பல வருடங்கள் பின்னோக்கி பார்த்த மனதில்...
"கதிரேசா, தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சு" பள்ளி விடுமுறை நாட்களில் துள்ளி விளையாட நினைக்கையில் அப்பாவின் குரல் தடைபோடும்.
"கதிரேசா, மாடி வீட்டு ராமசாமி மகனுக்கு அடிபட்டுவிட்டதாம் டவுனுக்கு போய் பாக்கனும் அம்மா கிட்ட நாலு பேருக்கு சேத்து சமைக்க சொல்லு"
"கதிரேசா, நம்ம தெரு குழாய்ல தண்ணி வரல கோயில் கிணத்துலேந்து தண்ணி கொண்டு வா" பரிட்சை நேர தொல்லையாக அப்பாவின் குரல்...
"கதிரேசா, தம்பி காது குத்துக்கு வந்த விருந்தினருக்கு சாப்பாடு பரிமாறு...."
இவை எல்லாவற்றையும் விட தன் தங்கை வீட்டிற்கு வந்த விருந்தினர்களின் எச்சில் இலைகளை எடுக்கும்போது கதிரேசனுக்கு வந்த ஆத்திரம் அளவில்லாதது.... "என்ன அடிமை வாழ்க்கையிது?"
அப்பாவின் ஆளுமை மீது கோபமாக வந்தது.
அதனால்...
தான் பட்ட கஷ்டம் எதையும் தன் குழந்தைகள் படக்கூடாது. தன் குழந்தைகளை மிகவும் உயர்வாக வளர்த்திட விரும்பினான் கதிரேசன்.
தன் மனைவியிடம் தன் விருப்பத்தையும் தான் பட்ட கஷ்டங்களையும் சொல்லி இத்துன்பங்கள் ஏதும் நேராத வண்ணம் தன் இரண்டு குழந்தைகளையும் இன்று வரை வளர்த்து வருகின்றான்.
"அப்பா யாரோ வந்திருக்காங்க" கல்லூரி செல்லும் மூத்த மகள் லேப்டாப்பில் பாட்டு கேட்டவாறே சொல்ல... தன் நினைவுகளை கலைத்து வாசலுக்கு ஓடினான் கதிரேசன்.
"என் மகளுக்கு கல்யாணம் பத்திரிகை குடுக்க வந்திருக்கோம்... வீட்டுல வேற யாருமே இல்லையா கதிரேசா?" பாட்டு கேட்டு கொண்டிருந்த பெண்ணை ஓரக்கண்ணால பார்த்தவாறே கைகளில் பத்திரிகையுடன் உள்ளே நுழைந்த கதிரேசனின் பெரியப்பா மகன் கேட்க...
காதில் விழாத மாதிரி கதிரேசன்
"வாங்க வாங்க... உட்காருங்க அண்ணா, அண்ணி" என்று உள்ளே ஓடிப்போய் தானே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
சற்று நேரத்தில் கதிரேசனின் மனைவி பலகாரங்கள் மற்றும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
பேசியவாறே அவற்றை உண்டு முடித்துவிட்டு
உறவினர்கள் கிளம்பும் போதும் எதையுமே கவனிக்காமல் தன் போக்கில் ஹெட் போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தாள் கதிரேசனின் மகள்.
பேசியவாறே அவற்றை உண்டு முடித்துவிட்டு
உறவினர்கள் கிளம்பும் போதும் எதையுமே கவனிக்காமல் தன் போக்கில் ஹெட் போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தாள் கதிரேசனின் மகள்.
"கதிரேசா, ரொம்ப சந்தோஷம்... நாங்க கிளம்பறோம் உங்கப்பா உன்னை எவ்வளவு அழகாக விருந்தாளியை உபசரிக்க கத்து குடுத்திருக்கார்...
அதனால தான் என்னால சகஜமாக உன் வீட்டுக்கு வந்து போக முடியுது... இதபோல உன் குழந்தைகளும் ஒருத்தரோட ஒருத்தர் உபசரிச்சிக்க பழகினா... நாளைக்கு கல்யாணம் முடிச்சு போனாலும் அவர்களின் உறவு பலப்படும்... இதுதான் நம்ம பாரம்பரிய பெருமை" அண்ணா கூறியது சுரீரென்று உரைக்க... கதிரேசனின் கண்கள் திறந்தது....
"இவள் என் மூத்த மகள் அனிதா கல்லூரியில் படிக்கிறாள். இளைய மகன் பள்ளி சுற்றுலாவிற்கு போயிருக்கிறான்....
வாம்மா அனிதா... பெரியப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கம்மா..." என்று முதன் முதலாக தன் மகளை அழைத்து வந்தான் கதிரேசன்.
No comments:
Post a Comment