Monday, April 24, 2017

அச்சம் தவிர்


தூக்கு கயிற்றின் முனையில் நின்றிருந்தாள் சங்கவி...
இதோ இன்னும் சிறிது நேரத்தில் தூக்கு கயிறு அவள் கழுத்தை முத்தமிட காத்துக் கொண்டிருக்கிறது...
சங்கவிக்கும் சதிஷு க்கும்   திருமணமாகி மூன்று நாட்களே ஆகியிருந்தது...

கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது சங்கவிக்கு.தூக்கு கயிற்றை உற்று நோக்கினாள்.

தொலைபேசி  ஒலித்தது.பதறிவிட்டாள்.ஒருவேளை அது சற்றுமுன் பேசியவனாக இருக்குமோ? தொலைபேசியை எடுக்க துணிவில்லை அவளுக்கு.

ஒரே மகளான தன்னை மிகுந்த கட்டுப்பாடுகளுடனும் பாசத்துடனும் வளர்த்த அப்பா,அம்மாவிற்கு பெருத்த அவமானம் இது. வெளியூர் சென்றிருக்கும் சதீஷின் பெற்றோர் நாளை வந்த பிறகு  இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார்களோ?

புது தாலிக்கயிறு கழுத்தில் உறுத்தி மனதில் ஏக்கமும் கொடுத்து  சித்ரவதை செய்தது.பெற்றோருக்கு கடிதம் எழுதி வைக்கலாமா? யோசித்துவிட்டு  நடந்ததை  காகிதத்தில் பாதி எழுதிக்கொண்டிருக்கும் போதே...

தொலைபேசி மீண்டும் ஒலித்தது. சங்கவிக்கு போன் எடுத்து பேச துணிவில்லை.

சதீஷிடம் சொல்லலாமா? என்று நினைத்தாள்.ஒருவேளை சதீஷ் தன்னை தவறாக  நினைத்து விட்டால் ?

அவமானப்பட்டு நிற்பதை விட உயிரை  விடுவதே மேல் என்று  மீதி கடிதத்தை கண்ணீருடன் முடித்துவிட்டு கழுத்தில் சுருக்கு  கயிற்றை மாட்டிய அதே நேரம்....

டிங் டிங்.... வாசலில் மணியடித்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்? கண்களை துடைத்துக்கொண்டு  வந்து வாசல் கதவை திறந்தாள் சங்கவி.

வெளியில் அப்பா,அம்மா,சதீஷ் இவர்களுடன் ஒரு புதியவனும் வந்திருந்தான்.
'
 "இவர் பேர் வாசு" உள்ளே வந்ததும் அப்பா சொல்ல....

வா..ஆ ..சு.... ஊ ...பெயரை கேட்டதும் பயமும் நடுக்கமும் அதிகமாகிட  நிற்கவே  முடியாமல் மயக்கம் போட்டு விழுந்தாள்  சங்கவி.

கண்விழித்த  போது படுக்கையில் படுத்திருந்தாள. மின்விசிறியில் கட்டியிருந்த தூக்கு கயிற்றை காணவில்லை.  சதீஷ்  சங்கவியின் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டான்.அம்மா அவளுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார்கள்.வாசு மிகவும் வருத்தமாக காணப்பட்டான்.

சங்கவியின் தலையை  வருடிவிட்ட  அப்பா  தன்  குரலை மென்மையாக்கி  பேசினார்  ,"சங்கவி,இவன் நம்ம பக்கத்து  தெரு பையன் பெயர் வாசு.
சங்கவின்னு பெயர் கொண்ட ஒரு பெண்ணும்  இவனும் காதலிச்சிருக்காங்க.. மா.. .அவங்களுக்குள்ள ஏதோ பிரச்னை. அதனால வாசு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான்.  ஆனால் இவன்  நண்பனோ நீதான் அந்த சங்கவின்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு எப்படியோ இந்த போன் நம்பர் வாங்கி  உன் கணவனிடம் எல்லாத்தையும் சொல்லிடுவேன்னு உன்னை மிரட்டி இருக்கான்...மா.  வாசுவுக்கு விஷயம் தெரிஞ்சதும் உன்கிட்ட சாரி சொல்வதற்காக  உனக்கு  போன் பண்ணிருக்கான்.. மா...ஆனா  நீ எடுக்கல. என்னிடம் ஓடிவந்து சொன்னான். நான்  போன் பண்ணியும் நீ  எடுக்கல மா. அதான் மாப்பிள்ளைக்கும் போன் செய்து சொல்லிட்டு... பதட்டமாகி ஓடிவந்தோம்மா.  உன்னோட புகுந்த வீடும்   ஒரே ஊராக அமைந்ததால்  நீ உயிர் பிழைத்தாயம்மா, படிச்ச பொண்ணு தைரியமாக ஒரு பிரச்னையை சமாளிக்காம இப்படி எங்களைவிட்டு போகப் பாத்தியேம்மா" தவிப்புடன் பேசினார்  அப்பா.

"என்னை மன்னிச்சிடுங்க சகோதரி" என்று கெஞ்சினான் வாசு.

கோழைத்தனமான  தன்  முடிவால் அன்பான பெற்றோரும், கணவனும்  வருந்துவதைக் கண்டு மனம் நொந்தாள் சங்கவி.இனி துணிவோடு வாழ உறுதி எடுத்தாள்.


Monday, April 17, 2017

பாசம் எனும் வேலி!




"எனக்கு அவன் யாருன்னே தெரியாது என்னை நம்புங்கப்பா... " என்று அழுதாள் சுமதி!
" யாருன்னே தெரியாமலா பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி உன்னை லவ் பண்றேன்னு சொல்லிருக்கான்...அம்மா இல்லாத பொண்ணுனு செல்லம் கொடுத்து வளர்த்தது எவ்ளோ பெரிய தப்பா போச்சி...இனி நீ காலேஜுக்கு போக வேணாம் நீ படிச்சி கிழிச்சதெல்லாம் போதும்... "" அப்பா என்னை நம்புங்கப்பா... எனக்கு அவன் யாருன்னே தெரியாதுப்பா... எனக்கு இது கடைசி வருடம்பா நான் படிக்கணும்பா... " கதறினாள் சுமதி!" வீட்டை விட்டு வெளியே போனேனா காலை உடைப்பேன்... "என்று சொல்லி சுமதியை உள்ளே வைத்து அறையை பூட்டினார் ராஜன்!சுமதி காய்ந்த சருகைப் போல் அறையின் மூலையில் சுருண்டு கிடந்தாள்!

சரிந்து விழுந்து அழுத சுமதி அங்கிருந்த அம்மாவின் புகைப்படத்தை பார்த்து....

''அம்மா, நீங்களும்  அப்பாவும் பெரியவர்களை மதித்து நடக்க எனக்கு கற்றுக்கொடுத்தீர்கள்.ஆனால் அப்பாவுக்கு இன்று அவர் வளர்ப்பிலேயே நம்பிக்கை போய்விட்டது,அம்மா. நீங்கள்   உயிருடன் இருந்திருந்தால்  என் மனதை நன்கு அறிந்திருப்பீர்கள் . இந்த உலகில்  தாயில்லா  பிள்ளைகளுக்கு ஆதரவு  தந்தை  தான். அவரே என்னை வெறுத்துவிட்ட பிறகு  எப்படி வாழ்வேன் நான்? திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அதனால் உங்களிடமே வந்துவிடுகிறேன் அம்மா....''

பலவாறு அழுது  புலம்பியபடி கண்ணீர் கண்களை மறைக்க ஒரு நோட்டுப்புத்தகத்தை திறந்து
''அன்புள்ள அப்பாவுக்கு ''என்று
கடிதம் எழுத துவங்கினாள்  சுமதி.

...........

திடீரென்று ....
படபடவென கதவு தட்டும் ஓசை....
திடுக்கிட்டு எழுந்து எழுதிக்கொண்டிருந்த  நோட்டுப்புத்தகத்தை அவசரமாக மறைத்து வைத்து  விட்டு  வேகமாக ஓடிவந்து  கதவை திறந்த ராணியை

''என்னடீ திருட்டுத்தனத்தை  மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா ? அப்பா கிட்ட சொல்லட்டுமா ?''
 மேசையின் அடியில் ஒளித்து வைத்து  இருந்த நோட்டுப்புத்தகத்தை சந்தேகமாக பார்த்துகொண்டே  மிரட்டிய அம்மாவிடம்...

"அம்மா தயவுசெய்து அப்பாகிட்ட சொல்லாதீங்கம்மா ....சிறுகதை போட்டியோட கடைசி நாள்மா இன்னிக்கு. முடிவு  எழுதிட்டேன் அம்மா...பத்து நிமிஷத்துல பதிவு பண்ணிட்டு படிக்க ஆரம்பிச்சிடுறேன் அம்மா.இனி எல்லா  பரீட்ஷையும்  முடிந்த பிறகுதான் அடுத்த கதை எழுதுவேன் அம்மா. என்னை நம்புங்கம்மா ....'' கெஞ்சி கொண்டிருந்தாள் ராணி.