Friday, April 6, 2018

என்ன தவம் செய்தேனோ?



என் முகம்  அறியா முதல் முகநூல்  வாசகி முழுநிலாவின் தொடர்ந்த உற்சாக விமர்சனங்கள்  இன்று என்னை பெரிய எழுத்தாளராக மாற்றிவிட்டது.

வாழ்க முழுநிலா.விமர்சனத்தால் என்னை கட்டிபோட்டவள்.அவளை நேரில் ஒரு முறையேனும் கண்டு நன்றி சொல்ல ஏங்குகிறேன்.

ஆனால்....

என் மகன். நான் எழுதுவதற்கு அவனும் ஒரு காரணம்.அம்மா அப்பாவிடம் பாசமும் மரியாதையும் உள்ளவன்தான்.

 தேர்வுக்கு படிக்கையில் நடுநடுவே    ப்லேஸ்டேஷன்  விளையாடுவதை  பார்க்கையில் என்கண்கள் குளமாகின்றன. அவனிடம்  நானும் அவன் தந்தையும் எவ்வளவோ எடுத்துச்  சொல்லியும் பத்தாம் வகுப்பில் படிக்கின்றோம் என்ற பொறுப்பு சிறு துளியும் அவனுக்கு வரவில்லை.

குழந்தைகளை அடிப்பதும் திட்டுவதும் தவறான செயல்கள் என்பதனை நன்கு உணர்ந்தவள் நான் என்பதால்  பொறுமை எல்லை மீறும் சந்தர்ப்பங்களில்  கண்ணீர் பெருக்கெடுத்துவிடுகின்றது.

பூஜை அறையை தன்னிச்சையாக கால்கள் அடைந்தன. கடவுளே என் மகனை பொறுப்புள்ளவனாக மாற்றிவிடு. வழக்கம்போல் மனம் கிடந்து அரற்றியது.

இவனுக்காக நான் வேலைக்கு கூட போகாமல் மகனே உலகம் என்றல்லவா வாழ்கிறேன். ஓரளவு இலக்கியம் கற்றவள் நான்.

போன வருடம் இவனை நினைத்து கவலைப்பட்டு மனரீதியில் சற்று பாதித்து நினைவாற்றல் குறைய ஆரம்பித்ததும்  என் கணவர் மீண்டும் நீ எழுது என்று
ஊக்குவிக்க ஒரே மாதத்தில் இணையத்தில் எழுத ஆரம்பித்தேன்.

எழுத்துலகம் இனிமையானது.என் மனதை குளிரவைத்துவிடுகின்றது.
ஒருவேளை.... சென்ற வாரம்  பதிவிட்ட  என்  கவிதைக்கு முழுநிலாவின் விமர்சனம் வந்திருக்குமோ? என்று ஆவல் மனதில் தோன்ற என் கணினி வேலை செய்யாததால்....


என்  மகனின்  கணினியை   திறந்தபோது மூடாது வைத்திருந்த அவனின்
முகநூல் பக்கத்தை கண்டதும்
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.

"அருண்"குரல் தடுமாற நான் அழைத்ததும்
"அம்மா என்னம்மா" ஓடிவந்த என் மகன் ஒரு நொடியில் புரிந்துகொண்டான்
"சாரிம்மா...வந்து... முழுநிலா நான்தான் உங்களை ஊக்குவிக்க இப்படி செய்தேன்"என்றான்

பெருமிதத்தில் கண்கள் குளமாகின.தாயை வளர்க்கும் பிள்ளையல்லவோ இவன்?ஊக்கமளிக்கும் வார்த்தைகளின் வலிமையை எனக்கு   நிஜத்தில் உணரவைத்தவன்.

"என்ன தவம் செய்தேனோ  உன்னை பெற?" ஆரத்தழுவி நான் சொன்ன  வார்த்தைகளால் என் மகனின் கண்களில் தெரிந்த உற்சாகம் அவனை உயர்த்தும் இனி.

காணொளி 


Wednesday, April 4, 2018

சிற்பி

ஞாயிற்றுக்கிழமை காலை...

ஆறாம் வகுப்பு படிக்கும் காவ்யாவை... "காவ்யாகோயிலுக்கு போகலாமா?" அம்மாவின் கனிவான அழைப்பிற்கு "வேண்டாம்மா எனக்கு அங்கே போரடிக்கும்..." காவ்யாவின் பதில் எப்போதும் போல் ஒலிக்க சற்றும் மனம் தளராது அம்மாவும்

"காவ்யா அப்பா வெளிநாட்டில் இருக்காங்கல்ல? போன வாரம் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போன போது சீக்கிரம் குணமாகனும்னு கோயிலுக்கு வேண்டிக்கிட்டேன்மா.... 
வேண்டுதலை நிறைவேத்தலன்னா சாமி குத்தம் ஆகிடும்..."

காவ்யாவிற்கு காலை உணவை கொடுத்துவிட்டு தான் மட்டும் விரதமாக கிளம்பினாள் அம்மா...

வேண்டா வெறுப்பாக காவ்யா அம்மாவுடன் கோயிலுக்கு வந்தாள்...

கோயிலில் கூட காவ்யா பொறுமையே இல்லாமல் தான் நடந்து கொண்டாள்...

"போகலாம்மா  போராடிக்கிது...என்று அம்மாவை அவசரபடுத்தினாள் காவ்யா...

கோயிலில் பிரசாதம் கூட வாங்கிக்கொள்ளாமல் தாயும் மகளும் வெளியேறினார்கள்...

சிற்பி சிலையை  செதுக்குவது போல் குடும்ப சூழ்நிலைக்கு  ஏற்ப   ஒத்துழைக்காத  காவ்யாவிடம் உள்ள குறையை களைவது தன் கடமை என்று மனதில் எண்ணிக் கொண்டாள் அம்மா...

வரும் வழியில் காவ்யாவின் தோழி எதிர்பட்டாள்காவ்யாவிற்கு உற்சாகம் வந்து விட்டதுஅவள் தோழி தனியாக வந்திருந்தாள்.
"நான் அவளுடன் சற்று நேரம் பேசிவிட்டு வரட்டுமா?"   என்று அம்மாவிடம் கெஞ்சிக்கேட்டாள் காவ்யா...

"நான் காலை உணவு உண்ணவில்லை எனக்கு மிகவும் சோர்வாக இருக்கின்றதுஆனாலும் உன்னுடைய சந்தோஷத்திறகாக 
என் துன்பங்களை பொறுத்துக் கொண்டு சற்று நேரம் இங்கே காத்திருக்கிறேன்... உன் தோழியுடன் சந்தோஷமாக பேசிக்கொள்."

என்று பொறுமையாக கூறிவிட்டு பக்கத்திலிருந்த பேருந்து நிலைய திண்ணையில் அமர்ந்த அம்மாவை பார்த்த காவ்யா மனம் திருந்தி
"என்ன  பத்தி மட்டுமே சிந்திச்ச  என்னை மன்னிச்சிடுங்கம்மா... வீட்டுக்கு போகலாம்மா..."  என்று  சொல்லி தாயின் கைகளை பிடித்தவாறே தோழியிடம்  "இன்னொரு நாள் நாம் சந்திச்சு  பேசலாம்"  என்றாள்...

Tuesday, April 3, 2018

சூழ்நிலை கைதிகள்


ரேணுகா... பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஏழ்மையான குடும்பத்தின்  மூன்று பெண் குழந்தைகளில் மூத்த பெண் என்பதால், தூரத்து உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர் ரேணுகாவின் பெற்றோர்.

புகுந்த வீட்டில் ரேணுகாவின் கணவன் கதிரேசன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை மற்றும் சொந்த வீடு என்பதால் ரேணுகா சற்று வசதியாக உணர்ந்தாள். ஆனால் பத்தாம் வகுப்புக்கூட  படிக்காதவர் கணவராக வாய்த்து விட்டதில் ரேணுகாவிற்கு வருத்தமே... அதே சமயம் கதிரேசனோ படிப்பில் ஆர்வமுள்ள புத்திசாலி பெண் தன் மனைவி என்ற பெருமையுடன் ரேணுகாவை மேலும் படிக்க ஊக்குவித்தான்.

படிப்பு மிகவும் பிடித்த விஷயம்... ஆதலால், ரேணுகாவும் வீட்டில் இருந்த படியே  தொலைதூர கல்வியில் பி.ஏ. சேர்ந்து படித்தவாரே மாமியாருக்கும் ஆதரவாக இருந்தாள்.

ஒரு நாள் கணவனின் அலமாரியை சுத்தம் செய்த போது அதில் அவள்  கணவன் சிறு வயதில் ஓவிய போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளிலும் பல பரிசுகள் பெற்றதற்கான சான்றிதழ்களை கண்டாள். 

அன்றிரவு கணவனிடம் ஆர்வத்தோடு கேட்டபோது....

"அதுவா? அதெல்லாம் பள்ளிக்கூடம் போன போது வாங்கினது... அம்மா தான் தூக்கி எறியாம வச்சிருக்காங்க..."

கதிரேசனின் வார்த்தைகள் ரேணுகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவரை பற்றி பெருமை பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லையே... பரம்பரை சொத்தான இந்த வீடு மற்றும் அப்பா வச்சிட்டு போன மளிகை கடை. இதுலயே வாழ்க்கையை ஒட்டிட நினைக்கிறாரே... என்று நினைத்து "உங்களுக்குன்னு ஏதாவது திறமை இருந்தா என்னை நீங்க படிக்க வைக்கிற மாதிரி உங்களையும் நான் ஊக்கப்படுத்தி முன்னுக்கு கொண்டு வரலாம்னு நினைத்தேன்" இயலாமை அவள் குரலில் இழையோடுவதை உணர்ந்த கதிரேசன்...

"எனக்கு சின்ன வயசுல பெரிய கனவுலாம் இருந்தது ரேணுகா... ஆனா சந்தர்ப்பம் சூழ்நிலை சரியா அமையல... அப்பாவுக்கு உடம்பு முடியல...  என்ன செய்ய முடியும்... அதை விடு... நீ நல்லா படி.... அதுவே போதும்..."

கதிரேசன் சொல்லிவிட  கணவனை எண்ணி  மனம் வருந்தினாள் ரேணுகா...

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை... ரேணுகா எதிர்பாராத விதமாய் 

"ரேணு, நான் ஒரு ஓவிய போட்டியில கலந்துக்க போறேன்... சின்ன வயசுல என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியல... இப்போ நான் முயற்சி பண்ண போறேன்...."

கதிரேசனின் வார்த்தைகளை கேட்டு மகிழ்ந்தாள் ரேணுகா!!

"ரேணு, ஓவியம் வரைய எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்.... அதனால வாச பக்கம் இருக்குற ரூம்ல வேண்டாத தட்டு முட்டு சாமான்களை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு சுத்தம் பண்ண போறேன்..." என்று கூறி விட்டு மடமட வென வேலைகளை துவங்கினான் கதிரேசன்....

"ஏங்க டிபன் ஆறி போகுது..." மனைவியின் வார்த்தைகளை காதில் வாங்காமல் அறையை சுத்த படுத்தி முடித்தபின் வெளியே வந்த போது... டைனிங் டேபிளில் பிரியாணி அமைதியாக வரவேற்றது.... 

அவசரமாக குளித்துவிட்டு... பிரியாணியை ஒரு பிடி பிடித்தான் கதிரேசன்... உண்ட களைப்பில் கண் அயர்ந்தான்...

மாலையில் கண்விழித்த போது...

"மாப்ள, சவுக்கியமா?" மாமனாரின் குரல்...

"வாங்க மாமா... நல்லா இருக்கீங்களா? அத்தை நல்லா இருக்காங்களா?" என்ற கதிரேசனிடம்

"அத்தைக்கு கால் உடைஞ்சிடுச்சு மாப்ள... அதான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரோம்... ஒரு மாசம் கால் அசைக்க கூடாதாம்...  ஊருக்கு போற வழில உங்களையும் பாத்துட்டு போகலாம்னு வந்தோம் மாப்ள... நாங்க கிளம்பறோம்...." மாமாவை பின் தொடர்ந்து வெளியே வந்த போது  வாடகை காரிலேயே அமர்ந்திருந்த தன் அம்மாவுக்கு  கண்களில் கண்ணீர் பெறுக ரேணுகா காரிலேயே காஃபி கொடுத்து கொண்டிருந்தாள்... 

"மாப்ள, நல்லா இருக்கீங்களா?" வலியிலும் மாமியாரின் விசாரிப்பு மனதை உருக்கி விட...

"ரேணுகா... அம்மாவ உள்ள கூட்டிட்டு வர வேண்டியது தானே... எங்க அம்மாவும் ஊருக்கு போயி இருக்காங்க... நீ ஒரு மாசம் நம்ம வீட்ல வச்சே கவனிச்சிக்கலாமே... இங்க இருந்து ஆஸ்பத்திரியும் பக்கமா இருக்கு..." கதிரேசன் சொன்னதும்...

"இல்ல மாப்ள வேண்டாம்... இங்க இடம் பத்தாது..." என்ற மாமனாரிடம்...

"வாச ரூம் ஃப்ரீயா தான் இருக்கு மாமா... தாராளமா தங்கலாம்... நீயும் சொல்லு ரேணுகா..."

என்ற கணவனின்உயர்ந்த  உள்ளத்தை பெருமிதத்துடன்  பார்த்து மலைத்து நின்றாள் ரேணுகா.

Sunday, April 1, 2018

கண் திறந்தது!



கதிரேசனின் மனது பெருமிதத்தால் ஆனந்தக்கூத்தாடியது....

பல வருடங்கள் பின்னோக்கி பார்த்த மனதில்...

"கதிரேசாதோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சு" பள்ளி விடுமுறை நாட்களில் துள்ளி விளையாட   நினைக்கையில்   அப்பாவின்   குரல்    தடைபோடும்.

"கதிரேசாமாடி வீட்டு ராமசாமி மகனுக்கு அடிபட்டுவிட்டதாம் டவுனுக்கு போய் பாக்கனும் அம்மா கிட்ட நாலு பேருக்கு சேத்து சமைக்க சொல்லு"

"கதிரேசாநம்ம தெரு குழாய்ல தண்ணி வரல கோயில் கிணத்துலேந்து தண்ணி கொண்டு வா" பரிட்சை நேர தொல்லையாக அப்பாவின் குரல்...

"கதிரேசாதம்பி காது குத்துக்கு வந்த விருந்தினருக்கு  சாப்பாடு பரிமாறு...."

இவை எல்லாவற்றையும்  விட தன் தங்கை வீட்டிற்கு வந்த விருந்தினர்களின் எச்சில் இலைகளை எடுக்கும்போது கதிரேசனுக்கு வந்த ஆத்திரம் அளவில்லாதது.... "என்ன அடிமை வாழ்க்கையிது?"

அப்பாவின் ஆளுமை மீது கோபமாக வந்தது.

அதனால்...

தான் பட்ட கஷ்டம்  எதையும்  தன் குழந்தைகள் படக்கூடாதுதன் குழந்தைகளை மிகவும் உயர்வாக வளர்த்திட விரும்பினான் கதிரேசன்.

தன் மனைவியிடம் தன் விருப்பத்தையும் தான் பட்ட கஷ்டங்களையும் சொல்லி இத்துன்பங்கள் ஏதும் நேராத வண்ணம் தன் இரண்டு குழந்தைகளையும் இன்று வரை வளர்த்து வருகின்றான்.

"அப்பா யாரோ வந்திருக்காங்க"  கல்லூரி செல்லும் மூத்த மகள் லேப்டாப்பில் பாட்டு கேட்டவாறே சொல்ல...  தன் நினைவுகளை கலைத்து வாசலுக்கு ஓடினான் கதிரேசன்.

"என் மகளுக்கு கல்யாணம் பத்திரிகை குடுக்க வந்திருக்கோம்... வீட்டுல வேற யாருமே    இல்லையா கதிரேசா?" பாட்டு கேட்டு கொண்டிருந்த பெண்ணை ஓரக்கண்ணால பார்த்தவாறே கைகளில் பத்திரிகையுடன்  உள்ளே  நுழைந்த  கதிரேசனின்  பெரியப்பா  மகன் கேட்க...

காதில் விழாத மாதிரி கதிரேசன்
"வாங்க வாங்க... உட்காருங்க அண்ணா, அண்ணி" என்று உள்ளே ஓடிப்போய் தானே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

சற்று நேரத்தில் கதிரேசனின்  மனைவி  பலகாரங்கள்  மற்றும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

பேசியவாறே அவற்றை  உண்டு  முடித்துவிட்டு
உறவினர்கள்  கிளம்பும் போதும் எதையுமே கவனிக்காமல் தன் போக்கில் ஹெட் போனில் பாட்டு கேட்டு கொண்டிருந்தாள் கதிரேசனின் மகள்.

"கதிரேசா, ரொம்ப சந்தோஷம்... நாங்க கிளம்பறோம் உங்கப்பா உன்னை எவ்வளவு அழகாக விருந்தாளியை உபசரிக்க கத்து குடுத்திருக்கார்...

அதனால தான் என்னால சகஜமாக உன் வீட்டுக்கு வந்து போக முடியுது... இதபோல உன் குழந்தைகளும் ஒருத்தரோட ஒருத்தர் உபசரிச்சிக்க பழகினா... நாளைக்கு கல்யாணம்   முடிச்சு  போனாலும்  அவர்களின் உறவு பலப்படும்...  இதுதான் நம்ம  பாரம்பரிய பெருமை" அண்ணா கூறியது சுரீரென்று உரைக்க... கதிரேசனின் கண்கள் திறந்தது....

"இவள் என் மூத்த மகள் அனிதா கல்லூரியில் படிக்கிறாள்இளைய   மகன்  பள்ளி   சுற்றுலாவிற்கு   போயிருக்கிறான்....  
வாம்மா அனிதா... பெரியப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கம்மா..." என்று முதன் முதலாக தன் மகளை அழைத்து வந்தான் கதிரேசன்.