Tuesday, June 30, 2020

தொடரோட்டம்

      


                             




"விக்னேஷ்.. நீங்க லீடரா இருக்கிற இந்த ப்ராஜெக்ட்ட நீங்களே ஒப்புக்கொண்ட நேரத்துக்குள்ள முடிக்கல. அதனால க்ளையன்ட்கிட்டேர்ந்து எங்களுக்கு கம்ப்ளைன்ட்ஸ் வருதுஇதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க?” 

ப்ராஜக்ட் மேனேஜர் கீர்த்திவாசனின்  குரல் சற்று கோபமாக ஒலித்தது.

காலையில்  இப்படி ஒரு மீட்டிங் விக்னேஷ்   எதிர்பார்த்ததுதான் என்றாலும் அதனை   வெளிக்காட்டிக் கொள்ளாமல் இப்போதுதான் கேள்விப்படுகின்ற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு.. மனதிற்குள்ளேயே ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த பதிலை கோர்வையாக சொல்ல தன்னை தயார்படுத்திக் கொண்டும் இருந்தான்.

இந்த சூழ்நிலையை அழகாக சமாளித்து தனக்கும் சாதகமாக்கிக் கொள்ள விரும்பினான் விக்னேஷ்.

அந்த நேரம்  பார்த்து  கீர்த்திவாசனின்  செல்போன் சிணுங்கியது.

 கீர்த்திவாசன் பேசுவதை நிறுத்திவிட்டு போனை பார்த்தார்.      

க்ளையன்ட் நம்பர்.

 "விக்னேஷ், கொஞ்சம் வெளிய  வெயிட்  பண்ணுங்கஎன்று கூறினார்.விக்னேஷ் வெளியேறியதும் போனை எடுத்த கீர்த்திவாசன்...

“ஹலோ குட்மார்னிங் சார்....”  

இதுபோல் கிளையன்ட்டிடம் பேசிய அனுபவங்கள்  நிறைய  இருப்பதால் பொறுமையாக சொல்லிவிட்டு  எதிர் முனையில் பேசுவதை கவனித்து கேட்டார்.

“ஓகே சார்... உங்களுக்கு அவசரமா தேவைப்படறதுனு புரியிது சார்...  அதனாலதான் நாங்க உங்களோட ப்ராஜெக்ட்டை   சீக்கிரமா முடிக்க  நடவடிக்கை எடுத்துட்டோம்...இப்போ பாத்தீங்கன்னா டீம்ல புதுசா பத்து பேரை சேத்திருக்கோம்....இந்த மாசத்துக்குள்ள ப்ராஜக்ட் கண்டிப்பா முடிச்சி குடுத்துடுவோம் சார்...தேங்க்ஸ் சார்...ஓகே சார்.... நோ ப்ராப்லம் சார் ... அடுத்த  ப்ராஜக்ட்டை இன்னிக்கே ஒப்பந்தம் போட்டுக்கலாம் சார்...தேங்க்யூ வெரிமச் சார்” 

சாமர்த்தியமாக பேசி ஒரு மாதம் அவகாசமும் வாங்கிவிட்டு  புது ப்ராஜக்ட்டும் வாங்கியதால் 
சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளும் தன்  திறனை நினைத்து   பெருமிதத்துடன்   போனை  வைத்து  விட்டு...  மீண்டும் ப்ராஜெக்ட்  லீடர் விக்னேஷ்க்கு போன் செய்து உடனடியாக தன்னை சந்திக்க அழைத்தார்.


மேனேஜரிடமிருந்து அழைப்பு வரவே... மீண்டும் அவர் அறைக்கு சென்று அவர் அனுமதியுடன்  எதிரிலிருந்த  நாற்காலியில் அமர்ந்த விக்னேஷ்,   சிறிதும் பதறாமல் தன்னுடைய பக்க நியாயங்களை எடுத்துக் கூற தொடங்கினான்.

"சார்.. ப்ராஜக்ட் கை நழுவி போய்டக் கூடாதேன்னு முடிக்க வேண்டிய தேதியை மிகக் குறைவாக குறிப்பிட்டு விட்டேன்அதுவும் இந்த ப்ராஜக்ட்ல நுணுக்கமான வேலைகள் அதிகமாக இருக்குமேலும்... போதுமான ரிசோர்ஸ் இல்ல.. பத்து பேர் செய்ய வேண்டிய வேலய ஆறு பேர் பண்றாங்க சார்இத நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன் சார்.  டெவெலப்மென்ட் டீமே    க்வாலிடியையும்  டெஸ்ட்  பண்றாங்க, க்ளையன்ட்  வேற அடிக்கடி மாற்றங்கள் நிறைய கேட்கறாங்க சார் , அதனால  திரும்ப திரும்ப ரீவொர்க் பண்ண வேண்டியதாக இருக்கு. இன்னொரு  விஷயம்  என்னனா...  இந்த டீம்ல இருக்கிறவங்களுக்கு சம்பள உயர்வு  கிடைக்காததால  டீமோடிவேட்டட் ஆக இருக்காங்க சார். "

என்று விக்னேஷ் சொல்லியதும்,சற்று நேரம்     யோசித்த ப்ராஜெக்ட் மேனேஜர்.... 

 "சம்பள உயர்வு சம்மந்தமா நான் கண்டிப்பாக பரிந்துரைக்கிறேன்... அப்புறம் ...இன்னும் நாலு பேரை புதுசா உங்க டீம்ல சேக்கறேன்...ஆனால் நீங்க  இந்த ப்ரொஜெக்ட்டை     ரெண்டு வாரத்துல முடிக்கனும்.   இப்போ  நீங்க கிளம்பலாம்  விக்னேஷ்" 

 மேனேஜரை சமாளித்து  சம்பள உயர்வுக்கும்  வழி செய்தாகிவிட்டது இரண்டு வாரம் அவகாசமும் வாங்கியாகிவிட்டது ... மேலும்  நால்வர் சேர்வதால் வேலை ப்ளூவும்  குறையும் பலவாறு யோசித்து வெற்றிகரமான புன்னகையுடன் வெளியே வந்தான் விக்னேஷ்.


இரவு விக்னேஷ் வீட்டில்....

"என்ன டியர்  இப்பதான் சமைக்கிறயா?ரொம்ப பசிக்கிதும்மா " 

கெஞ்சிய விக்னேஷிடம் சற்றும் பதறாமல் நிதானமான குரலில்...

" சாரிங்க....இட்லி மாவு அரைக்க ஊறப்போட்டேன்....  காலைல போன கரண்ட் குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்த பிறகுதான் வந்துச்சு.....நம்ம வீட்டுல தான் உதவிக்கு யாரும்   கிடையாதேங்க...    குழந்தைங்களுக்கு வீட்டுப்பாடம் நிறைய 
குடுத்துட்டாங்க... அதனால அவங்களுக்கு வேற உதவி பண்ணனும்....

நீங்களே சொல்லுங்க ...ஒருத்தரே பாத்திரங்களை தேய்ச்சு குழந்தைகளுக்கும் படிக்க வைத்து....   சமைக்கனும்னா லேட் தானேங்க ஆகும்?  நீங்க ஒண்ணும்  டென்ஷன் ஆகாதிங்க.நீங்களும் கொஞ்சம் உதவி செஞ்சீங்கன்னா சட்டுபுட்டுனு சமைச்சிடலாங்க"   

மனைவியின் வார்த்தைகளில் இருந்த நியாயங்கள் புரிய 
"சரிம்மா நான் உதவி பண்றேன்...சீக்கிரமா வேலைக்கு யாராவது கிடைக்கறாங்களானு விசாரிப்போம் " 

கணவனை சமாளித்து வேலையும் வாங்கி... வீட்டு வேலைக்கும் ஒருவரை நியமிக்கவும் ஒப்புதல் வாங்கிய மகிழ்ச்சியில் சமையலறை நோக்கி துள்ளி ஓடினாள் விக்னேஷின் மனைவி. 
                 


Sunday, June 7, 2020

கண்ணான கண்ணே....




திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாமல் எத்தனையோ கோவில்களுக்கு போய் பிரார்த்தனை செய்து பிறந்த மகள் மம்தா.


உலகை மிரட்டும் வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து மக்களை காப்பாற்றுவேன் என்று புறப்பட்டாள். 

தன் ஒரே மகளை  ஆராய்ச்சி படிப்பிற்காக  வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு தற்போது அவளது நினைவுகளோடு போராடி கொண்டிருக்கின்ற்னர் தவமணியும், பாஸ்கரும்.

மம்தாவின்  சிறு வயது துணிகள் ,பொம்மைகளை  கூட தூக்கி எறிய விடாமல் தடுத்தது பெற்றோரின் நேசம் .

வாட்ஸாப்பில் குட் மார்னிங் குட் நைட் என்று பாஸ்கர் போடும் மெசஜ்களுக்கு வாரத்தில் ஓரிரண்டு நாட்கள் பதில் வரும்.


"நம்பள மம்தா நினைக்கவே இல்லையாங்க?" தவமணியின் வார்த்தைகள் சுருக்கென்று தைக்க 


தானே போன் போட்டு பேசினார் பாஸ்கர் "எப்படி இருக்கம்மா ?"
மம்தாவின் வார்த்தைகள் சரியாக கேட்கமுடியாமல் ஏதேதோ கருவிகளின் ஒலிகள் கேட்க...சட்டென்று மம்தா போனை துண்டித்தது  தெரிந்தது.

சற்று நேரத்தில் மம்தாவிடமிருந்து போன் வந்தது 
"நான் நல்லா இருக்கேன் டாடி முக்கியமான வேலை இருக்கு  டாடி அப்புறம் பேசவா ? "

"ஏன்மா ?"

"டெஸ்டிங் இருக்கு "

"அப்போ நாளைக்கு பேசறயாமா?"

"வார நாட்கள்ல கஷ்டப்பட்டு லேப் ல டெவெலப் பண்றத...வார இறுதி நாட்கள்ல டெஸ்ட் பண்ணுவாங்க டாடி "என்றாள் மகள் 

" வெளிநாட்டுல ஆராய்ச்சி பண்ணனும்னு சொன்ன ...அது தப்பில்ல...ஆனா  அம்மாவும் நானும் ரொம்ப மிஸ் பண்றோம் ....மத்த நாட்கள்ல நீ பிஸி......வார இறுதி நாட்கள்ல கூட  போன் பண்றதில்லயே   ..செல்லம்...."

ஸ்பீக்கர் போட்டு நிதானமாக பாஸ்கர்  பேச  மனைவி தவமணி கேட்டு கொண்டிருந்தாள்..

"அம்மா நல்லா இருக்காங்களா அப்பா?"

"நல்லா இருக்கேன்மா மம்தா" தவமணி சொல்ல 

" அம்மா என்னை போல நிறைய பேர் இங்கே போராடிக்கொண்டு இருக்கோம் அம்மா.கோடிக்கணக்கான மக்களை காப்பாத்தனுமே அம்மா.
கொஞ்சம் பொறுத்துக்கோங்க .அப்பாகிட்ட சொல்லுங்க ப்ளீஸ்."

"சரிம்மா"

"என் செல்ல அம்மா...."போனில் வந்த முத்த மழை   கண்களில் நீராக ததும்புவதை மறைத்து...சிரித்தாள் தவமணி.
"அம்மா ஒரு முக்கியமான விஷயம் "

"என்னம்மா?"

"நாங்க செய்த மருந்தை டெஸ்ட் செய்றதுக்கு எல்லாருக்கும் தயக்கம் அம்மா.அதனால...."

"அதனால???"

"உங்க கிட்டலாம் சொல்லாம...நான் அந்த மருந்தை எனக்குள்ள செலுத்த சொல்லிட்டேன் அம்மா...அப்பாவுக்கு தெரிஞ்சா பயப்படுவார்....
எங்களோட  மருந்து வெற்றி அடைஞ்சா அடுத்த வாரம் நான் பேசுவேன்.இல்லைனா நீயே புரிஞ்சிக்கோம்மா.அப்பாவை நீதான் பார்த்துக்கணும் அம்மா...  லவ் யு."

"மம்தா டெஸ்டிங் க்கு டைம் ஆச்சு "யாரோ அழைக்க மகள் போன் வைத்தாள்.

கதறி அழுதனர் பெற்றோர்.

மம்தாவிடமிருந்து  போன் வந்து இரண்டு வாரங்கள்  ஆகிவிட்டன...

அப்படியென்றால்???

மம்தாவிற்கு ஏதாவது ஆகியிருந்தால் ஆராய்ச்சி கூடத்திலிருந்து நமக்கு கட்டாயம் சொல்லுவார்களே.... இதுவரை அவர்களிடமிருந்து போன்  எதுவும் வரவில்லை.வந்துவிடவும் கூடாது.பலதரப்பட்ட சிந்தனைகள்.மம்தா என் செல்லமே.
என்ன ஆகிவிட்டது மம்தாவிற்கு.நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருந்தது .இரவுகளில் தூக்கமே இல்லை, எதுவும் சாப்பிட பிடிக்காமல் 
எதுவும் விளங்காமல் இருவரும் மனதிற்குள் கலங்கிகொண்டிருந்தனர். பூஜை செய்து வேண்டிக்கொண்டே இருந்தனர்.இவ்வளவு நாட்கள் மம்தாவுடன் சேர்ந்து பேசியதும் சிரித்ததும் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றி கொண்டே இருந்தது.அந்த நினைவுகள் தந்த வலியால் கண்கள் குளமாகவே இருந்தன.
வீட்டிற்குள் யாரோ வருவது தெரிந்ததும் சட்டென்று இருவரும் கண்களை துடைத்து கொண்டனர்.வந்தது குமுதாவின் மகள் பிரமீளா.

குமுதா....
இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் வயிற்றில் ஆறுமாதமாக மூன்றாவது குழந்தை இருக்கும் போது கணவன் இறந்துவிட,வயிற்று பிழைப்புக்காக வேலை கேட்டு  வந்தாள்.

நாம் வேலை கொடுக்காவிட்டால் கர்ப்பிணியானவள் எங்காவது போய் கஷ்டப்படுவாளோ என்று காய்கறி வெட்டுவது பூ தொடுப்பது ,துணி மடிப்பது போன்ற வேலைகளை செய்ய சொல்லி நல்ல சம்பளமும் கொடுத்தாள். அவளது பிரசவத்திற்கும் உதவி செய்தாள் தவமணி.

குழந்தைக்கு பிரமீளா என்றும்  பெயர் வைத்தாள் 
    
பிரமீளா குமுதாவை விட தவமணியின் மடியில் தவழ்ந்ததே அதிகம் எனலாம்.

குமுதா மற்ற வீடுகளிலும் வீட்டு வேலை ,சமையல் வேலை,கல்யாணங்களில் சமைப்பது  மற்றும் குழந்தைகளை குளித்துவிடுவது  இப்படி பம்பரமாய் சுழன்று உழைத்து முதல் மகளை திருமணம் செய்து அனுப்பிய பிறகு அடிக்கடி நோய்வாய்ப்பட ஆரம்பித்து விட்டாள்.இரண்டாவது மகள் தையல் தைத்து பிழைப்பு ஓட ஆரம்பித்தது.

தவமணி  தன் வீட்டின் பின்பக்கம் இருந்த  அவுட் ஹவுஸ் குமுதாவின் சிறிய குடும்பத்துக்கு போதுமானதாக இருந்தது.
"அம்மாவிற்கு உடம்பு செரியில்ல அதான் நான் வந்தேன்" .பிரமீளா சொல்ல 
"ஒரு நிமிஷம் இரு " உள்ளே ஓடிய தவமணி மம்தாவின் பழைய துணிகளை கொண்டு வந்து பிரமீளாவிடம் நீட்டினாள்.
"சட்டை கிழிஞ்சிருக்கும்மா ..இந்தா...இதை மாத்திக்கோம்மா"கையில் வாங்கி உள்ளே போனாள் பிரமீளா.

மீண்டும் மகளை பற்றிய சிந்தனை தாக்க வேதனையில் மூழ்கினாள்.மனம் முழுக்க மம்தா பேசிய  வார்த்தைகள்  மோதிக்கொண்டே இருந்தன.
உன்னை விட்டு எப்படி எங்களால் வாழ முடியும் செல்ல மகளே என்று மனம் புழுங்கியது. 

"தோட்டம் பெருக்கி செடிகளுக்கு தண்ணி ஊத்திட்டேன் மா.... "
பிரமீளா குரல் கொடுக்க வாசலுக்கு வந்த தவமணி "சரிம்மா "
என்றவள் அப்படியே நின்று விட்டாள்...
சற்று பூசிய மாதிரி உடம்பும்,இரட்டை பின்னல் போட்டிருந்த பிரமீளாவிற்கு 
மம்தாவின்பழைய  துணிகள் மிகப் பொருத்தமாக இருந்தது.
  
அந்த துணிகளை அடைந்ததில் அந்த கண்களில் தெரிந்த ஆனந்தம் நிறைவு மலர்ச்சி இது வரை பிரமீளாவிடம்  தவமணி கண்டதே இல்லையே.

"ரொம்ப தேங்க்ஸ் அம்மா " நன்றியுடன் பிரமீளா சொல்ல 
"என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசற? " செல்லமாக கோபித்து விட்டு  கலைந்திருந்த பிரமீளாவின் தலைமுடியை அக்கறையுடன் சரி செய்துவிட்டு "போய் படி "என்றாள்  தலையாட்டிவிட்டு கிளம்பிய பிரமீளாவை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தவளுக்கு "பிரமீளா மம்தா மாதிரியே இருக்கால்ல?" கணவரின் வார்த்தைகள்  மீண்டும் மம்தாவின் நினைவை கொண்டுவர.என்னவென்று யூகிக்க முடியாத வேதனை நெஞ்சில் பரவ...சட்டென்று பேச்சை மாற்றி 

"குமுதாவுக்கு ஏதோ உடம்பு சரி இல்லையாம் போய் பார்த்துவிட்டு வரலாம் வாங்களேன்." மடமட வென்று கொஞ்சம் பழங்கள் மற்றும் பால் காய்ச்சி எடுத்துக்கொண்டு கணவருடன் குமுதாவின் இடத்திற்கு கிளம்பினாள்.

கழுத்து  வலியால்  படுத்திருந்த குமுதாவிற்கு காய்ச்சிய பாலையும் பழங்களையும் கொடுத்துவிட்டு,"இப்போ எப்படி இருக்க குமுதா?" என்று விசாரித்தாள் 

வந்தவர்களுக்கு மகிழ்ச்சியுடன் தண்ணீர் கொடுத்தாள் பிரமீளா.உட்கார பாயை கொண்டுவந்து போட்டாள்.

"பரவால்லம்மா" குரலே பலஹீனமாக வந்தது குமுதாவிடமிருந்து 

"குமுதா...வந்து... உன்கிட்ட...எப்படி  இதை  கேட்பதுன்னு  தெரியல...?"என்று தவமணி தயங்க...

"சொல்லுங்க அம்மா" குழப்பமாக பார்த்தாள் குமுதா 

"வந்து.... பிரமீளாவை எங்களுக்கு தத்து குடுக்கறியா?" தயங்கி தயங்கி கேட்டுவிட்டாள் தவமணி.


"அம்மா...உங்க வீட்டு பெண்ணாக இருக்க பிரமீளா கொடுத்து வெச்சிருக்கனும்...ஒருவேளை பிரமீளாவிற்கு விருப்பமாக இருந்தால்...அவளோட நல்ல எதிர் காலத்திற்கு குறுக்கே நான் நிற்கவே மாட்டேன் அம்மா"குமுதாவின் வார்த்தைகளை கேட்டுவிட்டு தவமணி  ஏக்கமாக பிரமீளாவை பார்க்க.... ஓடி வந்த பிரமீளா தவமணியின்  கைகளை பிடித்தாள்.அள்ளி அணைத்த தவமணி தேக்கிவைத்திருந்த பாசம் கண்ணீராய் பெருக வாரி அணைத்தாள்.கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

நல்ல நாள் பார்த்து சட்டப்படி  தத்து எடுத்து கொள்கிறோம் என்றாள்.

குமுதாவும் கைகளை உயர்த்தி பிரமீளாவை ஆசீர்வதித்தாள்.ஆனந்த கண்ணீர் வடித்தாள்.

"நீ இனி எங்கள் மகள்" அழுத்தமாக கூறினாள் தவமணி.


பிரமீளாவும் தவமணியை இறுக அணைத்து கொண்டாள். 

முதன் முதலாக "அம்மா" என்றாள் பாசத்துடன் 

அப்போது..... 

கையிலிருந்த போன் ஒலித்தது.

வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் கால்....கைகால்கள் நடுங்கின.


அந்த நொடியில் இருந்த அத்தனை சந்தோஷமும் மறைந்தது.

என்னவாக இருக்கும்.....
பதட்டமாகஇருந்தது.....
அப்படியென்றால்..?????...

பயத்தில் தவமணிக்கும் பாஸ்கருக்கும் முகம் வெளுத்தது.

ஒரு கையால் பிரமீளாவை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

புதிதாக கிடைத்த மகள் அணைத்திருக்க....
  
மெதுவாக  தவமணி நடுங்கும் குரலில் "ஹலோ ..." என்றாள் ..

"அம்மா ஆராய்ச்சி கூடத்து போன் லேர்ந்து பேசறேன் அம்மா....குட் நியூஸ் அம்மா . சக்ஸஸ்.மருந்து கண்டு பிடித்துவிட்டோம் "மம்தாவின் குரல் தேன் போல இனிமையாக இருந்தது,தவமணியின் காதுக்கு ஒரு பரவச உணர்வைத் தந்தது.


"மம்தா என் செல்லமே. ... உன் குரலை  கேட்டு.... நிம்மதியா... இருக்கும்மா ..."பரவசத்தில் பேச்சே வரவில்லை விம்மி விம்மி அழுதாள் தவமணி.போனை தான் வாங்கி கொண்டார் பாஸ்கர் 

"மம்தா நல்ல இருக்கியா அம்மா?"

"அப்பா நல்லா இருக்கேன் அப்பா. சாரி உங்களுக்கு டென்ஷன் குடுத்ததுக்கு...நீங்க ரொம்ப பதட்டமாக இருந்திருப்பீங்க அப்பா ஆனால் வேற வழி இல்லப்பா"

"எனக்கு புரியுதும்மா....அடுத்தவங்க கஷ்டத்தை போக்க நினைக்கிற உங்க அம்மா மாதிரி மனசும்மா உனக்கு.செல்லம்  இனிமே எல்லாமே நமக்கு சக்ஸஸ் தான்மா....அப்புறம் உன்கிட்ட சொல்லாம.... நாங்களும் பிரமீளாவை மகளாக தத்து எடுத்திருக்கோம் மா .... உனக்கு ஒரு தங்கச்சி கிடைச்சிட்டா.பிரமீளா வந்த   நேரம் ரொம்ப நல்ல நேரம்மா "

"ரொம்ப சந்தோஷம்  அப்பா. நான் சீக்கிரமே அங்கே வந்திடுவேன்.என் செல்ல தங்கச்சியையும் டாக்டர் ஆக்கிடுவோம் அப்பா." சந்தோஷத்தில் போனை வைக்கவே  மனமில்லாமல் பேசிக்கொண்டே இருந்தனர் நெடுநேரம்.

பலநாட்களுக்கு பிறகு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது அந்த வீட்டில். 
                                                           

Thursday, June 4, 2020

வானிலிருந்து ஒரு தேவதை



வானம் மேகம் சூழ்ந்து வெயிலை குறைத்து இருந்தது.மெல்லிய காற்று வீசியதில் அந்த பேருந்து நிலையத்தில் நின்றவர்களுக்கு இதமாக தோன்றியது..

வெட்டி திறந்து வைத்த பலாப்பழத்தை ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க குழந்தைகளுக்காக பயன்படுத்தும் கொசுவலையால் மூடி வைத்திருந்தார் வியாபாரி வீரம்மா.

பழத்தின் வாசனை காற்றில் கலந்து வீசியதில் நின்றிருந்தவர்கள் அடிக்கடி திரும்பி வீரம்மாவை பார்த்தனர்.

அங்கே கீழே கிடந்த நெகிழி பைகள் காற்றில் அங்கும் இங்கும் பறந்து பலாப்பழத்தின் வாசனை தந்த விளம்பரத்தை குறைக்க பார்த்தன.

பேருந்துகள் வருவதும் போவதுமாய் இருக்க,வியாபாரம் டல்லடித்தது.

ஆனாலும் நம்பிக்கை இழக்காத வீரம்மா "பலாப்பழே" என்று உரக்க கூவிக்கொண்டே இருந்தார்.

நேரம் ஆகிவிடவே சாக்கு பையில் பலாப்பழங்களை அடுக்க தொடங்கினார் வீரம்மா .

தள்ளுவண்டியுடன் வந்து சேர்ந்த மகன் அங்குராசு 'யம்மா இருட்டிச்சி" மூட்டைகளை நோட்டம் விட்டவாறே "யாவாரம் இல்லியா இன்னிக்கி?" என்றான் ஏக்கமாக "நாளைக்கு நல்லா ஆவும் பா"
நம்பிக்கையோடு சொன்ன வீரம்மா "இந்தா சாப்பாடு வாங்கியா" என்று பணத்தை நீட்டினார்."அப்பொ ராவுக்கு இங்கதான் படுக்கையா யம்மா?" அங்குராசுவின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது  "ஆமாம் பா ஊட்டாண்ட மட்டும் நமக்கு யார் இருக்காங்க நீயும் இங்கிட்டு தான் படு" என்ற அம்மாவின் வார்த்தைகளுக்கு "நீ சொல்லிப்புட்ட இங்க ஒரே கொசுக்கடியம்மா " முனகி கொண்டே சாப்பாடு வாங்க போனான் அங்குராசு.

                                      

இரவு மணி பத்தரை ஆகிவிட்டது.அந்த ஐ .டி. கம்பெனியின் எட்டாவது மாடியில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல லிஃப்ட்க்காக சிலர் காத்திருந்தனர். அவர்களில் ஒருத்தியான பூஜாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.அவளது பெற்றோர் பெங்களூரில் வேலை செய்கின்றனர். இஞ்சினியரிங் முடித்த பூஜா சென்னை வந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. இந்த கம்பெனியின் அழகு தேவதை அவள்.தங்க நிற மேனியில் நீல நிற கண்கள். சிவந்த உதடுகள்.கூர்மையான நாசி.சிரிக்கும் போது பளீரென மின்னும் பற்கள்.காதுகளில் தங்க வளையங்கள் எப்போதும் கன்னங்களை உரசும்.தன் நிறத்திற்கு பொருத்தமான சுடிதார் அணிந்து சரியான நேரத்தில் அலுவலகம் வருவது பூஜாவின் பழக்கம்.இப்படி பூஜாவை பற்றி நிறைய சொல்லலாம்.

லிஃப்ட் வந்துவிட்டது.

"பூஜா ரொம்ப லேட்டா ஆகிவிட்டதே உங்க ஹாஸ்டல் வரைக்கும் நாங்க துணைக்கு வரலாமா ?" நண்பர்கள் கேட்க "நோ தேங்க்ஸ்.மெயின் ரோடுல தானே போறேன் பிரச்னை இல்லை நானே போய்க்கறேன் " ஒரு சம்பிரதாயமாக சிரித்துவிட்டு லிஃப்ட்டிலிருந்து இறங்கி வேகமாக நடந்து பார்க்கிங்கில் இருந்த தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டாள் பூஜா.

கொஞ்சம் தொலைவில் சில இளவட்டங்கள் "மச்சான் ஒரு தேவதை...இந்த நேரத்துல அதுவும் தனியா போகுதுடா " உற்சாகமாக சொல்லியபடியே பூஜாவை தங்கள் வண்டிகளில் பின் தொடர்ந்தனர்.

தனது வண்டியில் வேகமாக போய்க்கொண்டிருந்த பூஜா பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது சற்று மெதுவாக செல்ல அதற்குள் இளைஞர்கள் அவளை சுற்றி வளைத்தனர்.

பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தாள் பூஜா.

அவள் எழுவதற்குள் ஒருவன் அவளை தொட்டு தூக்கினான்."விடுடா" என்று அவன் கைகளை தட்டிவிட்டாள் பூஜா."உன் பின்னாலயே நாய்ங்க மாதிரி வர்றோம் கண்டுக்க மாட்றயே" பல்லிளித்தான் ஒருவன்.பூஜாவிற்கு வியர்த்து கொட்டியது."நீ இன்னிக்கு  இங்கிருந்து போகவே முடியாது" என்ற மற்றொருவன்  ஸ்கூட்டி சாவியை கையில்  எடுத்து சிரித்த படியே சக்கரம் போல் சுழற்றினான்.மனதிற்குள் பயம் எட்டிப்பார்த்தது இப்படிப்பட்ட ஆண்களை பற்றி செய்திகளில் படித்திருக்கிறாள் ஆனால்...தானே மாட்டி கொள்வோம்  என்று சிறிதும் நினைக்கவில்லை. சுற்றுமுற்றும் ஒரே இருள். யாரும் வருவது போல கூட தெரிய வில்லை.கடவுளே என்னை காப்பாற்று என்று மனதில் உருகி வேண்டி கொண்டாள்.

"எனக்கு லேட்டாகிவிட்டது நான் போகணும் சாவியை குடுங்க ப்ளீஸ்"

எப்படியோ தைரியத்தை வரவழைத்து சத்தமாக கத்தினாள் பூஜா.

"அப்படிலாம் நீ போய்ட முடியாது கண்ணு " இளக்காரமாக சிரித்தனர் இளைஞர்கள்.

திடீரென்று ....
"எவன்டா அவன் சின்னப்புள்ள கிட்ட வம்பு பண்றவன்?....அங்குராசு...எழுந்திருப்பா.."கத்தியவாறே கையில் பலாப்பழம் வெட்டும் பெரிய அருவாளுடன் பாய்ந்து வந்தார் வீரம்மா.சத்தம் கேட்டு எழுந்த அங்குராசு "டேய் ஒடுங்கடா "என்று பெரிய குரலில் கத்தியவாறே கைகளில் கிடந்த பொருள்களை எல்லாம் எடுத்து வீச ஆரம்பித்தான்.

சத்தத்தால் சற்று தள்ளி தூங்கி கொண்டிருந்த சிலரும் தற்போதுஉதவி செய்ய  ஓடி வந்தனர்.

இளைஞர்கள் அலறி அடித்துவண்டிகளில்  ஏறி பறந்து விட்டனர். பூஜா உடல் நடுங்க நின்று கொண்டு இருந்தாள்.

"பயப்படாத தாயீ.... நாங்களும் ஒங்கூட தொனிக்கி வாரோம். இந்த காலி பயலுகள நம்ப முடியாது..மெதுவா  தண்ணிய குடிம்மா... இனிமே ராவுல தனியா வராதம்மா...தொனிக்கி யாரையாவது இட்டுக்கினு வா பயப்படாத" என்று தலையை கோதி முதுகை வருடி வீரம்மா கூறிய போது இரவின் இருளில் கையில் வாளுடன் தன்னை காப்பதற்காகவே வானிலிருந்து ஒரு தேவதை தோன்றியதாக உணர்ந்து கண்களில் நீர் சுரக்க கரங்களை குவித்து வீரம்மாவை நன்றியுடன் வணங்கினாள் பூஜா.