பொதுவான எதிரி
கார் ஒரு குலுங்கலுடன் நின்றது.பின் சீட்டில் இருந்த என்னை திரும்பி பாரத்தான் என் மகன்.
அவன்கண்களில் கண்ணீர்.
பிரிவு ஆற்றாமை தான் காரணம் வேறென்ன?
நான் வலியமுயற்சிஎடுத்து என் உதிர்ந்துவிட்ட கடவாய் பற்களின் ஈறுகளை அழுந்த கடித்து என்முகத்தை இறுக்கமாக்கி கோபத்தை வெளிக்காட்ட முயன்று தோற்றுவிட்டேன்.
எப்போதும் காரை சுத்தமாக வைத்திருப்பாள் என் மருமகள்.
காரில் கம்மென்று மணம் வீச வேண்டும் என்று வாசனை திரவியத்தைகாருக்குள்தெளித்திருந்தாள்.ரோஜாவின் வாசம் என் நாசியில் புகுந்து மூளையில் எதையோ தொட்டு எழுப்பியது.
அந்த ஏசியிலும் நான் அணிந்திருந்த ப்யூர் காட்டன் புடவை வழக்கத்திற்கு மாறாக கொதிப்பது போலிருந்தது. கண்களை இடுக்கிக்கொண்டுபடித்து முடித்தேன்.
பத்மாவதி முதியோர் இல்லம் பெயர்ப்பலகை என்னை வரவேற்கிறதா பயமுறுத்துகிறதா? புரியவில்லை.
என்னை அங்கே சேர்த்துவிட்டு சோகமானான் மகன். உன் பொண்டாட்டி ஒரே அழுகையா அழறா. அதனால தான் இன்னிக்கு அவளையும் உன் பொண்ணையும் வரவேண்டாம்னு சொன்னேன்.நீயும் அழுதா எப்படி?
என் கடைசி தம்பி அதான் உன் மாமா ஜெயராமன் உன் எதிர்லதான்
அவன் ஆத்துல வந்து இருக்கலாம்னு என்ன தடவ கூப்பிட்டான். .
ஆனா நீதான் வேண்டாம்மா..அங்க மாமா மாமி அவா பொண் எல்லாருமே வேலைக்குப் போறா. எதோ ஒரு வாரம் பத்து நாள்னா தங்கலாம்.ஒரே அடியா வருஷக்கணக்குல தங்கர்துனா அவாளுக்கும் சிரம்ம்.நமக்கும் நாளைக்கு பேச்சுக்கு இடமாய்டும். அதனாலமாமாவாத்துக்கு கொஞ்சம் பக்கமா இருக்கிற இந்த முதியோர் இல்லத்துல சேத்துடறேன். நீ தேவைப்பட்டா அவாள போய் பாக்கலாம்னு சொன்ன. உன் மாமாவும் சரி உங்க இஷ்டம்னு சொல்லிட்டான்.
இராத்திரி வந்து பாக்கரேனு சொல்லிர்க்கான்.ஒரு அவசரத்துக்கு கூப்பிட்டாலும்வந்து பாத்துக்கர்தா சொல்றான்..எனக்கு என்ன அவசரம் நான் ஆரோக்யமாதான் இருக்கேன்.
அவனுக்கு என் உதவி தேவைனாலும் என்னை கூப்பிடுனு சொல்லிர்க்கேன்.
அவா எல்லாருக்குமே நான் தளிகை பண்ணினா ரொம்ப பிடிக்கும்.இப்படியே
ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருந்துன்டு காலத்தை ஓட்டிப்போம்.
எல்லாமே சரியா அமைஞ்சிருக்கும் போது ஏன் கவலபடற?
என் கடம முடிஞ்சிது நான் ஓய்வெடுக்க இங்கவந்துட்டேன்.
உனக்கு கடம இருக்கே..
நமக்கு பூர்விக சொத்தும்எதுவும் இல்ல.
வாடகை கட்டி மாளலயேனு வீட்டை வாங்கின. நமக்குனு சொந்த வீடு ஒண்ணு இருக்கனும் நியாயம் தான்.அப்பா பென்ஷன் பணம். உன் சம்பளம் எல்லாம் சேந்தாலும் வீட்டுக் கடன், அப்பப்போ வர்ற டாக்டர் செலவு.
கரண்ட் பில் உன் பொண்ணோட படிப்பு எல்லாம் லைனா வந்து நிக்கர்தே.
அவளும்வேலைக்கு போனாத்தான் சமாளிக்க முடியர்து.
உனக்கோ பென்ஷன் வராது.அதுக்கும் இப்பவே நீ சேத்து வைக்கனுமேப்பா.
“அழாதேடா , வீடியோ கால் பேசலாம். ஒண்ணும ப்ரசனை இல்ல.தைரியமாஇருக்கனும்.உன் பொண்டாட்டி தாயில்லா பொண்ணு ,ஒரு குழந்த மாதிரிதான் இருக்கா.சரியா சாப்பிட மாட்டா.வேல வேலனுஅதுலயே மூழ்கி போய்டுவா.அவளுக்கு சாப்பிட சொல்லி நான் தான் ஞாபகப்படுத்துவேன்..
ஏதோ பெருமாள் அனுக்ரஹத்தால உனக்கு அமெரிக்கால வேலவந்திருக்கு.
நல்ல சம்பளம்னு சொல்ற.உன் பொண்டாட்டியும் இனிமே வேலைக்கு போகவேண்டிய அவசியம் இல்லனு சொல்ற.ரொம்ப நல்லது.அவள நன்னா பாத்துக்கோ.
நீ நல்லவன். இங்கயே நீ ஆத்துல எனக்கு முடிலனா பாத்திரமெல்லாம் தேச்சி வீட்டை மாப்பு போடுவியே.அதே மாதிரி அவளுக்கும் ஒத்தாசையா இரு.
உன் பொண்ணு பொறக்கும்போது என் கையிலதான் நர்ஸ் கொண்டு வந்து குடுத்தா.அதுக்குள்ள அதுக்கு ரெண்டு மாசத்துல ஏழு வயசு முடியப்போர்து.
அத வளக்கர்து ஒண்ணும் சிரமமில்ல.முன்னாடிலாம் நான்தான் குளிச்சிவிடுவேன்.
இப்போ அதுவே குளிச்சிக்கர்து.ஆனா நான் வெள்ளி கிழமல மட்டும் தல கசக்கிவிடுவேன்.
அதுகிட்ட சொல்லுவேன் அம்மா அப்பா ஆபிஸுக்கு போறா பாட்டிய படுத்தக்கூடாதுனு.அதனால, டைனிங் டேபிள்ல சாத்த்தை பிசைந்து வெச்சுட்டா போதும் துளி கீழ சிந்தாம அழகா சாப்பிடும்.தட்டை அலம்பி வைக்கும்.இப்போலாம் அதுந்துணிய அதுவே மடிச்சி வச்சிக்கர்து.
இந்த வயசுக்கு ரொம்ப பொறுப்பா இருக்கு.கை எழுத்து நன்னார்க்கு.அழகா
வரையர்து. படிப்பும் நன்னா வர்து.ஆனா, அதுக்கு படிப்பை விட வரையர்துதான் ரொம்ப பிடிச்சிருக்காம்.இனிமேதான் உனக்கு சம்பளம் நிறைய வருமே.அத ட்ராயிங் க்ளாசுல சேத்துவிடு.படிப்பும் முக்கியம் விட்டுடாத. தற்காப்பு கலைலாம் சொல்லிக்குடு.சூட்டிகையான பொண்ணு.அது பொழச்சிக்கும்.
லீவு கிடைக்கும்போது வாங்கோ.
என்று பேசியதையே திரும்ப திரும்ப பேசி
என்னால் முடிந்தவரை அவனுக்கு ஆறுதல் சொன்னேன்.
ஆனால் அவனோஆறு மாசம் கழிச்சி வருவேன் நீ கண்டிப்பா வந்திடனும்மா” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
அவன் போனதும்
பணியாளர்கள் துணனயுடன் உள்ளே வந்தேன்.
அந்த வராண்டாவில் திருப்பதி பாலாஜியும் பத்மாவதியும் பெரிய போட்டோவில் பெரிய பெரிய மாலைகளுடன் ஊதுவத்தி மணக்க இரண்டு பக்கமும ஆளுயர குத்து விள்க்குகள் ஒளிர கருணை பொங்கும் கண்களுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்கள். கைகுவித்து வணங்கினேன்.
இது தான் prayer hall என்ற பணியாளர் மெலிந்த தேகத்துடன் இருந்தாள். அடர்த்தி குறைந்த ஆனால் நீளமாக வளர்ந்திருந்த தலைமுடியை மழமழ வென்று வாரி பின்னலிட்டிருந்தாள். நெற்றியில் குங்கும்ம அதன் மேல் விபூதியும் அணிந்திருந்தாள்.மூக்கின் இடது பக்கத்தில் மருவே மூக்குத்தி போலிருக்க மாநிறமாய் இருந்த அந்த பணியாளருக்கு முப்பதுக்கு மேல் வயதிருக்கும். சுடிதார்அணிந்து கொண்டு அதற்குமேல் வெளிர் நீல நிறத்தில் காப்பக பெயர் பதித்த சட்டையும் அணிந்திருந்தாள்.
நன்றாக நடந்த என்னை தாங்கிபிடித்துக் கொண்டாள்.
நான் சிரித்து கொண்டே “ உன் பெரென்னம்மா என்றேன்.” “என் பேரு விஜயலஷ்மிங்கம்மா” என்றாள்.
“ விஜயலஷ்மி என்னால நல்லா நடக்க முடியும் எனக்கு எந்த நோயுமில்ல” நான் சொன்னதும் என் கைகளை பிடித்திருந்த அவள் கைகள்விலகினாலும் அவள் கண்களில் ஜாக்ரதை உணர்வு பரவி நின்றது.அவளுடைய பொறுப்புணர்ச்சி என் மனதை கவர்ந்தது.
“்அம்மா இங்க நீங்க சுதந்திரமா இருக்கலாம்.உங்களுக்கு பிடிச்ச உணவை
முதல் நாளே சாயந்தரம் அஞ்சு மணிக்குள்ள சொல்லிடுங்கம்மா.மறுநாள் பரமாறுவோம்.
வெந்நீர் எப்பயும் கிடைக்கும்.இங்க உங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
அவங்க கூட வெளில போகலாம்.ஆனா முன்னாடியே போற டைம் வர்ற டைம் லொகேஷன் சொல்லிடுங்க கொஞ்சம் லேட்டானாலும் நாங்க உங்கள தேடி வருவோம்.
உறவுக்காரங்க வீட்டுக்கு போகலாம் எத்தனை நாள் தங்கறீங்கனு சொல்லிடுங்க
ஒருவேளை மாற்றங்கள் இருந்தாகொஞ்சம் முன்னதாவே சொல்லிடுங்க.
பேசிக்கொண்டே வந்தவள்.டைனிங் ஹாலுக்குள் அழைத்துச் சென்றாள்.
வரிசையாக கல்யாண பந்திபோல நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டிருந்தன.
அங்கே சுவற்றில் ராதையும் கண்ணனும் ந்ந்தவன்தில் அமர்ந்து கொண்டிருப்பதை பொலவும் கன்றுக்குட்டி கண்ணனின் பாத்த்தில் தலைவைத்து ராதையின் மடியில் படுத்திருப்பது போலவும் இருந்த பெரிய படம் ரொம்ப அழகாக இருந்தது.
“உங்களுக்கு விருப்பமானால் இங்கு வந்து சாப்பிடலாம் அல்லது உங்கள் அறையிலேயே கூட சாப்பிடலாம் என்றாள்.அங்கிருந்து வெளியே வந்தவளை பின்பற்றி நடந்தேன் அங்கே வரிசையாக கழிப்பறைகள் இருந்தன அங்கே நின்றாள்.
“அம்மா இங்கே நிறைய பாத்ரூம்கள் இருக்கு.இது பெண்களுக்கான பகுதி.
வயசானவங்க நிறையபேர் பாத்ரூம்ல தான் விழறாங்க அவங்கள உடனடியா காப்பாத்தான் எந்த கதவுலயும் தாப்பாள் கிடையாது.
வெறும சாத்தலாம்.
செருப்பு வெளில இருந்தா அந்த ரூமுக்கு நீங்க போக்க் கூடாதும்மா.
சிலபேர் அடையாளத்துக்கு டவல் கூட தொங்க விடுவாங்க.அவங்கவங்க வசதி.”அவள் சொல்லிவிட்டு
“இப்போ பாத்ரூம் போகணும்னா போய்ட்டு வாங்கம்மா நான் வெய்ட் பண்றேன்” என்றாள்.நான் செருப்பை வெளியில் கழட்டிவிட்டு போய்விட்டு வந்தேன்.கழிப்பறை உள்ளே ஹேன்ட் ஷவர் இருந்தது.
பிறகு நடந்து வெளியில் வந்தோம். வரிசையாக அறைகள் இருந்தன.
எல்லா அறைகளிலும் கதவுகள் சாதாரண கதவுகள் போல இல்லாமல் ஸ்லைடிங் டோராக இருந்தது. அங்கும் தாழ்ப்பாள் இல்லை. நான் அதை கவனித்ததும்
“ எல்லாம் உங்க பாதுகாப்புக்கு தான் அம்மா. கதவை தட்டிட்டுதான் உள்ள வருவோம் நாங்க. இதோ,ஒரு நிமிஷத்துல வரேம்மா“என்று சொல்லிவிட்டு போனாள்.
எனக்கான அறையில் மேலே பேன் ஓடிக் கொண்டிருந்தது. ஜன்னல் திறந்தே இருந்தது.ஜன்னலுக்கீழே மெத்தை.
ஜன்னல் வழியாக டைனிங் ஹால் தெரிந்தது.
மெத்தையும் வெளிர் நீல நிற உரை போடப்பட்டிருந்தது.சாப்பிட படிக்க வசதியாக பக்கத்தில் சிறு டேபிள் என் துணிகளை வைத்துக் கொள்ள அலமாரி. கூப்பிட்ட குரலுக்கு பணியாளர்கள்இருக்கிறார்கள்
இது போதுமே எனக்கு.
என் மகன் ஏசி அறை புக் செய்ய விரும்பினான்.நான் தான் தடுத்துவிட்டேன்.
ஏனென்றால் வீட்டில் பேனையே அதிக வேகமாக சுழல விட்டால் எனக்கு பிடிக்காது.மெல்லிய இதமான காற்று இருக்க வேண்டும் எனக்கு.
அதனால் ஹாலில் தனியாகத்தான் படுப்பேன்.என் பேத்தி என் மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்கும் ஆனால் தூங்குமுன் அவர்கள் அறைக்குப் போய்விடும்.ஏனென்றால் அதுக்கு ஏசி வேண்டும்.
இதற்குமேல் வேறென்ன தேவை?
இப்படி நினைத்தாலும் பேத்தியின் மிகவும் பிடித்தமான படுக்கையான என் மடியை ஏக்கமாக பார்த்தேன்.
பென்ஷனிலிருந்து கட்ட முடிந்த தொகைதான் என்றாலும் என் மகன் தான்தான் மாதாமாதம் இல்ல கட்டணத்தை செலுத்துவேன் என்று சொல்லிவிட்டான்..
அதனால் , பென்ஷனை அப்படியே சேமித்துவைத்தால் பேத்திக்கு எதுக்காவது உதவும்.
மகனுக்கு எந்த செலவும் வைத்துவிடாமல் மீதி காலத்தை ஓட்டவேண்டும்.
கல்லூரி முடித்ததுமே என்னை விட பத்து வயது மூத்தவரான
அரசாங்க வேலையிலிருந்தஅவரை திருமணம் செய்து வைத்தார்கள்.
புகுந்தவீடும் கொஞ்சம் வசதிக்குறைவு தான்.
மாமனார் இல்லை. அவருடைய இரண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் சீமந்தம் பிள்ளைபெறவு என்று பணம் கரைந்துவிட்டது. வாடகை வீட்டிலேயே வாழ்க்கை ஓடிவிட்டது.
நாங்கள் சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டோம்.
அவருக்கு ரிடையர்மென்ட் ஆகி கிடைத்த பணம் தான் அவரது ஆஸ்பிட்டல் செலவுக்கு பயன்பட்டது.
அவர் மறைந்த பிறகு மீதி இருந்தது வீட்டுக்கான முன்பணமாயிற்று்.
ஆனால்மா,மாதா மாதம் வட்டி கழுத்தில் கத்தி வைத்தது.இந்த சமயத்தில் வெளிநாட்டு வேலை வரமாக கிடைத்திருக்கிறது. என்னையும் வந்துவிடும்படி கூப்பிட்டான் வீடு கொடுத்திருக்கிறார்களாம்.முதலில் நீங்கள் செட்டில் ஆகுங்கள்.பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டாலும்.போவதே காசு சேர்ப்பதற்காக எல்லாரும் போய் உட்கார்ந்து கொண்டால் எப்படி பணம் சேர்க்க முடியும்?அதனால் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன..புரியாமல் இவ்வளவு வருத்தப்படுகிறார்கள்.
இனி வாழ்க்கையின் எஞ்சிய வருடங்களை புது மனிதர்களுடன் இந்த நான்கு சுவற்றுக்குள் கழிக்க வேண்டும் என்றஎண்ணம் சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது.
யோசித்துக் கொண்டிருந்த போது…
“அம்மா” என்ற குரலுடன் திறந்திருந்த கதவை தட்டினாள் விஜயலஷ்மி.நான் வெளியே வந்தேன்.
“கொஞ்ச நேரம் தோட்டத்துக்கு போகலாமா? அங்க நிறைய பேர் இருக்காங்க. உங்களுக்கும் அவங்களோட பேசினா நல்லா இருக்கும்.” சொல்லிவிட்டு உதடுகளைஇறுக்க மூடினாள்.அது அவளது சுபாவம் போலும்.
“சரிம்மா.அதுவும் நல்லதுதான்”என்றேன். விஜயலஷ்மியின் வழிகாட்டுதலில் மீண்டும் கழிப்பிடங்கள் குடிநீர் குழாய்கள் தாண்டியதும் சற்று பெரிய தோட்டம்.இரண்டு பக்கமும் மாமரங்கள் வேப்பமரங்கள் தென்னை மரங்கள் என அடுத்தடுத்து ஒரு ஒழுங்குடன் நின்றிருந்தன.
பறவைகளின் ஒலிகள்.இதமானகாற்று வீசியது. நடுவில் சிமெண்ட் நடைபாதை.அதன் முடிவில்.விநாயகர் கோவில். அந்த கோவிலின் வாசலில் சிறுமண்டபம் இருந்தது. மண்டபத்தில் வலதுபக்கத்திலிருந்த இரண்டு தூணகளுக்கு நடுவே வெண்கலமணிகளை ஒரு ஓரமாக கைக்கு எட்டும் தூரத்தில் இரும்புச்சங்கிலியில் கோர்த்து தொங்கவிட்டிருந்தார்கள்.
காற்றில் அசையும் போது மணியோசை கேட்டது.அருகே மருதாணிச்செடி கம்மென்று வாசணை வீசியது. மல்லிகை ரோஜா பூச்செடிகள் சூழ அந்த இடம் ந்ந்தவனம் போல இருந்தது. “அம்மா,இங்ககொஞ்ச நேரம் இருங்க எதாவது வேணும்னா இந்த பட்டனை அழுத்துங்க என்று என் இடது தோளுக்கும் வலதுஇடுப்பிற்குமாக கருப்பு பூணூல் போட்டது போல ஒரு பெல்ட் போட்டுவிட்டு போய்விட்டாள் ஜெயலஷ்மி.
என்னைப்போல பலர் அங்கிருந்தனர்.…சுற்றிப்பார்த்தபோது…அங்கே இருந்த மாமரத்தினடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் இந்திராவும் பானுமதியும் உட்கார்ந்து இருந்தது தான் பெரிய ஆச்சரியம்.
வேகமாக நடந்து அவர்களைநெருங்கினேன்.
அவர்களை பார்த்ததும் கல்லூரி செல்லும் வயதிற்கு என் மனம் தாவியது.
பழைய நினைவுகளை உதறிவிட்டு,
“இந்திரா…” என்றேன் என் குரல் கேட்டதும் இருவருமே என்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டு “புவனேஷ்வரி நீ வரலயேனு எதிர்பாத்தோம்வாவா…” என்று என்னை அணைத்து மகிழ்ந்தனர். கல்லூரியில் நாங்கள் முப்பெரும் தேவியராக இருந்தவர்களாயிற்றே. அதனால் அவர்கள் என்னை அங்கு எதிர்பார்த்திருக்க வாய்ப்பு அதிகம்தான் என்று நினைத்தேன்.
கல்லூரியில் படிக்கும்போதே பானுமதியும் இந்திராவும் சற்று பிடிவாதக்கார்ர்கள்.
அவர்களை போலவே நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்களையே மணக்க வேண்டும என்று காத்திருந்தனர்.
அவர்கள்தன்னுடையகொள்கையையாருக்காகவும்விட்டுக்கொடுக்கவில்லை.அவர்கள்இஷ்டப்படிதான் கல்யாணம் செய்தனர்.லேட் மேரேஜ்தான்.
அவர்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கும்நான் போயிருந்தேன்.பானுவின் மகனுக்கும்இந்திராவின் பெண்ணிர்க்கும் தான் திருமணம் செய்ய வேண்டும் முதலிலிருந்தே இவர்களே முடிவு செய்தனர்.
ஆனால்அ..ங்கும் ஜெயித்தது பானுவும் இந்திராவும் தான்.இந்த வெற்றிக்காக பார்ட்டி கூட வுத்தார்கள்.
பலவாறாக சிந்தனை ஓடியது. “ சம்மந்திங்க ரெண்டு பேரும் ஒரே இடத்தில இருக்கீங்க? நாங்க பிரியவே மாட்டோம்னு உங்க பசங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டு வெற்றிகரமா சம்மந்தி ஆகிட்டீங்க.இப்போ இங்க என்ன பண்றீங்க?“
நான் கேட்டதும் “இப்பவும் நாங்க பிரியல.எங்கள மாதிரி எங்க பசங்களும் ஒத்துமையா இருக்கனும்னு திட்டம்போட்டோம் அதான் இங்க வந்துட்டேன்” என்றாள் பானுமதி கள்ளங்கபடமற்ற இதயம் கொண்டவள் அவள்.பொய் அவளிடம் கிடையாது.ஆனால்..
அவள் சொன்னது எனக்கு புரியவேயில்லை.
கல்ரெயாணமாகி ரெண்டு வருஷம் கழிச்சும்ங
“என் மகன் ஆரவ் க்கும் இவ மக அஷராவுக்கும் சுத்தமா ஒத்துப்போகல.சதா சண்டை.பெருந்தன்மையோ துளிக்கூட இல்ல.
ஆரவ் ஷாட் டெம்பர்ட்
அஷரா நல்லவ தான்.ஆனா சட்டுனு யோசிக்காம பேசிடுவா.உடனே
சண்டை ஆரம்பிச்சிடும்.
முட்டாள் தனமா எங்களோட சந்தோஷத்தை மட்டும் நினைச்சி சுயநலமா முடிவெடுத்துட்டோமேனு கல்யாணத்துக்கப்புறம் புலம்ப வேண்டியாதா போச்சு.
எங்க தப்பை நாங்களே சரிபண்ண முடிவு பண்ணோம்.
சம்மந்திங்க நாங்க நாலு பேரும் பேசினோம்.திட்டம் போட்டோம்.
ஒரு வேளை எங்க திட்டம் பலிக்கலனா அவங்களுக்கு நாங்களே டைவர்ஸ் வாங்கி குடுத்துடனும்னும் முடிவு பண்ணோம்.
திட்டப்படி நான் கொடுமைக்கார மாமியாரா எடுத்ததுக்கெல்லாம் என் மருமக அஷரா கிட்ட சண்டை போட்டேன்.
அவன் எதிர்லயே அவள சாப்பிடகூட விடாம விரட்டி விரட்டி வேல வாங்கினேன்.என் பையனை கைக்குள்ள போட்டுக்கற மாதிரி விழுந்து விழுந்து கவனிச்சேன்.நாங்க எதிர்பார்த்த மாதிரி கொஞ்சம் வித்தியாசம் ஆரவ்கிட்ட தெரிஞ்சிது. என் மகனுக்கு அவ மேல இரக்கம் வந்துது.
அவளுக்கு சாப்பிட வாங்கிட்டு வந்தான். அவள திட்டாதன்னு தடுக்க கூட செஞ்சான் என்றாள் பானுமதி.
“மீதிக் கதைய நான் சொல்றேன்.
அஷரா கோச்சிக்கிட்டு என் வீட்டுக்கு வந்தா.
ஒரே பெண்ணாச்சே வேற எங்கப்போவா?அவ சொன்ன கதையெல்லாம் கேட்டுட்டு ஏற்கனவே நாங்க போட்ட திட்டப்படி ஆரவ்வை வாய்க்கு வந்தபடிலாம் திட்டினேன்.அதுக்கு அவ எங்கிட்ட சொல்றா அவர் நல்லவர் தான்உ்ங்க ப்ரன்ட் தான் ரொம்ப மோசம்னு.ஆரவ் அடிக்கடி போன்ல பேச ஆரம்பிச்சான்.
அஷரா மேல இருந்த இரக்கம் பிரிவினால அன்பா மாறிடுச்சு அவனுக்கு.
ஆனா இவ மசியல. உங்கம்மா இருக்கிற வரைக்கும் அங்க வர மாட்டேன்னு சொன்னா.
பானுமதி மனசு நிறைய பாசமும் உதட்டளவில கோபமுமா நடிக்க ஆரம்பிச்சா.. ஆனா அவனோ மனசு முழுக்க கோபத்தோட வார்த்தைகளை விட்டான்.
இவளோட நடிப்பை தொடர வேண்டி கிராமத்து போகலாம்னு முடிவு பண்ணினா. ஆனா அங்கே உறவுக்காரங்களுக்கு பதில் சொல்லனும்அதுவுமில்லாம நாங்க நாலுபேரும் ஒண்ணா இருக்கனும்னு .
வீட்டுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கிற இந்த இல்லத்துக்கு பானு வந்துட்டா.
பானுவோட வீட்டுல அஷராவும் ஆரவும்பா னுவோட கணவரும் இருக்காங்க.
சமைக்க ஆள் போட்டிருக்காங்களாம்.
வார நாட்கள்ல வேலைக்கு போறது .வார கடைசிலசினிமா பீச்னு சுத்தறாங்களாம்.
எங்கிட்ட ரொம்ப ஒட்ட ஆரம்பிச்சாங்க.
மொதல்ல பொறுமையா இருந்தோம்.
நாங்களும் விலகினாதான்அவங்க பானுவோட சேருவாங்கனு நைஸா என் பொண்ணுகிட்ட என்னடி உன் மாமியார் ஹாயா ரெஸ்ட் ல இருக்கா.நான் இங்க உழைச்சி ஓடா போறேன்னு ஒரே தடவ சொன்னேன்.. அவ யோசிச்சா.
ஆபிஸ்ல ஆஸ்திரேலியா போக லாங் டைம் ஆன் சைட் ஆப்பர்சுனிடி கேட்டு வாங்கிட்டா...
அதபாத்துட்டு ஆரவ் ஆஸ்திரேலியாலயே வேற ஒரு கம்பெனில வேல வாங்கிட்டான்.இங்க வேலய ரிசைன் பண்ணிட்டான்குழந்தை பிறக்கிற வரைக்கும் நான் இந்த வேலைக்கே போறேன்.அப்புறம் சூழ்நிலை பாத்து நாம முடிவெடுத்துக்கலாம்னு அஷரா ஆரவ்கிட்ட சொன்னா.அவனும் சம்மதிச்சான்..
வெளிநாட்டுக்கு போறது கர்ன்பம் ஆனதும் மாமனார் மாமியார்கிட்ட சொல்லுனு சொன்னேன்.அவங்க அப்பாகிட்ட மட்டும் சொல்லிர்க்கான். அப்பா மேல பாசமா இருக்கான்.ஐ வில்மிஸ் யூப்பானு அழறான்.
ஆனா பானுவ பத்தி பேசினா மட்டும்.நீங்க ப்ரன்ட் ஆக இருந்துக்கோங்க.எங்களுக்கு நிம்மதி முக்கியம்.
நாங்க நல்லா இருக்கனும்னு நினைக்கிற உங்க மூணுபேரோட ஆசிர்வாதம் போதும்னு சொல்றான்.
நாங்க போட்ட திட்டத்துல ஒரு பக்கம் பாத்தா,
நண்பர்கள் நாங்க பிரியல. அவங்களும் ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க.
ஆனா அம்மாவும் பிள்ளையும் பிரிஞ்சிட்டாங்க.
இது வெற்றியா தோல்வியானு தெரியல.
அந்த நேரத்தில் இரவரது கணவரகளும் வந்தனர்.என்னை பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்டோம்.அவர்களும் பக்கத்தில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தார்கள்.
மறுபடியும் இந்திரா பேசினாள்.
“இப்பவாவது உண்மைய சொல்லலாம் பானு” என்றாள்.
“நான் என் பையன் கூட வாழர்தவிட அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழர்து ரொம்ப முக்கியம்.
உண்மை தெரிஞ்சா என் பையன மனசுல நாடக்க்காரியா தான் நான் தெரிவேன்.
நம்பிக்கை போய்டும்.அதைவிட கோவக்காரியா என்ன அவன் நினைக்கர்து பெட்டர்..
நான் இப்படி இருந்தாதான் அவங்க இன்னும் ஒத்துமையா இருப்பாங்க
அவங்க வெளிநாடு கிளம்பின பிறகுதான் நான் அங்க வருவேன்.அதுதான் நான் போடற நாடகத்துக்கு சரியா இருக்கும். என்ன ஒரு குறைனா என் மகன் சந்தோஷமா குடும்பம் நடத்தர்த பாக்க எனக்கு குடுத்து வைக்கல ” என்றாள் பானு வேதனையுடன்.
பிறகு கணவரைப் பார்த்து
“நீங்க போய் அவனை பாத்து.அவனுக்கு ென்னென்ன தேவையோ செய்து குடுத்துடுங்க. அவன் மனசுல கோவம் இருக்கலாம். தனக்கு யாரும் இல்லன்ற தாழ்வு உணர்ச்சி வந்திடக்கூடாது .”என்றாள்
“ஒருத்தர ஒருத்தர் எதிரியா நினைச்சவங்களுக்கு இப்போ பானு தான் “ பொதுவான எதிரி”.அவங்கள வாழ வைக்கற எதிரி. பானுவுக்கு கோயிலே கட்டலாம். இப்படிப்பட்ட மாமியார் கிடைக்க அஷரா புண்ணியம் செஞ்சிருக்கனும்.
அவங்க ரெண்டு பேருக்கும்ஆழமான அன்பான நல்ல புரிதல் வந்தபிறகு உண்மைய சொல்லி பானுவோட நல்லமனச அவங்களுக்கு தெரிவிக்காம விடமாட்டேன்.. இந்திரா நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தாள்.
பானுவை பார்த்தேன்.கண்ணீரை மறைக்க அண்ணாந்து பார்த்து வாய்விட்டு சிரித்தாள்.
தான்படும் சிரமத்தில் தன் குழந்தையின் நலன் ஒளிந்திருக்கிறது என்ற எண்ணம் தான் எல்லா பெற்றோருக்கும் எப்படிப்பட்ட வலிகளையும் தாங்கும் மனவலிமையை அளிக்கிறது.
No comments:
Post a Comment