Friday, March 30, 2018

சிறகுகள் சுமையாவதில்லை




ஐந்து மணி நேரமாக  நீண்ட வரிசையில் கால் கடுக்க காத்திருந்த தீபன் ஒரு வழியாக கவுண்டரை அடைந்தார்....

கவுண்டரில் இருந்த சத்யன், "ரெக்கார்டஸ் எல்லாம்  கொடுங்க சார்... வெரிஃபை பண்ணனும்..." என்று  நிமிர்ந்து தீபனை உற்று பார்த்துவிட்டு... "சார் நீங்களா?! நீங்க எங்க சார் இங்க?!"

தன்னார்வ தொண்டு நிறுவனம்  மாற்றுத் திறனாளிகளுக்கு சொந்தமாக தொழில் தொடங்க உதவித்தொகை வழங்குமிடத்தில் தன்னுடைய மதிப்பிற்குரிய உடற்கல்வி ஆசிரியர் தீபன் அவர்களை பார்த்ததும் சத்தமாக கேட்டு விட்டார் சத்யன்...

ஆனால் சத்யனை அடையாளம் கண்டுகொள்ள முடியாத தீபன் சற்று தடுமாறி... "எனக்கு நீங்க யாருன்னு தெரியல....  மன்னிச்சிக்கோங்க... நான் கொஞ்சம் அவசரமாக போகணும்..." என்றார். அதற்கு மேல் ஆசிரியரை ஒரு கேள்வியும் கேட்காமல் அவருக்கு வேண்டியதை செய்துவிட்டு... "மணி இந்த கவுண்டரை கொஞ்சம் பாத்துக்கோங்க..." என்று சொல்லிவிட்டு தீபன் அறியாமல் அவரை பின் தொடர்ந்தான் சத்யன்.

சத்யன் படித்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் தீபன். விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள சிறந்த பயிற்சியளிப்பார். பள்ளியில் மாணவர்கள் பிறருக்கு உதவும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்....

தினமும் உடற்பயிற்சி  செய்து உறுதியான உடம்பினை உருவாக்கினால் தான் கடினமாக உழைத்திட முடியும்

அது போலவே  மனதை வலுவாக்க சேவை மனப்பான்மையை சிறுவயதிலேயே மனதில் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழ்வின் மிக கடினமான சூழ்நிலைகள் நம் மனதை பாதித்து விடாமல் சேவை மனப்பான்மை புது சிறகுகளாகி துன்பங்களை தாண்டி கடந்திட உதவும் என்று அடிக்கடி கூறுவார்.

நிறைய ஏழை மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடை வாங்கி கொடுத்து உதவுவார். சில மாணவர்களுக்கு மருத்துவ உதவி கூட செய்திருக்கிறார். மாணவர்களையும் சமூக சேவைகளில் ஈடு படுத்துவார்.

வங்கியில் பணி புரிந்துவரும் சத்யன் ஓய்வு நாட்களில் தன்னார்வ தொண்டில் தன்னை ஈடு படுத்திக்கொள்ள முக்கிய காரணமே இவர் தான்.

தற்போது, ஆசிரியர் தீபன் சோர்ந்த கண்களுடன் உடல் இளைத்து, சற்றே அழுக்கான உடையுடன் வாரப்படாத தலையுமாய்.... ஆனால், நடையில் அதே வேகத்துடன் தெருமுனையை அடைந்தார்.

அந்த தெருமுனையில் இருந்த பேருந்து நிறுத்தத்தின் திண்ணையில் கணவன் மனைவி போல் தோற்றமளித்த  இருவர், காலை இழந்த நிலையில்  ஊன்றுகோல்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பையை கொடுத்த ஆசிரியர் அவர்களை அங்கு வந்த ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

அருகில் சென்ற சத்யன்... "சார்..." என்றதும் திரும்பி பார்த்தவரின் முகத்தில் அதிர்ச்சி "என்ன தம்பி?" என்றார்.

"சார், நான் உங்க ஓல்டு ஸ்டுடன்ட்... உங்களுக்கு என்னால் சேவை செய்ய முடிந்தால் மகிழ்வேன் சார்"

சற்று இறுக்கமான முகத்துடன் "வேண்டாம் தம்பி... ரொம்ப நன்றி... இவ்வளவு தூரம் பின் தொடர்ந்து வந்த உங்களின் தங்கமான மனசுக்கு இறைவன் உங்களை நன்றாக வாழ வைக்கட்டும்..." என்று கைகளை கூப்பிவிட்டு, வந்து நின்ற பேருந்தில் ஏறி சென்று விட்டார் ஆசிரியர்.

ஆசிரியரின் இந்த நிலையை கண்டு மனம் வருந்தியவாறே...  என்ன ஆச்சு இவருக்கு? இப்படி இருக்க மாட்டாரே.... ஆயிரம் கேள்விகளுடன்  திரும்பிய சத்யன், தன் மேசையில் அவர் மறந்து வைத்துவிட்டு சென்ற பையை கவனித்தான். பையில் ஆசிரியரின் முகவரி கிடைக்குமோ என்ற ஆவலுடன் திறந்தபோது அதில் பல மருந்து சீட்டுகளுடன் பழைய செய்தித்தாளில்  வந்த ஒரு  செய்தியும் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தது.  அந்த செய்தியை படித்த சத்யனின் கண்கள் குளமாகின.

அந்த செய்தி.....

                   "பிரேக் சரியாக வேலை செய்யாததால் கட்டுப்பாட்டை இழந்து தறி கெட்டு ஓடிய கார் கைப்பிடி சுவரில் மோதி பிளாட்பாரம் மீது ஏறியது. அவ்வழியே சென்று கொண்டிருந்த  லட்சுமி தீபன் (50) மற்றும் அவரது ஒரே மகன் திலீப் (25)  ஆகியோர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். பிளாட்பாரத்தில் படுத்துறங்கிய கணவன் மனைவி படுகாயம்."

                                         ****************

Thursday, March 22, 2018

பாட்டி கதை


"கனகாவுக்கு இன்னுமா கல்யாணம் பண்ணல?  பத்து வயசு ஆயிடுச்சே... " உறவினர்களின் வார்த்தைகளுக்கு விடையளிப்பது போல்  இரண்டே மாதத்தில் கல்யாணத்தை நடத்தினார் கனகாவின் தந்தை.

"ஏன்டி! குதிராட்டம் வளந்து இருக்க...  சிந்தாம சிதறாம வேலை செய்ய தெரியலையே...." திருமணம் முடிந்த மறுநாளே  மாமியார்  அங்கலாய்க்க  பளிச்சென்று  வேலைகளை செய்ய  பழகினாள் கனகா.

சமையல், வீட்டு பராமரிப்பு, உறவினர்களை உபசரிப்பது எல்லாவற்றையும் உற்சாகமாக செய்ய பழகி கொண்டாள்.

"எட்டு குழந்தைகள் அம்போன்னு உன் கணவர் விட்டுட்டு போய்ட்டாரே... மாமியாருக்கு வேற கண்ணு தெரியல... எப்படி தான் இதுகள கரையேத்த போறயோ?" ஊராரின் ஏளன பேச்சு காதில் எதிரொலிக்க.... கல்யாண சமையல்களுக்கு எடுபுடி வேலை பார்த்தவாறே கடைசி பிள்ளையின் குழந்தைகள் வரை வளர்த்து ஆளாக்கிவிட்டார் கனகா.

காலம் வேகமாக ஓடி கனகா பாட்டியின் நடையை தள்ளாட வைத்தன...ஆனால் உழைத்து வலுவான உடலும் மனமும் சற்று ஒத்துழைத்ததால்...

காலிங் பெல் சத்தம் கேட்டு தன்னுடைய பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்த பாட்டி கனகா....
மிக மெதுவாக நடந்து....கதவை திறந்தால்... பள்ளியிலிருந்து  தன் மகளை  அழைத்து வர  சென்றிருந்த   முதல் மகனின் மருமகளும் மூன்றாம்  வகுப்பு படிக்கும் பேத்தியும் நின்றிருந்தனர்....

மருமகள் வீட்டிற்குள் சென்றுவிட பேத்தி மட்டும் பாட்டியின்  அருகில் வந்தாள். அவளுடைய கண்கள் சிவந்து அழுதது போல இருந்தது.

"என்னடா கண்ணு? அழுதியா என்ன?"

"ஆமாம் பாட்டி... கணக்கு தப்பா போட்டுட்டேன்னு டீச்சர் திட்டிட்டாங்க... "

"டீச்சர்னா அப்படிதாம்மா கண்டிப்பாங்க.... உன் நல்லதுக்கு தானே சொல்றாங்க.... இதுக்கெல்லாம் அழ கூடாது...."

தலையை தடவியவாறு பாட்டி கனகா சொல்ல...

"நீ எப்பவும் இப்படி தான் பாட்டி சொல்லுவ...  உனக்கு என்னோட கஷ்டம்லாம் புரியாது...  ஏன்னா... நீ பழைய ஜெனரேஷன்..." என்று சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் உள்ளே சென்ற பேத்தியை  கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார்  பாட்டி கனகா.