Friday, April 3, 2026

மிகச்சரியான நேரம்



“மிகச்சரியான நேரம்…”


ICU வாசலில்  சுரேஷ் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்பா இல்ல.அம்மா மட்டும்தான். எண்ணெய் வைத்து படிய வாரிய தலை.நெற்றியில் விபூதிக்கு நடுவே இருந்த குங்கும்ம் கரைந்து கொண்டிருந்தது.அயர்ன் செய்த சட்டை பேண்ட் அணிந்திருந்தான். அவன் ஒரு சர்விஸ் என்ஜினியர்.அவன் தோளில் தொங்கிய பேகில் Tool kit.Multimeter எல்லாமே வைத்திருந்தான்.அலுவலகத்திற்கு கிளம்பிய நிலையில் அப்படியே ஆஸ்பத்திரிக்கு ஓடி  வந்திருக்கிறான். அங்கே அந்த ரிசப்ஷனில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவன் உட்கார்ந்திருந்தான்.கையில்  ஒரு medical file.இதயம் பாசம் என்னும் நூலால்  இழுக்கப்பட்டு அவன் கண்கள் ICU பக்கம் அடிக்கடி போய்க் கொண்டிருந்தன.


அவனுக்குள் பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அம்மாவுக்கு அடுத்த மாதம் தான் ஆபரேஷன் செய்யவேண்டும் என்று இந்த ஆஸ்பத்திரியில்  தேதி கொடுத்திருந்தார்கள்.

ஆனால்,அவன் இன்று காலையில் வீட்டை விட்டு அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் அந்த நேரத்தில் திடீரென்று  மயங்கி விழுந்தஅம்மாவை ஆஸ்பத்திரிக்கு டாக்ஸியில் அவசரமாக அழைத்து வந்தான்.சோதித்த டாக்டர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்துவிட முடிவெடுத்தார்கள்.

இன்னும் சற்று நேரத்தில் அவன் அம்மாவுக்கு  Open heart surgery நடக்கப்போகிறது.அதனால் ICU வில் அம்மா அனுமதிக்கப்பட்டிருந்தார். Ventilator.Monitor. Life support என்று அம்மாவின் நிலையைப் பார்த்து கலங்கியிருந்தான் சுரேஷ்.அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று தவித்துக் கொண்டிருந்தான்.ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்து சேர்த்ததிலிருந்து அவன்  அடுத்து என்ன என்ற  பதட்டத்தால்  அந்த ஏசி போடப்பட்ட ஹாலில் கூட  வியர்வை பொங்க  உட்காரந்திருந்தான்.


அன்றைக்கும்  வழக்கம்போலவே அந்த ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகம்தான்.யாரோ சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

“குழந்தை நல்லபடியாக சுகப்ரசவத்தில் பிறந்துவிட்டது.இரண்டாவது முறையும் பெண் தான் பிறந்திருக்கு.

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனையும் இப்பவே பண்ணிட சொல்லிட்டேன்.முதல் பெண் குழந்தைக்கு  இன்னும் பத்து நாள்ள பொறந்த நாள் வருது.இந்த குழந்தைக்கு பெயர் வைக்கிற ஃபங்கஷனும் முதல் பெண்ணோட நாலாவது பிறந்த நாளையும் சேத்தே வைக்காலம்னு அவளும் சொல்றா..ரெண்டு மகள்களையும் ஒண்ணாவே கொண்டாடிடலாம்னு  நானும் நினைக்கிறேன் “ என்று உறவினர்களிடம்  சத்தமாக சொல்லிக்கொண்டிருந்த குரல் கேட்டது. ஒருவேளை அது குழந்தையின் அப்பாவாக இருக்காலம்.

அங்கு யாரோ  ஒருவர் “அதுக்குள்ள முதல் குழந்தைக்கு நாலு  வயசு ஆகிடிச்சா? இப்பதான் இதே ஆஸ்பத்திரி ல அவ பொறந்தப்ப நாங்க வந்து பாத்த மாதிரி இருக்கு” என்று ஆச்சரியப்பட்டு பேசினார்.

“நம்ம மோகன் பய பத்தாவது படிக்கும்போது தானே அவ பொறந்தா. அப்போ  92வது வருஷம்.இப்போ 96 ஆகிடிச்சே.வருஷம் வேகமா ஓடுது” இப்படி அவர்கள் பேசிக்கொண்டே பிரசவ வார்டை நோக்கி நடந்தனர்.


அவர்கள் பேசுவதை கவனித்தாலும் மனம் பதட்டமாகவே இருந்தது சுரேஷ்க்கு. படிப்பை முடித்து service engineer ஆக வேலைக்குச்  சேர்ந்த இந்த நான்கு வருடங்களும்  நிறுவனங்களின்  அவசர அழைப்புகளுக்கு மதிப்பளித்து  உடனடியாக ஓடிச்சென்று  சர்விஸ் செய்வதிலேயே தன்  வாழ்க்கையாக வாழ்பவன் அவன்.

இதற்கு முக்கிய காரணம்  இந்த Pager தான். பேஜர் அவனுடைய  belt-ல இருந்த நாட்கள் கணக்கே இல்லை.அப்போதெல்லாம்.இன்று இருக்கும் மொபைல் போன் வாட்சப் கால் இதெல்லாம் கிடையாது. ஒரு சிலரிடம் மட்டும்  செல்போன்கள் இருந்தன..ஆனால் எல்லோரிடமும் செல்போன் இருக்காது.ஏனென்றால் அது  எக்ஸ்பென்சிவ்.


BEEP… BEEP…னு பேஜர்ல வர்ற 

சத்தம் கேட்ட அடுத்த நொடிலயே

சுரேஷ் உடம்பே react பண்ண ஆரம்பிச்சிடும்.

Heart rate increase ஆகும்.

Mind alert modeக்குப் போகும்.

இரவாக இருந்தா தூக்கம் ஆட்டோமேடிக்கா  off ஆகிடும்.


சில சமயங்களில் பேஜர் பீப் செய்யும்போது  நள்ளிரவு நேரமாகவோ,மழை கொட்டும் பொழுதாகவோ கூட இருக்கும்.இரவில் பெரும்பாலும் ஆஸ்பத்திரிகளுக்கே போயிருக்கிறான்.

Street light மங்கலாக எரியும்.அவன் அதைப்பற்றி கவலையே பட்டதில்லை.தூக்கத்தை துரத்துவான்.யாருக்கோ என் உதவி அவசரத்தேவை என்று மட்டுமே நினைப்பான்.

Multimeter.

Spanner set 

Insulation tape.என்று அவன் மனதிற்குள் லிஸ்ட் ஓடும்.

பிறகு Bike kick start செய்து புறப்பட்டுவிடுவான்.

Tool bag shoulder-ஐ  இறுக்பற்றி இருக்கும்.

Helmet visor-ல் மழைத்துளி தெறிக்க வீதிகளில் பறப்பான்.


அவன் வரவேண்டிய இடத்திற்கு   entry ஆனதும், Security guard அவன் முகத்தைப் பார்த்ததும் ஓடி வந்து gate திறப்பான்.


உள்ளே போனதும் ப்ரச்னையை விவரிப்பார்கள்.


வேகமாக நடந்து போய் Online UPS room. ல் செக் செய்யும்போது

Rectifier ON.

Inverter ON.


ஆனா output unstable ஆக இருக்கும்.


Battery bank-ல் ஒரு cell short.

Internal resistance spike. ஆகி இருக்கும்.


விஷயம் புரிந்ததும் அவன் கைகள்  ஒரு நிமிஷமும் தாமதிக்காது.

பரபவென்று இயங்குவான் அடுத்த சில நிமிடங்களில் 

UPS green light ON ஆனதும் அங்கிருப்பவர்களின் முகத்தில் புன்னகை வரும்.


“Sir… pager மெசேஜ் குடுத்த உடனே சரியான நேரத்துல

நீங்க வந்தீங்களே…ரொம்ப தேங்க்ஸ்” என்று அங்கு பணியில் இருப்பவர்கள் சொல்வார்கள்.

ஆனால்,அவன் இதற்கெல்லாம் பதில் சொல்லமாட்டான்.

ஏனெனில் அவனைப் பொருத்தவரை அவர்கள் சொல்வது சம்பிரதாயமான வார்த்தைகள்தான்.

என்ன பெரிய சரியான நேரம்.நான்  சம்பளத்துக்குதானே வேலை பண்றேன்.நான் என்ன சமூக சேவையா பண்றேன். எதுக்கு இந்த சம்பிரதாய வார்த்தைகளோ என்று மனதுக்குள் நினைப்பான் சுரேஷ்.



“”பேஜர் சாதாரண டிவைஸ் இல்லம்மா.அந்த சின்ன கருப்பு பெட்டிதான்  என்னோட இடுப்பு  Belt-ல தொங்கிக்கிட்டு என்னோட வாழ்க்கையை 24×7 control பண்ணின்டே இருக்கு”  என்று சுரேஷ் அம்மாவிடம் அடிக்கடி  சொல்வான்.


அவனுடைய அம்மா ஊரிலிருக்கும் உறவினர்களிடம் பெருமையாக சுரேஷின் பேஜர் பற்றி போனில் விவரிப்பார். அம்மாவும்  பேஜரை  ஒரு மதிப்பான  பொருளாகத் தான் பார்ப்பார்.அக்கம்பக்கம் இருப்பவர்கள் கூட இடுப்பில் பேஜருடன் சுரேஷைப் பார்க்கும்போது அவர்கள் பார்வையில் ஆச்சர்யம் தெரியும்.

அம்மா அதைப் பார்க்கும் போது 

“என் மகன்  famous ஆன ஆள் இல்லைதான்.

ஆனா,அவன்  திறமைசாலி பல பேருடைய  சிக்கல்களைத் தீர்க்கிறான்.” என்று பெருமையாக நினைத்துக் கொள்வார் 



முதன்முதலில் வீட்டுல பேஜர் பீப் சவுன்ட் வந்தபோது ஆச்சர்யமாக பார்த்தார் அம்மா.


“அம்மா,Pager beep ஆச்சுனா Immediate response தேவைனு அர்த்தம்.”

என்று  சொல்லிவிட்டு அவன் வீட்டில் இருக்கும் லேன்ட் லைன்  போனிடம் போனான்..

“ஏம்பா,இதுலயே பேசமுடியாதா?” என்ற அம்மாவிடம்,

“இல்லம்மா, பேஜர்ல வர்ற மெசேஜ் டெலக்ராம் மாதிரி தான் அதை  படிக்க மட்டும் தான் முடியும்.நம்பளோட பதில இதுல  சொல்ல முடியாது. ஆனா அதுல குறிப்பிட்டிருக்கிற  எண்ணுக்கு லேன்ட்லைன் மூலமாக  போன் பண்ணி முழு விவரங்களை  பேசி தெரிஞ்சிக்க முடியும். ஏன்னா,” என்பான்.


இன்று அம்மாவின் உடல்நிலையால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையால் அலுவலகத்தில் லீவ் சொல்லவே மறந்துவிட்டான் சுரேஷ்.

இடுப்பில் தொங்கும் பேஜரும் தோளில் தொங்கிய பேகுமாக  ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறான்..

ஆபிஸ்க்கு லீவு சொல்லாத்தால் 

திடீரென்று  BEEP… BEEP…என்று சத்தம் வந்தது. சுரேஷ்  தன்னுடைய பேஜரிலிருந்து தான் சத்தம் வந்தது என்பதை உணர்ந்தான். ஆனால்,பேஜரைக் கையில் எடுக்கவில்லை.


“இதுவரை  மழை வெயில் எதுவும் பார்க்காம ஓடி ஓடி சரியான நேரத்துல என் கடமையை செஞ்சிருக்கேன். 

ரொம்ப அவசரம்னா இரவில் கூட இரண்டொருமுறை செய்திருக்கேன். ஆனா,இன்னிக்கு என் அம்மாவை இந்த நிலையில் விட்டுட்டு  என்னாலப்  போகவே முடியாது.” என்று மனதிற்குள் புலம்பினான்.ICU door-க்கு கவலையுடன் அவன் கண்கள் போய் போய் வந்தது.

ஆனால்,துரதிர்ஷ்டவசமாக 

அந்த ஆஸ்பத்திரியில் திடீரென்று  “UPS down! ஆகிவிட்டது.

அந்த UPS தான் ventilator ல் இருந்த சரேஷின் அம்மாவுக்கு இதுவரை  மூச்சு கொடுத்துக் கொண்டிருந்தது.தற்போது அவன் அம்மா மூச்சு விடமுடியாமல் திணறுகிறார் என்ற விவரமெல்லாம். பாவம் வெளியில் உட்கார்ந்திருக்கும் அவனுக்குத் தெரியாது.அம்மாவுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று மனதிற்குள்  வேண்டிக் கொண்டே இருந்தான்.


 சில நிமிடங்களில்  ஆஸ்பத்திரி வளாகத்தில்  ஒரு பைக் வந்து நின்றது.

ஒரு இளம் service engineer வேகமாக இறங்கினான்.

உடல் முழுக்க வியர்வையோடு இருந்த அந்த என்ஜினியர்

தன் Helmetஐ  அவசரமாக கழட்டியபடி  இவனைக் கடந்து UPS room நோக்கி வேகமாக ஓடினான்.ஆனால் சுரேஷ் அங்கிருப்பதை அவன் கவனிக்கவில்லை. தன்னுடைய அலுவலகத்தில் வேலைசெய்யும்  அந்த  என்ஜினியரை  சுரேஷுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது.ஆனால்,சுரேஷ் பதட்டத்தில் இருந்ததால் எதைப்பற்றியும்  யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.அடுத்த ,சில நிமிடங்களிலேயே  ப்ரச்னையை சரி செய்துவிட்டு சிட்டாய் பறந்துவிட்டான் அந்த எஞ்ஜினியர்.

அதனால்,ICU monitor steady ஆனது.

Ventilator smooth.

Green lights on.

Problem solved.

அடுத்த 

சில மணி நேரத்தில்  ICU door திறந்தது.


Doctor இவனிடம் வந்து சொன்னார்:

“Don’t worry.Operation successful.நல்லவேளை மிகச்சரியான நேரத்துல உங்கம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தீங்க.இல்லனா ரொம்ப கஷ்டமாகியிருக்கும்.now your mom  is stable.ஒரு மணி நேரம் கழிச்சி நீங்க உள்ள போய் அவங்கள பார்க்கலாம்” என்று கவலையில் இருந்த சுரேஷிடம்  நல்லசெய்தியை சொன்னார் டாக்டர்.



அவன் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.மனப்பாரம் நீங்கியவனாய் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அங்கே பக்கத்தில் இருந்த ரெஸ்டாரன்டுக்குப் போனான்.சூடான டிபனும் காபியும் சாப்பிட்டான். 

ஏற்கனவே அடுத்த மாதம் நடக்க இருந்த ஆபரேஷனுக்கு வந்து உதவி செய்வதாக சொல்லயிருந்த 

சித்தியை இப்போதே வரவழைக்க வேண்டும் என்று  பக்கத்தில் இருந்த PCO பூத்திலிர்ருந்த  ஊருக்கு போன் செய்து அம்மாவின் நிலையை சொல்லி உடனடியாக வருவதற்கு தயாராகுமாறு அழைத்தான்.சரி என்று சொன்ன நாளைக்காலை அழைத்து வர  கார் புக் செய்தான்.அம்மா டிஸ்சார்ஜ் ஆகும்வரை தான் அலுவலகம் போக முடியாது அதனால்  அலுவலகத்திற்கு போன் செய்து இந்த வாரம் முழுக்க லீவு என்னு சொல்லிவிட வேண்டும் இப்போதே சொல்லிவிட்டால் தன் பேஜருக்கு எந்த மெசேஜும் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன்.இன்று எதோ மெசேஜ் வந்ததே அதை முதலில் பார்க்கலாம்  என்று பேஜரில் வந்த அலர்ட் மெசேஜை  நிதானமாக படித்துப் பார்த்தான் 

அதில, 


ICU UPS FAIL

CALL HOSP

IMMED 



ICU UPS

NO RESPONSE

CALL NOW



என்று அலர்ட் மெசேஜ்கள் வந்திருந்தன.


தன் அம்மா இருந்த  அந்த ICUவிலிருந்து தான் அவனிடம் அவசர உதவி கேட்டு  வந்த  மெசேஜஸ் அவை. அவற்றை தான்  பதட்டத்தில் இருந்தபோது பார்க்காமல் விட்டு விட்டதை  உணர்ந்ததும் அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டன. தன்னுடைய மனத்தடுமாற்றத்தால்  கிடைக்க வேண்டிய உதவி தாமதமாகிவிட்டது. ஆனால்,  தன் பேஜருக்கு வந்த மெசேஜை கவனித்து பொறுப்புடன் மிகச்சரியான நேரத்தில் கடவுள் போல வந்து தன் கடமையைச் சிறப்பாக செய்து  தன் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய

தன்னுடன்   வேலை பார்க்கும் அந்த   சர்விஸ் என்ஜினியருக்கு மனதார  நன்றி சொன்னான். கலங்கிய கண்களுடன் தன் கையிலிருந்த பேஜரைக் நன்றியுடன் பார்த்தான் சுரேஷ்.

மக்குப் பய


தன் பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு கல்வியே சிறந்த மூலதனம் என்று நினைக்கும் நடுத்தரவர்க்க குடும்ப தந்தை தன் சக்திக்கு மீறி மகன்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறார்.இந்த யதார்த்தமான மனநிலையை விவரிக்கும் கதை.


மக்குப் பய


இரவு திடீரென்று வந்த கனவால் தூக்கம் போய்விட்டது.என் கனவில் வந்த என் அப்பா கோபமாக  சொன்ன வார்த்தை என்னை தூங்கவிடாமல் தடுத்தது.ஏசியை ஆஃப் பண்ணிட்டு புரண்டு புரண்டு படுத்தேன்.இத்தனை வருடங்களில் இப்படி ஒரு கனவு வந்ததே இல்லை.என் அப்பாவின் வாயில் இப்படி ஒரு வார்த்தை.அதுவும் என்னைப் பார்த்து ஏன் அப்படி சொன்னார்.நான் எந்த தப்புமே பண்ணலயே.


பக்கத்தில் என் மனைவி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.படுத்தால் மீண்டும் கனவில் அப்பா வந்துடுவாரோ என்ற பயத்தில் மெதுவாக எழுந்து பூனைபோல் நடந்து ஹாலுக்கு வந்தேன்.


அந்த நீளமான ஹாலில் குறுக்குமறுக்குமாக நடந்தேன்.

இன்று காலை  கிராமத்தில் இருந்த என் பள்ளியின் அலுமினி மீட்டுக்குப் போய் வந்தது ஞாபகம் வந்தது.மலரும் நினைவுகளால் என் மனப்பதட்டம் சற்று குறைத்தது.

அந்த பள்ளியில் ஒண்ணாம் வகுப்பில் சேர்ந்தேன்.நான் படித்த காலத்தில் LKG UKG எதுவும் கிடையாது.

நேராக ஒண்ணாங்கிளாஸ்தான்.

அது கூட பள்ளியில் சேர்வதற்கு பிறப்பு சான்றிதழ் தேவைப்படாத காலம் என்றால் இப்போது நம்பவே முடியாது.

ஆமாம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது அந்த சமயம் அப்பாவுக்கு உட்கார அங்கே சேர் கூட இல்லை. 

அதனால் மாணவர் சேர்க்கையின் போது  தலைமை ஆசிரியர் அறையில் அவர் எதிரில் நானும் என் அப்பாவும் நின்று கொண்டிருந்தோம்.

நான் மிகவும் ஒல்லியாக உயரம் குறைந்தவனாக இருப்பேன்.தலைமை ஆசிரியர் எனக்கு ஐந்து வயது முடிந்ததை ஊர்ஜிதம் செய்ய என் வலது கையை மேலே உயர்த்த சொன்னார்.பிறகு தலையை நேராக வைத்து தலைக்கு மேலே வலது கையை வளைத்து இடது காதை தொடவேண்டும்.நான் தொட்டேன்.

உடனே என்னைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள்.

அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.ஏனென்றால் என் அப்பா எனக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு நல்லா படிக்கிற பசங்க பக்கத்துல உட்காரனும் மக்கு பயலுங்க சவகாசம் வேண்டாம் என்று என் காதில் ஓதிய தினம் அது.


அப்போதுதான் ஒரு வித்தியாசத்தை பார்த்தேன்.நிறைய பிள்ளைகள் அன்று புதிதாக சேர்ந்திருந்தார்கள்.

அனேகமாக அப்பாக்கள் மட்டுமே அதிகம் இருந்தார்கள்.சிலருக்கு தாத்தாக்கள் வந்திருந்தார்கள்.

ஆனால்,ஒன்றிரண்டு அம்மாக்கள் இருந்தார்கள்.

ஆனால் என் அப்பாவைப் போல யாருமே இல்லை.ஆமாம். என் அப்பாவிற்கு மட்டுமே தலைமுடி முழுக்க வெள்ளை வெளேர் என்று இருந்தது.

மற்ற அப்பாக்கள் ஏன் தலைமை ஆசிரியிருக்கு கூட தலைமுடி கருப்பாக இருந்தது.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சில விஷயங்கள்  புரிந்தது அவற்றில் முதன்மையானது என் அப்பா மிகவும் வயதானவர் என்று.என் அம்மாவும்தான்.

தாத்தா சொல்வார் அப்பாவிற்கு செவ்வாய் இருந்ததாம் வரனே கிடைக்கவில்லை.அம்மாவிற்கும் செவ்வாய் தோஷத்தால் கல்யாணம் தாமதமாகிவிட்டதாம்.


ஆனாலும் என் அப்பா பியூசி படித்திருந்தார்.அரசாங்க வேலை.பொறுப்பாக பணத்தை சேர்த்து வீடு வாங்கினார் சுற்றிலும் தோட்டம் போட்டார்.என் அம்மாவும் எட்டாம் வகுப்பு படித்து டீச்சர் ட்ரெயினிங் முடித்திருந்ததால் 

நானும் என் தங்கையும் சொந்த வீடு சொந்த நிலம் தந்த சொகுசில் வசதியாக வாழ முடிந்தது.


நான் பள்ளி இறுதி வகுப்பு முடிப்பதற்குள் அப்பா  ரிடையர்ட் ஆகிவிட்டார்.அம்மா மட்டும் டீச்சர் வேலையில் இருந்தார்.என் அப்பா வீட்டில் எதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்.தோட்டத்தில் செடிகளை 

பராமரிப்பது.வயல்வெளி வேலை.மாடுகள் பராமரிப்பு இப்படி அவர் உழைப்பை பார்த்து எனக்கு உடம்பே நடுங்கும்.

நான் அப்பா அளவு வலிமையான உடல் கொண்டவனல்ல பூஞ்சையாக இருப்பேன்.என் தங்கை கூட ஓரளவு என்னைவிட பரவாயில்லை ரகம் தான்.எங்கள் உறவில் யாராவது உருப்படியாக எதையும் செய்யாமல் வீண் பேச்சு பேசிக் கொண்டிருந்தால்  “மக்குப் பய” என்று பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டே சொல்வார்.இந்த வார்த்தையை கேட்கும் போதே எனக்கு உடம்பெல்லாம் நடுங்கும்.


ஆனால் நாங்கள் ரெண்டு பேருமே படிப்பில் நம்பர் ஒன்.அதனால் அப்பாவிற்கு ஒரு நிம்மதி.நம் குழந்தைகள் பிழைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.அதற்கு தகுந்தார்போல பள்ளியில் எட்டாம் வகுப்பில் நடந்த ஸ்காலர்ஷிப் எக்ஸாமில் நானும் என் தங்கையும் டிஸ்ட்ரிக்ட்டிலேயே முதல் மாணவர்களாக வந்து.ப்லஸ்டூ வரை பாடப் புத்தகங்களை  இலவசமாக பெற்றதோடு  கொஞ்சம் பணமும் பரிசாக கிடைத்ததில் அப்பா புளகாங்கிதம் அடைந்தார்.”இப்படிதான் நாம  பொழைச்சிக்க நல்ல வழிய தேடனும்” என்று புன்னகையோடு அவர் சொல்லும்போது எங்களுக்கு பெருமிதமாக இருக்கும்.


ப்லஸ்டுவில் பாலிடெக்னிக் சேர்ந்தேன்.அதற்காக ஹாஸ்டலில் தங்க வேண்டியிருந்தது.

அப்பா சொன்னார்.

நீ புத்திசாலிபையன்.உழைப்பாளி.ஆனால், அங்க போய் நேரத்தோட மதிப்பும் பணத்தோட மதிப்பும் தெரியாத மக்கு பசங்க கூட சேராதடா என்று சொன்னார்.

பாலிடெக்னிக் முடிந்ததுமே எனக்கு நல்ல வேலை கிடைத்தது.

அப்பா உடல்நலம் இல்லாமல் இருந்தார் .ஆனாலும் வீட்டை தன் கட்டுப்பாட்டில் தான் வைத்திருந்தார்.

தங்கை பிஎஸ்ஸி அக்ரி கல்சர் படித்தாள்.அவளுக்கு மேற்கொண்டு படிக்க ஆசை ஆனால் திருமணம் முடித்து வைத்துவிட்டார் அப்பா.

எனக்கும்  அடுத்து வருடமே திருமணம் முடிந்தது.அம்மாவை கிராமத்தில் விட்டு விட்டு மனைவியுடன் பட்டணப்ரவேசம் வந்தேன்.

பட்டணத்தின் சுறுசுறுப்பும் ட்ரெயினில் கூட்டம் கூட்டமாக வேலைக்கு போகும் மனிதர்களைப் பார்த்ததும் அட்டா அப்பாவை அழைத்து வந்து இவர்களைக் காட்டியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரே என்று தோன்றியது.

படித்த என் மனைவிக்கும் வேலை கிடைத்தது.உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டோம்.

பணத்தின் மதிப்பை அறிந்தவன் அதனால் சிக்கனமாக செலவு செய்து கடன் பட்டு வீடு வாங்கி கிரகப்ரவேசம் செய்த அடுத்து மாதமே அம்மா இறந்துவிட்டார்.

என் இரண்டு மகன்களையும் கான்வென்டில் படிக்க வைத்து வீட்டு லோனை அடைக்க வேண்டிய நிலையால் இருவரும் வேலைக்குப் போனாலும் மாசக் கடைசியில் கையில் பணம் நிற்கவில்லை.

எப்படியோ போராடி வீட்டுக் கடனை முடிக்கும் போது பெரிய மகன் கல்லூரி முதலாம் ஆண்டில் இருந்தான்.

இரண்டாவது மகன் பள்ளி இறுதி வகுப்பில் இருந்தான்.மனைவி உடல்நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தாள்.

சேமிக்கலாம் என்று வரும்போது செலவுகள் வானுயர இருந்தன.

அப்பா கிராமத்தில் வைத்திருந்த வீட்டையும் நிலத்தையும் விற்று தங்கைக்கு பாதி கொடுத்துவிட்டு 

என் பங்கு பணத்தில் கொஞ்சம் எடுத்து என் மனைவிக்கு மருத்தும் பார்த்து அவளைக்  காப்பாற்றினேன்.

மீதித்தோகையை வங்கியில் போட்டு வைத்தேன்.

அப்பாடா என்று மனம் நிம்மதியாக இருந்தது.அந்த சமயத்தில்  நன்றாக படிக்கும் என் மூத்த மகன் மாஸ்டர்ஸ் படிப்பு வெளிநாட்டில் படிக்க வேண்டும்  என்றான்.அந்தக் கல்லூரியில் படிப்பது அவன் எதிர்காலத்திற்கு நல்லது மட்டுமல்ல எனக்கும் ரொம்ப பெருமைக்குரிய விஷயம். 

அதுமட்டுமல்ல அவன் பகுதிநேர வேலை செய்துகொண்டே படிப்பதாக சொன்னான்.ஆனால் என் மகனே  சமைத்து சாப்பிட்டு பகுதிநேர வேலையும் செய்து கொண்டே படித்து அவன் கஷ்டபடுவதை என் மனம் ஏற்கவில்லை.என் அப்பா என்னை அப்படி வளர்க்கவில்லையே.

அதனால் அவனுக்கு எஜுகேஷன் லோன் போட்டுவிட்டு தங்குமிடம் சாப்பாடு செலவுக்காக முன்பு என் என் அப்பாவின் உழைப்பால் வாங்கிய சொத்துக்களை விற்றுக் கிடைத்த அந்தப் பணத்தை வங்கியில் வைத்திருந்தேன் இல்லையா அதனை  வழித்து வாரி அவனுக்கு அனுப்பிவிட்டேன்.அவனுக்கு தாத்தாவின் ஆசிர்வாதம் கிடைத்தமாதிரியும்  இருக்குமே.


அதுமட்டுமல்ல,இப்போது மிக நன்றாகப் படிக்கும் என் இரண்டாவது மகனுக்கும்  பேச்சிலர்ஸ் டிகிரிக்கே   அதே வெளிநாட்டு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது.எல்லாம் கொடுப்பினை. குழந்தைங்க பொழைச்சிக்க படிப்பு ரொம்ப முக்கியமாச்சே.

நான் துளியும் தயங்காம அவனுக்கும் எஜுகேஷன் லோன் போட்டுவிட்டு மேற்கொண்டு தங்குமிடம் சாப்பாட்டு செலவுக்கு இதோ என் சொந்த உழைப்பால் கிடைத்த இந்த பட்டணத்து வீட்டைத்தான்  அடமானம் வைக்க கச்சிதமா திட்டம் போட்டு வச்சிருக்கேன்.என்னை படிக்க வைத்த அப்பா மற்றும் என்னுடைய ஆசிர்வாதமும் இதில் அடங்கியிருக்கிறதே. இதுக்காகத் தான்  நாளைக்குக் காலைல  பேங்குக்குப் போகனும்.

இதையெல்லாம் என் அப்பா உயிரோடு இருந்து பார்க்கவில்லையேனு இராத்திரி முழுக்க  ஏங்கிக் தவிச்சிட்டு தூக்கம் வராம ரொம்ப நேரம் நான் புரண்டுகிட்டே இருந்தேன்.அப்புறம் எப்போ தூங்கினேனு எனக்கே தெரியாது.

ஆனா,இது எதுவுமே தெரியாம, என்னிக்குமே  என் கனவில் வராத என் மதிப்பிற்குரிய அப்பா ஏனோ  சரியா இன்னிக்கு  வந்தார்.

 என் பொறுப்பான நடவடிக்கைகளை பாராட்டலேனா கூட பரவால்ல என்னை கோவமா பாத்து  “மக்குப் பய” அப்படினு  பல்லைக் நறநறனு  கடிச்சிட்டே  திட்றாரே இதுக்கு  காரணம் என்னவா  இருக்கும்?

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?