திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாமல் எத்தனையோ கோவில்களுக்கு போய் பிரார்த்தனை செய்து பிறந்த மகள் மம்தா.
உலகை மிரட்டும் வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து மக்களை காப்பாற்றுவேன் என்று புறப்பட்டாள்.
தன் ஒரே மகளை ஆராய்ச்சி படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு தற்போது அவளது நினைவுகளோடு போராடி கொண்டிருக்கின்ற்னர் தவமணியும், பாஸ்கரும்.
மம்தாவின் சிறு வயது துணிகள் ,பொம்மைகளை கூட தூக்கி எறிய விடாமல் தடுத்தது பெற்றோரின் நேசம் .
வாட்ஸாப்பில் குட் மார்னிங் குட் நைட் என்று பாஸ்கர் போடும் மெசஜ்களுக்கு வாரத்தில் ஓரிரண்டு நாட்கள் பதில் வரும்.
"நம்பள மம்தா நினைக்கவே இல்லையாங்க?" தவமணியின் வார்த்தைகள் சுருக்கென்று தைக்க
தானே போன் போட்டு பேசினார் பாஸ்கர் "எப்படி இருக்கம்மா ?"
மம்தாவின் வார்த்தைகள் சரியாக கேட்கமுடியாமல் ஏதேதோ கருவிகளின் ஒலிகள் கேட்க...சட்டென்று மம்தா போனை துண்டித்தது தெரிந்தது.
சற்று நேரத்தில் மம்தாவிடமிருந்து போன் வந்தது
"நான் நல்லா இருக்கேன் டாடி முக்கியமான வேலை இருக்கு டாடி அப்புறம் பேசவா ? "
"ஏன்மா ?"
"டெஸ்டிங் இருக்கு "
"அப்போ நாளைக்கு பேசறயாமா?"
"வார நாட்கள்ல கஷ்டப்பட்டு லேப் ல டெவெலப் பண்றத...வார இறுதி நாட்கள்ல டெஸ்ட் பண்ணுவாங்க டாடி "என்றாள் மகள்
" வெளிநாட்டுல ஆராய்ச்சி பண்ணனும்னு சொன்ன ...அது தப்பில்ல...ஆனா அம்மாவும் நானும் ரொம்ப மிஸ் பண்றோம் ....மத்த நாட்கள்ல நீ பிஸி......வார இறுதி நாட்கள்ல கூட போன் பண்றதில்லயே ..செல்லம்...."
ஸ்பீக்கர் போட்டு நிதானமாக பாஸ்கர் பேச மனைவி தவமணி கேட்டு கொண்டிருந்தாள்..
"அம்மா நல்லா இருக்காங்களா அப்பா?"
"நல்லா இருக்கேன்மா மம்தா" தவமணி சொல்ல
" அம்மா என்னை போல நிறைய பேர் இங்கே போராடிக்கொண்டு இருக்கோம் அம்மா.கோடிக்கணக்கான மக்களை காப்பாத்தனுமே அம்மா.
கொஞ்சம் பொறுத்துக்கோங்க .அப்பாகிட்ட சொல்லுங்க ப்ளீஸ்."
"சரிம்மா"
"என் செல்ல அம்மா...."போனில் வந்த முத்த மழை கண்களில் நீராக ததும்புவதை மறைத்து...சிரித்தாள் தவமணி.
"அம்மா ஒரு முக்கியமான விஷயம் "
"என்னம்மா?"
"நாங்க செய்த மருந்தை டெஸ்ட் செய்றதுக்கு எல்லாருக்கும் தயக்கம் அம்மா.அதனால...."
"நாங்க செய்த மருந்தை டெஸ்ட் செய்றதுக்கு எல்லாருக்கும் தயக்கம் அம்மா.அதனால...."
"அதனால???"
"உங்க கிட்டலாம் சொல்லாம...நான் அந்த மருந்தை எனக்குள்ள செலுத்த சொல்லிட்டேன் அம்மா...அப்பாவுக்கு தெரிஞ்சா பயப்படுவார்....
"உங்க கிட்டலாம் சொல்லாம...நான் அந்த மருந்தை எனக்குள்ள செலுத்த சொல்லிட்டேன் அம்மா...அப்பாவுக்கு தெரிஞ்சா பயப்படுவார்....
எங்களோட மருந்து வெற்றி அடைஞ்சா அடுத்த வாரம் நான் பேசுவேன்.இல்லைனா நீயே புரிஞ்சிக்கோம்மா.அப்பாவை நீதான் பார்த்துக்கணும் அம்மா... லவ் யு."
"மம்தா டெஸ்டிங் க்கு டைம் ஆச்சு "யாரோ அழைக்க மகள் போன் வைத்தாள்.
கதறி அழுதனர் பெற்றோர்.
மம்தாவிடமிருந்து போன் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன...
அப்படியென்றால்???
மம்தாவிற்கு ஏதாவது ஆகியிருந்தால் ஆராய்ச்சி கூடத்திலிருந்து நமக்கு கட்டாயம் சொல்லுவார்களே.... இதுவரை அவர்களிடமிருந்து போன் எதுவும் வரவில்லை.வந்துவிடவும் கூடாது.பலதரப்பட்ட சிந்தனைகள்.மம்தா என் செல்லமே.
என்ன ஆகிவிட்டது மம்தாவிற்கு.நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருந்தது .இரவுகளில் தூக்கமே இல்லை, எதுவும் சாப்பிட பிடிக்காமல்
எதுவும் விளங்காமல் இருவரும் மனதிற்குள் கலங்கிகொண்டிருந்தனர். பூஜை செய்து வேண்டிக்கொண்டே இருந்தனர்.இவ்வளவு நாட்கள் மம்தாவுடன் சேர்ந்து பேசியதும் சிரித்ததும் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றி கொண்டே இருந்தது.அந்த நினைவுகள் தந்த வலியால் கண்கள் குளமாகவே இருந்தன.
வீட்டிற்குள் யாரோ வருவது தெரிந்ததும் சட்டென்று இருவரும் கண்களை துடைத்து கொண்டனர்.வந்தது குமுதாவின் மகள் பிரமீளா.
குமுதா....
இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் வயிற்றில் ஆறுமாதமாக மூன்றாவது குழந்தை இருக்கும் போது கணவன் இறந்துவிட,வயிற்று பிழைப்புக்காக வேலை கேட்டு வந்தாள்.
நாம் வேலை கொடுக்காவிட்டால் கர்ப்பிணியானவள் எங்காவது போய் கஷ்டப்படுவாளோ என்று காய்கறி வெட்டுவது பூ தொடுப்பது ,துணி மடிப்பது போன்ற வேலைகளை செய்ய சொல்லி நல்ல சம்பளமும் கொடுத்தாள். அவளது பிரசவத்திற்கும் உதவி செய்தாள் தவமணி.
குழந்தைக்கு பிரமீளா என்றும் பெயர் வைத்தாள்
பிரமீளா குமுதாவை விட தவமணியின் மடியில் தவழ்ந்ததே அதிகம் எனலாம்.
குமுதா மற்ற வீடுகளிலும் வீட்டு வேலை ,சமையல் வேலை,கல்யாணங்களில் சமைப்பது மற்றும் குழந்தைகளை குளித்துவிடுவது இப்படி பம்பரமாய் சுழன்று உழைத்து முதல் மகளை திருமணம் செய்து அனுப்பிய பிறகு அடிக்கடி நோய்வாய்ப்பட ஆரம்பித்து விட்டாள்.இரண்டாவது மகள் தையல் தைத்து பிழைப்பு ஓட ஆரம்பித்தது.
தவமணி தன் வீட்டின் பின்பக்கம் இருந்த அவுட் ஹவுஸ் குமுதாவின் சிறிய குடும்பத்துக்கு போதுமானதாக இருந்தது.
"அம்மாவிற்கு உடம்பு செரியில்ல அதான் நான் வந்தேன்" .பிரமீளா சொல்ல
"ஒரு நிமிஷம் இரு " உள்ளே ஓடிய தவமணி மம்தாவின் பழைய துணிகளை கொண்டு வந்து பிரமீளாவிடம் நீட்டினாள்.
"சட்டை கிழிஞ்சிருக்கும்மா ..இந்தா...இதை மாத்திக்கோம்மா"கையில் வாங்கி உள்ளே போனாள் பிரமீளா.
மீண்டும் மகளை பற்றிய சிந்தனை தாக்க வேதனையில் மூழ்கினாள்.மனம் முழுக்க மம்தா பேசிய வார்த்தைகள் மோதிக்கொண்டே இருந்தன.
உன்னை விட்டு எப்படி எங்களால் வாழ முடியும் செல்ல மகளே என்று மனம் புழுங்கியது.
"தோட்டம் பெருக்கி செடிகளுக்கு தண்ணி ஊத்திட்டேன் மா.... "
பிரமீளா குரல் கொடுக்க வாசலுக்கு வந்த தவமணி "சரிம்மா "
என்றவள் அப்படியே நின்று விட்டாள்...
சற்று பூசிய மாதிரி உடம்பும்,இரட்டை பின்னல் போட்டிருந்த பிரமீளாவிற்கு
மம்தாவின்பழைய துணிகள் மிகப் பொருத்தமாக இருந்தது.
அந்த துணிகளை அடைந்ததில் அந்த கண்களில் தெரிந்த ஆனந்தம் நிறைவு மலர்ச்சி இது வரை பிரமீளாவிடம் தவமணி கண்டதே இல்லையே.
"ரொம்ப தேங்க்ஸ் அம்மா " நன்றியுடன் பிரமீளா சொல்ல
"என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசற? " செல்லமாக கோபித்து விட்டு கலைந்திருந்த பிரமீளாவின் தலைமுடியை அக்கறையுடன் சரி செய்துவிட்டு "போய் படி "என்றாள் தலையாட்டிவிட்டு கிளம்பிய பிரமீளாவை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தவளுக்கு "பிரமீளா மம்தா மாதிரியே இருக்கால்ல?" கணவரின் வார்த்தைகள் மீண்டும் மம்தாவின் நினைவை கொண்டுவர.என்னவென்று யூகிக்க முடியாத வேதனை நெஞ்சில் பரவ...சட்டென்று பேச்சை மாற்றி
"குமுதாவுக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம் போய் பார்த்துவிட்டு வரலாம் வாங்களேன்." மடமட வென்று கொஞ்சம் பழங்கள் மற்றும் பால் காய்ச்சி எடுத்துக்கொண்டு கணவருடன் குமுதாவின் இடத்திற்கு கிளம்பினாள்.
கழுத்து வலியால் படுத்திருந்த குமுதாவிற்கு காய்ச்சிய பாலையும் பழங்களையும் கொடுத்துவிட்டு,"இப்போ எப்படி இருக்க குமுதா?" என்று விசாரித்தாள்
வந்தவர்களுக்கு மகிழ்ச்சியுடன் தண்ணீர் கொடுத்தாள் பிரமீளா.உட்கார பாயை கொண்டுவந்து போட்டாள்.
"பரவால்லம்மா" குரலே பலஹீனமாக வந்தது குமுதாவிடமிருந்து
"குமுதா...வந்து... உன்கிட்ட...எப்படி இதை கேட்பதுன்னு தெரியல...?"என்று தவமணி தயங்க...
"சொல்லுங்க அம்மா" குழப்பமாக பார்த்தாள் குமுதா
"வந்து.... பிரமீளாவை எங்களுக்கு தத்து குடுக்கறியா?" தயங்கி தயங்கி கேட்டுவிட்டாள் தவமணி.
"அம்மா...உங்க வீட்டு பெண்ணாக இருக்க பிரமீளா கொடுத்து வெச்சிருக்கனும்...ஒருவேளை பிரமீளாவிற்கு விருப்பமாக இருந்தால்...அவளோட நல்ல எதிர் காலத்திற்கு குறுக்கே நான் நிற்கவே மாட்டேன் அம்மா"குமுதாவின் வார்த்தைகளை கேட்டுவிட்டு தவமணி ஏக்கமாக பிரமீளாவை பார்க்க.... ஓடி வந்த பிரமீளா தவமணியின் கைகளை பிடித்தாள்.அள்ளி அணைத்த தவமணி தேக்கிவைத்திருந்த பாசம் கண்ணீராய் பெருக வாரி அணைத்தாள்.கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
நல்ல நாள் பார்த்து சட்டப்படி தத்து எடுத்து கொள்கிறோம் என்றாள்.
குமுதாவும் கைகளை உயர்த்தி பிரமீளாவை ஆசீர்வதித்தாள்.ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
"நீ இனி எங்கள் மகள்" அழுத்தமாக கூறினாள் தவமணி.
பிரமீளாவும் தவமணியை இறுக அணைத்து கொண்டாள்.
முதன் முதலாக "அம்மா" என்றாள் பாசத்துடன்
அப்போது.....
கையிலிருந்த போன் ஒலித்தது.
வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் கால்....கைகால்கள் நடுங்கின.
அந்த நொடியில் இருந்த அத்தனை சந்தோஷமும் மறைந்தது.
என்னவாக இருக்கும்.....
பதட்டமாகஇருந்தது.....
அப்படியென்றால்..?????...
பயத்தில் தவமணிக்கும் பாஸ்கருக்கும் முகம் வெளுத்தது.
ஒரு கையால் பிரமீளாவை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.
புதிதாக கிடைத்த மகள் அணைத்திருக்க....
மெதுவாக தவமணி நடுங்கும் குரலில் "ஹலோ ..." என்றாள் ..
"அம்மா ஆராய்ச்சி கூடத்து போன் லேர்ந்து பேசறேன் அம்மா....குட் நியூஸ் அம்மா . சக்ஸஸ்.மருந்து கண்டு பிடித்துவிட்டோம் "மம்தாவின் குரல் தேன் போல இனிமையாக இருந்தது,தவமணியின் காதுக்கு ஒரு பரவச உணர்வைத் தந்தது.
"மம்தா என் செல்லமே. ... உன் குரலை கேட்டு.... நிம்மதியா... இருக்கும்மா ..."பரவசத்தில் பேச்சே வரவில்லை விம்மி விம்மி அழுதாள் தவமணி.போனை தான் வாங்கி கொண்டார் பாஸ்கர்
"மம்தா நல்ல இருக்கியா அம்மா?"
"அப்பா நல்லா இருக்கேன் அப்பா. சாரி உங்களுக்கு டென்ஷன் குடுத்ததுக்கு...நீங்க ரொம்ப பதட்டமாக இருந்திருப்பீங்க அப்பா ஆனால் வேற வழி இல்லப்பா"
"எனக்கு புரியுதும்மா....அடுத்தவங்க கஷ்டத்தை போக்க நினைக்கிற உங்க அம்மா மாதிரி மனசும்மா உனக்கு.செல்லம் இனிமே எல்லாமே நமக்கு சக்ஸஸ் தான்மா....அப்புறம் உன்கிட்ட சொல்லாம.... நாங்களும் பிரமீளாவை மகளாக தத்து எடுத்திருக்கோம் மா .... உனக்கு ஒரு தங்கச்சி கிடைச்சிட்டா.பிரமீளா வந்த நேரம் ரொம்ப நல்ல நேரம்மா "
"ரொம்ப சந்தோஷம் அப்பா. நான் சீக்கிரமே அங்கே வந்திடுவேன்.என் செல்ல தங்கச்சியையும் டாக்டர் ஆக்கிடுவோம் அப்பா." சந்தோஷத்தில் போனை வைக்கவே மனமில்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர் நெடுநேரம்.
பலநாட்களுக்கு பிறகு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது அந்த வீட்டில்.
A beautiful story with a mix of emotions as well as love and respect for each others lives.
ReplyDeleteThe highlight of the story is the part wherein the daughter character exudes courage in putting across the need of the hour and also the graciousness of the parents in accepting the situation. Well written Priya. Continue your good work!
Superb story chithi very emotional
ReplyDelete