கனகா...என்றாலே அந்த அபார்ட்மென்டில் வெகு பிரசித்தம்.அங்கு குடி வந்து ஐந்து மாதங்கள் தான் ஆகின்றது.
ரகு பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன் என்றாலும்..நான்கு வருடங்களாக சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதால் அவனுக்கு சென்னைப்பட்டினத்தில் எல்லா இடமும் அத்துப்படி.
அவன் மனைவி கனகா படித்தவள் தான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் சற்று வெகுளி.
ரகுவின் பெற்றோர் இருவருமே பெங்களூரில் வேலை பார்ப்பதால் திருமணம் முடிந்த கையோடு ரகுவையும் கனகாவையும் சென்னையில் இந்த அபார்ட்மென்டில் குடிவைத்தனர்.
வீட்டு வேலைகள் நன்கு பழகியிருந்ததால் வெகு சீக்கிரமே...நறுவிசாக தனியாகவே குடும்பம் நடத்த பழகியிருந்தாள் கனகா.வீட்டு வாசலில் ரோஜா செடிகள் வைத்தாள்.அதில் பூக்கும் மலர்களை சாமிக்கு போட்டு அழகு பார்த்தாள்.
வீட்டிற்குள் உலவும் தேவதையாய் அவளை நேசித்தான் ரகு.அன்பு மனைவியின் பாசத்தில் கொஞ்சம் மாறித்தான் போனான் அவன்.மனதில் உற்சாகம் பொங்கியது. விதவிதமான சாப்பாடு சுத்தமான வீடு ,அன்பான மனைவி என்று வாழ்க்கையின் ஆரம்பமே மிக நன்றாக அமைந்துவிட்டது. அவனும் கனகாவிற்கு கூட மாட ஒத்தாசை செய்து அவள் சோர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டான்.
இப்படியொரு பொருத்தமா என்று பிறர் பார்த்து வியக்கும்படியான வாழ்க்கையில் இருவரும் போட்டி போட்டு கொண்டு அன்பை பெருக்கிக்கொண்டனர். ரகுவிற்கு மட்டும் சின்னதாக ஒரு எண்ணம் மனதில் அடிக்கடி தோன்றிகொண்டே இருந்தது.
அதாவது....இந்த ஐந்து மாதங்களுக்குள் அக்கம்பக்கத்து வீட்டினருடன் இவ்வளவு எளிதாக பழகுவது எப்படி அவளுக்கு சாத்தியமாயிற்று? கனகாவின் சிரித்த முகம் மற்றவர்களை சுலபமாக அவளிடம் பழக வைத்துவிடுகிறது. இது ரகுவிற்கு புதுமையாக இருந்தது.தன் அன்பு மனைவி அவளுடைய தாய் ,தந்தை மற்றும் உறவினர்களை பிரிந்து முகம் தெரியா ஊரில் தன்னை மட்டுமே நம்பி இருக்கிறாள். அவளிடம் அக்கம்பக்கம் பழக வேண்டாம் என்று சொன்னால்...இந்த நான்கு சுவற்றுக்குள் வாழ அவள் ஒன்றும் சிறைக்கைதி அல்லவே...என்ற எண்ணம் தோன்றி அவனை தடுத்தது.
ஆனால் ...
“கனகா...எங்க வீட்ல பைப்ல தண்ணி வரல குடிக்கக் கூட தண்ணி இல்லம்மா எங்க வீட்டுக்கார் ப்ளம்பர கூப்பிட போயிருக்கார் உங்க வீட்ல தண்ணி வருதா?” மாடி வீட்டு ஆன்டி பால்கனியிலிருந்து உரக்க கத்தியதும்...
“எங்க வீட்ல நல்லா தண்ணி வருதே ஆன்டி...குடிக்க தண்ணி இல்லன்னா உங்களுக்கு கஷ்டமாச்சே’ சொல்லிவிட்டு ஒரு குடத்தில்தண்ணியை தூக்கிக்கொண்டு மாடிக்கு ஓடினாள் கனகா.
“கனகா இன்னிக்கு ஆபீஸ்லேர்ந்து வர லேட்டாகும்என் பையன் ஸ்கூல்லேர்ந்து வந்தா உங்க வீட்ல வெச்சு பாத்துகரியா?” என்ற எதிர் வீட்டு அக்காவின் இரண்டாம் வகுப்பு படிக்கும்பையனுக்கு சாப்பிட டிபன் கொடுத்து வீட்டுப்பாடம் கூட முடிக்க வைத்துவிடுகிறாள் கனகா.
இதெல்லாம் கூடப் பரவாயில்லை...
ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பக்கத்து வீட்டு அங்கிளுக்கு நெஞ்சுவலி வந்து விட்டது என்று துடித்துப்போன கனகா தூங்கிக் கொண்டிருந்த ரகுவை உலுக்கி எழுப்பி டாக்ஸி பிடித்து வரசொன்னதோடு துணையாக மருத்துவமனைக்கும் அனுப்பி பணமும் கொஞ்சம் செலவழிக்க வைத்தாள்.
ஒரு பக்கம் அவளது குணம் உயர்வாக தோன்றினாலும் எல்லோரும் இவளை நன்றாக பயன்படுத்திக்கொள்கின்றார்களே என்று ஆதங்கமாக இருந்தது ரகுவிற்கு.
இந்நிலையில்...
ரகுவின் அலுவலகத்தில் இரண்டு வாரம் வெளிநாடு போக வேண்டி வந்தது.அதனால் கனகாவை பெங்களூர் அனுப்ப முடிவு செய்திருந்தான் ரகு. ஆனால் அதிர்ஷடவசமாக அவனுடைய அப்பா அம்மா லீவு எடுத்து கொண்டு சென்னைக்கு வருவதாக கூறினர்.
அப்பா அம்மாவை வரவேற்க தயாரானது வீடு. அவர்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று ரகுவிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் கனகா. காலையில் சாலட் ,மதியம் அளவான சாப்பாடு , மாலையில் சுண்டல் , இரவு கோதுமையில் செய்த டிபன் என்ற எல்லா விவரத்தையும் ரகு சொல்ல கவனமாக புரிந்து கொண்டாள். ஜன்னல் திரைச்சீலைகளை மாற்றி வேகும் க்ளீன் செய்து அந்த அறையை அழகாக தயார் செய்தாள்.பால் கவர் போடுபவரிடம் மேலும் ஒரு பேக்கெட் வேண்டும் என்று இப்போதே சொல்லி வைத்தாள்.
பெற்றோரை அழைத்துவர ரகுவுடன் தானும் ஸ்டேஷனுக்கு சென்றாள்.
ஒரு வழியாக ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு வந்ததும் அப்பா மிகவும் அசதியாக இருப்பதாக கூறியதால் அவர்களுக்காக ஒதுக்கிய அறைக்குள் அப்பாவை ஓய்வெடுக்கச்செய்தான் ரகு.
பெற்றோர் வந்ததும் கனகா பிஸியாகிவிட்டதால் அக்கம்பக்கத்தார் தொல்லை இனி இருக்காது என்ற எண்ணம் தோன்ற, நிம்மதியாக வெளிநாட்டிற்கு போய்விட்டு திரும்பிய போது.......
வீட்டு வாசலில் நுழையக்கூட இடமில்லாமல் அக்கம்பக்கத்தினர் அம்மா மற்றும் கனகாவுடன் கலகலவென்று பேசிக்கொண்டிருந்தனர்.
இவனை கண்டதும் கைகுலுக்கிவிட்டு “பயணம் நல்லா அமைஞ்சிதா?” என்று விசாரித்தனர்.
“நல்லபடியா அமைஞ்சிது.தேங்க்ஸ்” சம்பிரதாயமாக சிரித்த ரகுவிற்கு வீட்டிற்கு உள்ளே செல்ல வழிவிட்டு ஒதுங்கினர்.
வீட்டிற்குள் நுழைந்தான் ரகு....
அங்கே மடிக்காமல் கிடந்த துணிகள் அடுக்காத செய்தித்தாள்கள் மற்றும் டீப்பாயிலிருந்த கழுவாத டீக்கோப்பைகளையும் டிபன் தட்டுகளையும் கண்டான். சட்டென்று ஞாபகம் வர சன்னல் வழியாக எட்டி பார்த்தான். நீர் ஊற்றாமல் காய்ந்து போன ரோஜா செடிகள் கண்டதும் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. அவனுக்கு தலை சுற்றியது.அடக்கடவுளே அக்கம்பக்கத்தினர் அப்பா அம்மாவையும் தொந்தரவு செய்கிறார்களே. இந்த அபார்ட்மென்டில் இருப்பவர்கள் நம்மை நன்றாக பயன்படுத்திக் கொண்டு போதாத குறைக்கு நம் வேலைகளையும் கெடுக்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்து கொண்டு அப்பா எப்படி அமைதியாக இருக்கிறார்? அப்பா மிகவும் கண்டிப்பானவர் ஆயிற்றே. டிசிப்ளின் இருக்க வேண்டும் என்று மிகவும் வற்புறுத்துவாறே? அப்பாவின் அறைக்கதவு மூடியிருக்க சரி காலையில் அப்பாவிடம் இது பற்றி கண்டிப்பாக பேச வேண்டும்.இவர்களை பின்பு யார்தான் தட்டிக்கேட்பது.
ஆனால்.....இனி இங்கிருக்ககூடாது..வேறு வீடு மாற்றியே ஆக வேண்டும் என்று மனதில் தீவிரமாக நினைத்துக்கொண்டு தன் ரூமிற்குள் சென்றுவிட்டான் ரகு.
சற்று நேரத்தில் அனைவரையும் அனுப்பிவிட்டு உள்ளே வந்த அம்மாவும் கனகாவும் ரகுவின் வாடிய முகத்தை கவனித்தனர்.
கனகாவின் முகமும் வாடியிருப்பதை பார்த்தான் ரகு. “வாங்க,எதாவது சாப்பிடறீங்களா?”
இப்போதுதான் தன்னை விசாரிக்கும் மனைவியை நம்ப முடியாமல் பார்த்தான். அம்மா கையில் காபியுடன் வந்தார்.
“ரகு ரொம்ப டயர்டாக இருக்கயாப்பா?இந்தா காபி குடி”மெதுவாக பேசினார் அம்மா.
கடகடவென்று காபியை குடித்தான் ரகு. அவசரமாக டீப்பாயை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் கனகா. துணிகளை பரபரப்பாக மடித்தாள்.
கோபம் எட்டி பார்க்க “என்ன நடக்குது இங்க? எனக்கு ஒண்ணுமே புரியல” மெதுவாக ஆனால் அழுத்தமாக கேட்டான் ரகு.
“நீ வெளிநாட்டில் இருந்த போது..அப்பாவுக்கு ஹார்ட்அட்டாக் வந்துவிட்டது”
அம்மா மெதுவாக சொல்ல...
“அப்பா...அப்பாவுக்கு...??? இப்போ எங்கம்மா அப்பா??? ஏன் எனக்கு போன் பண்ணல?”பதறிய ரகுவை கண்களில் கண்ணீர் பெருக பார்த்தாள் கனகா.
அம்மா தொடர்ந்தார்...
“ரகு நீ பயப்படும்படி எதுவும் ஆகல...அமைதியா இருப்பா” ரகுவை தன் தோளில் சாய்த்து கொண்டு…
“அப்பாவுக்கு வலி தாங்க முடியாமல் மயங்கி விட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை… கனகா பயந்து வாசலுக்கு ஓடிப்போய் ‘ஆன்டீ ஹெல்ப் பண்ணுங்க’ என்று ஒரு குரல் தான் கொடுத்தாள்...அவ்வளவுதான் இங்கிருப்பவர்கள் அனைவரும் ஓடோடி வந்தார்கள். அப்பாவை தூக்கி காரில் வைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அட்மிட் செய்தார்கள்….எங்களிடம் பணம் கூட வாங்கிகொள்ளாமல்....அப்பாவை காப்பாற்றிவிட்டார்கள். அதுமட்டுமல்ல...டிஸ்சார்ஜ் ஆகும் வரை பக்கத்திலேயே இருந்தார்கள்...உனக்கு தெரியபடுத்தினால் நீ பதட்டமடைவாய் என்று உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று எங்களை தடுத்தார்கள்...மேலும் தினமும் நம் வீட்டிற்கு வந்து எங்களை தைரியப் படுத்தினார்கள்.இப்போது அப்பா நலமாக அறையில் உறங்கி கொண்டிருக்கிறார்.....நல்ல வேளையாக நாம் இந்த அபார்ட்மென்ட்ல குடி இருக்கோம்….....கடவுள் உனக்கு வசிக்க நல்ல இடமாக கொடுத்திருக்கிறார்….எவ்வளவு அருமையான மனிதர்கள் உன்னை சுற்றி இருக்கிறார்கள் தெரியமா? அடுத்தவர் ப்ரச்னை பற்றி அலட்டி கொள்ளாத மக்களுக்கு நடுவில் நல்லவர்களும் இருக்கிறார்களடா.....நீ ரொம்ப கொடுத்து வச்சவன்டா….”. நா தழுதழுக்க உடல் நடுங்க பேசும் அம்மாவின் கைகளை ஆதரவாக பிடித்து கொண்டான் ரகு.
குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் கனகா.தண்ணீர் குடித்து தொண்டையை அடைத்த துக்கம் குறைந்த நிலையில் புடவை முந்தானையில் கண்களை துடைத்துக்கொண்டிருந்த தாயிடம்....
“அம்மா...கனகாதான் ரொம்ப ‘கொடுத்து வைத்தவள்’ நான் இல்லம்மா...” சொன்ன ரகுவை குழப்பத்துடன் புரியாமல் பார்த்தார் அம்மா.
”ஆமாம் அம்மா...கனகா....நிறைய உதவிகளை அக்கம்பக்கத்தாருக்கு ஏற்கனவே செய்து ‘கொடுத்து வைத்திருக்கிறாள்’...அந்த உதவிகள் தான் சரியான நேரத்தில் திரும்ப கிடைத்திருக்கிறது...அப்பாவின் உயிரை மீட்டு தந்திருக்கிறது...” என்றான் கண்களில் கண்ணீர் வழிய நன்றியுடன் கனகாவை பார்த்தவாறே.
மகனின் கண்களை துடைத்த அம்மா.கவலையுடன் நின்றிருந்த கனகாவின் கைகளை பற்றி பாசத்துடன் அவளை அணைத்து பெருமை பொங்க உச்சியில் முத்தமிட்டார்.
A beautiful and meaningful story written with the perfect elucidation.
ReplyDelete