Monday, October 13, 2025

உண்மையான வெற்றி

 

உண்மையான வெற்றி


காலை நேர சூரியன் சென்னையின் மேல் மிதமான தங்க ஒளிவீசிக்கொண்டிருந்தான்.

மக்கள் முதல் நாள் விட்டுச்சென்ற வேலைகளை முடிப்பதில் மும்முரமாக இருந்தனர்.

வேளச்சேரி  புறநகர் பகுதியில் இருந்த  ஒரு இரண்டு மாடிக் குடியிருப்பு.

அதுவே முருகேசன் குடும்பத்தின் உலகம்.

முருகேசன்  வீட்டின் வாசலில்  ஒரு சிறிய துளசி மாடம். அதன் அருகில் குளிர்ந்த காற்றில் வாசம் வீச மெதுவாக அசையும் மருதாணிச் செடிகளின்  பச்சை இலைகள்.

வீட்டின் முன் பசுமை நிறைந்த புல்; சில நேரங்களில் அங்கு அக்கம்பக்கத்து குழந்தைகள் சைக்கிள் ஓட்டும் காட்சி.


வீட்டின் உள்ளே நுழைந்தவுடன்:

வெளிச்சம் நிறைந்த ஹால் — வெள்ளை மஞ்சள் கலந்த சுவர் பேயிண்ட், புத்தகங்கள் நிரம்பிய அலமாரி, ஒரு மூலையில் சிறிய ஃபேன்.

நடுவில் மெத்தென்ற சோபா. டீப்பாய். மற்றும் சுவரில் குழந்தைகளின் புகைப்படங்கள் தொங்கின.

அந்தக் குழந்தைகள்  வரைந்த சின்ன ஓவியங்களும் சுவற்றில் தொங்கின.  — “என் குடும்பம்”, “என் பள்ளி”, “என் கனவு உலகம்”.போன்ற தலைப்புகள் எழுதப்பட்டிருந்தன.


அந்த  குடும்பத்தின் இதயம் போல இருப்பது குடும்பத்தலைவி  சரஸ்வதி, சரஸ்வதி ஒரு கலை ஆசிரியர்.அந்த நேரத்தில் சரஸ்வதி குளித்துவிட்டு அழகிய சந்தன நிறத்தில் நேவி ப்லூ  பூக்கள் போட்ட காட்டன் புடவையும் நேவி ப்லூ ப்லவசுமாய்.நீண்ட தலமுடியை அழகாக பின்னலிட்டு நெற்றியில் குங்கும்மும் விபூதியும் வைத்து வாய் கடவுள் பாடல்களைப் பாடிக்கொண்டேயிருக்க சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்தார்.


சில நிமிடங்களில்…

“திவ்யா, உன் ஸ்கூல் பஸ் பத்து நிமிஷத்தில் வரும்! கிருஷ்ணா, உன் ஸ்கூல் பேக் தயார் பண்ணிட்டியா?”என்ற சரஸ்வதியின் குரல் சமையலறையில் சூடான ஆவி பறக்கும் இட்லி வாசனை, மற்றும் தக்காளிச் சட்னி தாளித்த வாசனையுடன் கலந்து வந்தது.


“”பாக்கறேன்மா” என்ற  கிருஷ்ணன் அந்த ஹாலில் இருந்த சோபாவில் தன் புத்தக்பைகளை கொண்டு வந்து வைத்துவிட்டு வபள்ளி பாடபுத்தகங்களை சரிபார்த்துக் கொண்டே


“அம்மா, என் மேத்ஸ் நோட் எங்கே?” என்றான்.


“அது உன் மேசையில்தான் இருக்கிறது !” என்று அக்கா திவ்யா பதில் சொன்னாள்..


திவ்யாவிற்கு பதினாறு வயது, அவள் பிளஸ் ஒன் மாணவி. வகுப்பிலேயே முதல் மாணவியும் கூட.

அவளது முகத்தில் எப்போதும் ஒரு சிறிய சோர்வு இருந்தது. அவள் கைகளில்  புத்தகங்களுடனே இருந்தாள்.மனதில் எதிர்பார்ப்பும் பதட்டமும் கலந்த மன நிலை கொண்டவளாக திவ்யா இருந்தாள்.ஸட்ரெஸ் டிப்ரஷன் போன்ற வார்த்தைகளுக்கு ஒரு உதாரணமாக அவள் இருந்தாள்.

புதிய பாடங்கள், புதிய ஆசிரியர்கள், புதிய மன அழுத்தங்களும் பெரிய எதிர்பார்ப்புகளுமாக அவளது தினசரி வாழக்கை சிரிக்க நேரமில்லாமல் ஒரு புது கோணத்தில் போய்க்கொண்டிருக்கிறது.

கிருஷ்ணன் ருசிபார்த்து சந்தோஷமாக சாப்பிட்டான்.மகளோ

ஏதோ பேருக்கு கொரித்தாள்.சரஸ்வதி குழந்தைகளின் நெற்றியில் முத்தமிட்டாள்.

பிறகு தன் பள்ளிக்குத் புறப்படுவதற்காக தன்  அறைக்குள் சென்று விட்டாள்.


வெளியில் பஸ் ஹார்ன் ஒலித்தது. கிருஷ்ணன் குதித்து பாய்ந்து ஓடினான்.

ஆனால் திவ்யாவோ பையை தோளில் சுமந்தாள்.சோர்வுடன் நடந்தாள்.


“அப்பா, நான் ஸ்கூல் போயிட்டு வரேன்!” என்று திவ்யா வாசலில் தன்னை வழியனுப்ப வந்த தன் அப்பாவிடம் சொன்னாள்.

“சரிடா கண்ணு, ஆனா சந்தோஷமா இருக்கனும்மா. வாழ்க்கையிலே எவ்ளோ போட்டி இருந்தாலும், மனசு அமைதியா இருந்தா வெற்றி நிச்சயம்,” என்று முருகேசன் ஏதோ மந்திரம் போல புன்னகையுடன் சொல்லி, அவளது தோளில் கை வைத்தார்.எப்போதுமே முருகேசனும் சரஸ்வதியும் மெதுவாக தெளிவாக பேசுவது வழக்கம்.


அந்த வார்த்தைகள் திவ்யாவின் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

ஸ்கூல் பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் ஜன்னலில் இருந்து வெளியில் பார்த்தாள்.

அந்தப் பெரிய நகரம் மெதுவாக இயங்க  ஆரம்பித்திருந்தது — காபி கடைகள் திறந்தது, சாலையில் சூரிய ஒளி பளபளத்தது.


திவ்யா யோசித்தாள் —


“அப்பா சொல்றாரே மனசு அமைதியாக இருக்கனும்னு. நான் நிறைய வெற்றிகளைக் குவிக்க வேண்டியது இருக்கே.…ஆனால் மனம் எப்போ தான் அமைதியா ஆகுமோ தெரியலயே? என்று ஏக்கப்பெருமூச்சு வாட்டாள்.


அன்று  பள்ளியில் ஒரு நீண்ட நாள் முடிந்தது. மாலை மீண்டும் அவள் வீட்டுக்கு வந்தபோது, முகம் ரொம்பவும் சோர்வாக இருந்தது.அப்பா ஹாலில் சோபாவில் அமர்ந்து சில அலுவலக ஃபைல்களை பார்த்துக் கொண்டிருந்தார்.திவ்யா சோர்வாக இருப்பதைப்பார்த்ததும் 

ஃபைல்களை மூடிவிட்டு,நாற்காலியில் இருந்து எழுந்தார்.


“திவ்யா, உனக்கு இன்றைக்கு என்னாச்சு? சோர்வாக இருக்கியேம்மா” அப்பா அக்கறையுடன் கேட்டதும்


திவ்யா மெதுவாக சொன்னாள்:


“அப்பா, மிட் டெர்ம் எக்ஸாம்க்கு நிறைய போர்ஷன்ஸ் இருக்கு.அதுக்குள்ள ஒவ்வொரு சப்ஜக்ட்லயும் அடிக்கடி டெஸ்ட் எழுதனும்.கணக்கு புரிஞ்சிக்கவே ரொம்ப டஃப் ஆக இருக்கு , physics அதுக்கு மேல கஷ்டமாக இருக்குது… எங்கூடதான் எல்லாரும் போட்டி போடுற மாதிரி எனக்கு ஒரே டென்ஷனாக இருக்கு.” என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்குச் சென்று புத்தகப்பையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு உடைமாற்றிவிட்டு அங்கேயே மீண்டும் படிக்க உட்கார்ந்தாள்.


“திவ்யா,இங்க வாம்மா” என்றார் அப்பா.

 மீண்டும் ஹாலுக்கு வந்தாள் திவ்யா.

 கையில் சில புத்தகங்ளும் நோட்டும் பேனாவும் இருந்தன.ஹாலில் சோபாவில் உட்கார்ந்தாள்.மீண்டும் புத்தகங்களை பிரித்து புரட்டிக் கொண்டிருந்தாள்.


ஏற்கனவே பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த சரஸ்வதி உடைமாற்றிய பிறகு சமையலறையில் காபி தயாரித்துக் கொண்டு இருந்தாள்.கையில் ஆவி பறக்கும் காபியுடன் ஹாலுக்கு வந்த சரஸ்வதி,சோபாவில் உட்கார்ந்திருந்த மகளுக்கு முன்னால்  டீபாயில் வைத்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து திவ்யாவை அணைத்துக் கொண்டாள்.

அம்மாவின் அரவணைப்பும் காபியின் சுவையும் அவளுக்குள் சிறு அமைதியை ஏற்படுத்தியது.


“மன அழுத்தம் எல்லாருக்கும் தான் வரும் செல்லம். ஆனா அதை கவனமா நாம்பதான் கையாளணும். அதைக்குறைக்க ஒரு சின்ன வழி சொல்லவா?

ஒரு நாளைக்கு இவ்ளோதான் படிக்கனும்னு  ஒவ்வொரு நாளும் சின்ன டார்கெட்  மட்டும் வெச்சுக்கோ..அன்னிக்கு  அத செய்து முடிச்சாலே போதும் தன்னம்பிக்கை பிறக்கும்.தினமும் கொஞ்சமா கொஞ்சமா உழைச்சா.டயர்டும் ஆகாது.இலட்சியத்தையும் அடைய முடியும்.” என்று கனிவுடன் சொன்னாள் அம்மா.

அமைதியாக யோசித்தாள் மகள்.

மகன் கிருஷ்ணன் விளையாடிக்கொண்டிருந்தவன் இவர்கள் பேசுவதையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.அதனால்,

தன் விளையாட்டுப் பொருட்களை அப்படியே விட்டுவிட்டு வந்து சொன்னான்:


“அக்கா, உனக்கு ஸ்ட்ரெஸ்  வந்தா என்னைக. கூப்பிடு நானும் உன்னுடன் உக்காந்து படிக்கிறேன்! 

நாம போட்டி போட வேண்டாம். .ஒரு டீமாக படிக்கலாம் அக்கா !”

அந்த டீம்  என்ற ஒரு வார்த்தை திவ்யாவின் மனத்தில் ஒளி ஏற்றியது.


தம்பியை பாசத்துடன் பார்த்தாள்.காபியைக் குடித்து முடித்தாள்.மனம் சற்று லேசான மாதிரி இருந்தது.

சரஸ்வதி சொன்னாள்”திவ்யா,நம்ப குடும்பமாக மாடிக்குப  போகலாமா “என்று கேட்டுக் கொண்டே திவ்யாவின் கையில் இருந்த புத்தகங்களை வாங்கி மூடி டீப்பாயில் வைத்தாள்.


குடும்பத்தினர் நால்வரும் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவழிக்க மாடிக்குப் போனார்கள்.


மாலை நேரம் அதனால், சில்லென்று காற்று வீசியது.

அந்த வீட்டின் மேல் மாடியில் சின்ன தோட்டம் இருந்தது.அதன் நடுவே ஒரு சுற்றிலும் மரநாற்காலிகள் போடப்பட்ட சிமெண்டாலான மேடை இருந்தது.

அங்கே நால்வரும் சுற்றி ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்தனர்.


கடைக்குட்டி கிருஷ்ணன் தட்டில்  பிஸ்கட்டுகளைக் கொண்டு வந்து பரிமாறினான்.

அங்கே  ஒரு சந்தோஷமான  சூழ்நிலை உருவானது. எல்லோரும் அமைதியாக அந்த சூழ்நிலையை அனுபவித்தனர்


திவ்யா காற்றை நன்றாக உள்வாங்கி சுவாசித்தாள்..அது ஒரு தனி அழகிய அனுபவமாக இருந்தது.அடிக்கடி இப்படி வந்து திறந்தவெளில் நல்லகாற்றில் உட்காரவேண்டும் என்ற எண்ணத்தை அவளுக்குள் கொண்டுவந்தது.


அப்பா கூறினார்:

“படிப்பு முக்கியம் தான்.ஆனா எதையும் ஜெயிக்க மன அமைதிதான் முக்கியம்.

நல்ல மன அமைதி கிடைக்கனும்னா நாம் மனதிற்கு முறையான பயிற்சி குடுக்கனும்.”என்றார் அப்பா.

பிறகு எதுவுமே பேசாமல் மௌனமாக இயற்கையின் அமைதியில் நிமிடங்கள் கழிந்து கொண்டிருந்தன. சூரியன் மெதுவாக மறைந்த போது 

திவ்யாவின்  முகத்தில் சிரிப்பு ஒரு வந்தது

.


அடுத்த நாள், சென்னையில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்த அதிகாலையில்  சூரியன் இன்னும் வெளிச்சம் தரவில்லை. திவ்யா தன் மேசையின் முன் அமர்ந்திருந்தாள்.

அவளது கையில் பேனாவும் நோட்டும், அவள் முன் இருந்த படிக்கும் மேசையில் கணித பரிட்சைக்கான பழைய கேள்வித்தாள்கள் இருந்தன.

அவள் முகத்தில் குழப்பம்.கேள்விக்கு   விடை காண முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

மெதுவாக பேனாவின் நுனியை கடித்துக்கொண்டு, புத்தகத்தின் பக்கங்களைப்  புரட்டினாள்.


“ஏன் எனக்கு மட்டும் கணக்கு இத்தனை கடினமா தோணுது?” — அவள் மனதில் கேள்வி எழுந்தது.

மீண்டும் மனழுத்தம் அவளை ஆட்டிப்படைத்தது.


சிறிது நேரம் கழித்து, சரஸ்வதி சமையலறையில் இருந்து வந்து கேட்டாள்:


“திவ்யா, காலை உணவுக்கு வரலையா? இன்னும் படிப்பா?” என்றாள்.

“ஆம் அம்மா, இன்னும் சில கணக்குகள் பாக்கி இருக்கின்றன.…” அவள் குரலில் ஏமாற்றம்  இருந்தது.


அம்மா புன்னகையுடன் கையில் ஒரு டம்ளரில் சூடான காப்பி கொண்டு வந்து கொடுத்தாள்...


“முதலில் இதை குடி. மன அழுத்தம் வந்து விட்டது என்றால், மூளைக்கு நிறைய ஓய்வு தேவைப்படும்.”

என்று அவள் திவ்யாவின் தலையை வருடினாள் .

அந்த ஒரு தொடுதல் திவ்யாவின் உள்ளத்தை மெதுவாக அமைதியாக்கியது.

சற்று நேரத்தில் பள்ளிக்குக் கிளம்பிப்போனாள் திவ்யா.


மதியம் பள்ளியில், அறிவியல் ஆசிரியர் ஒரு டெஸ்ட்  அறிவித்தார்.

“மாணவர்களே, நாளை டெஸ்ட் இருக்கு! மூன்று பாடங்கள் வரை டெஸ்ட்க்கு வரும் “ என்று அறிவித்தார்.  அவ்வளவுதான், முழு வகுப்பிலும் துளி சத்தம் கூடக் கேட்கவில்லை.

திவ்யா ஸ்ட்ரெஸ்ட் ஆக உணர்ந்தாள்.

அவள் கண்களில் பதட்டம் — என்னால்  முடியுமா?” என்று மனதுக்குள் குழம்பினாள்.

அந்த நேரத்தில், அவளது friend அனன்யா மெதுவாக அவள் கைகளை பிடித்தாள்...


“ஏன் ஒரு மாதிரி இருக்க  திவ்யா! நாம இருவரும் சேர்ந்து படிப்போம். ஸ்ட்ரெஸ்ட் ஆக இருக்கியா என்ன  எங்கிட்ட சொல்லு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்..” என்றாள் அக்கறையுடன்.

அந்த சொல் திவ்யாவுக்கு சிறிய நம்பிக்கை கொடுத்தது.

ஆனால் அவள் மனதில் ஸ்ட்ரெஸ் குறையவில்லை.


அன்று  மாலை, வானம் கறுப்பாக மேகமூட்டம்.

மழை துளிகள் தூறலாக விழுகின்றன.

திவ்யா வேகவேகமாக பள்ளியிலிருந்து வீடு வந்ததும், தன் அறைக்குள் சென்றாள. பையை அப்படியே மேசையில் வைத்துவிட்டு  சும்மா ஜன்னலருகே நின்றாள்.

அதற்குள் வேகம் பிடித்த மழை நீர் சாலையில் ஓடி பளபளப்பாக தெரிந்தது.

அவள் முகத்தில் மழைச்சாரல்கள்  விழுந்தன.

அது அவளது கண்ணீருடன் கலந்தது.


அந்த நேரம் தந்தை முருகேசன் அவளது அறைக்குள் வந்து, அமைதியாக நின்றிருந்த அவளைப் பார்த்தார்.


“திவ்யா, என்ன ஆச்சு ஏதோ ரொம்ப கவலயா இருக்க மாதிரி தெரிகிறதே? உனக்கு ட்யூஷன் தேவைப்படுதா திவ்யா?” என்று அப்பா கேட்டார்.

அவள் மெதுவாக சொன்னாள்:


“, இல்லைங்க அப்பா,வகுப்பறையில் பாடம் நல்லா புரியிது.ஆனா,நிறைய டெஸ்ட் வந்துகிட்டே இருக்கு.ரொம்ப வேகவேகமா ஓடற மாதிரி மூச்சு வாங்குது.

எல்லாரும் வேகமாக ஓடுறாங்க. நான் மட்டும் பின்தங்குறேன் போல தோணுது. எப்போதும் எனக்கு ஒரு மன அழுத்தம் இருந்துகிட்டே இருக்கு.ஒவ்வொரு மதிப்பெண்ணும் என்னுடைய  மதிப்பை  நிர்ணயிக்கிறது  போல தோணுது”

அந்த வார்த்தைகள் முருகேசனை திகைக்க வைத்தன.

அவர் அவளருகே வந்து நின்று, மெதுவாக சொன்னார்:


“திவ்யா, மார்க் மட்டும் வாழ்க்கையிலே வெற்றிக்கான  அளவுகோளல்லம்மா.

 உன் மன அமைதி தான் உண்மையான வெற்றி.

ஒவ்வொருவருக்கும் ஓட்ட வேகம் நிச்சயம் வேறுபடும். ஆனால் எல்லாருக்கும் அடைய வேண்டிய இலக்கு ஒன்றுதான்  அதுதான் மன அமைதி.அதனால், எதுக்காகவும் உன்

மன அமைதியை இழந்துவிடாதே” ஆதரவாக சொன்னார் அப்பா.

அவள் அமைதியாக யோசித்தாள்.

சமையலறையில் அப்பாவும் அம்மாவும் திவ்யாவைப் பற்றி ஏதோ பேசினார்கள்.


அந்த இரவு, குடும்பம் ஒரே டேபிளில் அமர்ந்தது.

அம்மா சரஸ்வதி சொன்னாள்:



“நாளைலேர்ந்து நாம ஒரு புதிய பழக்கம் தொடங்கலாம். ஒவ்வொருவரும் தங்களுக்கு அன்று நடந்த விஷயங்களை பற்றி 10 நிமிடங்கள் பேசணும். அது வேலைப்பளு, சந்தோஷம், பயம் — எதுவாக இருந்தாலும்.” அம்மா பேசியதும் அப்பா அர்த்தத்துடன் அம்மாவைப் பார்த்தார்.


கிருஷ்ணன் குதித்துக்கொண்டு வந்து சொன்னான்.


“நான் முதல்ல இப்பவே சொல்றேன்.இன்று ஸ்கூல்ல  டீச்சர் என்னை பாராட்டினார்! எனக்கு  நம்பிக்கை அதிகமாச்சு!” என்று மனம் விட்டு பூரிப்புடன் சிரித்தான்.

அந்த சிரிப்பு திவ்யாவுக்குள் சந்தோஷம் கொடுத்தது.

அவளும் புன்னகையுடன் சொன்னாள்:


“எனக்கும் இன்றைக்கு கொஞ்சம் டென்ஷன்  இருந்தது… ஆனா நீங்கள் எல்லாரும் பேசுறதைக் கேட்டு இப்போ மனம் லைட்டாகிப் போச்சு.” என்று சிரித்தாள்.


“அப்படிதான் கண்ணு. மன அழுத்தத்தை  எப்பவுமே மத்தவங்க கிட்ட சொன்னாலே போதும்  பாதி தீர்ந்துவிடும்.”  என்று சொல்லி  சந்தோஷத்தில் முருகேசன் கை தட்டினார்:


சிறிது நேரம் கழித்து, திவ்யா படிக்கும் அறையில் மேசையில் இருந்த புத்தகங்களை புரட்டிய போது,

அந்த மேசையில்  சரஸ்வதி தான் புதிதாக வரைந்த ஓவியங்களைப் போட்டிருந்தாள்.அது திவ்யாவின் கவனத்தை ஈர்த்தது.சற்றுநேரம் ஓவியங்களை ரசித்தாள்.தானும் சில நிமிடங்கள் ஒதுக்கி வரைந்தாள்.மேலும் அங்கே தம்பி கிருஷ்ணனும் ஒரு பேப்பரில் காகிதத்தில் சின்ன கார்ட்டூன் சிரித்த முகம் ஒன்று வரைந்து அதில்  “அக்கா சிரிச்சா தங்கம்!” 😄 என்று இருந்தான். 

திவ்யா அதைப்பார்த்துச் வாய்விட்டு வெகு நேரம் சிரித்தாள்.

அவள் மனம் லேசானது.

பிறகு படிக்க ஆரம்பித்தாள்.முன்பைவிட சற்று வேகமாக அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.



படித்து முடித்துவிட்டு,அவள் ஜன்னல் கதவைத்  திறந்து வெளியில் பார்த்தாள்.

நிலவு வெளிச்சம் மெதுவாக அவள் முகத்தில் விழுந்தது.

குளிர் காற்று வீசியது.

அவள் மனத்தில் மெதுவாக ஓர் உறுதி பிறந்தது:

“நான் சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ளணும். மன அழுத்தம் வந்தால் அதை கவனமா கையாள்றதுக்கு திறமை வேணும். தனிமையில் கவலைப்படாமல் அதை பற்றி பிறருடன் பேசனும் பேசினாலே சுமை குறையும்.,”என்று யோசித்தாள்.


“வெற்றி என்பது வெறும் மதிப்பெண் அல்ல.

மன அமைதி, அன்பு, நம்பிக்கை — இவைகளே நிரந்தரமான  உண்மையான வெற்றி.” என்று அவள் ஒரு நோட்ட்புக்கில்  பலமுறை எழுதினாள்.

பிறகு தூங்கப்போய்விட்டாள்.



அடுத்த சில நாட்களில் திவ்யாவின் வாழ்க்கையில் சிறிய மாற்றம் நடந்தது.

அது வெளியில் பெரிய மாற்றமாகத் தெரியவில்லை — ஆனால் அவளது மன தனக்குள் சிரிக்கத் தொடங்கியது.


சில நாட்கள் கழித்து,

அது சென்னையின் விடியல் நேரம்.

சூரிய ஒளி வெள்ளையாகப் பளபளக்க, காற்றில் துளசி வாசனை கலந்தது.

முருகேசன் வீட்டின் மாடியில் நீர்த் தொட்டியிலிருந்து  செடிகளுக்குத்  தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.


அங்கு திவ்யா மெதுவாக வந்தாள்.அவள்  கையில் எந்தப் புத்தகமும்  இல்லை.

அதற்கு பதில்  ஒரு கோப்பை சூடான தேநீர் இருந்தது.


“அப்பா, இன்று காலை நான் உங்களுடன் நடைப்பயிற்சி வரலாமா?”


முருகேசன் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தார்:


“ஓ தாராளமா போகலாமே” என்று உற்சாகமாக கூறினார்.

செடிகளுக்கு நீர் ஊற்றி முடிந்ததும் 

அவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்து காலணிகள் அணிந்து சாலையில் மெதுவாக நடந்தார்கள்.சற்று நேரத்தில் பூங்காவை அடைந்தார்கள்.

அங்கே  சில பெரிய மரங்கள், ரோஜா தோட்டம், சிலர் யோகா செய்யும் காட்சி.

மழைக்குப் பிறகு பூங்காவில் பசுமை அதிகம் காணப்பட்டது.


“அப்பா, முன்னாடி நான் இப்படி ஓய்வு எடுத்ததில்லை. எப்போதும் படிக்கணும் என்று மட்டும்தான்  நினைத்தேன்.” என்று மனம் திறந்து பேசினாள்.

“படிப்பு முக்கியம் தான் அம்மா. ஆனா ஓய்வு இல்லாத மனம் குழம்பும்  வெற்றியைத் தராது,” என்றார் முருகேசன்.


அந்த வாக்கியம் அவளுக்கு புதிய ஒளி போல.

சூரியன் மெதுவாக எழுந்து, இருவரின் முகத்தையும் பொன் நிறத்தில் மிளிரச் செய்தான்.

வீட்டிற்கு வந்ததும் சற்று நேரம் படித்தாள் கொஞ்சம் சுலபமாக பாடம் புரிவது போல் திவ்யாவுக்குத் தோன்றியது.

வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாக பள்ளிக்குக் கிளம்பினாள் திவ்யா.


அந்த நாள் பள்ளியில் இயற்பியல்  வகுப்பு.மாணவர்கள் டயர்டாகவும் கண்களில் பயத்துடனும்  இருப்பதாக உணர்ந்தார் ஆசிரியர் அருள்ப்ரியா., அதனால் பாடத்தை ஒரு சிறிய விளையாட்டாக மாற்ற நினைத்தார்.


“இன்று நாம் ஒரு டீமாக செயல்பட்டு ஒரு ஆராய்ச்சி செய்யப் போகிறோம்! —

‘மன அழுத்தத்தை குறைக்கும் இயற்கையான  வழிகள்’ என்ற தலைப்பிற்காக ஒவ்வொரு குழுவும் ஒரு சிறிய திட்டம் உருவாக்கணும் என்று சொன்னார்.மாணவர்களுக்கு புதுமையான இந்த யோசனையைக் கேட்டதும் உற்சாகம் பிறந்தது.


திவ்யா, அனன்யா, பிரவீன், சித்ரா — நால்வரும் ஒரு குழுவாக இருந்தனர்.

அவர்கள் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர்.


அனன்யா சொன்னாள்:


“நாம் யோகா பற்றி எழுதலாமா?”  மற்ற மாணவர்கள்.” இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். புதுமையாக எதாவது ஆராய்ந்தால்தான் நமக்கு ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும்.” என்று 

பிரவீன் சொன்னான்.:


திவ்யா மெதுவாக சொன்னாள்:


“நாம் ‘சிரிப்பு’ பற்றி எழுதலாமா? சிரிப்பு தான் மிக எளிய மன அழுத்த மருந்து.” என்று திவ்யா மிகுந்த நம்பிக்கையடன் சொன்னாள்.


எல்லோருமே ஏற்றுக் கொண்டனர்.


திவ்யா தன் வீட்டில் நடந்ததையே யோசித்து எழுதினாள்.


சின்ன கார்ட்டூன்கள், சிரிப்பு விளக்கங்கள், குடும்ப நேரம், நண்பர்களுடன் உரையாடல். இப்படி ஒவ்வொரு மாணவர்களும்  எழுதியிருந்தார்கள்.


முடிவில் ஆசிரியர் கூறினார்:


“நீங்கள் காட்டிய சிரிப்பு முறைகள் நம் எல்லோருக்கும் உடனடியாக மன அழுத்தம் குறைப்பதாக  இருக்கிறது!” என்று கூறிவிட்டு ஜோக்குகளை உரக்கப்படித்தார்.

மாணவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.

அந்த வகுப்பறையே கலகலவென்று மாறியது.

ஆசிரியரின் அந்த பாராட்டு திவ்யாவின் மனதை முழுமையாக மாற்றிவிட்டது.


அன்று  மாலை, திவ்யா வீட்டிற்குத் திரும்பி வந்து, தன் குடும்பத்துடன் ஆர்வமாக  அமர்ந்து பல ஜோக்குகள் சொன்னாள்.அனைவரும் மனம் விட்டு சிரித்தனர்.சந்தோஷத்தில் திவ்யாவிற்கு கண்ணீர் வந்தது.

சரஸ்வதி சமையலறைக்கு சென்று பாடிக்கொண்டே  வேலை செய்து கொண்டிருந்தாள்.

வீட்டிற்குள் சாம்பார் வாசனை நிறைந்திருந்தது.

கிருஷ்ணன் மேசையில் தன் புத்தகத்தை மூடி, ஒரு கார்ட்டூன் வரைந்துக் கொண்டிருந்தான்.

அவனது கார்ட்டூன் —

திவ்யா முகம், பக்கத்தில் பெரிய எழுத்தில்: “அக்கா சிரிச்சா வீடே  வெளிச்சமாகும் !” ✨

அதை திவ்யாவிடம் கொண்டுவந்து காட்டினான்.

அவள் மீண்டும் வாய்விட்டு சிரித்தாள்.

அந்த சிரிப்பை கேட்ட முருகேசன் ஹாலிலிருந்து சொன்னார்:

“இது தான் நமக்கு தேவை — சிரிப்பு ஒலி. அதுவே வீட்டில் எப்போதும் கேட்கவேண்டும்.” என்றார்.

அந்த இரவு, குடும்பம் ஒன்றாக டீவியில் சின்ன நகைச்சுவை நிகழ்ச்சி பார்த்தது.

அன்று அவர்கள் எதுவும் பேசவில்லை., எந்த ஆலோசனையும் செய்யவில்லை.

ஆனால் அன்று நால்வரின்  மனமும்  நிறைந்திருந்தது.


அந்த இரவு, திவ்யா தனது அறையில் அமர்ந்திருந்தாள்.

பழைய நாள்களிலே மன அழுத்தம் கொண்டிருந்த அதே இடம், இப்போது அமைதியானது.

ஜன்னலின் வழியே வெளியில் பார்த்தாள்.

பூங்காவில் சிறு குழந்தைகள் இன்னும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.சற்று நேரம் அவர்களைப் பார்த்து மகிழ்ந்து சிரித்தாள்.

அவள் நினைத்தாள்.

“நான் இப்போ கல்வியை வெற்றிக்காக படிக்கவில்லை,என் மகிழ்ச்சிக்காக படிக்கிறேன்.”

பல முறை இப்படி நினைத்தபின் உற்சாகமாக படித்தாள்.

அன்றிரவு  மனநிறைவுடன் தூங்கினாள் திவ்யா.


இப்போதெல்லாம் திவ்யா தன் மனதை ரிலாக்ஸ்ட் ஆக வைத்துக் கொண்டு படிக்கப் பழகிவிட்டாள்.அதுமட்டுமல்ல உணவை நிதானமாக ருசித்து சாப்பிடவும் பழகியிருந்தாள்.

பள்ளியில் எக்ஸாம் முடிந்தது.


அன்று அதிகாலை,  

சென்னையின் வானம் பொன்னிறமாக மாறிக் கொண்டிருந்தது.

நிறைய  வீடுகளில் படுக்கையிலிருந்து எழ  ஆரம்பிக்கும்  நேரம் அது

ஆனால் திவ்யாவின் வீட்டில் ஏற்கனவே காபி வாசனை காற்றில் பரவியிருந்தது.


வழக்கம்போல சமையலறையில் சரஸ்வதி  பாட்டுப் பாடிக் கொண்டே காபி தயாரித்தாள்.


பாட்டை கேட்டவுடன் திவ்யா எழுந்தாள்..

“இன்று தேர்வு முடிவுகள் வரும். நான் பயப்பட மாட்டேன்.

நான் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்தேன், எனவே நான் அமைதியாக இருப்பேன்.”

அந்த வார்த்தைகளை பல முறை தனக்குள் சொல்லிக் கொண்டாள் அவள் மனம் உறுதியடைந்தது.


முருகேசன் வெளியே தோட்டத்தில் இருந்தார்.

வீட்டின் முன் மல்லிகைச் செடிகள் மணம் வீசின.

அவரது கையில் நீர்த் தெளிப்பான், முகத்தில் புன்னகை.


அவள் சொன்னாள்:


“அப்பா, இன்று ரிசல்ட் டே. எனக்கு துளியும் பயம் இல்லை. என்ன வருதோ அதை ஏற்றுக்கொள்வேன்.” சிரித்தபடியே சொன்னாள்.

முருகேசன் அவளைப் பார்த்தார்.

அவரது கண்களில் பெருமையும், பாசமும் கலந்திருந்தது..

அவர்கள் இருவரும் காலை காற்றில் சின்ன நடைப்பயிற்சிக்கு சென்றார்கள்.

 பிறகு வீடு திரும்பியதும்

குளித்து பள்ளி்சீருடையில் தன் அறையைவிட்டு நிதானமாக வெளியே வந்து,

காலை உணவை ருசித்து சாப்பிட்டாள் திவ்யா.


பிறகு முதுகில் புத்தகப்பையும் முகத்தில் புன்னகையுமாக பேருந்தில்  ஏறினாள்.


திவ்யாவுக்கு பள்ளி இன்று உற்சாகமாக இருந்தது.

மாணவர்கள் ஒவ்வொருவரும் பெரிய எதிர்பார்ப்புகளுடன் டென்ஷனாக இருந்தார்கள்.

அருள்ப்ரியா ஆசிரியர் வழக்கம்போல புன்னகையுடன் வகுப்பிற்குள் வந்தார்.


“அன்பான மாணவர்களே, இன்று உங்களின் மிட்-டெர்ம் முடிவுகள்!”என்றார்.


வகுப்பில் ஒரு நிமிடம் அமைதி.

பிறகு சிறிய ஓசைகள் — “எனக்கு எவ்வளவு வரும்?” “நான் டாப்பரா?” போன்ற டென்ஷனான குரல்கள் மாணவர்களிடையே கேட்டன.


திவ்யா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவள் முகத்தில் ஒரு சமநிலை — பயமில்லை, எதிர்பார்ப்பும் இல்லை.

அவளது தோழி  அனன்யா மெதுவாக கேட்டாள்:


“திவ்யா, நீ எப்படி இவ்ளோ அமைதியாக இருக்கின்றாய்?”

“நான் என்னால் முடிந்ததை செய்தேன். அது போதும்,” என்று திவ்யா சிரித்தாள்.


“முன்னாடி உன்னைப் பார்த்தா பதட்டம் தான் தெரியும். இப்போ நிம்மதி தெரிகிறது.” 

என்று அனன்யா நெகிழ்ந்து சொன்னாள்:

திவ்யா புன்னகை செய்தாள்.


அருள்ப்ரியா ஆசிரியர் ஒவ்வொருவராக பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் பெயர் வந்ததும் சிறிது பதட்டமாக எழுந்தனர்.அவர்களின் முகம் இறுக்கமாக இருந்தது.


திவ்யாவின் பெயர் வந்தது.


“திவ்யா முருகேசன்.”

அவள் மெதுவாக எழுந்து சென்றாள்.

ஆசிரியர் தாளை கொடுத்தார்.

திவ்யாவின் தாளில் குறிப்பு இருந்தது.திவ்யா தன் இடத்திற்கு வந்து அமைதியாக வாசித்தாள்.

அதில்,

“மிக சிறப்பு. மனநிலை மாற்றமும்  பாராட்டத்தக்கது.”

திவ்யா அதை வாசிக்கும்போது அவளது கண்கள் நனைந்தன.

ஆசிரியர் சொன்னார்:


“மதிப்பெண் நல்லது, ஆனால் அதைவிட திவ்யாவை   மன  அமைதியுடன்  காண்பது எனக்கு மகிழ்ச்சி.திவ்யா, நீ பிற மாணவர்களுக்கு சிறந்த  முன் உதாரணம்.”

மாணவர்கள் அனைவரும் கைதட்டினார்கள்.


“நன்றி, மிஸ். நான் இப்போ சிரிக்க கற்றுக்கிட்டேன்.” என்றாள் என்று புன்னகையுடன்


“உன் சக மாணவர்களுக்கு அக்கறையுள்ள நல்ல தோழியாக நீ ஏதாவது சொல்ல விரும்பினால் என்ன சொல்வாய்?” ஆசிரியர் எதிர்பார்ப்புடன் பேசினார்.


நிதானமாக திவ்யா பேசினாள்.

“வெற்றி என்பது மற்றவர்களை விட மேலே ஏறுவது அல்ல; இப்படி செய்வதால் போட்டி மனப்பான்மையால் எப்போதும் மற்றவர்களுடன் நம்மை கம்பேர் செய்து நம் மனது நம்மை சோர்வில் தள்ளிவிடும். நம்மை விட உயர்ந்த திறமையுடன்  பலர்  இருப்பது இயல்புதான்.அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதேசமயம்  வெற்றியைப் பற்றிய நம் சிந்தனை மாறவேண்டும். நம்முடைய கடந்த காலத்தை விட   நிகழ்காலத்தில்  ஒரு சிறு முன்னேற்றம் செய்ய முடிந்தால் அது  கொண்டாடப்பட  வேண்டிய சிறந்த வெற்றிதான்.”

மாணவர்கள் கைதட்டி திவ்யாவை பெருமைகொள்ள வைத்தனர்.



அந்த மாலை, திவ்யா வீடு வந்ததும் கிருஷ்ணன் கதவைத் திறந்து ஓடி வந்தான்.


“அக்கா! ரிசல்ட் எப்படி?”


திவ்யா சிரித்து தாள் கொடுத்தாள்.

அவன் குதித்து, “வாவ்! நீ நல்லா பண்ணிட்டே!” என்று கத்தினான்.


அம்மா சரஸ்வதி வந்தாள்.


“அடா, என் மகளே! இதோ பாரு, உன் முகத்தில் ஒளி தெரிகிறதே!”


முருகேசன் பக்கத்தில் நின்று தாளை பார்த்தார்.

அவர் முகத்தில் பெருமை.


“திவ்யா, நம்ம வாழ்க்கை எல்லாம் மார்க் கார்டில இல்ல.

ஆனா, உன் தன்னம்பிக்கையில் இருக்கிறது.”


அவர் கையை அவளது தோளில் வைத்தார்.

அந்த தொடுதலில் ஒரு தந்தையின் முழு நம்பிக்கை இருந்தது.


சரஸ்வதி சிரித்தாள்:


“இப்போ நீ நம்ம குடும்பத்துக்கு ஒரு ஒளி மாதிரி. உன் மன அமைதி நம்ம எல்லாருக்கும் பரவுது.”


அந்த நேரத்தில் கிருஷ்ணன் காகிதம் எடுத்து கார்ட்டூன் வரைந்தான்:


“அக்கா சிரிச்சா சூரியன் கூட பொறாமை படுவான்!” ☀️


அனைவரும் சிரித்தார்கள்.

அந்த சிரிப்பு வீடு முழுவதையும் ஒளிரச் செய்தது.



அந்த மாலை, குடும்பம் மாடியில் அமர்ந்திருந்தது.

வானம் ஆரஞ்சு, காற்று மென்மையாக.

முருகேசன் கையில் தேநீர், சரஸ்வதி மல்லிகை மாலை தயாரித்து கொண்டிருந்தாள்.


திவ்யா சிறிது நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பிறகு மெதுவாக சொன்னாள்:


“அப்பா, மன அழுத்தம் எப்போ முழுமையாக போயிடும்?”


முருகேசன் புன்னகையுடன் சொன்னார்:


“அது ஒருபோதும் முழுமையாக போவதில்லை, கண்ணு.

ஆனால் அதைக் கையாள கற்றுக்கொண்டால் — அது நம்மை வலிமையாக்கும்.”


சரஸ்வதி சேர்த்தாள்:


“வாழ்க்கை கடினமா இருந்தாலும், மனம் அமைதியாக இருந்தால், அது எளிமையாய் மாறும்.”


அந்த வார்த்தைகள் திவ்யாவின் மனத்தில் ஆழமாக பதிந்தன.

அவள் மேலே பார்த்தாள் — வானில் நிலவு ஒளிரத் தொடங்கியிருந்தது.


அந்த இரவு திவ்யா தன் படுக்கையில் படுத்திருந்தாள்.

சுவரில் சிறிய இரவு விளக்கு — மஞ்சள் ஒளி.

அவள் கையில் அந்த டைரி.


அவள் எழுதியது:


“இன்று நான் வென்றேன்.

மார்க் காரணமில்லை, மன அமைதி காரணம்.”


அவள் சாளரத்தைத் திறந்து வெளியில் பார்த்தாள்.

சிறு காற்று அவளது முகத்தில் பட்டது.

அவள் மனம் முழுவதும் நன்றி நிரம்பியது.


மன அமைதி இல்லாமல் கிடைக்கும் வெற்றி, ஒரு சத்தமில்லாத வெற்றி.

ஆனால் அமைதியுடன் கிடைக்கும் வெற்றி — மனசு முழுவதும் இசை போல ஒலிக்கும். 🎶


“நான் இன்று அமைதியாக உறங்கப் போகிறேன்,” என்று அவள் மெதுவாக சொன்னாள்.














No comments:

Post a Comment