ஜன்னல்கள்…
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மிருணாளினி ஏனோ இப்போதெல்லாம் படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை.காலாண்டுத்தேர்வில் இரண்டு சப்ஜெக்டில் ஃபெயில் ஆகியிருந்தாள்.
ஒன்பதாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்ததிலிருந்தே ஒவ்வொரு நாளும் மிருணாளினியை நினைத்தாலேஅவளுடைய அம்மா ல்லிதாவுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.
வழக்கத்திற்கு மாறாக மிருணாளினி வீட்டிற்கு வந்ததுமே அவளுக்கு பிடித்த சிற்றுண்டிகளை கேட்டுக் கேட்டு செய்தாள் ல்லிதா.
அம்மாவின் இந்த மாற்றத்தை மிருணாளினி எதிர்பார்க்கவே இல்லை.
சுருட்டை முடியும் மெல்லிய உடல்வாகும் மாநிறமுமாய் இருக்கும் மிருணாளினி தன் அழகான கண்களில் ஆச்சர்யம் காட்டினாள்.
சென்ற வருடம் வரை ,மிருணாளினி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் சோபாவிலேயே புத்தகப்பையை அப்படியே வைத்தாலோ… சாக்ஸ்களை மூலைக்கு ஒன்றாக வீசினாலோ…பள்ளி ,யூனிபார்மிலிருந்து வேறு உடைக்கு மாறிய பின்பு அந்த பள்ளி யூனிஃபார்மை துவைக்கும் கூடைக்கு மாற்றாமல் இருந்தாலோ,தலைவாரிய சீப்பில் முடி அப்படியே இருந்தாலோ,சாப்பிட்ட தட்டை அலம்பாமல் அப்படியே சிங்கில் வைத்தாலோ அவள் அம்மா ல்லிதா கோபத்தின் உச்சிக்கே போய்விடுவாள்.
பொதுவாக மெதுவாகப் பேசும் ல்லிதா மேற்கூறிய விஷயங்களில் எதாவது ஒன்று நடந்தாலும் சத்தமாக கத்தி மிருணாளினியை திட்டுவது அந்த தெருவிற்கே கேட்கும்.ஆனால்,மிருணாளினி படிப்பில் கொஞ்சம் முன்ன பின்ன மதிப்பெண் எடுத்திருந்தால் அதிகம் திட்டாமல் ட்யூஷன் வைத்து விடுவாள் ல்லிதா.ட்யூஷனுக்கும் பொறுப்பாக அழைத்துப்போய் விட்டு மீண்டும் இவளே போய் அழைத்துவருவாள். இதனால் அம்மாவிற்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று மிக கவனமாக நடந்துகொள்வாள் மிருணாளினி.
வங்கியில் வேலை பார்க்கும் ல்லிதாவின் கணவன் சங்கருக்கு ல்லிதாவின் இந்த குணம் நன்றாகவே தெரியும்.ல்லிதா கட்டுப்பாட்டுடன் மகளை வளர்க்கிறாள் என்று சற்று நிம்மதியாக இருந்தான்.
இப்படியேபட்ட ல்லிதாதான் மிருணாளினியின் காலாண்டு தேர்வின் மதிப்பெண்ணைப் பார்த்துவிட்டு மிரண்டு போய்விட்டாள்.ட்யூஷனுக்குப் போய்க்கூட இரண்டு சப்ஜெக்ட்களில் பெயிலாகியிருந்தாள்.
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் மிருணானிணி முன்புபோல் பாடங்களை கவனிப்பதில்லை அவளும் பள்ளியில் இந்த வருடம் புதிதாக வந்து சேர்ந்திருக்கும் நிர்மலா என்ற பெண்ணும் வகுப்பறையில் சதா சர்வகாலமும் அரட்டை அடிப்பதாக சொன்னதும்
ல்லிதாவுக்கு மயக்கமே வந்தது. ஆசிரியர் இதை எதிர் பார்க்கவே இல்லை. மயங்கி விழுந்த ல்லிதா மயக்கம் தெளிந்து எழுவதற்குள் ஆசிரியருக்கு பதட்டமாகிவிட்டது.அந்த ஆசிரியர் நினைத்தார் சிறிய அதிர்ச்சியான செய்தியைக்கூட தாங்க முடியாத அளவு ல்லிதாவின் உடல் நிலை மோசமாக இருக்கிறதா? ஏதாவது ஆகியிருந்தால் பள்ளியின் பேர் கெடுவதோடு தானும் சிக்கலில் மாட்டியிருப்போமே என்று அவரும் கதிகலங்கி ல்லிதாவை தன் சொந்தச் செலவிலேயே டீ வாங்கி கொடுத்து ஆட்டோவில் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தார்.
அன்றிலிருந்தே ல்லிதா அடியோடு மாறிப்போனாள்.மிருணாளினியை திட்டுவதே இல்லை.
அந்த வீட்டில் எல்லாரும் டைனிங் டேபிளில் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் வழக்கம் இருந்தது.
ஆனால் அன்று இரவே மிருணாளினியின் அறைக்கே சென்று சாதம் ஊட்டினாள்.
வழக்கமாக மிருணாளினி வாசலை ஒட்டியிருந்த பெரிய அறையில் தான் படிப்பாள். அந்த அறையில் பெரிய ஜன்னல் இருந்தது. மறுநாளே அந்த ஜன்னலுக்கு ஏற்கனவே இருந்த திரைச்சீலைகளை எடுத்துவிட்டு அடர்நிறத்தில் புத்தம் புதிய திரைச்சீலைகளை வாங்கி மாட்டினாள்.அதுமட்டுமல்ல மிருணாளினி அந்த அறையில் படிக்கும் போதெல்லாம் அடிக்கடி அந்த ஜன்னலை வெளிப்பக்கம் போய்ப் பார்த்தாள். அது மூடியிருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.இனி போனே கிடையாது என்று மகளிடமிருந்து போனைப்பிடுங்கி வைத்தாள்.
முன்புபோல் எதற்குமே ல்லிதா கத்துவது இல்லை.
எல்லாவற்றிற்கும் மேல் மிருணாளினி அறைக்குள் படிக்கும் போதெல்லாம் வாசல்பக்கம் போய் ஜன்னல் அருகில் உட்காருவது ல்லிதாவின் வழக்கமாக இருந்தது.
இதை சில நாட்களாக கவனித்து வந்த சங்கர்.
“ல்லிதா,இப்போலாம் ஏன் ஒரு மாதிரி இருக்க “ என்று
மிருணாளினி ட்யூஷன் போயிருந்த போது சமையல் கட்டில் பரபரவென்று இரவு உணவை தயாரித்துக்கொண்டிருந்த ல்லிதாவை கனிவான குரலில் கேட்டான்.
அது வந்து… அது வந்து…
நீளமான தலைமுடியை அழுந்த வாரி பின்னலிட்டு வாசனையான மல்லிச்சரத்தை அளவாக சூடியிருந்த ல்லிதாவின் வகிடில் இருந்த குங்கும்ம் வியர்வைபட்டு லேசாக வழிந்து அதிக அகலம் இல்லாத அவளது நெற்றியில் ஏற்கனவே வைத்திருந்த மெருன் கலர் ஸ்டிக்கர் பொட்டிற்கு மேலே திலகம் போல நின்றது. மனம் அலைபாய்ந்து கொண்டிருந்ததால் கணவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அவளது மூச்சுக்காற்றில் நிதானம் இல்லாமல் புஸ் புஸ் என்று சத்தம் கேட்டது.
அவளைப் பரிதாபமாக பார்த்தான் சங்கர். எரிந்து கொண்டிருந்த கேஸ் அடுப்பை நிறுத்தினான்.அவள் கையிலிருந்த கரண்டியை மெதுவாக வாங்கி சிங்கில் போட்டான். அவளது கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான்.
அவளை தன் தோளில் சாய்த்தான்.முதுகை வாஞ்சையுடன் தடவினான்.
அவ்வளவுதான் இதற்காகவே காத்திருந்தது போல் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் ல்லிதா.
சங்கர் அவள் அழுவதை தடுக்கவில்லை.அவள் மனபாரம் தீர அவன் தோள்களில் சாய்ந்து அழுதாள்.
அவளுடைய அழுகை ஓய்ந்ததும் அவளை ஹாலுக்கு அழைத்துப் போய் சோபாவில் உட்கார வைத்து குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான்.
ல்லிதா கடகடவென்று ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீரை முழுமையாக குடித்துவிட்டு அவனைப்பார்த்தாள்.
அந்தப் பார்வையில் குற்றவுணர்ச்சி தெரிந்தது.
“என்ன ஆச்சும்மா?” ல்லிதாவின் இந்த நடவடிக்கைகள் சங்கருக்கே கொஞ்சம் பயமாக இருந்தது.
ஆனால் அவன் வெளிக்காட்டிக் கொள்ளவல்லை.
“அது வந்து….மிருணாளினி…அப்புறம் நிர்மலா…நிர்மலா…” அவள் பேச முடியாமல் திக்கித் திணறினாள்.
“ஆமாம்…மிருணாளினி நிர்மலா ரெண்டு பேரும் க்லாஸ்ல ரொம்ப பேசறாங்கனு டீச்சர் சொன்னாங்க. அன்னிக்கே நீ மயக்கம் தெளிஞ்சப்பரம்தான் வீட்டுக்கே வந்த.அப்பவே நான் உங்கிட்ட இத பத்தி பேசணும்னு நினைச்சேன்.எனக்கு ஆபிஸ்ல முக்கியமான வேலைல முழுகிட்டேன்.
இருந்தாலும் உங்கிட்ட நேரம் ஒதுக்கி நான் பேசியிருக்கனும்என் தப்புதான்.
இதோ பாருமா…குழந்தைங்க க்லாஸ்ல பேசறது சகஜம்தான். அவங்க மெஷின் கிடையாது.
அதுக்காக மயக்கம் போட்டு விழற அளவுக்கு பெரிய விஷயம் இல்ல.
நீ ஒரு பொறுப்பான அம்மா, வீட்டுல அவளோட போனை பிடுங்கி வச்சிட்ட.அடிக்கடி அவ ரூம்ல போய் நோட்டம் விடற. இப்போலாம் அவளும் மாறிட்டாமா.ஆனா நீதான் பழசயே நினைக்கற.
அதெல்லாம் சரி அவ படிக்கும் போது நீ ஏன் ஜன்னல்கிட்ட போய் உட்காந்துட்டு இருக்க.
எனக்கே ஒரே குழப்பமா இருக்குமா.” கொஞ்சம் பய்த்துடன் பேசினான் சங்கர்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினாள் ல்லிதா.
“நான் நைந்த்ல ஃபெயிலானவ. படிப்புல சுமார் தான்னு உங்களுக்கே தெரியும்.
அதுக்குக் காரணம்,நான் நைன்த் படிக்கும் போது எங்க ஸ்கூலூக்கு புதுசா வந்த நிர்மலாங்கற பொண்ணு தான்.அவ நல்லா படிப்பா. எங்க தெருலயே குடிவந்தா.எங்க வீட்டுல நான் வாசல்ல இருந்த அறைலதான் படிப்பேன்.நிர்மலா காலைல சீக்கிரம் எழுந்து படிச்சிடுவா.ஆனா நான் சாயங்காலம் தான் படிப்பேன்.அவளுக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் விளையாடனும்னு ஆசை.அதனால நான் படிக்கும்போது என் அறை ஜன்னல்கிட்ட வந்து உட்கார்ந்துப்பா.எங்கம்மா நான் படிக்கிறேனு நினைப்பாங்க.அவளும் நானும் கதை பேசுவோம்.இது எங்கம்மாவுக்கு இன்னிய வரைக்கும் தெரியாது. அதனால தான் என்னால கவனமா படிக்க முடியாம போச்சு.அதேமாதிரி இந்த நிர்மலாவும் இதே தெருவிலதான் இருக்கா.ஒரு வேளை நம்ம பொண்ணு படிக்கும்போது எனக்குத் தெரியாம வந்து இந்த ஜன்னல்கள் வழியா பேச்சுக்குடுத்து நம்ம பொண்ணொட கவனத்தை சிதற அடிச்சிடுவாளோனு கவலயாவும் பயமாவும் இருக்குங்க.” குற்றவுணர்ச்சியில் அவளுடைய கண்களின் கருவிழிகள் இங்கும் அங்கும் அலைந்தன.
அவளுடைய கைகளை மறுபடியும் ஆதரவாகப் பிடித்தான் சங்கர்.
“இதோ பார் ல்லிதா.நீ ஃபெயிலானப்பறம் அவமானமா இருக்கு ஸ்கூல் போக மாட்டேனு அடம்பிடிச்சியாம்.சரியா அந்த சமய்த்திலதான என்னோட பேங்கல் உங்க கிராமத்துக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சிது. தூரத்து சொந்தம்னு உங்க வீட்லதான மூணு வருஷம் தங்கினேன்.
மறுபடி எனக்கு சென்னைக்கு மாத்தலாச்சு.எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருந்துது.அதனாலதானே என் அண்ணாவ விட்டு பெண் கேட்க சொன்னேன்.
ல்லிதா…நானும் நிர்மலாவ பாத்திருக்கேன்.. ஆனா,உன் படிப்பு வீணாக போனது அவளாலனு இப்போ நீ சொல்லிதான் எனக்கே தெரியும்.நீ ஏன் இவ்ளோ பயப்படறனு இப்போதான் புரியர்து.
ஆனா,ஒண்ணு ல்லிதா.அந்த நிர்மலா வேற.இந்த நிர்மலா வேற.நீ ரெண்டையும் போட்டுக் குழப்பக் கூடாது.நீ எந்தக் காலத்துல இருக்க? குழந்தைங்க புதுசாக ஊர்மாத்தி வரும்போது புது ஊர் புது ஸ்கூல்னு கொஞ்சம் பயமா இருக்கும்ல? அதனால அந்த நிர்மலாவோட பயத்தைப் போக்கற ஒரு நல்ல தோழியா நம்ம பொண்ணு இருக்கானு நினைச்சிக்கோயேன்.ஆரம்பத்துல ஒரு க்யூரியாசிடில குழந்தைங்க அடிக்கடி பேசுவாங்க.அதனால கொஞ்சம் டிஸ்ட்ராக்ஷன் ஆகி மார்க் குறைஞ்சிருக்கு.
இதுக்குப்போய் அந்த டீச்சர் உன்ன இப்படி பயமுறுத்தியிருக்க வேண்டாம். அதுக்காக நீ கவலபடாத. ஏன்னா,உங்கம்மாவுக்கு உன் நிர்மலா விஷயம் தெரியாது.ஆனா,மிருணாளினியோட விஷயம் நம்ம ரெண்டு பேருக்குமே தெரியுமே.இதுதானே முக்கியம்.நீயும் இந்தக் காலத்துக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் மாறனும் ல்லிதா.
நம்மால மிருணாளினிய ஹேண்டில் பண்ண முடியாதா என்ன.
இப்படியா ஸ்கூல்ல மயக்கம் போட்டு விழர்து? .” அமைதியாகப் பேசிக்கொண்டே வந்த கணவனின் குரலில் திடீரென்று கொஞ்சம் கண்டிப்பு தோன்றியதும் மிரள மிரள பார்த்தாள் ல்லிதா.
அதனால் சட்டென்று தன் பேச்சை மாற்றினான் சங்கர்.
“சரி சரி,நீ இவ்ளோ பயப்படர்தால சொல்றேன்.
கிச்சன் பக்கத்துல இருக்கற கெஸ்ட் பெடரூமை மிருணாளினிக்கு படிக்கிற ரூமா மாத்திடறேன்.
வாசல் பக்கம் இருக்கிற இந்த ரூமை கெஸ்ட் பெட்ரூமா வச்சுக்கலாம்.என்ன சரியா?
நீ ஓடி ஓடி அந்த ஜன்னல்கள் கிட்ட நிக்கறத என்னிக்காவது நம்ம குழந்தை பாத்தா அவளுக்கும் குழப்பமா இருக்கும் இல்லயா?” சங்கரின் இந்த வார்த்தைகள் ல்லிதாவுக்கு பிடித்திருந்தது.
அவளுக்கு தன் கவலை சற்று குறைந்த மாதிரி இருந்தது.
அடுத்த வாரமே மிருணாளினியின் படிக்கும் அறை பின்பக்கம் போனது.
இப்போதெல்லாம் ல்லிதா ஜன்னலை நோக்கி ஓடுவதில்லை.
சங்கர் நிம்மதியாக தன் வேலைகளைப் பார்த்தான்.
எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்
அப்போது,கொரோனா அலை ஆரம்பித்தது.பள்ளிகள் மூடப்பட்டன.ல்லிதா நினைத்தாள் இனி நிர்மலா பிடுங்கல் பள்ளியிலும் இல்லை என்று.
ஆன் லைன் வகுப்புகள் ஆரம்பித்தன.
எல்லா குழந்தைகளின் முகமும் ல்லிதா வீட்டு கம்ப்யூட்டரில் தெரிந்தது.அங்கே நிர்மலாவும் தெரிந்தாள்.மிருணாளினிக்கு ஒரே சந்தோஷம்.நினைத்த நேரத்தில் மிருணாளினியும் நிர்மலாவும் அவரவர்கள் வீட்டிலிருந்தே முகம் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“இது எப்படிங்க எல்லா குழந்தைகளும் நம்ம கம்ப்யூட்டர்ல ஒரே டயத்துல தெரியறாங்க?” அப்பாவியாக்க் கேட்டாள் ல்லிதா.
“அதுதான் டெக்னாலஜி” பெருமிதமாக சொன்னான் சங்கர்.
“அது என்ன டெக்னாலஜி” அவள் குரலில் குழப்பம் இருந்தது.
“அது தான் இன்டர்நெட்…எனக்குலாம் எங்க பேங்க்ல எப்பவோ ட்ரெய்னிங் குடுத்துட்டாங்க.ஐயா..இதுல கிங்காக்கும்…நமக்கு கல்யாணம் ஆனதும் முதல் ரெண்டு வருஷம் ஓடினதே தெரியல.மூணாவது வருஷத்துலேந்து குழந்தை குழந்தைனு ஏங்கின்டு இருந்தோம்.
நீ கவலைல இருந்த.அதனால,உன்னை கம்ப்யூட்டர் கத்துக்கோ.பொழுது போக்கா வெளில கவல மறந்து போனமாதிரி இருக்கும்.நாலு விஷயம் தெரிஞ்சின்ட மாதிரியும் இருக்கூன்னு சொன்னேன்.
அப்போ எங்கம்மாவும் அப்பாவும் எதுக்குடா அலைச்சல் அவளுக்குனு தடுத்தா.நான் அவா பேச்சை மீறி
என் பொண்டாட்டிக்கு வெளி உலகம் தெரியனும் அப்படீனு ஒரு கம்பயூட்டர் சென்டர்ல பணம் கட்டிட்டு வந்தேன்.ஆனா நீ என்ன சொன்ன உங்கம்மா சொல்றதுதான் சரி.இப்போ படிப்பை விட ஆரோக்யமா இருந்து குழந்தை பெத்து அதை நன்னா வளத்து ஆளாக்கர்துதான் முக்கியம்னு சொன்ன.உனக்கு ஆர்வமில்லனு நானும் விட்டுட்டேன்.அப்படியே பன்னென்டு வருஷம் கழிச்சித்தான் மிருணாளினி பொறந்தா.அப்புறமும் நீ புது விஷயங்களை தெரிஞ்சிக்க நீ ஆர்வமே காட்டலயே. குழந்தை குழந்தைனு வாழ்ந்துட்ட.உனக்காகவும் வாழனும் ல்லிதா.நல்லவேளை இப்போவாவது தெரிஞ்சிக்கனும்னு தோணித்தே உனக்கு.அதுவே ரொம்ப சந்தோஷம்.இப்போ உனக்கு தெளிவா புரியற மாதிரி சொல்றேன் பாரு…
அதாவது கம்ப்யூட்டர்களை இணைக்கர்து தான் இன்டர்நெட்னு பேரு. இப்போ நாம்ப யூஸ் பண்ற கம்ப்யூட்டர இயக்கர்தே விண்டோஸ் அப்படின்ற ஆப்பரேடிங் சிஸ்டம்
அதுல என்னனா…” என்று தன் மனைவியின் மனதை இப்போதாவது கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள தூண்டி விட வேண்டும் முடிவு செய்த சங்கர்.
அவளுக்குத்தெளிவாக புரிய வைப்பதற்காக தனக்குத் தெரிந்த கம்ப்யூட்டர் அறிவை உற்சாகமாக விளக்கிக்கொண்டே போனான்.
சற்று நேரம் அமைதியாக கவனித்தாள் ல்லிதா.
திடீரென்று அவள் கண்களில் குழப்பம் தெரிந்ததை புரிந்து கொண்ட சங்கர்.
“ஒரே நாள்ல எல்லாத்தயும் கத்துக்க முடியாது ல்லிதா.குழப்பமாகத் தான் இருக்கும்.எனக்கே ஒரு வருஷம் ஆச்சுன்னா பாரேன்.ஒண்ணும் ப்ரசனை இல்ல.தினமும் பேங்க்லேந்து வந்ததும் ஒருமணிநேரம் உன் கூட உக்காந்து சொல்லிகுடுக்கறேன்.உன்னால முடியும்னு மட்டும் நீ நம்பினா போதும்.நான் இருக்கேன் சரியா?” அவள் முதுகை தடவிகொடுத்து ஆதரவாக பேசினான் சங்கர்.
ஆனால்,
“ஒரு சந்தேகம் எனக்கு “ என்றாள் ல்லிதா.
அவனுக்கு உற்சாகம் அதிகமானது.
“வெரிகுட் உன்னோட ஆர்வம் இப்போ எனக்கு புரியர்து.கேளு எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன்.ஒரு வேளை எனக்கு தெரியலேனா தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு சொல்றேன்.” அனுசரணையாக பேசினான் சங்கர்.
அதனால் தைரியம் வந்தது ல்லிதாவுக்கு…
“ஆமாம்….
இன்டர்நெட்னா நிறைய கம்ப்யூட்டர்களை சேக்கர்துனு சொல்றீங்க.அது சரிதான்.
ஆனா,எனக்கு தெரிஞ்சி விண்டோன்னா ஜன்னல்னு தான் அர்த்தம். அப்போ விண்டோஸ்னா ஜன்னல்கள்னு தானே அர்த்தம். மிருணாளினியோட ரூம்லயாவது ஒரே ஒரு ஜன்னல்தான் இருக்கு.அத என்னால கண்காணிக்க முடியும்.ஆனா, கம்ப்யூட்டர்ல பல ஜன்னல்கள் இருக்கும் போலிருக்கே. இத்தனையும் நான் எப்படி கண்காணிக்கப்போறேனோ தெரியலயே” என்று சொல்லிவிட்டு கண்கள் சொருக மயங்கிய ல்லிதாவை கைத்தாங்கலாக அழைத்துப்போய் சோஃபாவில் படுக்கவைத்தான் சங்கர்.