Monday, April 17, 2017

பாசம் எனும் வேலி!




"எனக்கு அவன் யாருன்னே தெரியாது என்னை நம்புங்கப்பா... " என்று அழுதாள் சுமதி!
" யாருன்னே தெரியாமலா பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி உன்னை லவ் பண்றேன்னு சொல்லிருக்கான்...அம்மா இல்லாத பொண்ணுனு செல்லம் கொடுத்து வளர்த்தது எவ்ளோ பெரிய தப்பா போச்சி...இனி நீ காலேஜுக்கு போக வேணாம் நீ படிச்சி கிழிச்சதெல்லாம் போதும்... "" அப்பா என்னை நம்புங்கப்பா... எனக்கு அவன் யாருன்னே தெரியாதுப்பா... எனக்கு இது கடைசி வருடம்பா நான் படிக்கணும்பா... " கதறினாள் சுமதி!" வீட்டை விட்டு வெளியே போனேனா காலை உடைப்பேன்... "என்று சொல்லி சுமதியை உள்ளே வைத்து அறையை பூட்டினார் ராஜன்!சுமதி காய்ந்த சருகைப் போல் அறையின் மூலையில் சுருண்டு கிடந்தாள்!

சரிந்து விழுந்து அழுத சுமதி அங்கிருந்த அம்மாவின் புகைப்படத்தை பார்த்து....

''அம்மா, நீங்களும்  அப்பாவும் பெரியவர்களை மதித்து நடக்க எனக்கு கற்றுக்கொடுத்தீர்கள்.ஆனால் அப்பாவுக்கு இன்று அவர் வளர்ப்பிலேயே நம்பிக்கை போய்விட்டது,அம்மா. நீங்கள்   உயிருடன் இருந்திருந்தால்  என் மனதை நன்கு அறிந்திருப்பீர்கள் . இந்த உலகில்  தாயில்லா  பிள்ளைகளுக்கு ஆதரவு  தந்தை  தான். அவரே என்னை வெறுத்துவிட்ட பிறகு  எப்படி வாழ்வேன் நான்? திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அதனால் உங்களிடமே வந்துவிடுகிறேன் அம்மா....''

பலவாறு அழுது  புலம்பியபடி கண்ணீர் கண்களை மறைக்க ஒரு நோட்டுப்புத்தகத்தை திறந்து
''அன்புள்ள அப்பாவுக்கு ''என்று
கடிதம் எழுத துவங்கினாள்  சுமதி.

...........

திடீரென்று ....
படபடவென கதவு தட்டும் ஓசை....
திடுக்கிட்டு எழுந்து எழுதிக்கொண்டிருந்த  நோட்டுப்புத்தகத்தை அவசரமாக மறைத்து வைத்து  விட்டு  வேகமாக ஓடிவந்து  கதவை திறந்த ராணியை

''என்னடீ திருட்டுத்தனத்தை  மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா ? அப்பா கிட்ட சொல்லட்டுமா ?''
 மேசையின் அடியில் ஒளித்து வைத்து  இருந்த நோட்டுப்புத்தகத்தை சந்தேகமாக பார்த்துகொண்டே  மிரட்டிய அம்மாவிடம்...

"அம்மா தயவுசெய்து அப்பாகிட்ட சொல்லாதீங்கம்மா ....சிறுகதை போட்டியோட கடைசி நாள்மா இன்னிக்கு. முடிவு  எழுதிட்டேன் அம்மா...பத்து நிமிஷத்துல பதிவு பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சிடுறேன் அம்மா.இனி எல்லா  பரீட்ஷையும்  முடிந்த பிறகுதான் அடுத்த கதை எழுதுவேன் அம்மா. என்னை நம்புங்கம்மா ....'' கெஞ்சி கொண்டிருந்தாள் ராணி.

No comments:

Post a Comment