Thursday, June 4, 2020

வானிலிருந்து ஒரு தேவதை



வானம் மேகம் சூழ்ந்து வெயிலை குறைத்து இருந்தது.மெல்லிய காற்று வீசியதில் அந்த பேருந்து நிலையத்தில் நின்றவர்களுக்கு இதமாக தோன்றியது..

வெட்டி திறந்து வைத்த பலாப்பழத்தை ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க குழந்தைகளுக்காக பயன்படுத்தும் கொசுவலையால் மூடி வைத்திருந்தார் வியாபாரி வீரம்மா.

பழத்தின் வாசனை காற்றில் கலந்து வீசியதில் நின்றிருந்தவர்கள் அடிக்கடி திரும்பி வீரம்மாவை பார்த்தனர்.

அங்கே கீழே கிடந்த நெகிழி பைகள் காற்றில் அங்கும் இங்கும் பறந்து பலாப்பழத்தின் வாசனை தந்த விளம்பரத்தை குறைக்க பார்த்தன.

பேருந்துகள் வருவதும் போவதுமாய் இருக்க,வியாபாரம் டல்லடித்தது.

ஆனாலும் நம்பிக்கை இழக்காத வீரம்மா "பலாப்பழே" என்று உரக்க கூவிக்கொண்டே இருந்தார்.

நேரம் ஆகிவிடவே சாக்கு பையில் பலாப்பழங்களை அடுக்க தொடங்கினார் வீரம்மா .

தள்ளுவண்டியுடன் வந்து சேர்ந்த மகன் அங்குராசு 'யம்மா இருட்டிச்சி" மூட்டைகளை நோட்டம் விட்டவாறே "யாவாரம் இல்லியா இன்னிக்கி?" என்றான் ஏக்கமாக "நாளைக்கு நல்லா ஆவும் பா"
நம்பிக்கையோடு சொன்ன வீரம்மா "இந்தா சாப்பாடு வாங்கியா" என்று பணத்தை நீட்டினார்."அப்பொ ராவுக்கு இங்கதான் படுக்கையா யம்மா?" அங்குராசுவின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது  "ஆமாம் பா ஊட்டாண்ட மட்டும் நமக்கு யார் இருக்காங்க நீயும் இங்கிட்டு தான் படு" என்ற அம்மாவின் வார்த்தைகளுக்கு "நீ சொல்லிப்புட்ட இங்க ஒரே கொசுக்கடியம்மா " முனகி கொண்டே சாப்பாடு வாங்க போனான் அங்குராசு.

                                      

இரவு மணி பத்தரை ஆகிவிட்டது.அந்த ஐ .டி. கம்பெனியின் எட்டாவது மாடியில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல லிஃப்ட்க்காக சிலர் காத்திருந்தனர். அவர்களில் ஒருத்தியான பூஜாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.அவளது பெற்றோர் பெங்களூரில் வேலை செய்கின்றனர். இஞ்சினியரிங் முடித்த பூஜா சென்னை வந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. இந்த கம்பெனியின் அழகு தேவதை அவள்.தங்க நிற மேனியில் நீல நிற கண்கள். சிவந்த உதடுகள்.கூர்மையான நாசி.சிரிக்கும் போது பளீரென மின்னும் பற்கள்.காதுகளில் தங்க வளையங்கள் எப்போதும் கன்னங்களை உரசும்.தன் நிறத்திற்கு பொருத்தமான சுடிதார் அணிந்து சரியான நேரத்தில் அலுவலகம் வருவது பூஜாவின் பழக்கம்.இப்படி பூஜாவை பற்றி நிறைய சொல்லலாம்.

லிஃப்ட் வந்துவிட்டது.

"பூஜா ரொம்ப லேட்டா ஆகிவிட்டதே உங்க ஹாஸ்டல் வரைக்கும் நாங்க துணைக்கு வரலாமா ?" நண்பர்கள் கேட்க "நோ தேங்க்ஸ்.மெயின் ரோடுல தானே போறேன் பிரச்னை இல்லை நானே போய்க்கறேன் " ஒரு சம்பிரதாயமாக சிரித்துவிட்டு லிஃப்ட்டிலிருந்து இறங்கி வேகமாக நடந்து பார்க்கிங்கில் இருந்த தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டாள் பூஜா.

கொஞ்சம் தொலைவில் சில இளவட்டங்கள் "மச்சான் ஒரு தேவதை...இந்த நேரத்துல அதுவும் தனியா போகுதுடா " உற்சாகமாக சொல்லியபடியே பூஜாவை தங்கள் வண்டிகளில் பின் தொடர்ந்தனர்.

தனது வண்டியில் வேகமாக போய்க்கொண்டிருந்த பூஜா பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது சற்று மெதுவாக செல்ல அதற்குள் இளைஞர்கள் அவளை சுற்றி வளைத்தனர்.

பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தாள் பூஜா.

அவள் எழுவதற்குள் ஒருவன் அவளை தொட்டு தூக்கினான்."விடுடா" என்று அவன் கைகளை தட்டிவிட்டாள் பூஜா."உன் பின்னாலயே நாய்ங்க மாதிரி வர்றோம் கண்டுக்க மாட்றயே" பல்லிளித்தான் ஒருவன்.பூஜாவிற்கு வியர்த்து கொட்டியது."நீ இன்னிக்கு  இங்கிருந்து போகவே முடியாது" என்ற மற்றொருவன்  ஸ்கூட்டி சாவியை கையில்  எடுத்து சிரித்த படியே சக்கரம் போல் சுழற்றினான்.மனதிற்குள் பயம் எட்டிப்பார்த்தது இப்படிப்பட்ட ஆண்களை பற்றி செய்திகளில் படித்திருக்கிறாள் ஆனால்...தானே மாட்டி கொள்வோம்  என்று சிறிதும் நினைக்கவில்லை. சுற்றுமுற்றும் ஒரே இருள். யாரும் வருவது போல கூட தெரிய வில்லை.கடவுளே என்னை காப்பாற்று என்று மனதில் உருகி வேண்டி கொண்டாள்.

"எனக்கு லேட்டாகிவிட்டது நான் போகணும் சாவியை குடுங்க ப்ளீஸ்"

எப்படியோ தைரியத்தை வரவழைத்து சத்தமாக கத்தினாள் பூஜா.

"அப்படிலாம் நீ போய்ட முடியாது கண்ணு " இளக்காரமாக சிரித்தனர் இளைஞர்கள்.

திடீரென்று ....
"எவன்டா அவன் சின்னப்புள்ள கிட்ட வம்பு பண்றவன்?....அங்குராசு...எழுந்திருப்பா.."கத்தியவாறே கையில் பலாப்பழம் வெட்டும் பெரிய அருவாளுடன் பாய்ந்து வந்தார் வீரம்மா.சத்தம் கேட்டு எழுந்த அங்குராசு "டேய் ஒடுங்கடா "என்று பெரிய குரலில் கத்தியவாறே கைகளில் கிடந்த பொருள்களை எல்லாம் எடுத்து வீச ஆரம்பித்தான்.

சத்தத்தால் சற்று தள்ளி தூங்கி கொண்டிருந்த சிலரும் தற்போதுஉதவி செய்ய  ஓடி வந்தனர்.

இளைஞர்கள் அலறி அடித்துவண்டிகளில்  ஏறி பறந்து விட்டனர். பூஜா உடல் நடுங்க நின்று கொண்டு இருந்தாள்.

"பயப்படாத தாயீ.... நாங்களும் ஒங்கூட தொனிக்கி வாரோம். இந்த காலி பயலுகள நம்ப முடியாது..மெதுவா  தண்ணிய குடிம்மா... இனிமே ராவுல தனியா வராதம்மா...தொனிக்கி யாரையாவது இட்டுக்கினு வா பயப்படாத" என்று தலையை கோதி முதுகை வருடி வீரம்மா கூறிய போது இரவின் இருளில் கையில் வாளுடன் தன்னை காப்பதற்காகவே வானிலிருந்து ஒரு தேவதை தோன்றியதாக உணர்ந்து கண்களில் நீர் சுரக்க கரங்களை குவித்து வீரம்மாவை நன்றியுடன் வணங்கினாள் பூஜா.





 




                                




No comments:

Post a Comment