துடுவாங்க.ரோட்டுக் கடைல சாப்பிடுவேன்” எதற்குமே விட்டுக் கொடுக்காமல் பதில் சொன்னான் சிறுவன்.
“சார் சுண்டல் சார்” வியாபாரத்திலும் குறியாக இருந்தான்.
பாலை குடித்துவிட்டு பசியாறிய மகிழ்ச்சியில் மகேஷைப்பார்த்து குழந்தை சஇரித்தது.
அதன் பார்வை தீபதாவின் பார்வை போல் அவன் மனதை என்னமோ செய்தது.
வழக்கத்திற்கு மாறாக சுண்டலின் விலை சற்று அதிகமாக அந்த சிறுவன் குறிப்பிட்டிருந்தாலும்
சுண்டலை வாங்கிக்கொள்ளாமல் அதன் விலை போல் இரண்டு மடங்கு பணம் கொடுத்தான் மகேஷ்.சிறுவனுக்கு மகிழ்ச்சி.இருந்தாலும்
“சார் சுண்டல வாங்கிக்கங்க சார் நல்லாருக்கும்.வாளிய திருப்பிக் குடுக்கனும்.பீச்ல கூட்டமில்ல நேரமாயிட்டுது சார்” மீண்டும் கெஞ்சினான் சிறுவன்.
போகும் வழியில் யாராவது பசியோடிருந்தால் கொடுத்துவிடலாம் என்று நினைத்து
“சரி “என்றான் மகேஷ்.
சிறுவன் தன்தோளில் தொங்கிய பேகிலிருந்து ப்லாஸ்டிக் மூடிகளையும் அட்டை கப்புகளையும்எடுத்தான்.அவை புதிதாக இருந்தன.பிறகு
தூக்கை திறந்ததும்கமகமவென்று மணம் வீசியது சுண்டல்.கைகள் படாமல் கரண்டியால் லாவகமாக எடுத்தான்.அட்டை கப்புகளை நிரப்பி ப்லாஸ்டிக் மூடியால்
அழுத்தி மூடினான்.ஐந்து பெரிய கப்புகள் நிறைய சுண்டல் இருந்தது.
எல்லாவற்றையும் மகேஷிடம் கொடுத்துவிட்டு பையில்லயா சார் என்றான்.
“ பரவால்ல என்னோட பேக்ல வச்சிக்கறேன் “ என்றான் மகேஷ்.
மகேஷுக்கு நன்றி சொன்னான் சிறுவன்.
குழந்தையுடன் ரொம்பவும் சிரம்ப்பட்டு எழுந்து நின்றவன்
பிறகு குனியாமல் நின்றவாக்கிலேயே கால் முட்டிகளை மட்டும் மடக்கி கீழே இருந்த வாளியை வலது கையில் எடுத்துக் கொண்டான்.சிறுவனின் சிரமத்தைப்பார்த்துவிட்டு
“ஏன்பா குழந்தய வீட்டுல விடக்கூடாதா.நீயே சின்னவன்.இந்த வாளிய்யே உனக்கு அதிகம். இதுல இது வேற ஒருதேவையில்லாத சுமை” என்றான் மகேஷ் அக்கறையுடன்.
அதுவரை நிதானமாக பேசிய சிறுவன் உணர்ச்சி வசப்பட்டான்.
“ சார்,இது சுமையில்ல சார் என் தங்கச்சி .“ என்று சொல்லிவிட்டு மகேஷைப் பார்த்த பார்வையில் உஷ்ணம் தெரிந்தது.சிறுவன் தன் தங்கையை இடது கையால் இறுக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். அது மகிழ்ச்சியில் பொக்கைவாய் காட்டி சிரித்து தன் தலையை அண்ணனின் கன்னத்தில் நங்கென்று இடித்து கால்களை உதறி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.
“வரேன் சார்” என்று சொல்லிவிட்டு
தங்கச்சியை அணைத்தவாறு அண்ணன் என்ற பொறுப்பு கிடைத்த கர்வத்தில் கம்பீரமாக கால்களை பீச்சு மணலில் அழுத்தி நடந்து சென்றான் சிறுவன.
வாயடைத்துப் போனான் மகேஷ். மனதில் ஏதோ ஒரு தீர்மானத்துடன் வீட்டீற்கு வந்தான்.
வாசல் கதவு திறந்திருந்தது.
இவனுக்காக எல்லோரும் காத்திருந்தார்கள்.தீப்தா ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்டாள்.
அவளை கைகளில் தூக்கிக் கொண்டான்.அப்பா அவசரமாக அவன் பக்கத்தில் வந்தார்.
“கண்ணா வந்துட்டியா.ஆபிஸுல நீ எப்பவோ கிளம்பிட்டனு சொன்னதும் நாங்கள்ளாம் பயந்தே போயிட்டோம்.நீ கவலப்படாதப்பா.
நாங்களே வினயாவுக்கு புரிய வச்சிட்டோம்.ஒரு குழந்தையே போதும்னு.நாளைக்கே அபார்ட் பண ணிடலாம்.
அவளுக்கும் வேலைக்குப் போகனும் சம்பாதிக்கனும ஆசை இருக்கு.அதனால அவளும் சம்மதிச்சிட்டா.”
அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது வினயாவைப் பார்த்தான்.
அவள் கண்கள் கலங்க டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அதுவரை எதுவும் பேசாமல் இருந்த மகேஷ்,இடுப்பிலிருந்த தீப்தாவை கீழேஇறக்கினான்.
பேகிலிருந்த சுண்டல் கப்புகளை அவளுக்கு பக்கத்தில் வரிசையாக வைத்தான்.
அவசரமாக எல்லாவற்றையும் திறந்து பார்த்தாள் தீப்தா.பிறகு
“ ஏதுப்பா இவ்வளவு சுண்டல்?”என்று கண்களை அகல விரித்தாள்.
“இனிமே இப்படித்தான் உன் தங்கைக்கும் சேத்து நிறைய வாங்குவேன்டா செல்லம்.” என்றான் மகேஷ் தீப்தாவின் பட்டுக் கன்னங்களில் முத்தம் கொடுத்து கொண்டே.
சுண்டலை கீழே வைத்துவிட்டு மகேஷின் கழுத்தை தன் பிஞ்சுக் கைகளால் சுற்றி வளைத்து அவன் முகமெங்கும் முத்த மழை பொழிந்தாள் தீப்தா.
அந்த சிறுவன் விதைத்த பாசம் என்னும் விதை மகேஷின் மனதில் விருட்சமாகியிருந்தது.மனதில் அந்த சிறுவனுக்கு நன்றி சொன்னான் மகேஷ்.
வினயா கண்ணீரை துடைத்துவிட்டு பெருமையுடன் கணவனைப் பார்த்தாள்.
அப்பாவும் அம்மாவும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
“எல்லாரும் சாப்பிடலாம் ” என்றார் மகிழ்ச்சியுடன் அப்பா.
No comments:
Post a Comment