Friday, February 26, 2021

விழுதை மறந்த வேர்


“பாட்டீ... எனக்கு தல பின்னி விடுங்கோ.....”குளித்துவிட்டு பள்ளி யூனிபார்ம் போட்டுக்கொண்டு ஒரு கையில் சீப்பும் மறுகையில் தேங்காய் எண்ணெயுடன் ஹாலில் வழக்கமாக தலைபின்னும் இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த  தீப்தா பூஜை அறை நோக்கி  குரல் கொடுத்தாள்.

  பூஜை அறையில்  ஸ்வாமி மேடையை மெழுகிவிட்டு, கோலம் போட புள்ளிகள் கணக்கு போட்டுக்கொண்டிருந்த ஐம்பத்தைந்து வயதான வத்சலா பாட்டிவெளுத்துப்போயிருந்த தன்  தலைமுடியை படிய வாரி கொண்டை போட்டிருந்தார்.அகலமான நெற்றியில் அளவான குங்கும பொட்டு ,மதுரை ராணி சுங்குடி புடவையில் அந்த காலை நேரத்தில் கண்களுக்கு லஷ்மிகரமாய் காட்சி அளித்தார்.” சித்த இரு வரேன்” சொல்லிவிட்டு கோலத்தை தொடர்ந்தார்.

          ****************

இதே நேரத்தில்…

பொழுது நன்றாக புலர்ந்துவிட்டது.

சன்னல் வழியாக சுரீரென்ற சூரிய ஒளி கண்களை தாக்கவே,திடுக்கிட்டு எழுந்தார் ஜெயம்மா. பொழுது விடிஞ்சுடுத்து இவ்வளவு நேரம் அசடாட்டம்னா தூங்கின்டுருக்கேன்.நினைக்கவே அவமானமா இருந்தது அவருக்கு.ஜன்னலை தொறந்து வெச்சுட்டேன் போலிருக்கு அதான் சுரூர்னு வெயில்...

ஓ இராத்திரி மழை போலிருக்கு .சன்னல் வழியா சாரல் அடிச்சிருக்கு அதான்என் உடுப்பு பூரா ஒரே ஈரம்.இப்போலாம் ஏனோ தெரியல கார்த்தால வேளைல தான்கண்ணை இழுக்கர்து.

அடடா…வாசல்ல கமலா வந்து   வாச காரியம் பண்ணிட்டு போயிருப்பாளா? 

இவ்வளவு நேரம் தூங்கறாளே எதாவது உடம்பு முடிலயோனு என்ன பத்தி  கவல பட்டிருப்பா.பாவம் வ பிள்ள குட்டிக்காரி. அவளுக்கு புருஷன்சரியில்ல. குடிகாரன்.குழந்தைகளை வளக்கனுமேனு அவ நாலு வீட்டுல வேல செய்யறா. நம்மாத்துல ரொம்ப நேரம் அவள காக்க வைக்க கூடாதுனு இராத்திரியே   வாளில ஜலம்,வாச பெருக்க தொடப்பம்,மதுரை கோல மாவு  டப்பா எல்லாத்தயும்   திண்ணையோரமா   கொண்டு  வெச்சிடரனே...எதோ என்னால முடிஞ்சது அவ்ளோதான்.

  ஜெயம்மாவின்  மனதில் எண்ணங்கள் மோதிக்கோண்டிருந்தன.     

அட என்ன இது நம்மோட அறைக் கதவு திறந்து கிடக்கு?

திருடன் கிருடன் வந்திருப்பானோ?? பயத்துடன் கைகள் தன்னிச்சையாக இடுப்பிலிருந்த சாவிக்கொத்தை வருடியது.ஐய்யோ சாவிக் கொத்து காணோம்.ஜெயம்மாக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.கண்டிப்பாக திருடன்தான் பயத்துடன் அடிமேல் அடிவைத்து பூனை போல் நடந்தார் ஜெயம்மா.

*****************


இப்போது....

“பாட்டி சீக்கரம் வாங்கோ டைம் ஆகர்து.   ப்லீஸ்”கெஞ்சினாள் தீப்தா.

“பாட்டியை அவசரபடுத்தாதே தீபு  ஸ்கூலுக்கு இன்னும் நாழி இருக்கு  “ சமையலறையிலிருந்து கொண்டே இந்திரா தன் மகள் தீப்தாவை அடக்கினாள்.

நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு,கையிலிருந்த வெள்ளிகுச்சியை திருமண் பொட்டி நடுவில் சொருகிவிட்டு பக்கத்தில் வெள்ளி டம்ளரில் இருந்த ஜலத்தில் கைகளை அலம்பி கொண்டிருந்த வத்சலா பாட்டியின் கணவர் அதாவது தீப்தாவின் தாத்தா.

“ இந்திரா காபி கொண்டாம்மா”  என்று சமையலறை பார்த்து சொல்லிவிட்டு..கோபமாக உட்கார்ந்துருந்த செல்ல பேத்தியிடம்…

“என்னடீ செல்லம் கோவமா இருக்கியா  பாட்டி இன்னும்  தல பின்ன வரலனு?..ஆமாம்...இன்னிக்கு எதுக்கு இவ்வளவு அவசரம்?”

“தாத்தா,இன்னிக்கு   எனக்கு ஸ்கூல்ல  அசம்பிளி இருக்கு நான் தான் ஹோஸ்ட் பண்றேன். நானே லேட்டா போகலாமா சொல்லுங்கோ” முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டாள் தீப்தா.  பேத்தியின் கோபம் ரொம்ப அழகாக இருக்கவே

“சரி நான் வேணா நோக்கு தல பின்னி விட்ட்டுமா ?” ,மேலும் சீண்டினார்

“வேண்டாம்....”

தாத்தாவை கோவம் விலகாமல் பார்த்தாள் தீப்தா.

அதற்குள் கோலம் போட்ட  கைகளை நன்றாக துடைத்தபடியே கூடத்தை தாண்டி வராந்தாவிற்கு வந்த வத்சலா பாட்டி,அங்கிருந்த ப்லாஸ்டிக் ஒயரால் பின்னப்பட்ட மரத்தாலான சோபாவில் உட்கார்ந்து கொண்டு

“தீபு வாடா தல வாரி விடறேன்”

  சுவறோரமாக தாத்தா பக்கத்தில் உட்கார்ந்திருந்த தீப்தா கோபத்தில் இருந்தாலும் பாட்டியிடம் சீப்பும் மற்றும் தேங்காய் எண்ணெய் கொடுத்தாள்..

“சீக்கரம் பாட்டி டைம் ஆச்சு” சீப்பை தலையில் வைக்கும் போதே அவசரப்படுத்தினாள் தீப்தா.

நீளமான அடர்த்தியான தலைமுடி அடங்கிவரவே பல முறை வாரவேண்டுமே முடிந்த மட்டும் வேகமாக வார ஆரம்பித்தார் வத்சலா.

மருமகள்இந்திரா கொண்டு வந்த காபியை டபராவில் சூடு பறக்க ஆத்திகொண்டிருந்த வத்சலா கணவர்,

“ஏம்மா இந்திரா, பாட்டி என்ன பண்றா பாத்தியோ?”என்றார் சமையலறையிலிருந்த   மருமகளிடம்

“சித்த முன்ன போனேன் அசந்து தூங்கறா” சமையல் அறையிலிருந்து பதில் வந்தது.

கஷ்டப்பட்டு தன் பெரிய வயிற்றை பேண்டில் திணித்துக் கொண்டிருந்த தீப்தாவின் அப்பா ராகவன்.

“தீபு fifth grade வந்தாச்சு உனக்கு தல பின்ன இன்னும் தெரியலயா?”

தன் மகளை சீண்டினான.

“ நன்னா அழுத்தமா வாரி பின்னினா தான்தலை கலையாம நன்னார்க்கும்..? 

ஏன்   ராகவா....உன் தங்கை ராதிகாவை மறந்துட்டியா?  அவளுக்கு பாட்டிதான் தல பின்னி விடனும்னு  ஒரே அடம்பிடிப்போ.    உங்க பாட்டிக்கும் ராதிகானா ரொம்ப இஷ்டம்.  உங்க அப்பாவும் இப்படிதான் வந்து ,அவள நீயே பின்னிகோயேனு சொல்வேர்..... காலேஜ் போகும் போதும் கூட  அவளுக்கு உங்க பாட்டிதான் பின்னுவா.இப்போ குழந்தை கனடால இருக்கா.கண்காணாத இடத்தில வாழ்க்கை அவளுக்கு.தனியாவே எல்லாம் பண்ணிக்கிறா.பெண் குழந்தைகளை இரைஞ்சு பேசவே கூடாது..அது இன்னொரு வீட்டுக்கு போற குழந்தைனு பாட்டி அடிக்கடி   சொல்வேர். பாட்டி நம்ம விட்டுப் போய் அஞ்சு வருஷம் ஆச்சு....“ குரல் சற்று கரகரக்க பேத்திக்கு ஆதரவாக பேசினார் வத்சலா.


******


இதற்கிடையே

பூனைபோல் பதுங்கி நடந்த ஜெயம்மா மெல்ல நகர்ந்துஅறையை விட்டு வெளியே வந்தார்.

பேச்சு சத்தம் கேட்டது...யாரு பக்கதாத்து கோபாலனா?காபி பொடி இன்னும் ரெண்டு நாளைக்குதான் இருக்கும் கோபாலன்கிட்ட பணத்த குடுத்து அவன்கிழக்கே போகும்போது காபி பொடி வாங்கின்டு வரசொல்லனும்...

அது என்ன மேலேர்ந்து எதொ தொங்கர்து கயறா பாம்பா  தெரியலயே....

எதிராத்து கோவிந்தன்  ஆத்துலதான் இருப்பான்.   பாவம்  படிச்சிட்டு வேல கிடைக்காம கஷ்டபடறான் ...கூப்பிட்டா உதவிக்கு   ஓடி வருவான். இந்த  பாம்பை தொறத்த நமக்கு ஒத்தாசை பண்ணுவான்....கூப்பிடலாமா? தானாகவே பேசியபடியே அதன் பக்கத்தில் வந்தவர் சுவற்றில்  அசையாமல் தொங்கிய கயிற்றை பயத்துடன்  உற்றுபார்த்தார்.தூக்கம் வேறு தலை சுற்றியது. கண்களை கசக்கிக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தார்.


இப்போது  ஜெயம்மாவை  இயற்கை உபாதை அழைத்தது.

அங்கே  மண்சாடிகளில் செடிகள். சுற்றிலும் காம்பவுன்ட் சுவர் இருந்தது.  ர்அதை நோக்கி நடந்தார்.

அட்டா சொம்புல ஜலம் கொண்டுவர மறந்துட்டனே....அவசரமா வேற இருக்கே.... 

இதுக்குதான் பட்டணத்தலேர்ந்து  நம்ம   பேரன் பேத்திகள் லீவுக்குகூட    இங்க வரமாட்டேங்கர்துகள்இங்க வெட்ட வெளியா இருக்குனு சொல்றதுகள்...  

குழந்தைகளை பாக்க அங்க தான்   போக வேண்டிருக்கு.

நமக்கோ பெண்ணை குடுத்த இடத்துல  தங்க மனசு ஒப்பலயே.....ரெண்டு நாள் தங்கினா மனசு  இருப்பு கொள்ள மாட்டேங்கர்து. அவரோட இந்த வீடு தான் சாசுவதம்னு தோணர்து.  ஜெயம்மாவின்  மனதிற்குள் எண்ணங்கள் அலைமோத ஆரம்பித்தன.

சுற்றிலும் நொட்டமிட்டவருக்கு... அந்த மரம் கண்ணில் பட்டது... ஆங்.....நாரத்தை மரம்.

நிறைய காய்ச்சிருக்கு.... ஊறுகாய் போட்டு பேரன் பேத்திகளுக்கு கொடுத்துவிடனுமே....வேற ....எவனாவது பறிச்சின்டு போய்ட்டா என்ன பண்றது?

மரத்த்தை சுற்றி அடுக்கியிருந்த  செங்கல் மேல்  காலை வைத்து எம்பிய போது நிலை தடுமாறி ‘சொத்’ என்ற சத்தத்துடன் கீழே விழுந்தார் ஜெயம்மா  “தலையில் எதுவோ இடிக்க வலியில் “ நாராயணா.....” என்றார் .

*******


ஸ்கூலுக்கு போவதற்காக அவசர  அவசரமாக வெளியில் வந்த தீப்தா....

“ஐயையோ  ரோஜா செடி கீழ கல்லுமேல கொள்ளு பாட்டி விழுந்துட்டா....”என்று அலறினாள்.

குழந்தையின் அலறரலை கேட்டு

கைக்காரியங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்த வத்சலாவும்  அவள் கணவரும் வாசலில் ரோஜா செடிக்கு பக்கத்தில் விழுந்து  கிடந்த ஜெயம்மா பாட்டியை   தூக்கி கொண்டு வீட்டிற்குள் வந்தனர்.ஜெயம்மா பாட்டியின் அறையில் அவரை படுக்க வைத்தனர்.

 ஐஸ் பேக்குடன் வந்தான் ராகவன்தலையிலிருந்து வழிந்து ஓடும் இரத்ததை நிறுத்த முயற்சி செய்தான்..

“நான் பாக்கும்போது தூங்கின்டு இருந்தாரே எப்படி பாட்டி வெளீல போனேர்?” இந்திரா புலம்பினாள்.

தீப்தா பயத்தில் தன் அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள்.

“அம்மா...அம்மா...” மெல்லிய குரலில் கண் மூடிக் கிடந்த  தன்  அம்மா ஜெயம்மாவின் கன்னத்தை ப்பிடித்து மெதுவாக அசைத்தார் வத்சலா.

“ஹலோ,எம்ஆர் எம் ஹாஸ்பிடலா? ஆம்புலன்ஸ் உடனடியா அனுப்ப முடியுமா?” எனபத்தைஞ்சி வயசு அல்சைமர் இருக்கு  கீழ வேற விழுந்துட்டாங்க கொஞ்சம் சீக்கரம் வாங்க ப்லீஸ்”பதற்றத்துடன் பேசிக்கொண்டிருந்தார் வத்சலாவின்  கணவர்.

 

அறைக்  கதவை சாத்திவிட்டு கொட்டும் மழையில் தொப்பமாக நனைந்தது போல ஈரமாக இருந்த   அம்மாவின் உடையை  மாற்றிவிட்டு கொண்டிருந்தார் வத்சலா.புடவையிலேயே சிறுநீர் கழித்திருந்தது  புரிந்ததும் வத்கசலாவின் கண்கள் நீரை சொரிந்தன.்அம்மா எவ்வளவுஆச்சாரமாக இருப்பாள் நினைத்து பார்க்கவே மனது பாரமாகிவிட்டது.

அம்மா , நல்ல நினைவாற்றலோடு இருந்த காலத்தில் ஒரே பெண்ணான என் வீட்ல கூட தங்காம 

கிராமத்துல இருக்க கோபாலனும் கோவிந்தனும் பேரன்கள்னு  நினைச்சின்டு   வைராக்யாமா தனியாகவே வாழ்ந்துட்டியே அம்மா.

என் ஆத்துக்கார்ரும் ஒரே பிள்ளை. மாமியாரை தனியாக   விட்டுட்டு உன்ன பாக்க கிராமத்துக்கும்  வரவும்  என்னாலயும் முடியல.

நான் எத்தனை நாள் உன்னை நினைச்சு அழுதிருப்பேன் தெரியுமா?

கிராமத்துல பழைய வீட்டை கட்டலாம்னா இது அப்பா பாத்து பாத்து கட்டின வீடு என் காலம் வரைக்கும் அப்படியே இருக்கனும்னு சொல்லிட்ட.

தள்ளாமயா நீயே தடுமாறின்டு மாங்காய நார்த்தங்காய ஊறுகா போட்டு யார் பட்டணம் போறானு பாத்து பாத்குது டுத்தனுப்புவியேம்மா.

உன் கூட சேர்ந்திருக்க முடியலயேனு தவிச்சேன்.சாரிம்மா. உனக்கு அல்சமைர் வந்துதுனு தெரிஞ்சதும்    நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.ஏன்னா    நல்ல நினைவு இருந்தாநீ இங்க வரமாட்டயே.

நீ இங்க வந்த இந்த ஒரு மாசமா என்னுடைய ஆனந்தத்தை உங்கிட்ட எப்படிம்மா சொல்லுவேன்.

ஆனா..இப்போதாவது உனக்கு பணிவிடை செய்ற பாக்யம் எனக்கு கிடைச்சிருக்குனு ஆறுதல் பட்டேனேஆனா… இப்படி ஆகிவிட்டதே அம்மா.

வாய்விட்டு  புலம்பியபடி  தன் தாய்க்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார் வத்சலா.

அப்போது மெதுவாக  கண்களை திறந்த ஜெயம்மா  வத்சலாவின் கைகளை வாஞ்சையுடன் பிடித்தார்.கண்களை உற்றுப் பார்த்தார்.பொங்கி வந்த கண்ணீரை அவசரமாக துடைத்தார்   வத்சலா.  அம்மாவை அருகில் நெருங்கி ஏக்கத்துடன் உற்றுப்பார்த்தார்    

இப்போது வத்சலாவின்   தலையை    வருடினார்  ஜெயம்மா…

வத்சலாவிற்கு மெய்சிலிர்த்தது.

ஜெயம்மா எதோ சொல்ல முயற்சி செய்வது தெரிந்தது.

“அம்மா என்னம்மா சொல்லும்மா” ஊக்கப்படுத்திய மகளிடம் ஜெயம்மா மெதுவாக பேசினார்

“மாமீ.... உங்களை பாத்தா பாவமா இருக்கு.

நீங்க யார் பெத்த பொண்ணோ தெரியல.  ஆனா யாருமே இல்லாம  தனியாவே  வாழர எனக்கு.     அடிக்கடி வந்து...இவ்வளவு ஒத்தாசை பண்றீங்கோ..         மகராசியா இருக்கனும்.....”என்றார் கைகளை உயர்த்தி ஆசிர்வதித்தார் ஜெயம்மா.

பெற்ற மகளையே     மாமீ என்று அழைத்து...  ஆசிர்வதிக்கும் அம்மாவை பார்த்து கதறி அழுதார் வத்சலா.



















1 comment: