Tuesday, April 3, 2018

சூழ்நிலை கைதிகள்


ரேணுகா... பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஏழ்மையான குடும்பத்தின்  மூன்று பெண் குழந்தைகளில் மூத்த பெண் என்பதால், தூரத்து உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர் ரேணுகாவின் பெற்றோர்.

புகுந்த வீட்டில் ரேணுகாவின் கணவன் கதிரேசன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை மற்றும் சொந்த வீடு என்பதால் ரேணுகா சற்று வசதியாக உணர்ந்தாள். ஆனால் பத்தாம் வகுப்புக்கூட  படிக்காதவர் கணவராக வாய்த்து விட்டதில் ரேணுகாவிற்கு வருத்தமே... அதே சமயம் கதிரேசனோ படிப்பில் ஆர்வமுள்ள புத்திசாலி பெண் தன் மனைவி என்ற பெருமையுடன் ரேணுகாவை மேலும் படிக்க ஊக்குவித்தான்.

படிப்பு மிகவும் பிடித்த விஷயம்... ஆதலால், ரேணுகாவும் வீட்டில் இருந்த படியே  தொலைதூர கல்வியில் பி.ஏ. சேர்ந்து படித்தவாரே மாமியாருக்கும் ஆதரவாக இருந்தாள்.

ஒரு நாள் கணவனின் அலமாரியை சுத்தம் செய்த போது அதில் அவள்  கணவன் சிறு வயதில் ஓவிய போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளிலும் பல பரிசுகள் பெற்றதற்கான சான்றிதழ்களை கண்டாள். 

அன்றிரவு கணவனிடம் ஆர்வத்தோடு கேட்டபோது....

"அதுவா? அதெல்லாம் பள்ளிக்கூடம் போன போது வாங்கினது... அம்மா தான் தூக்கி எறியாம வச்சிருக்காங்க..."

கதிரேசனின் வார்த்தைகள் ரேணுகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவரை பற்றி பெருமை பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லையே... பரம்பரை சொத்தான இந்த வீடு மற்றும் அப்பா வச்சிட்டு போன மளிகை கடை. இதுலயே வாழ்க்கையை ஒட்டிட நினைக்கிறாரே... என்று நினைத்து "உங்களுக்குன்னு ஏதாவது திறமை இருந்தா என்னை நீங்க படிக்க வைக்கிற மாதிரி உங்களையும் நான் ஊக்கப்படுத்தி முன்னுக்கு கொண்டு வரலாம்னு நினைத்தேன்" இயலாமை அவள் குரலில் இழையோடுவதை உணர்ந்த கதிரேசன்...

"எனக்கு சின்ன வயசுல பெரிய கனவுலாம் இருந்தது ரேணுகா... ஆனா சந்தர்ப்பம் சூழ்நிலை சரியா அமையல... அப்பாவுக்கு உடம்பு முடியல...  என்ன செய்ய முடியும்... அதை விடு... நீ நல்லா படி.... அதுவே போதும்..."

கதிரேசன் சொல்லிவிட  கணவனை எண்ணி  மனம் வருந்தினாள் ரேணுகா...

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை... ரேணுகா எதிர்பாராத விதமாய் 

"ரேணு, நான் ஒரு ஓவிய போட்டியில கலந்துக்க போறேன்... சின்ன வயசுல என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியல... இப்போ நான் முயற்சி பண்ண போறேன்...."

கதிரேசனின் வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்தாள் ரேணுகா!!

"ரேணு, ஓவியம் வரைய எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்.... அதனால வாச பக்கம் இருக்குற ரூம்ல வேண்டாத தட்டு முட்டு சாமான்களை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு சுத்தம் பண்ண போறேன்..." என்று கூறி விட்டு மடமட வென வேலைகளை துவங்கினான் கதிரேசன்....

"ஏங்க டிபன் ஆறி போகுது..." மனைவியின் வார்த்தைகளை காதில் வாங்காமல் அறையை சுத்த படுத்தி முடித்தபின் வெளியே வந்த போது... டைனிங் டேபிளில் பிரியாணி அமைதியாக வரவேற்றது.... 

அவசரமாக குளித்துவிட்டு... பிரியாணியை ஒரு பிடி பிடித்தான் கதிரேசன்... உண்ட களைப்பில் கண் அயர்ந்தான்...

மாலையில் கண்விழித்த போது...

"மாப்ள, சவுக்கியமா?" மாமனாரின் குரல்...

"வாங்க மாமா... நல்லா இருக்கீங்களா? அத்தை நல்லா இருக்காங்களா?" என்ற கதிரேசனிடம்

"அத்தைக்கு கால் உடைஞ்சிடுச்சு மாப்ள... அதான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரோம்... ஒரு மாசம் கால் அசைக்க கூடாதாம்...  ஊருக்கு போற வழில உங்களையும் பாத்துட்டு போகலாம்னு வந்தோம் மாப்ள... நாங்க கிளம்பறோம்...." மாமாவை பின் தொடர்ந்து வெளியே வந்த போது  வாடகை காரிலேயே அமர்ந்திருந்த தன் அம்மாவுக்கு  கண்களில் கண்ணீர் பெறுக ரேணுகா காரிலேயே காஃபி கொடுத்து கொண்டிருந்தாள்... 

"மாப்ள, நல்லா இருக்கீங்களா?" வலியிலும் மாமியாரின் விசாரிப்பு மனதை உருக்கி விட...

"ரேணுகா... அம்மாவ உள்ள கூட்டிட்டு வர வேண்டியது தானே... எங்க அம்மாவும் ஊருக்கு போயி இருக்காங்க... நீ ஒரு மாசம் நம்ம வீட்ல வச்சே கவனிச்சிக்கலாமே... இங்க இருந்து ஆஸ்பத்திரியும் பக்கமா இருக்கு..." கதிரேசன் சொன்னதும்...

"இல்ல மாப்ள வேண்டாம்... இங்க இடம் பத்தாது..." என்ற மாமனாரிடம்...

"வாச ரூம் ஃப்ரீயா தான் இருக்கு மாமா... தாராளமா தங்கலாம்... நீயும் சொல்லு ரேணுகா..."

என்ற கணவனின்உயர்ந்த  உள்ளத்தை பெருமிதத்துடன்  பார்த்து மலைத்து நின்றாள் ரேணுகா.

No comments:

Post a Comment