தன் பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு கல்வியே சிறந்த மூலதனம் என்று நினைக்கும் நடுத்தரவர்க்க குடும்ப தந்தை தன் சக்திக்கு மீறி மகன்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறார்.இந்த யதார்த்தமான மனநிலையை விவரிக்கும் கதை.
மக்குப் பய
இரவு திடீரென்று வந்த கனவால் தூக்கம் போய்விட்டது.என் கனவில் வந்த என் அப்பா கோபமாக சொன்ன வார்த்தை என்னை தூங்கவிடாமல் தடுத்தது.ஏசியை ஆஃப் பண்ணிட்டு புரண்டு புரண்டு படுத்தேன்.இத்தனை வருடங்களில் இப்படி ஒரு கனவு வந்ததே இல்லை.என் அப்பாவின் வாயில் இப்படி ஒரு வார்த்தை.அதுவும் என்னைப் பார்த்து ஏன் அப்படி சொன்னார்.நான் எந்த தப்புமே பண்ணலயே.
பக்கத்தில் என் மனைவி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.படுத்தால் மீண்டும் கனவில் அப்பா வந்துடுவாரோ என்ற பயத்தில் மெதுவாக எழுந்து பூனைபோல் நடந்து ஹாலுக்கு வந்தேன்.
அந்த நீளமான ஹாலில் குறுக்குமறுக்குமாக நடந்தேன்.
இன்று காலை கிராமத்தில் இருந்த என் பள்ளியின் அலுமினி மீட்டுக்குப் போய் வந்தது ஞாபகம் வந்தது.மலரும் நினைவுகளால் என் மனப்பதட்டம் சற்று குறைத்தது.
அந்த பள்ளியில் ஒண்ணாம் வகுப்பில் சேர்ந்தேன்.நான் படித்த காலத்தில் LKG UKG எதுவும் கிடையாது.
நேராக ஒண்ணாங்கிளாஸ்தான்.
அது கூட பள்ளியில் சேர்வதற்கு பிறப்பு சான்றிதழ் தேவைப்படாத காலம் என்றால் இப்போது நம்பவே முடியாது.
ஆமாம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது அந்த சமயம் அப்பாவுக்கு உட்கார அங்கே சேர் கூட இல்லை.
அதனால் மாணவர் சேர்க்கையின் போது தலைமை ஆசிரியர் அறையில் அவர் எதிரில் நானும் என் அப்பாவும் நின்று கொண்டிருந்தோம்.
நான் மிகவும் ஒல்லியாக உயரம் குறைந்தவனாக இருப்பேன்.தலைமை ஆசிரியர் எனக்கு ஐந்து வயது முடிந்ததை ஊர்ஜிதம் செய்ய என் வலது கையை மேலே உயர்த்த சொன்னார்.பிறகு தலையை நேராக வைத்து தலைக்கு மேலே வலது கையை வளைத்து இடது காதை தொடவேண்டும்.நான் தொட்டேன்.
உடனே என்னைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள்.
அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.ஏனென்றால் என் அப்பா எனக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு நல்லா படிக்கிற பசங்க பக்கத்துல உட்காரனும் மக்கு பயலுங்க சவகாசம் வேண்டாம் என்று என் காதில் ஓதிய தினம் அது.
அப்போதுதான் ஒரு வித்தியாசத்தை பார்த்தேன்.நிறைய பிள்ளைகள் அன்று புதிதாக சேர்ந்திருந்தார்கள்.
அனேகமாக அப்பாக்கள் மட்டுமே அதிகம் இருந்தார்கள்.சிலருக்கு தாத்தாக்கள் வந்திருந்தார்கள்.
ஆனால்,ஒன்றிரண்டு அம்மாக்கள் இருந்தார்கள்.
ஆனால் என் அப்பாவைப் போல யாருமே இல்லை.ஆமாம். என் அப்பாவிற்கு மட்டுமே தலைமுடி முழுக்க வெள்ளை வெளேர் என்று இருந்தது.
மற்ற அப்பாக்கள் ஏன் தலைமை ஆசிரியிருக்கு கூட தலைமுடி கருப்பாக இருந்தது.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சில விஷயங்கள் புரிந்தது அவற்றில் முதன்மையானது என் அப்பா மிகவும் வயதானவர் என்று.என் அம்மாவும்தான்.
தாத்தா சொல்வார் அப்பாவிற்கு செவ்வாய் இருந்ததாம் வரனே கிடைக்கவில்லை.அம்மாவிற்கும் செவ்வாய் தோஷத்தால் கல்யாணம் தாமதமாகிவிட்டதாம்.
ஆனாலும் என் அப்பா பியூசி படித்திருந்தார்.அரசாங்க வேலை.பொறுப்பாக பணத்தை சேர்த்து வீடு வாங்கினார் சுற்றிலும் தோட்டம் போட்டார்.என் அம்மாவும் எட்டாம் வகுப்பு படித்து டீச்சர் ட்ரெயினிங் முடித்திருந்ததால்
நானும் என் தங்கையும் சொந்த வீடு சொந்த நிலம் தந்த சொகுசில் வசதியாக வாழ முடிந்தது.
நான் பள்ளி இறுதி வகுப்பு முடிப்பதற்குள் அப்பா ரிடையர்ட் ஆகிவிட்டார்.அம்மா மட்டும் டீச்சர் வேலையில் இருந்தார்.என் அப்பா வீட்டில் எதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்.தோட்டத்தில் செடிகளை
பராமரிப்பது.வயல்வெளி வேலை.மாடுகள் பராமரிப்பு இப்படி அவர் உழைப்பை பார்த்து எனக்கு உடம்பே நடுங்கும்.
நான் அப்பா அளவு வலிமையான உடல் கொண்டவனல்ல பூஞ்சையாக இருப்பேன்.என் தங்கை கூட ஓரளவு என்னைவிட பரவாயில்லை ரகம் தான்.எங்கள் உறவில் யாராவது உருப்படியாக எதையும் செய்யாமல் வீண் பேச்சு பேசிக் கொண்டிருந்தால் “மக்குப் பய” என்று பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டே சொல்வார்.இந்த வார்த்தையை கேட்கும் போதே எனக்கு உடம்பெல்லாம் நடுங்கும்.
ஆனால் நாங்கள் ரெண்டு பேருமே படிப்பில் நம்பர் ஒன்.அதனால் அப்பாவிற்கு ஒரு நிம்மதி.நம் குழந்தைகள் பிழைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.அதற்கு தகுந்தார்போல பள்ளியில் எட்டாம் வகுப்பில் நடந்த ஸ்காலர்ஷிப் எக்ஸாமில் நானும் என் தங்கையும் டிஸ்ட்ரிக்ட்டிலேயே முதல் மாணவர்களாக வந்து.ப்லஸ்டூ வரை பாடப் புத்தகங்களை இலவசமாக பெற்றதோடு கொஞ்சம் பணமும் பரிசாக கிடைத்ததில் அப்பா புளகாங்கிதம் அடைந்தார்.”இப்படிதான் நாம பொழைச்சிக்க நல்ல வழிய தேடனும்” என்று புன்னகையோடு அவர் சொல்லும்போது எங்களுக்கு பெருமிதமாக இருக்கும்.
ப்லஸ்டுவில் பாலிடெக்னிக் சேர்ந்தேன்.அதற்காக ஹாஸ்டலில் தங்க வேண்டியிருந்தது.
அப்பா சொன்னார்.
நீ புத்திசாலிபையன்.உழைப்பாளி.ஆனால், அங்க போய் நேரத்தோட மதிப்பும் பணத்தோட மதிப்பும் தெரியாத மக்கு பசங்க கூட சேராதடா என்று சொன்னார்.
பாலிடெக்னிக் முடிந்ததுமே எனக்கு நல்ல வேலை கிடைத்தது.
அப்பா உடல்நலம் இல்லாமல் இருந்தார் .ஆனாலும் வீட்டை தன் கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தார்.
தங்கை பிஎஸ்ஸி அக்ரி கல்சர் படித்தாள்.அவளுக்கு மேற்கொண்டு படிக்க ஆசை ஆனால் திருமணம் முடித்து வைத்துவிட்டார் அப்பா.
எனக்கும் அடுத்து வருடமே திருமணம் முடிந்தது.அம்மாவை கிராமத்தில் விட்டு விட்டு மனைவியுடன் பட்டணப்ரவேசம் வந்தேன்.
பட்டணத்தின் சுறுசுறுப்பும் ட்ரெயினில் கூட்டம் கூட்டமாக வேலைக்கு போகும் மனிதர்களைப் பார்த்ததும் அட்டா அப்பாவை அழைத்து வந்து இவர்களைக் காட்டியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரே என்று தோன்றியது.
படித்த என் மனைவிக்கும் வேலை கிடைத்தது.உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டோம்.
பணத்தின் மதிப்பை அறிந்தவன் அதனால் சிக்கனமாக செலவு செய்து கடன் பட்டு வீடு வாங்கி கிரகப்ரவேசம் செய்த அடுத்து மாதமே அம்மா இறந்துவிட்டார்.
என் இரண்டு மகன்களையும் கான்வென்டில் படிக்க வைத்து வீட்டு லோனை அடைக்க வேண்டிய நிலையால் இருவரும் வேலைக்குப் போனாலும் மாசக் கடைசியில் கையில் பணம் நிற்கவில்லை.
எப்படியோ போராடி வீட்டுக் கடனை முடிக்கும் போது பெரிய மகன் கல்லூரி முதலாம் ஆண்டில் இருந்தான்.
இரண்டாவது மகன் பள்ளி இறுதி வகுப்பில் இருந்தான்.மனைவி உடல்நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தாள்.
சேமிக்கலாம் என்று வரும்போது செலவுகள் வானுயர இருந்தன.
அப்பா கிராமத்தில் வைத்திருந்த வீட்டையும் நிலத்தையும் விற்று தங்கைக்கு பாதி கொடுத்துவிட்டு
என் பங்கு பணத்தில் கொஞ்சம் எடுத்து என் மனைவிக்கு மருத்தும் பார்த்து அவளைக் காப்பாற்றினேன்.
மீதித்தோகையை வங்கியில் போட்டு வைத்தேன்.
அப்பாடா என்று மனம் நிம்மதியாக இருந்தது.அந்த சமயத்தில் நன்றாக படிக்கும் என் மூத்த மகன் மாஸ்டர்ஸ் படிப்பு வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றான்.அந்தக் கல்லூரியில் படிப்பது அவன் எதிர்காலத்திற்கு நல்லது மட்டுமல்ல எனக்கும் ரொம்ப பெருமைக்குரிய விஷயம்.
அதுமட்டுமல்ல அவன் பகுதிநேர வேலை செய்துகொண்டே படிப்பதாக சொன்னான்.ஆனால் என் மகனே சமைத்து சாப்பிட்டு பகுதிநேர வேலையும் செய்து கொண்டே படித்து அவன் கஷ்டபடுவதை என் மனம் ஏற்கவில்லை.என் அப்பா என்னை அப்படி வளர்க்கவில்லையே.
அதனால் அவனுக்கு எஜுகேஷன் லோன் போட்டுவிட்டு தங்குமிடம் சாப்பாடு செலவுக்காக முன்பு என் என் அப்பாவின் உழைப்பால் வாங்கிய சொத்துக்களை விற்றுக் கிடைத்த அந்தப் பணத்தை வங்கியில் வைத்திருந்தேன் இல்லையா அதனை வழித்து வாரி அவனுக்கு அனுப்பிவிட்டேன்.அவனுக்கு தாத்தாவின் ஆசிர்வாதம் கிடைத்தமாதிரியும் இருக்குமே.
அதுமட்டுமல்ல,இப்போது மிக நன்றாகப் படிக்கும் என் இரண்டாவது மகனுக்கும் பேச்சிலர்ஸ் டிகிரிக்கே அதே வெளிநாட்டு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது.எல்லாம் கொடுப்பினை. குழந்தைங்க பொழைச்சிக்க படிப்பு ரொம்ப முக்கியமாச்சே.
நான் துளியும் தயங்காம அவனுக்கும் எஜுகேஷன் லோன் போட்டுவிட்டு மேற்கொண்டு தங்குமிடம் சாப்பாட்டு செலவுக்கு இதோ என் சொந்த உழைப்பால் கிடைத்த இந்த பட்டணத்து வீட்டைத்தான் அடமானம் வைக்க கச்சிதமா திட்டம் போட்டு வச்சிருக்கேன்.என்னை படிக்க வைத்த அப்பா மற்றும் என்னுடைய ஆசிர்வாதமும் இதில் அடங்கியிருக்கிறதே. இதுக்காகத் தான் நாளைக்குக் காலைல பேங்குக்குப் போகனும்.
இதையெல்லாம் என் அப்பா உயிரோடு இருந்து பார்க்கவில்லையேனு இராத்திரி முழுக்க ஏங்கிக் தவிச்சிட்டு தூக்கம் வராம ரொம்ப நேரம் நான் புரண்டுகிட்டே இருந்தேன்.அப்புறம் எப்போ தூங்கினேனு எனக்கே தெரியாது.
ஆனா,இது எதுவுமே தெரியாம, என்னிக்குமே என் கனவில் வராத என் மதிப்பிற்குரிய அப்பா ஏனோ சரியா இன்னிக்கு வந்தார்.
என் பொறுப்பான நடவடிக்கைகளை பாராட்டலேனா கூட பரவால்ல என்னை கோவமா பாத்து “மக்குப் பய” அப்படினு பல்லைக் நறநறனு கடிச்சிட்டே திட்றாரே இதுக்கு காரணம் என்னவா இருக்கும்?
உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?
No comments:
Post a Comment