பாசத்தின் எல்லைகள்
இருளென்னும் கருப்புக்கம்பளியில் சூரியன் தன் கதிர்களை மெதுவாக சுருட்டிக் கொண்டிருக்கும் மாலை நேரம் அது.அந்த வீட்டின் வாசலில் ரம்யா நின்றிருந்தாள். மாநிறமாய் நீளமான கண்களும்
அகல நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டுக்கு மேலே குடையாய் குங்கும்ம் வைத்திருந்தாள்.
செதுக்காத புருவ மத்தியில் புதிதாக தோன்றிய சந்தேகத்தால் முடிச்சு விழுந்திருந்தது. அவளது கண்களில் பரபரப்பு இருந்தது. ஐந்து நிமிட காத்திருப்பு ஐந்து யுகம்போல தெரிந்தது ரம்யாவுக்கு.ஆம். அவள் தம்பி ஆனந்தின் வரவுக்காக்க் காத்திருக்கிறாள்.
ஆனந்துக்கும் ரம்யாவுக்கும் பத்து வயது வித்தியாசம்.
உடல்நலமில்லாத அம்மா,பாசத்துக்கு ஏங்கும் சிறுவன் ஆனந்த்.குடும்பத்தை சமாளிக்க திணறும் அப்பா.இவர்களுக்கு நம்பிக்கை ஒளியே ரம்யாதான்.
ரம்யாவின் அம்மாவுக்கு உடல்நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிகொண்டே வந்ததால் ப்லஸ்டூ முடித்ததுமே சொந்தத்தாய் மாமனை திருமணம் செய்து வைத்தார்கள்.
திருமணம் முடிந்ததுமே தன் அம்மா ,அப்பா , தம்பி மூன்று பேரும் குடியிருந்த வீட்டிற்கு எதிர்விட்டிலேயே ரம்யாவும் அவள் கணவரும் குடிவந்தார்கள்.
திருமணமான முதல் வருடத்திலேயே ரம்யாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.பெயர் அர்ஜுன்.
அர்ஜுனுக்கு ஒரு வயதாகும்போது ரம்யாவின் அம்மா இறந்துவிட்டார்.
பிறகு ரம்யா ஆனந்துக்கும் தாயானாள்.திடீரென்று அப்பாவும் மறைந்ததும் அர்ஜுனுடன் ,ஆனந்தையும் தன் சொந்தப்பிள்ளையாகவே தன் வீட்டிலேயே வைத்து வளர்க்க ஆரம்பித்தனர். ரம்யாவும் அவள் கணவரும். தற்போது டிகிரி முடித்த ஆனந்த் வேலையில் சேர்ந்து ஆறுமாதமாகிறது.
இந்த சூழ்நிலையில்தான் சென்றவாரம் திடீரென்று ரம்யாவிடம் ஒரு விஷயம் சொன்னான் ஆனந்த்.
“அக்கா, நான் ல்லிதாவை விரும்புகிறேன்…”என்று இதைக்கேட்டதும, ரம்யா திகைத்தாள்.
தம்பிக்கு பொருத்தமான பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்துவைக்கும் உரிமை பறிபோனதாக உணர்ந்தாள். இந்த காதல் திருமணத்தில் அவளுக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. தன்னைவிட அவன் மேல் அக்கறை கொண்டவர்கள் யார் இருக்க முடியும். அவன் உலகமே நான்தானே.நான் அக்கா இல்லை அவனுடைய அம்மா என்று நினைத்து அக்கறையோடு அவனை வளர்த்தவள் அவள்.
அர்ஜுன் கூட ஆனந்த் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான்.
அதேசமயம் ல்லிதாவை ரம்யாவிற்கு நன்றாகவே தெரியும்.நல்ல குடும்பம்.புத்திசாலி பெண்.அமைதியானவள்.பார்த்ததும் பிடித்துவிடும் அழகிதான்.ஆனாலும்,ரம்யா சொன்னாள்.
தம்பியிடம்
“ல்லிதா நல்ல பொண்ணுதான் ஆனந்த். .… ஆனா …இவள்தான் உனக்கு சரியான ஜோடினு முடிவே பண்ணிட்டியா ? நல்லா யோசிச்சி பாரேன்.” மனதில் தன் தம்பியை பிரிந்துவிடுவோமோ என்ற கவலை அவளை ஆட்டிப்படைத்தது.ல்லிதா அவன் மனதிற்குள் வந்து தன் இடத்தை பிடித்துவிட்டதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அழுதுவிடுவாள் போல இருந்தது. அவளது குரலில் அன்பும் சிறு பதட்டமும் கலந்து இருந்தது.
ஆனந்த் , “அக்கா, நீ தான் எனக்கு தாயும் வழிகாட்டியும். நீ ஒப்புக்கொண்டால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.உன் சம்மதம் இருந்தால் மட்டுமே இந்த திருமணம் நடக்கும்.நான் ல்லிதாவிடம் வாக்குறுதி எதுவும் கொடுத்துவிடவில்லை.என் அக்கா சம்மதம் கொடுக்கும்வரை நாம் காத்திருப்போம் “ என்று சொல்லிவிட்டேன்.”என்றான்.ரம்யாவிற்கு சிறிது நிம்மதி பிறந்தாலும் பதட்டம் குறையவில்லை.இவனுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து கூட
திருமணம் செய்யலாம்.ஆனால்,அந்த இரண்டு வருட காலமும் தம்பி வெளியில் கிளம்பினாலே சந்தேகம் வரும்.தேவையில்லாத மனக்குழப்பம் ஏறபடும் என்று யோசித்தவள்.கணவரிடம் பேசிவிட்டு அரைகுறை மனதுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.
தள்ளிப்போடாமல் பெண் வீட்டாரிடம் பேசினாள். பிறகு தன் வீட்டு பக்கத்திலேயே தம்பிக்கு வீடும் பார்த்து நிச்சயம் முடிந்ததும் ல்லிதாவின் கையாலேயே பால் காய்ச்ச வைத்தாள். எல்லாம் வேகமாக நடந்து முடிந்தது.
இன்று,திருமணத்திற்கு மண்டபம் பார்க்க தம்பிக்காக்க்வாசலிலேயே காத்திருக்கிறாள். தம்பி வேலையிலிருந்து வந்ததும் தம்பிக்கு சாப்பிடக்கொடுத்தாள். அவன் சாப்பிட்டதும் இருவரும் வெளியே கிளம்பினார்கள்.
சில நாட்களில் திருமணம் நல்லபடியாக முடிந்தது. ரம்யா தான் மகிழ்ச்சியாக இருப்பது போல வெளியில் காட்டினாலும் உள்ளே ஏதோ ஒரு வெற்றிடத்தை உணர்ந்தாள்.அவளது மனதில் ஒரு சிறு ஒலி —“ல்லிதா என் தம்பியை என்னைவிடவா அக்கறையாக கவனித்துக் கொள்வாள்” என்று தோன்றியது ரம்யாவிற்கு.
ல்லிதா தன் புதிய குடித்தனத்தை ஆரம்பித்தாள்.
எல்லோரையும் மரியாதையுடன் பார்த்தாள்.நிதானமாக யோசித்து பேசினாள்.
“அக்கா” என்று ரம்யாவை அழைக்கும் போது அந்த வார்த்தையில் பாசம் இருந்தது.
ஆனால் ரம்யாவுக்குள் ஒவ்வொரு நாளும் மனதில் பாசப் போராட்டம் எழுந்தது.
ஆனந்த் தன்னுடைய வீட்டிற்குப் போய்விட்டான்.
“இப்போதெல்லாம் அவன் சாப்பிடும் சாப்பாட்டை ல்லிதா தானே தயாரிக்கிறாள்…”
அக்கா தன் தம்பியின் மீது வைத்திருந்த அதீத பாசம், பொறாமையாக ஆனது.
அதனால் ஒவ்வொரு மாலை நேரமும் ல்லிதா சமையலறையில் இரவு உணவு செய்து கொண்டிருக்கும் போது ரம்யா அங்கே வந்துவிடுவாள்.
வேலைக்குப் போய்விட்டு வந்த ஆனந்த் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பான்.
“ஆனந்த், சாப்பாடு சாப்பிட்டாயா? இன்னுமா சாப்பிடல? முகமெல்லாம் வாடியிருக்கு.இப்போலாம் நீ சரியா சாப்பிடரதே இல்லனு உன் வாடிப்போன முகத்த பாத்தாலே நல்லா தெரியுது.?” ரம்யாவின் குரல் மென்மையானதுதான், ஆனால் அதில் ஒரு கட்டுப்பாடு, ஒரு கவனிப்பு, பார் “நான் தான் உன்னை கவனிக்கிறேன்” என்ற வலிமையான செய்தி அதில் இருந்தது.
ல்லிதா சமையலறையிலிருந்தாலும், இந்த வாரத்தைகள் அவளது உள்ளத்தில் சுருக்கென்றது.
“இந்தக் கதை எப்போதும் இப்படியே தொடருமோன்னு தெரியலயே … என் கணவர், நான் இங்க இருக்கிறேனா இல்லையானு கூட யோசிக்க மாட்டார் போலிருக்கே.தன்னோட அக்கா எப்போதுமே கூடவே இருந்து தன்னை பார்த்து, நன்றாக கவனித்துக் கொண்டிருப்பார்னு நினைக்கிறாரோ.” ல்லிதாவின் உள்ளத்தில் அந்த நினைவு ஒரு பயமாக மாறியது.
அவள் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், மனதில் சிறு பதட்டம்.
“நான் தானே இவருக்கு முக்கியமானவள். ஆனால் அவரோட பாசத்தில் நான் இடம் பெற முடியாதோ?”என்று குழம்பினாள் ல்லிதா.
ரம்யாவால் தினமும் அங்கு வராமல் இருக்கவே முடியாது.
“தம்பி சாப்பிட்டானா? ல்லிதா நீ அவனை சரியா பாரத்துக்கிறயா?” என்று கேள்விகள் மழை போல பெய்யும்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை,காலைநேரம்,ஆனந்த் தூங்கிக்கொண்டிருந்தான்.
ல்லிதா ஆனந்தை தொந்தரவு செய்யாமல் தானே காய்கறி வாங்க கடைத்தெரு போகத் தயாராக இருந்தபோது, ரம்யா வீட்டுக்குள் வந்தாள்.
“ஆனந்த், தூங்கறயாப்பா?நீ இப்படி டயர்டாக இவ்ளோ நேரம் தூங்கினதே இல்லயே.
புரத சத்து உடம்புக்கு ரொம்ப முக்கியம். பட்டாணி சூப் சாப்பிடணும்.ரம்யா,கடைக்கு தானே போற பட்டாணி வாங்கிட்டு வந்து தம்பிக்கு சூப் வச்சிக்குடுமா”
ரம்யா அன்போடு தான் சொன்னாள்., ஆனால் ல்லிதா அதைப் பார்த்து சிரித்தாலும் மனதில் சிறு கலக்கம்.
“இவள் அக்காவா அம்மாவா?”
அரவிந்த் அந்த அக்கா பாசத்தால் பிணைக்கப்பட்டவன்..அவனுக்கு அதில் எந்த தவறும் தெரியாது.
ஆனால் ல்லிதாவுக்கு அந்த பாசம் மெதுவாக மன அழுத்தமாக மாற ஆரம்பித்தது.
ல்லிதா தனக்குள் சொல்கிறாள்:
“இந்த வீட்டில் என் கணவனுக்கு இரண்டு உலகங்கள் — ஒன்று நான், இன்னொன்று அவன் அக்கா.
எது அவனுக்கு முக்கியமோ எனக்குத் தெரியவில்லையே…”
ஒரு நாள் இரவு ல்லிதா ஆனந்திடம் மெதுவாக சொன்னாள்:
“உங்க அக்கா உங்க மேல ரொம்ப அன்பா அக்கறையா தான் இருக்காங்க… ஆனா சில சமயம் என்கிட்ட எதுவுமே பேசாம நேரா உங்க வாழ்க்கைல அவங்கதான் முக்கியம்ங்கற மாதிரி நடந்துக்கறாங்க.” என்றாள்.
ஆனந்த் அதைக் கேட்டுவிட்டு ,
“அக்கா என்ன சொன்னாலும் அது எனக்கு அம்மாவின் வார்த்தை மாதிரி. நீதான் அவங்கள புரிஞ்சுக்கணும்.அவங்க என்னை வளத்தவங்க”என்று சொல்லிவிட்டான்.
ல்லிதா புன்னகை செய்தாள். ஆனால் அதற்குப் பின்னால் ஒரு காயம் இருந்தது.
💐💐💐💐💐
ஒருநாள் ,மாலை ல்லிதா கோயிலுக்குப் போயிருந்தாள்.
அன்று ஆனந்துக்குத் தலைவலி என்று சீக்கிரமே வந்துவிட்டான்.
அவனைப் பார்த்ததும் ரம்யா ஆனந்த் வீட்டுக்கு வந்தாள்.
“ஆனந்த் , நீ சாப்பிட்டாயா? என்று அவனுக்கு காபி போட்டு கொடுத்து தலைவலி மாத்திரை கொடுத்து அவனை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு பக்கத்திலேயே கவலையுடன் உட்கார்ந்துவிட்டாள் ரம்யா.
திரும்பி வந்த ல்லிதா ரம்யாவின் பாசத்தை பார்த்து வியந்து போனாள்.
“அக்கா,நீங்க கவலபடாதீங்க.இனி நான் பாத்துக்கறேன்” என்றாள்.
“என் தம்பி தூங்கி எழுந்துக்கற வரை எனக்கு நிம்மதியில்லை.”என்று கவலையுடன் தம்பிக்கு தலையை அழுத்திவிட்டுக் கொண்டிருந்தாள் ரம்யா.
“இவள் இப்போதும் எதற்காக இவ்வளவு பாசம் காட்டுகிறாள்… நான் தான் இங்கே இருக்கேனே.”
ல்லிதா மனசில் பதற்றம், சிறு குற்ற உணர்வு.
அந்த தினம் இரவு, ல்லிதா வெற்றிட உணர்ச்சியுடன் ஆனந்திடம் பேசினாள்.
“அக்காவின் பாசம் உங்களுக்கு நல்லதேன்னு நினைக்கிறேன், ஆனா அந்த பாசம் சில சமயம் எனக்கு பயம் தருது. நீங்க என்னோட கணவன், நான் தான் உங்களுக்கு முக்கியமாக இருக்கனும்.”என்றாள்.
ஆனந்த் சிரித்தான்,
“அக்கா செய்தது எல்லாம் என் மேலிருக்கும் அன்பாலதான். நீ அதனை தவறாக எடுத்துக் கொள்ளாதே.அது எனக்கு ரொம்ப முக்கியம்” என்றான்.
அந்த இரவு, ல்லிதாவிற்கு தூக்கம் வரவில்லை. அவள் மனதில் குழப்பங்கள் மின்னல் போல் தோன்றின.
ஒரு வாரம் கடந்தது.ஒரு நாள் மதியம்
ல்லிதாவிற்கு அப்பாவிடமிருந்து போன் வந்தது.
“அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லை.ல்லிதாவின் அண்ணன் மனைவி ஒரு அவசர விஷயமாக அவளுடைய பிறந்த வீட்டிற்குப் போயிருக்கிறாள்.
தன்னால் தனியாக சமாளிக்க முடியாத சூழ்நிலையாக இருப்பதால் இங்கு வர முடியுமா?“
என்று ல்லிதாவிடம் கேட்டார். அம்மாவை நினைத்து ல்லிதா மனம் கலங்கினாள்.
கணவனிடம் போன் செய்து கேட்டு சொல்வதாக சொன்னாள் ல்லிதா.
உடனே ஆனந்துக்கு போன் செய்தாள்.
“நீ உடனே போய் அம்மாவை பாரு ல்லிதா. “என்றான் ஆனந்த்.
“உங்கள தனியா விட்டுட்டு போகனுமேனு தயக்கமா இருக்குங்க” என்றாள் ல்லிதா.
“அக்கா தான் இருக்காங்களே — என்னை அவங்க நல்லாவே கவனிப்பாங்க.என்னை பத்தி கவலயே படாம நீ உடனே கிளம்பு ல்லிதா ” என்றான் ஆனந்த்.
இந்த இக்கட்டான சூழலில் ரம்யாவின் ஆதரவு ல்லிதாவுக்கு தைரியத்தை கொடுத்தது.அக்கா இருப்பதால்தானே என்னால் என் அம்மாவிற்கு சரியான சமயத்தில் உதவமுடிகிறது என்று நன்றியுடன் நினைத்தாள் ல்லிதா. அதேசமயம் கணவனின் வார்த்தைகள் “உன்னை நம்பி நானில்ல.” என்று சொல்லாமல் சொல்லுகின்றாரா என்ன இப்படி உள்ளுக்குள் ஒரு சின்னக் கசப்பாய் உணர்ந்தாள்.
ல்லிதா போன பின் ரம்யா மீண்டும் தம்பியின் வீட்டில் பழைய ரீதியில் உதவிகளைச் செய்யத் தொடங்கினாள். அவனுக்கு சாப்பாடு, காபி — எல்லாம் நேரம் தவறாமல் செய்தாள்..
ஆனந்த் மனதிலும் பரம திருப்தி.
ல்லிதா ஊரிலிருந்து போன் செயதாள்.
“அம்மாவிற்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது.அண்ணி இன்னும் வரல.அதனால ஒரு பத்து நாள் தங்கி அம்மாவுக்கு உதவியாக இருந்துவிட்டு வரலாம்னு பார்க்கிறேன்.நீங்கள் என்ன சொல்றீங்க?”
என்றாள்.
“மாமி நல்லா உடல்நிலை தேறி வர்ற வரைக்கும் பக்கத்துல இருந்து அவங்கள நல்லா கவனி.
என்னைப் பற்றி கவலைப் படாதே.அக்கா என்னை நல்லா பாத்துப்பாங்க.நான் நல்லாதான் இருக்கேன்.மாமா,மாமிய நான் விசாரிச்சதாக சொல்லு.” என்று ஆனந்த் ஆதரவாக பேசினான்.
“சரிங்க. நானும் உங்க அக்கா குடும்பத்த ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க “ என்று சொல்லி போனை வைத்தாள் ல்லிதா.
ல்லிதாவிற்கு ரம்யாவின் மேல் பாசமும் பரிவும் ஏற்பட்டது.ஊருக்குத் திரும்பி போகும்போது அக்காவுக்கு எதாவது வாங்கிட்டு போகனும் என்று முடிவெடுத்தாள்.
ஆனால்,ஆனந்தோ
“என் அக்கா தான் என் ஆதாரம்.” என்று அக்கா வீட்டிலேயே போய் தங்கி இருந்துவிட்டான்.
அக்காவிற்கும் மகிழ்ச்சி.
ஒருவாரம் கழிந்தது.ரம்யாதான் அவ்வப்போது போன் செய்து ஆனந்திடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
ஒரு நாள்,திடீரென்று ஆனந்திற்கு ஜுரம் வந்தது.
டாக்டரிடம் போய் மாத்திரைகள் வாங்கி வந்தான்.அக்காவும் அவனை நன்றாகத்தான் கவனித்தாள்.
ஆனால்,ஜுரம் குறையவே இல்லை.
பயந்துபோன ரம்யா மீண்டும் மருத்துவமனை சென்றாள்.ப்லட் டெஸ்டில் டைபாய்ட் என்று தெரிந்தது.
வீட்டில் தனியறை கொடுத்து தம்பியை நன்றாக கவனித்துக் கொண்டாள்.
இந்த நேரத்தில் ல்லிதாவை தொந்தரவு செய்யவேண்டாம் நாமே சமாளித்துவிடலாம் என்று அக்காவும் தம்பியும் முடிவெடுத்தார்கள்.ல்லிதா போன் பேசும்போது எல்லாரும் நல்லா இருக்கோம் என்று சொல்லி போனை வைத்துவிடுவான் ஆனந்த்.
ஆனால்,திடீரென்று ஒருநாள் பள்ளி சென்ற ரம்யாவின் மகன் அர்ஜுன் விளையாடும்போது தலையில் அடிபட்டு விட்டதாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாக பள்ளியிலிருந்து தகவல் வந்தது. ரம்யா ஆஸ்பத்திரிக்கு ஓடினாள்.
அன்று இரவு முழுவதும் அர்ஜுன் கண்விழிக்கவில்லை. பதட்டத்தில் சாப்பிடாமல் தூங்காமல்
அழுதபடி அந்த ஆஸபத்திரி வராண்டாவில் பழியாக கிடந்தாள் ரம்யா. ரம்யாவின் கணவரும் மனம் முழுக்க பதட்டம் இருந்தாலும் வெளிக்காட்டாமல் அங்கேயே இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் தான் அர்ஜுன் கண்திறந்தான்.அப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது.
மகன் விஷயத்தில் மனம் சற்று தெளிந்தாலும் தம்பியின் ஞாபகம் வந்து அவளை வாட்டியது.அவன் இராத்திரி என்ன சாப்பிட்டானோ தெரியலயே என்று தவித்தாள்.
ஆனால்,தன்மகனை அந்த நிலையில் தனியாக விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பிவர அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.
தம்பியையும் மகனையும் நினைத்து வேதனைப்பட்டாள்.ல்லிதாவிற்கு போன் செய்து வரச்சொல்லிவிடலாம் வேறு வழியே இல்லை என்று அக்காவும் மாமாவும் முடிவெடுத்த போது,
ல்லிதா கையில் சாப்பாட்டு கூடையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தாள்.
“ல்லிதா நீ எப்பம்மா வந்த? தம்பிய பாத்தியா அவன் சாப்பிட்டானா?அவன் எப்படி இருக்கான். உடம்பு சரியில்லாத என் தம்பிய தனியா விட்டுட்டு வந்துட்டேன்” என்று அழுதாள் ரம்யா.
“கவலபடாதீங்க அக்கா, நான் நேத்து மத்தியானம் அவருக்கு போன் பண்ணேன்.அர்ஜுனுக்கு அடிபட்டதால காலைலயே நீங்க ஆஸ்பத்திரிக்கு போனதயும் ,அவருக்கும் உடம்பு சரியில்லனும் சொன்னார். நான் எல்லாத்தயும் எங்கப்பாகிட்ட சொன்னேன்.
“இங்க அம்மாவ பாத்துக்க அண்ணிய வரசொல்றேன்.எங்கள பத்தி கவலபடாம முதல்ல உன் குடும்பத்த போய்ப் பாரும்மானு சொல்லி உடனடியா வாடகைகார்ல என்னை அனுப்பி வச்சிட்டார் எங்கப்பா. நேத்து இராத்திரி நான் வீட்டுக்கு வந்தேன் அக்கா.வந்ததுமே உங்க தம்பிக்கு கஞ்சி போட்டு குடுத்தேன். மருந்தும் குடுத்தேன். இராத்திரிலாம் உங்கள பத்திதான் பேசிக்கிட்டே இருந்தார்.ரொம்ப லேட்டானதால என்னால ராத்திரி தனியா இங்க வர முடியல. காலைல அவருக்கு இட்லி செஞ்சு குடுத்துட்டு மருந்தும் குடுத்தேன்.உங்க தம்பி உங்களோட இந்த சூழ்நிலைல அவரால எந்த உதவியும் செய்ய முடிலயேனு நினைச்சி ரொம்ப கவலபடறார் அக்கா.நான் உங்களுக்காகவும் இட்லியும் சாம்பாரும் ,காப்பியும் கொண்டு வந்திருக்கேன் அக்கா” என்றாள் ல்லிதா .இருவருக்கும் மாற்றுத் துணியும் கொண்டு வந்திருந்தாள்.அவர்கள் அங்கிருந்த பாத்ரூமில் முகம் அலம்பி துணி மாற்றினார்கள்.பிறகு வற்புறுத்தி அவர்களை சாப்பிட வைத்தாள் ல்லிதா.
வயிறு நிறைந்ததும் அவர்களுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.
“முதல்ல உன் குடும்பத்த பாரும்மா “ என்ற ல்லிதாவின் அப்பா சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து ரம்யாவிற்கு கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
“ல்லிதா… நான் தம்பி கூட ஒண்ணாவே வாழ்ந்துட்டதால சில சமயம் என் மனசு அதீத பாசத்துக்கு அடிமை ஆகுதுமா.என் பிள்ளைக்கு கஷ்டம்னதும் தம்பிய அப்படியே விட்டுட்டு இங்க என் பிள்ளைய தேடி ஓடி வந்துட்டேன் நான். ஆனா ரம்யா, நீ ஆனந்துக்காக உன் அம்மாவ விட்டுட்டு ஓடி வந்திருக்க. நீயும் உன் குடும்பத்தாரும் கிடைச்சது நாங்க செஞ்ச புண்ணியம்மா.
இப்போ எனக்கு நல்லா புரியிது ஆனந்துக்கு நான் அக்கா மட்டும் தான். அம்மா இல்ல. நீதான் அவனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை. நீங்க ரெண்டுபேரும் இணைந்து நல்லபடியா குடும்பம் நடத்தி சந்தோஷமா இருக்கணும்.அதுதான் என்னோட உண்மையான மகிழ்ச்சி.நானும் என் குடும்பமும் உங்களுக்கு எப்பவும் ஆதரவாகத் இருப்போம்மா”
இப்போது ல்லிதாவின் கண்களிலும் கண்ணீர். அவள் அந்த நொடியில் அக்கா ரம்யாவைக் கட்டித்தழுவினாள்.
“அக்கா, அவருக்கு நீங்க அவரோட தாயா இருந்தது மாதிரி, இனிமேலும் நாம எல்லாரும் ஒரே குடும்பம் தான் . நீங்க எனக்கும் அம்மா மாதிரிதான்.” என்றாள் ல்லிதா.
அவர்கள் வாழ்க்கையின் கடினமான அந்த தருணத்தில் இருவருக்குள்ளும் வலுவான பாசப்பிணைப்பு உருவாகியது. மனசஞ்சலத்தில் இருந்த ரம்யாவையும் அவள் கணவரையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தாள் ல்லிதா.
அதேசமயம்,
வீட்டில் இருந்த ஆனந்த் மனதிலும் ஒரு எண்ணம் எழுந்தது:
“அவள் என் அன்பான அக்கா. அவள் பாசம்… எல்லா நேரத்திலும் எனக்கு பாதுகாப்பை தருவது உண்மைதான்.என் அன்பான அக்காவின் குடும்பம் என்றுமே நன்றாக இருக்க வேண்டும்.ல்லிதாவின் அப்பா சொன்னதுபோல இனிமேலாவது என்னை நினைத்து எதற்கும் கவலைப்படாதே. நீ உன் குடும்ப நலனுக்கே முக்கியத்துவம் கொடு என்று நான்தான் என் அக்காவிடம் சொல்லவேண்டும்.
என் குடும்பமும் அக்கா குடும்பமும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவேண்டும்.
தன் அம்மாவின் நலனைவிட என் நலனை முக்கியமாக நினைக்கும் என் மனைவி ல்லிதா தான் என் அன்பான வாழ்க்கைத் துணை.இதுதான் என் குடும்பம்.இனிமேல் ல்லிதாவின் அன்பை மிக உயர்வாக மதிக்க வேண்டும்.அவளுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கைத் துணையாக நானும் மாறவேண்டும்.” என்று தீர்மானித்தான் ஆனந்த்.