Monday, April 24, 2017

அச்சம் தவிர்


தூக்கு கயிற்றின் முனையில் நின்றிருந்தாள் சங்கவி...
இதோ இன்னும் சிறிது நேரத்தில் தூக்கு கயிறு அவள் கழுத்தை முத்தமிட காத்துக் கொண்டிருக்கிறது...
சங்கவிக்கும் சதிஷு க்கும்   திருமணமாகி மூன்று நாட்களே ஆகியிருந்தது...

கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது சங்கவிக்கு.தூக்கு கயிற்றை உற்று நோக்கினாள்.

தொலைபேசி  ஒலித்தது.பதறிவிட்டாள்.ஒருவேளை அது சற்றுமுன் பேசியவனாக இருக்குமோ? தொலைபேசியை எடுக்க துணிவில்லை அவளுக்கு.

ஒரே மகளான தன்னை மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் பாசத்துடனும் வளர்த்த அப்பா,அம்மாவிற்கு பெருத்த அவமானம் இது. வெளியூர் சென்றிருக்கும் சதீஷின் பெற்றோர் நாளை வந்த பிறகு  இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார்களோ?

புது தாலிக்கயிறு கழுத்தில் உறுத்தி மனதில் ஏக்கமும் கொடுத்து  சித்ரவதை செய்தது.பெற்றோருக்கு கடிதம் எழுதி வைக்கலாமா? யோசித்துவிட்டு  நடந்ததை  காகிதத்தில் பாதி எழுதிக்கொண்டிருக்கும் போதே...

தொலைபேசி மீண்டும் ஒலித்தது. சங்கவிக்கு போன் எடுத்து பேச துணிவில்லை.

சதீஷிடம் சொல்லலாமா? என்று நினைத்தாள்.ஒருவேளை சதீஷ் தன்னை தவறாக  நினைத்து விட்டால் ?

அவமானப்பட்டு நிற்பதை விட உயிரை  விடுவதே மேல் என்று  மீதி கடிதத்தை கண்ணீருடன் முடித்துவிட்டு கழுத்தில் சுருக்கு  கயிற்றை மாட்டிய அதே நேரம்....

டிங் டிங்.... வாசலில் மணியடித்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்? கண்களை துடைத்துக்கொண்டு  வந்து வாசல் கதவை திறந்தாள் சங்கவி.

வெளியில் அப்பா,அம்மா,சதீஷ் இவர்களுடன் ஒரு புதியவனும் வந்திருந்தான்.
'
 "இவர் பேர் வாசு" உள்ளே வந்ததும் அப்பா சொல்ல....

வா..ஆ ..சு.... ஊ ...பெயரை கேட்டதும் பயமும் நடுக்கமும் அதிகமாகிட  நிற்கவே  முடியாமல் மயக்கம் போட்டு விழுந்தாள்  சங்கவி.

கண்விழித்த  போது படுக்கையில் படுத்திருந்தாள. மின்விசிறியில் கட்டியிருந்த தூக்கு கயிற்றை காணவில்லை.  சதீஷ்  சங்கவியின் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டான்.அம்மா அவளுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார்கள்.வாசு மிகவும் வருத்தமாக காணப்பட்டான்.

சங்கவியின் தலையை  வருடிவிட்ட  அப்பா  தன்  குரலை மென்மையாக்கி  பேசினார்  ,"சங்கவி,இவன் நம்ம பக்கத்து  தெரு பையன் பெயர் வாசு.
சங்கவின்னு பெயர் கொண்ட ஒரு பெண்ணும்  இவனும் காதலிச்சிருக்காங்க.. மா.. .அவங்களுக்குள்ள ஏதோ பிரச்னை. அதனால வாசு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான்.  ஆனால் இவன்  நண்பனோ நீதான் அந்த சங்கவின்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு எப்படியோ இந்த போன் நம்பர் வாங்கி  உன் கணவனிடம் எல்லாத்தையும் சொல்லிடுவேன்னு உன்னை மிரட்டி இருக்கான்...மா.  வாசுவுக்கு விஷயம் தெரிஞ்சதும் உன்கிட்ட சாரி சொல்வதற்காக  உனக்கு  போன் பண்ணிருக்கான்.. மா...ஆனா  நீ எடுக்கல. என்னிடம் ஓடிவந்து சொன்னான். நான்  போன் பண்ணியும் நீ  எடுக்கல மா. அதான் மாப்பிள்ளைக்கும் போன் செய்து சொல்லிட்டு... பதட்டமாகி ஓடிவந்தோம்மா.  உன்னோட புகுந்த வீடும்   ஒரே ஊராக அமைந்ததால்  நீ உயிர் பிழைத்தாயம்மா, படிச்ச பொண்ணு தைரியமாக ஒரு பிரச்னையை சமாளிக்காம இப்படி எங்களைவிட்டு போகப் பாத்தியேம்மா" தவிப்புடன் பேசினார்  அப்பா.

"என்னை மன்னிச்சிடுங்க சகோதரி" என்று கெஞ்சினான் வாசு.

கோழைத்தனமான  தன்  முடிவால் அன்பான பெற்றோரும், கணவனும்  வருந்துவதைக் கண்டு மனம் நொந்தாள் சங்கவி.இனி துணிவோடு வாழ உறுதி எடுத்தாள்.


Monday, April 17, 2017

பாசம் எனும் வேலி!




"எனக்கு அவன் யாருன்னே தெரியாது என்னை நம்புங்கப்பா... " என்று அழுதாள் சுமதி!
" யாருன்னே தெரியாமலா பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி உன்னை லவ் பண்றேன்னு சொல்லிருக்கான்...அம்மா இல்லாத பொண்ணுனு செல்லம் கொடுத்து வளர்த்தது எவ்ளோ பெரிய தப்பா போச்சி...இனி நீ காலேஜுக்கு போக வேணாம் நீ படிச்சி கிழிச்சதெல்லாம் போதும்... "" அப்பா என்னை நம்புங்கப்பா... எனக்கு அவன் யாருன்னே தெரியாதுப்பா... எனக்கு இது கடைசி வருடம்பா நான் படிக்கணும்பா... " கதறினாள் சுமதி!" வீட்டை விட்டு வெளியே போனேனா காலை உடைப்பேன்... "என்று சொல்லி சுமதியை உள்ளே வைத்து அறையை பூட்டினார் ராஜன்!சுமதி காய்ந்த சருகைப் போல் அறையின் மூலையில் சுருண்டு கிடந்தாள்!

சரிந்து விழுந்து அழுத சுமதி அங்கிருந்த அம்மாவின் புகைப்படத்தை பார்த்து....

''அம்மா, நீங்களும்  அப்பாவும் பெரியவர்களை மதித்து நடக்க எனக்கு கற்றுக்கொடுத்தீர்கள்.ஆனால் அப்பாவுக்கு இன்று அவர் வளர்ப்பிலேயே நம்பிக்கை போய்விட்டது,அம்மா. நீங்கள்   உயிருடன் இருந்திருந்தால்  என் மனதை நன்கு அறிந்திருப்பீர்கள் . இந்த உலகில்  தாயில்லா  பிள்ளைகளுக்கு ஆதரவு  தந்தை  தான். அவரே என்னை வெறுத்துவிட்ட பிறகு  எப்படி வாழ்வேன் நான்? திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அதனால் உங்களிடமே வந்துவிடுகிறேன் அம்மா....''

பலவாறு அழுது  புலம்பியபடி கண்ணீர் கண்களை மறைக்க ஒரு நோட்டுப்புத்தகத்தை திறந்து
''அன்புள்ள அப்பாவுக்கு ''என்று
கடிதம் எழுத துவங்கினாள்  சுமதி.

...........

திடீரென்று ....
படபடவென கதவு தட்டும் ஓசை....
திடுக்கிட்டு எழுந்து எழுதிக்கொண்டிருந்த  நோட்டுப்புத்தகத்தை அவசரமாக மறைத்து வைத்து  விட்டு  வேகமாக ஓடிவந்து  கதவை திறந்த ராணியை

''என்னடீ திருட்டுத்தனத்தை  மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா ? அப்பா கிட்ட சொல்லட்டுமா ?''
 மேசையின் அடியில் ஒளித்து வைத்து  இருந்த நோட்டுப்புத்தகத்தை சந்தேகமாக பார்த்துகொண்டே  மிரட்டிய அம்மாவிடம்...

"அம்மா தயவுசெய்து அப்பாகிட்ட சொல்லாதீங்கம்மா ....சிறுகதை போட்டியோட கடைசி நாள்மா இன்னிக்கு. முடிவு  எழுதிட்டேன் அம்மா...பத்து நிமிஷத்துல பதிவு பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சிடுறேன் அம்மா.இனி எல்லா  பரீட்ஷையும்  முடிந்த பிறகுதான் அடுத்த கதை எழுதுவேன் அம்மா. என்னை நம்புங்கம்மா ....'' கெஞ்சி கொண்டிருந்தாள் ராணி.

Sunday, February 26, 2017

உரிமையை இழக்கும் போது.....

"ராம் ...எங்கம்மாக்கு  உடம்பு சரியில்ல..நான் அம்மா வீட்டுக்கு போய் ஒரு வாரம் தங்கி அவங்களை கவனிக்கனும் ராம்... குழந்தைகளை ...  நீங்க பாத்துக்கறீங்களா ?"

ஷோபனாவின் கெஞ்சும்  குரல் கணவன் ராமிற்கு எரிச்சல் ஊட்டினாலும்,

"சாரி டார்லிங்,  எனக்கு  முக்கியமாக முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்குடா  செல்லம்.... சாரி டா... குழந்தைகளையும் கூட்டிட்டு போயேன் ப்ளீஸ்
எங்கம்மாவாலயும்  நம்ப வாலு பிள்ளைகளை சமாளிக்க முடியாதுடா... செல்லம்..".
கொஞ்சுவது போல பேசினான்.

"ஓகே ராம்.... குழந்தைகளை ஸ்கூல் லீவு போட வைக்க வேண்டாம்...நான் என் அம்மாவை இங்கயே வரச்சொல்லவா?" அரைகுறை மனதுடன் சரி என்றான் ராம்.

இவளுடைய சொந்த பெற்றோரை அழைக்க அவளுக்கே உரிமையின்றி என்னுடைய அனுமதி  தேவைப்படுகிறது என்ற எண்ணம்  மனதில்  சிறிது மகிழ்ச்சியளித்தது .

மாமியார் விஜயம் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை சூசகமாக அவ்வப்போது  அவளுக்குக்  காண்பிக்கவே செய்தான்... மாமியார் கிளம்பும் வரை.

சில மாதங்களுக்கு பிறகு.... வெளிநாட்டுக்கு  வேலை மாற்றலாகிவிட,
குதூகலமாய் தன் பெற்றோர் மற்றும் ஷோபனாவின் பெற்றோர்
ஏக்கத்துடன் விடை கொடுக்க, குடும்பத்துடன் வெளிநாட்டில் காலடி வைத்தான் ராம்.

முதல் சில மாதங்கள் ஆச்சர்யத்தில் நொடிகள் போல பறக்க சீக்கிரமே பெற்றோர்  மற்றும் உறவினரை சந்திக்க ஏங்கினான் ராம்.

அதற்கான வழிமுறைகளை தேடி அலைந்தபோதுதான் தெரிந்தது
நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே தன் சொந்தங்களை அழைக்கமுடியும் என்பதை...
அவனுக்கு தன பெற்றோரை அழைக்கக்கூட அங்கு உரிமையில்லை என்பதை
அறிந்த போது திகைத்து நின்றான் ராம்.

Saturday, February 18, 2017

மாற்றமேயில்லாத மாற்றங்கள்!

கீதா என் அன்பு குட்டி சகோதரி...பட்டணத்து  மாப்பிள்ளைக்கு மணமுடித்து போனவள். நானும் வெளிமாநிலத்தில் வேலைகிடைத்து திருமணம் குழந்தைகள் என குடும்பஸ்தனாகிவிட்டேன்.

இதோ அப்பாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு மீண்டும் பிறந்த ஊரில் சந்திக்கப்போகிறோம்.ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டேன் நான்.
என் பால்ய சிநேகிதர்களிடம் உரையாடி மகிழ்ந்துவிட்டு என் மகனுடன் எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் சற்று விளையாடியபோது,நானும் என் குட்டி தங்கையும் அடித்த கொட்டங்கள் மனதில் எட்டி பார்த்தன.

பூவரசன் இலை பறித்து அவள் நாதஸ்வரம் வாசிக்க...பழைய பிளாஸ்டிக் வாளியில் நான் தவிலடித்தது, தோட்டத்தில்  பாத்திக்கட்டி நீரூற்றி செடி வளர்த்தது, கிணற்றில் போட்டுவிட்ட வாளியை எடுக்க பாதாள கொலுசு போட்டு இரவு வரை தேடியது..
கீழே விழும் தேங்காய் குரும்பிகளை சேகரித்து வைத்தது....  .நினைக்கவே சிரிப்பும் ஏக்கமுமாக இருந்தது.

என் தங்கையை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

வாசலில் "குட்டிம்மா வந்தாச்சு"அப்பாவின் குரல் ஒலிக்க ஆவலாய் ஓடினேன் மகனை தூக்கிக்கொண்டு...

கையில் இருந்த தன் குழந்தையை அம்மாவிடம் கொடுத்தவாறே
"அம்மா அவருக்கு ரொம்ப பசி ஏதாவது சாப்பிட இருக்கா?"
அவசரமாக சமையலறை ஓடிய குட்டிம்மாவை தொடர்ந்து ஓடினாள் அம்மா.

"வாங்க மாப்பிள்ளை சௌக்கியமா?"  விசாரித்துக்கொண்டே மின்விசிறியை அதிகப்படுத்தின அப்பா....
"மோகன் மாப்பிள்ளைக்கு வாழை இலை அறுத்துவா " என்றவுடன்
கொல்லைப்புறம்  ஓடியவனுக்கு....
"அண்ணி , அவருக்கு உப்புமா பிடிக்காது அண்ணி  நான் இட்லி வைக்கிறேன் சாம்பார் இருக்கா? இல்லைனா கொஞ்சம் சட்னி அரைக்கவா?"
சமையலறையில் தங்கையின் வார்த்தைகள் தெளிவாக கேட்டு
மேலும் பரபரப்பை மனதில் ஏற்படுத்த வேகமாக வாழையிலை அறுக்கும்போது... அருகிலிருந்த பூவரச மரம்  என்னை கேலியாக பார்ப்பதுபோல் தோன்றியது.

விலகும் மேகங்கள்!

மேக மூட்டமாய் வானம். இருள் சூழ்ந்த இரவு. மனதில் பாரம் பாறையாய் அழுத்த, கால்கள் தன்னிச்சையாய் கடல் மண்ணில் நடந்தது. சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் எதுவுமே கண்களில் பதியாமல் கண்ணீர்   பெருகி வழிந்தது.

மூன்று மாதமாக மனைவியை இழந்த தனிமை. அலுவலகத்தில் கவனம் சிதறுவதால்  வேலையை தொடரமுடியவில்லை. துன்பத்தை பகிர்ந்துகொள்ள முப்பது  வருட திருமண வாழ்வில்  ஒரு குழந்தை  கூட பிறக்காததை  நினைத்ததும்   இன்னும் சுயபச்சாதாபம் கூடியது.

இனி எனக்கென்று யாருமில்லை இங்கே. இவ்வுலகில் எதற்காக நான் வாழவேண்டும். என் முடிவு  இதோ இன்று இந்த கடலில் என்று திண்ணமாக்கி கொண்டு, கண்களை இறுக மூடி கடைசி மூச்சு காற்றை சுவாசித்துவிட்டு.... 

கடலில் மூழ்கிய  தருணம்...

எங்கிருந்து வந்தனர் இத்துனைபேரும்?

என்னை காப்பாற்றி கரைசேர்த்தனர் மீனவர்கள்,

முதியவர் ஒருவர் என்னிடம் வந்தார். என் தலையை கோதி விட்டு பேசினார்...

"உங்க பிரச்சன இன்னானு கேக்கல ஆனா..ஒன்னு சொல்றன்... 
சுனாமில என் குடும்பமே அடிச்சிக்கினு பூடுச்சு அதிலே இங்க இருக்கவங்க நிறைய பேருக்கு சொந்த பந்தங்களே இப்ப கெடையாது... பெத்தவங்க இல்லாம அனாதையான கொயந்தைங்களை நான் வளக்கறன்..
அவங்களுக்காக இதே கடலை கும்பிட்டு மறுபடியும் மீன்புடிக்கிறேன்..
சோதனைனு வந்தா... சாவுதான் முடிவுன்னா இந்த ஒலகம் பூராவும்  பொணம்தான் இருக்கும்..."

முதியவர் பேசிக்கொண்டிருக்க, இந்த உலகம் நமக்கு என்ன செய்தது என்று ஏங்குவதை விட்டு.. இந்த உலகத்திற்கு நாம் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களால்   இங்கு  வாழ்வதற்கான அர்த்தங்களை தானே உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது தெளிவாக புரிய ஆரம்பித்தது.

முதியவருக்கு நன்றி கூறி வணங்கி புறப்பட்டபோது என் மனதை போலவே வானத்திலும் மேகங்கள் விலகி முழு நிலவு ஒளிவீசி கொண்டிருந்தது.

ஒரு அழகிய தீபகற்பத்தில் அதிசய குட்டித்தீவுகள்

"எங்க கிளம்பறோம் மம்மி?"

சூட்கேசுகளில் புதுத்துணிகளை திணித்துக்கொண்டிருந்த அம்மாவிடம் ஆவலும் மகிழ்ச்சியும் பொங்க கேட்ட ஸ்னிக்தாவுக்கு "ஊருக்கு..."

அம்மாவின் குரலில் இருந்த கடுமை புதுத்துணிகளின் வாசனையை மீறி ஒரு தயக்கத்தை ஏற்படுத்தி,  மனதில் எழுந்த ஆர்வத்தையும் குறைத்துவிட ஹாலுக்கு சென்று கம்ப்யூட்டரை ஆன் செய்து தன் ஆஸ்திரேலிய தோழியுடன் ஆன்லைன் கேம்ஸ் விளையாட ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில்...

"யார்கூட விளையாடற?" அம்மாவின் குரலுக்கு,

"மென்டி கூட" பயத்துடன் பேசிய ஸ்னிக்தாவின் தலையை தடவிய அம்மா

"ஓ ஒருவாரமா மோனிகா கூட விளையாடி போர் அடிக்குதுன்னு சொன்ன, இப்ப மென்டி மறுபடி வந்துட்டாளா? ஜாலி தான் உனக்கு" என்றதும் உற்சாகம் ஆனாள் ஸ்னிக்தா.

"பால் சாப்பிட்டு தூங்கு".

"ஓகே மம்மி"

அதிகாலையில் எழுந்து அரைதூக்கத்துடன் தாய்தந்தைக்கு நடுவே அமர்ந்து ரயில் பயணம் செய்வது சுகமாக இருந்தது.

நடுநடுவே பலகாரங்கள், அம்மா எடுத்துவந்திருந்த ஸ்னிக்தாவிற்கு மிகவும் பிடித்த ஆங்கில காமிக்ஸ் என வழக்கத்திற்கு மாறாக மிக மகிழ்ச்சியான தினமாக கழிந்தது.

ரயிலில் இருந்து இறங்கி 20 நிமிட ரிக்க்ஷா  பயணத்தில் அந்த இடம் முற்றிலும் புதியதாக ஒரே கூட்டமாகவும், சத்தமாக பேசியபடியும், ஸ்னிக்தாவிற்கு துளிக்கூட பிடிக்காமல் பயமாகவும் இருந்ததால் அம்மாவின் கைகளை கெட்டியாக பிடித்தாள்.

"எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஸ்னிக்தா குட்டி.... நல்லா வளந்துட்டா..." இரண்டு கைகள் அவளை அணைக்க முயல பயத்தில் அலறிவிட்டாள்.

"எல்லாரும் நல்லா இருக்கோம் அக்கா.  ட்ரெயினில் வந்த டயாடு... தூக்கம் வேற இல்லையா அதான் அக்கா அவ அழறா" மெதுவாக ஸ்னிக்தாவின் மீதிருந்த அக்காவின் கையை விலக்கியவாறே ஸ்னிக்தாவின் அப்பா சொன்னார்.

"சரி சரி சாப்பிட வாங்க..." என்ற அக்காவை, "மாமா, தீப்தா எல்லாரும் நல்லா இருக்காங்களா அக்கா?" என்றபடி பின்தொடர்ந்தார் ஸ்னிக்தாவின் அப்பா.

"ம்... எல்லாரும் நல்லா இருக்கோம்...  இன்னைக்கு தீப்தாவுக்கு பரதநாட்டிய ரிகர்சல் இருக்கு, அடுத்த மாசம் டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கே. அதனாலே நாளைக்கு முகூர்த்ததுக்கு வருவாங்க. நீங்க உள்ள போய் சாப்பிடுங்க..." என்று வரவேற்பறையை  நோக்கி நகர்ந்தாள்  அக்கா.

மகன் தினேஷின் வாயை கைக்குட்டையால் துடைத்தவாறு "மாடிக்கு போய் நம்ம ரூமில் ப்லேஸ்டேஷன் விளையாடிக்கோ" என்றபடி தன் மகன் தினேஷ் மாடிக்குச்சென்று கதவை மூடிக்கொள்வதை கண்காணித்தபடியே....  "வா திவாகர், வாம்மா திலகா, ஸ்னிக்தா நல்லா இருக்கீங்களா? என்ற பிரபாகர் "மாடில உங்களுக்கு ரெண்டாவது ரூம் ஒதுக்கி இருக்கு. திங்க்ஸ் எல்லாம் வச்சிட்டு சாப்பிட வாங்க" என்றார்...

"நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் அண்ணா. நீங்க, அண்ணி,தினேஷ் எல்லாம் நல்லா இருக்கீங்களா?" என்று விசாரித்துவிட்டு  ஸ்னிக்தாவையும், திலகாவையும் அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்றான் திவாகர்.

மாடியில்... "ஸ்னிக்தா அம்மாவுக்கும், அப்பாக்கும் இங்க நிறைய வேலை இருக்கு, உனக்கு பிடிச்ச காமிக்ஸும் வச்சிருக்கேன், உன்னோட லேப்டாப்பையும் வச்சி விளையாடிக்கலாம் ரூமைவிட்டு வெளியேவராதே அப்பப்போ நான் வந்து பாத்துக்குறேன்." அம்மா சொன்னது நிம்மதியாக இருந்தது ஸ்னிக்தாவிற்கு.

புது இடம், புது ட்ரெஸ், அவ்வப்போது லட்டு, தேங்காய் பர்பி, வாய்க்கு ருசியான சாப்பாடு என எல்லாம் ரூமுக்கே வர மிக சந்தோஷமான நாளாக உணர்ந்தாள்  ஸ்னிக்தா.

"பிரமாதம் அருமையான சாப்பாடு,அண்ணன்,தம்பி,அக்கா என எல்லாரும் ஒத்துமையோடு பொறுப்பாக தாய் தந்தையின் அறுவதாம் கல்யாணத்தை சீறும் சிறப்புமாக நடத்தினீர்கள். வந்தவர்களை எல்லாம்  நன்றாக உபசரித்தீர்கள். நம் நாட்டில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறது, வெளிநாடுகளில் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அத்தை, சித்தப்பா என்ற பந்தம், பாசம், உறவு முறைகளில் இருக்கும் அன்யோன்யம்  நம்ம அளவுக்கு வலுவனாது கிடையாது...." என்று அந்த ஊரை சேர்ந்த ஒரு பெரியவர், ரயில்வே ஸ்டேஷனில் ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த  திவாகரின் கையை பிடித்துக்கொண்டு சத்தமாக பேசி கொண்டிருக்க, எதுவுமே புரியாமல் தாயின் கைகளை அழுந்த பிடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்  ஸ்னிக்தா.

பட்ஜட் (Budget)

"சீதாராமன் சார் உங்கள MD கூப்படறார்..."

பியூனின் குரல் வயிற்றில் புளியை கரைக்க, அந்த ஏசி அறையிலும் வியர்த்து கொட்டியது சீதாராமனுக்கு...

சென்ற வாரம் MD-க்கு தெரியாமல் கடனாக வட்டிக்கு கொடுத்த அலுவலக பணம் இன்னும் திரும்ப கிடைக்காததால்...

"வாங்க சீதாராமன் உட்காருங்க, இந்த மாசம் அக்கவுண்டஸ்  டேலி ஆகிவிட்டதா?", MD கேட்க...

"சார்.... வந்து..... ஒரு 15 ஆயிரம்... "என்று சீதாராமன்  முடிப்பதற்குள்...

"என் பர்த்டே பார்ட்டி செலவுகளையும் இதிலே சேத்திடுங்க..."என்ற

MD-இன் வார்த்தைகளால் தான் வட்டிக்கு கொடுத்த பணத்தையும் பர்த்டே செலவுகளில் சேர்த்து விடலாம் என்று மகிழ்ச்சியோடு இருக்கைக்கு திரும்பினார் சீதாராமன்.

வீட்டில்...

"பெரிய கம்பெணில அக்கவுண்டன்டோட பொண்ணுன்னு பேரு... என் பர்த்டேக்கு 300 ரூபாய்ல ஒரு சுடிதார் கூட கிடையாது... ",

அலுத்து கொண்ட சீதாராமனின் மகளை தலையை தடவி கொடுத்து...

"வாங்கிக்கோம்மா ... உங்க அப்பா என்னிடம் கணக்கு கேட்டா... இந்த மாசம் பாட்டி திதி வந்தது இல்ல,... அந்த கணக்குல இத சேத்துடறன்"' என்றாள் சீதாராமனின் மனைவி...