அப்பா ஏற்றிய அற்புத விளக்கு
அன்று வெள்ளிக் கிழமை மாலை நேரம்.அந்த பள்ளிக்கூடத்தில் பள்ளி நேரம்முடிந்து எல்லா மாணவர்களும் வீட்டிற்கு போய்விட்டார்கள்.
ஆனால் அனைத்து ஆசிரியர்களும் 7ம் வகுப்பு A செக்ஷன் வகுப்பறையில்மாணவர்களுக்கான நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள்.
சற்று நேரத்தில் ஆசிரியர்கள் அனைவருக்கும் சூடான காபியும் சுடச்சட சமோசாவும் வழங்கப்பட்டிருந்தது. சூடான நுரை த்தும்பும் காபியை ஒரு சிப் குடித்துவிட்டு சமோசாவை புதினா சட்னியில் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே ஒருவரோடு ஒருவர்சிரித்துப் பேசிக் கொண்டும் இருந்தார்கள்.
பத்து நிமிடங்கள் ஓடிவிட்டன.தலைமை ஆசிரியர் திலகம் உள்ளே நுழைந்தாள்.
நீளமாக இருந்தாலும் முக்கால்வாசி நரைத்துவிட்ட தலை முடியை
பின்னல் போட்டுக் கொண்டு மடிப்பு கலையாத காட்டன் புடவைக்கு மேட்சான கலரில் நீளமான கைவைத்த ரவிக்கை அணிந்துகழுத்தில் தங்கத்தில் சரடும் கைகளில் மெல்லிய தங்க வளையல்களும் எந்த முகப்பூச்சும் இல்லாத முகத்தில் நெற்றியில் ஸ்டிக்கர்பொட்டும் கண்ணாடி அணிந்த கண்களில் மிளிரும் தன்னம்பிக்கையுமாய் தலைமை ஆசிரியர் திலகம் கம்பீரமாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.மற்ற ஆசிரியர்களுடன் கலந்து பேச ஆரம்பித்தாள்.
வரவிருக்கும் பள்ளி ஆனுவல் டே செலிபிரேஷனுக்காக மாணவர்களை தயார் செய்யும் மீட்டிங் அது.
நாலரை மணிக்கு ஆரம்பித்து ஐந்தரை மணிக்கு முடிய வேண்டிய மீட்டிங் ஐந்து முக்கால் வரை நீண்டது.
ஒருவழியாக ஆறு மணிக்கு மீட்டிங் முடிந்து ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறினர்.வெளியே வந்ததும் அவரவர் மொபைல் போனைமறுபடியும்ஆன் செய்து கொண்டு தன் குடும்பத்தினருடன் பேச ஆரம்பித்தனர்.பலரும் தங்கள் டூவீலர்களில் வீட்டிற்குப் பறந்துவிட ஒருசில ஆசிரியர்கள் ஷேர் ஆட்டோவிற்கு தெண்டச்செலவு செய்ய வேண்டியதை நினைத்தவாறே காத்திருந்தனர்.
தலைமை ஆசிரியை திலகம் கடைசி ஆளாக பள்ளியை விட்டு வெளியறிய பிறகு வயதான பள்ளி வாட்ச்மேன்கேட்டைப்பூட்டினார்.திலகத்தின் முகம் சரஸ்வதி கடாஷத்தால் பலமடங்கு பொலிவுடன் விளங்கியது. திலகம் பிறந்த ஊரும் இதுதான். இங்கேயே அவள் சொந்தமாக வாங்கிய 1500 சதுரடி தனிவீடு செவ்வக வடிவில் அகலம் குறைவாகவும் நீளம் அதிகமாவும் இருந்தது. வீட்டில் நுழைந்ததும் ஒரு சின்ன வரவேற்பரை அங்கு டீவி போன் சற்று சிறிய சைஸ் சோஃபா மீன் தொட்டி என்று வாங்கிப்போட்டிருந்தாள். இடதுபுறமாக அட்டாச்ட் பாத்ரூமுடன் ஒரு படுக்கையறை அதன் எதிரில் வலதுபுறமாக ஒருடைனிங் ஹால்.டைனிங்ஹால் தாண்டி ஒரு சமயலறை அதன் எதிர் பக்கமாக மற்றொரு பெட்ரூம்.பினபக்கம் துணிஉலர்த்த பெரிய பால்கனி.
பக்கத்தில்தான் வீடு என்பதால் மெதுவாக நடந்த திலகம் பேருந்து நிறுத்தத்தில் தன் பெயர் அடிபடுவதை கவனித்து ம் கவனிக்காத்து போல முகத்தை வைத்துக் கொண்டு காதுகளை மட்டும் தீட்டினாள்.
“ நம்ம திலகம் மேடம் எவ்ளோ மெதுவா நடந்து போறாங்க பாரேன்.முப்பத்து வருஷத்துக் மேல இங்கயே வேல பாக்கறாங்களாம். நிறைய ஏழைக் குழந்தைகளுக்கு குறிப்பா பெண் குழந்தைகள் படிக்க உதவிகள் செய்யறாங்களாம். பக்கத்துலயே சொந்த வீடு. குடுத்து வச்சவங்க. நினைச்சத நடத்திக் காட்டறாங்க.” என்றது ஒரு பெண் ஆசிரயரின் குரல்.
“ஆமாம்.அவங்களால நிறைய பெண்குழந்தைகள் வாழ்க்கைல முன்னேறி அரசாங்கத்துல நல்ல பதவிகள்ல கூட இருக்காங்க” அந்தஇரண்டு ஆசிரியர்களின் வார்த்தைகளைக் காதில் வாங்கியும் கவனிக்காதவள் போல முகத்தை வைத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கிகம்பீரமாக நடந்தாள் திலகம்.
வீட்டில் அவளுக்காக பல மாணவர்கள் வெளி வாசலில் காத்திருந்தனர்.இவளைப் பார்த்ததும்
“வணக்கம் மேடம்” என்றனர்.
அவர்களைப் புன்னகையுடன் பார்த்தவாறே கேட்டை வேகமாக திறந்து முதலில் மாணவர்கள் உள்ளே அனுப்பிவிட்டு மீண்டும் கேட்டைபூட்டினாள்.
மாணவர்கள் இடது புறத்தில் வெறுமனே மூடியிருந்த அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே போனார்கள்.
அந்த அறைக்குள் உள்ளே நுழைந்தால் நுழைவாயிலின் இடது புறத்தில் சுவரைஒட்டி மாணவர்களின் லஞ்ச் பேக் வைக்க பெரியஅலமாரி இருந்தது. சற்று தள்ளி கொஞ்சம் சென்டரான இடத்தில் ஆசிரியருக்கான நாற்காலி அதற்கு முன்பக்கம் பெரிய மேஜையும்சற்று தள்ளி எதிர்ப்புற சுவரோரமாக ஆசிரியர் மட்டுமே பயன்படுத்த பூட்டபட்ட சிறிய அலமாரியும் இருந்தது.
பின்புற சுவற்றில் இரண்டு முனைகளிலும் ஆணியில் மாட்டிய வளையத்தில் கருப்பு வர்ணத்தில் நீள் செவ்வக வடிவ போர்டு இருந்தது.
நுழைவாயிலின் வலது பக்கத்தில் வெளிர் நீல வர்ணத்தில் மாணவரகளுக்காக தனித்தனியான எழுதும் மேஜைகளும் நாற்காலிகளும்இருந்தன. ஒவ்வொரு மேஜைக்கும் அடியில் புத்தகங்கள் வைக்க வசதி செய்யப் பட்டிருந்தது.
உள்ளே போன மாணவர்கள் லைட்டையும் பேனையும் ஆன் செய்து அங்கிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.
வீட்டிற்குள் போய் உடைமாற்றிக் கொண்டு கை கால் முகம் அலம்பிக் கொண்டு பூஜையறையில் காமாட்சி அம்மன் விளக்கையும்பக்கத்திலிருந்த அகல் விளக்கையும் ஏற்றிவிட்டு மாணவர்களின் அறைக்குள் வந்தாள்.
ஆனால் முப்பது வருடங்களுக்கு முன் திலகம் இப்படியா இருந்தாள்?
திலகம், மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள்.அவள் தன்னுடைய இளம் வயதிலேயே அன்னையை இழந்துவிட்டாள். மூத்தபெண்ணான அவளுக்கு ஒரு தம்பி ஒரு தங்கை இருந்தார்கள்.எட்டுக்குடித்தனங்கள் கொண்ட ஒண்டுக் குடித்தன வீடுதான்அவர்களுடையது. அவளுடைய தந்தை ராமனாதன் கல்யாணங்களில் எடுபிடி வேலைகள் செய்து வந்தார்.
திலகம் படிப்பில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் அவளுடைய அப்பா அவளை நன்கு படிக்க வைத்தார்.
அழகான களையான முகமும் சற்று பூசினார் போன்ற தேகமும் தன்னம்பிக்கை சுடர்விடும் கண்களுமாய் இருந்தாள் திலகம் .
பொறுப்புடன் படித்த திலகம் பள்ளிப் படிப்பை முடித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் பயிற்சிக்கு சேர்ந்து படித்துமுடித்ததும் , அதிர்ஷ்டவசமாக சொந்த ஊரிலேயே ஒரு பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் வேலையும் கிடைத்தது. மேற்கொண்டு தம்பிதங்கைகள் படிக்க அவள் உதவி செய்தாள்.திலகம் அளவிற்கு அவர்கள் கவனமாக படிக்கவில்லையென்றாலும் அவர்களைஊக்கப்படுத்தி படிக்கவைத்தாள்.தானும் தொலை தூரக் கல்வியில் மேற்கொண்டு படித்தாள்.
வீட்டு வேலைகளையும் பள்ளி வேலைகளையும் உற்சாகத்துடன் செய்தாள்.
திலகம் வேலைக்குச் சேர்ந்து ஓரிரு வருடங்கள் ஆயின.
ஒரு நாள் காலையில் கையில் ஜாதகமும் கூடவே ஒரு கடிதமும் வைத்துக் கொண்டு அப்பாயோசனையோடு இருப்பதைப்பார்த்ததிலகம் “அப்பா என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“திலகம் ,நாம ஏழையா இருந்தாலும் சரஸ்வதி அருளால உனக்கு வேல கிடைச்சிருக்கு.ப்ரோக்கர்கிட்ட உனக்கு பொருத்தமான ஜாதகமா வந்தா சொல்லச் சொன்னேன்.அவர் இந்த ஜாதகத்த அனுப்பிர்க்கார்.
கூடவே லெட்டர்ல.. பையன் பேர் முரளி.பக்கத்து ஊர்தான்.தாய்க்கு ஒரே பிள்ளை.சொந்த வீடு இருக்கு. தாலுகா ஆபிஸ்லகுமாஸ்தாவா இருக்கார். அவங்க சீர்வரிசைகள் எதுவும் எதிர்பார்க்கலயாம் கல்யாண செலவுகளையும் அவங்களே ஏத்துக்கறாங்களாம்.ஆனா… ஏற்கனவே திருமணமாகி தலைப்ரசவித்திலயே பொண்டாட்டி குழந்தைய இழந்தவர்னு எழுதியிருக்கார்.”அப்பா சொன்னதும் திலகத்திற்கு முரளியை நினைத்துப்பாவமாக இருந்தது.
“அப்பா,பக்கத்து ஊராக இருந்தா உங்களயும் என்னால அடிக்கடி வந்து பார்க்க முடியும்.ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் அவருக்கு நாம ஏன் ஆறுதலாக இருக்கக்கூடாது?.அதனால எனக்கு சம்மதம் தான் அப்பா” என்றாள் அவளாகவே.
“சரி பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு சும்மாவே இருந்த அப்பாவிடம் பத்துநாட்கள் கழித்து திலகமே வந்தாள்.
“அப்பா,நம்ம வீட்லயும் எனக்கு அப்புறம் ரெண்டு பேர் இருக்காங்க.அவங்கள படிக்க வச்சி கல்யாணம் பண்ணி குடுக்கனும்.இந்தமாப்பிள்ளை வீட்டுலயோ எதயும் எதிர்பார்க்கல.கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்கு போறதுக்கு மட்டும் சம்மதிச்சா போதும்பா.” என்று மறுபடியும் அப்பாவிடம் சொன்னாள்.
அந்த ப்ரோக்கரிடம் இது பற்றி விசாரித்தார் அப்பா.அவர்கள் சம்மதித்ததும் கல்யாணம் செய்து வைத்தார். சீர்வரிசைகள் எதுவும்எதிர்பார்க்காமல் கல்யாண செலவுகளையும் முரளியே ஏற்றுக் கொண்டான்.
முரளி மாநிறமாக பார்க்க சுமாராகவும் சாதாரண உயரமும் சற்று பருமனாகவும் இருந்தான்.
துக்கத்தில் இருக்கும் கணவனுக்கு தான் தனிமையில் இருக்கும் போது ஆறுதல் சொல்லவேண்டும் என்று காத்திருந்த திலகத்திற்குஆச்சர்யமாக இருந்தது.
ஆனால்,திருமணத்திற்குப் பிறகு முதல் மனைவியைப் பற்றி ஒரு வார்த்தை கூட திலகத்திடம் முரளி பேசவில்லை.
முரளியின் மனம் தான் இழந்த வாழ்க்கையை முற்றிலும் மறந்து தனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை உயர்வாக நினைக்கத்துவங்கியிருந்தது.இதுதான் அவனுடைய குணமும் கூட.
திலகமும் தானாகவே இதுகுறித்து கேட்டு ஒருவேளை அவன் மீண்டும் துக்கமாகிவிட்டால்
என்ன செய்வது என்ற யோசனையால் இதுபற்றியெல்லாம் பேசாமலேயே இருந்துவிட்டாள்.
திலகமும் முரளியும் அன்னியோன்னியமாக வாழ்ந்தார்கள். ஊரார் எல்லோரும் திலகம் செய்த பூஜைகளின் பலனாகவே அவளுக்கு மிகநல்ல கணவன் கிடைத்துவிட்டான் என்று பேசினார்கள்.
ஏற்கனவே பிறந்த ஊரில் ஆசிரியர் பணியில் இருந்த அதே பள்ளிக்கு கணவன் வீட்டிலிருந்து பஸ்ஸில் வந்தாள் திலகம். ஒருநாள்திலகத்தின் மாமியார் நெஞ்சுவலி என்று சொல்லி ஆஸ்பத்திரிக்குப் போகும் வழியில் இறந்துவிட்டாள். முரளிக்கு ஆதரவாகதிலகத்தின் குடும்பத்தார் நின்றனர்.
மூன்று ஆண்டுகள் ஓடின. ஆனால்,இருவருக்கும் குழந்தைகள் பிறக்கவில்லை.
திலகம் குழந்தைக்காக ஏங்கினாலும் முரளி ஒரு வார்த்தை கூட அதைப் பற்றியே பேசுவதில்லை.
தன் மனைவியின் தம்பி தங்கையை தன்னுடைய குழந்தைகளாகவே நினைத்து அவர்களுக்கு தேவையானதைச் செய்து வாழ்ந்தான்முரளி.
வாழ்க்கையில் கிடைத்ததைப் பற்றி மட்டுமே சிந்தித்து இழந்ததையும் தனக்கு கிடைக்காத்தையும் பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல்வாழும் அவனுடைய மனோபாவத்தை பேரதிசயமாக பார்த்தாள் திலகம்.
திலகமும் வேலைக்குச்சென்றுகொண்டே மேற்கொண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
இதனிடையில்,பள்ளி இறுதிப்படிப்புடன் தட்டச்சும் படித்து முடித்த திலகத்தின் தங்கை அதற்குமேல் படிக்க விரும்பவில்லை.அதனால்திலகத்தின் அப்பா அவளுக்கு டெல்லியிலிருந்து வந்த வரனுக்கு திருமணம் செய்து புகுந்தவிட்டிற்கு அனுப்பிவிட்டார்.
தங்கையின் வளைகாப்பு பிள்ளைப்பேறு என்று திலகம் பிஸியாக இருந்தாள்.
இந்நிலையில் கல்லூரிப் படிப்பை முடித்த தம்பி விசுவத்துக்கும் வேலை கிடைத்துவிட்டது.
திலகத்தின் தந்தை திடீரென்று உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையானார்.
அதனால், உடனடியாக தம்பிக்கும் வரன் பார்த்து திலகம் தான் திருமணம் செய்து வைத்தாள்.
தம்பியின் குழந்தையின் முதல் பிறந்தநாளைக்கு ஒரு வாரமே இருந்த நிலையில்
திலகத்தின் அப்பா இறந்துவிட்டார்.
இப்போது,திலகம் தனிமையை உணர்ந்தாள்.தனக்கு ஒரு குழந்தைஇல்லாமல் போய்விட்டதே என்று வேதனைப் படஆரம்பித்துவிட்டாள்.
ஆதரவற்ற குழந்தையை த்த்து எடுத்து வளர்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் திலகம்.
ஒரு நாள் வீட்டில் திலகம் மட்டும் தான் இருந்தாள். அன்றைக்கு சற்று தாமதமாக அலுவலகத்திலிருந்து வந்தான் முரளி.
பள்ளி பரீட்சை பேப்பர்களை திருத்திக் கொண்டிருந்த திலகம் கணவனுக்கு காபி கொண்டு வந்தாள். "என் கூடப்படிச்ச ராமுடில்லியிலிருந்து வந்திருந்தான். ஆபிஸுலேந்து வரும்போது வழில பாத்தேன். அவனுக்கும் குழந்தைகள் இல்லயாம். என்னைப்போலவே ஜாதகம் போலிருக்கு," என்று சாதாரணமாகத்தான் சொல்லிக் கொண்டே காபியை குடித்தான் முரளி.
ஆனால் திலகமோ இதுவரை குழந்தையைப் பற்றி வெளிப்படையாக எதுவுமே பேசாத தனது கணவர் ஒருவேளை மனதிற்குள் மிகுந்தவேதனையில் இருக்கிறாரோ என்று நினைத்தாள். அன்றிரவு முழுவதும் அவள் தூங்கவில்லை. தன் தம்பி தங்கையின் தேவைகளைஅவர்கள் கேட்காமலேயே பார்த்து பார்த்து நிறைவேற்றி வைத்த அன்பான கணவனுக்கு தன்னால் இப்படி ஒரு கஷ்டம் வந்துவிட்டதேஎன்று அழுது கொண்டே இருந்தாள். ஏற்கனவே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த திலகத்துக்கு முரளியின் வார்த்தைகளால் மனம்அமைதியின்றி தவித்தது.
காலையில் விடிந்ததும் துணிந்து முடிவெடுத்தாள்.
வெளியில் விசாரித்து, ஆதரவில்லாமல் ஏழ்மையில் வாடிய இளம்பெண்ணான விலாசினியைத், தன் கணவனுக்கு மிகவும் வற்புறுத்தி த்தானே முழுமனதுடன் திருமணம் செய்து வைத்தாள். மனைவியின் இடைவிடாத வற்புறுத்தலாலும் சாப்பிடாமல் அவள் பிடிவாதம்செய்ததாலும் மட்டுமே முரளி விலாசினியைத் திருமணம் செய்து கொண்டார்.
மணமாகி முதல்வருடமே விலாசினிக்கு ஆணொன்றும் பெண்ணொன்றுமாய்ப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை கடவுள் கொடுத்தவரமாக நினைத்தாள் திலகம்.
திலகத்தின் உயர்ந்த மனதை முரளி உள்பட அனைவரும் புகழ்ந்துபேசினர்.
குழந்தை பெற்றுக் கொடுத்தவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாள் திலகம்.
விலாசினி நன்றாக வாழவும் வழி செய்தாள்.
வழி செய்தவளுக்கு நாள் போகப்போக விழி பிதுங்கியது. வந்தவளும் முதலில் அமைதியாக நன்றாகத்தான் இருந்தாள்.
ஆனால்,அபரிமிதமான மரியாதை மற்றும் கவனிப்பு விலாசினியின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.அழகழகான ஆடைகள்உடுத்திக்கொண்டு அக்கம் பக்கத்திலே போய் அரட்டையடிப்பதும், சினிமாவுக்குப் போவதும், பிறரைப் மட்டம் தட்டிப்பேசுவதும், ஏன்தன் கணவனையே உரக்கப் பேசி அதட்டவும் ஆரம்பித்தாள் அவள்.
குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்ட திலகம் தன் மதிப்பிற்குரிய கணவரை அவள் அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. செய்வதறியாது திகைத்தாள்.அதுமட்டுமல்ல
பள்ளியில் தான் வாங்குகிற சம்பளத்தைக் கணவரிடம் அப்படியே கொடுத்துப் பழகியவள் தான் திலகம். கைசெலவுக்கு மட்டும்தான்அவரிடம் பணம் கேட்பாள். அது கூட தன் உடன் பிறந்தவர்களின் வீட்டு விசேஷங்களுக்கு ஆசிர்வாதம் செய்வதற்காக மட்டும் தான்பயன்படுத்துவாள்.
ஆனால்,குழந்தைகளை வளர்க்க செலவுகள் அதிகமாகின்றன என்று முரளியிடமிருந்து மொத்தப் பணத்தையும் விலாசினியே வாங்கிக்கொள்ள ஆரம்பித்தாள்.
உழைத்து சம்பாதித்தும் அவசர செலவுக்குக் கூட கையில் பணமின்றி தவித்தாள் திலகம்.
அதனால் தன் மாதச் சம்பளத்தில், கைசெலவுக்கென்று கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு, மீதியைக் கணவனிடம் கொடுத்தாள். ஆனால் அதற்கும் விலாசினி கத்தி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்.
முரளியைப் பொறுத்த வரையில் புது மனைவியையும் தன் வாரிசுகளையும் காப்பாற்ற வேண்டியது மட்டும் தான் தன்னுடையமுக்கியக்கடமை என்று நினைக்க ஆரம்பித்துவிட்டான் அவன்.
குடும்ப நிம்மதிக்காக சம்பாதித்த பணத்தை முழுசாகக்கொடுத்தாலும் தன்னை வேலைக்காரி போல நடத்தும் விலாசினியை நினைத்தாலே திலகத்துக்கு கவலை பிடித்துக் கொண்டது.
வீட்டிலும் வேலை,பள்ளியிலும் வேலை ,கையில் காசில்லா நிலையுடன் கணவனின் பாராமுகமும் சேர்ந்த ஒரு சூழ்நிலையைதிலகத்தால் சமாளிக்கவே முடியாமல் போய்விட்டது.
அவள் சற்றும் எதிர்பார்க்காத இப்படிப்பட்ட சூழநிலைகளால்அல்லல்பட்டு இரண்டு ஆண்டுகளில் அடையாளமே தெரியாமல்இளைத்துத் துரும்பாகப் போய்விட்டாள் திலகம்.
ஒரு நாள் தன் தம்பியின் இரண்டாவது மகளின, காதுகுத்துக்கு போக வேண்டி வந்ததால் கணவனிடம் பணம் கேட்டாள் திலகம் . அந்தசமயத்தில் இளையாள் குறுக்கே புகுந்து பேசினாள்.
“நமக்கும் இங்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.அவர்களை வளர்க்கவே பாடுபடுகிறேன் நான். இனியும் உன் கூடப்பிறந்தவர்களுக்குஎப்படி செய்ய முடியும்?” என்று கேட்டுவிட்டாள்.
திலகத்துக்கு அவமானமாக இருந்தது.
திலகத்தின் வாடிய முகத்தை யோசனையுடன் பார்த்த முரளி நிதானமாகப்பேச ஆரம்பித்தான்.
“திலகம் ,குழந்தைகள் வேணும்னு தானே எனக்கு நீ இந்த கல்யாணமே பண்ணி வச்ச? உன் ஆசைப்படியே குழந்தைகளும் பிறந்தாச்சு. இனிமே நம்ம ரெண்டு பேருக்குமே இந்த குழந்தைகளும் அவங்களோட அம்மாவும் மட்டும் தான் முக்கியமா இருக்கணும். நீ அனுசரணையா இருந்தாத்தான் இந்த குழந்தைகள் உன்னையும் தன்னோட அம்மாவா மனசாற ஏத்துப்பாங்க.நீ நல்லா யோசிச்சுப்பாரு.உன் கூடப்பொறந்தவங்களுக்கு தேவைப்பட்ட போதெல்லாம் நாம ரெண்டு பேரும் எவ்ளோ பண உதவி செஞ்சிருக்கோம்? அதனால தான் உன்கிட்ட அவங்க பாசமா இருக்காங்க.அதே அனுசரணையத்தானே இவளும் உங்கிட்ட எதிர்பாக்கறா? இதுக்குப்போய் எப்போ பாத்தாலும் இவ உன்ன கொடும படுத்தற மாதிரி சோகமா முகத்தை வச்சிக்கறயே. அப்படின்னா இந்தக்குழந்தைகள்மேல உனக்கு உண்மையான பாசமில்லனு தானே அர்த்தம்?”
என்று கணவன் பேசிய வார்த்தைகள் நேராக அவள் இதயத்தையே தாக்கியது. விலாசினி சந்தோஷமாக முரளியைஆதரித்துத்தலையாட்டினாள்.
பணத்தை ஊதாரித்தனமாக சினிமாவுக்கு விலாசினி செலவழித்தபோதும் அவளை கண்டிக்காமல்
திலகம் எடுத்த முடிவையே குறையாக சொல்லி பணத்திற்காகத் தான் உன் உடன் பிறந்தவர்கள் உன்னிடம் பாசத்தோடுஇருக்கிறார்கள் என்று பேசிய தன் கணவனை முதன் முதலில் நிமிர்ந்து கோப்ப்பார்வை வீசினாள் திலகம்.
இதுவரை தன்னுடைய குடும்பத்திற்கு முரளி செய்த உதவிகளை நினைத்து அவன் மீது அவள் அளவில்லாத மதிப்புவைத்திருந்தாள்.அந்த மதிப்பு சரிந்து விட்டது.
இனி ஒரு நொடிகூட அந்த வீட்டில் வாழ திலகத்திற்குப் பிடிக்கவில்லை.
அன்று காலை பள்ளிக்குச் சென்றவள் ஒரு வாரம் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு தன் கணவனிடம் கூடச் சொல்லாமல் பள்ளிக்குபக்கத்திலிலருந்த தம்பியின் வீட்டிற்குக் போய்விட்டாள்.
திலகத்தின் கஷ்டங்களை நன்கு அறிந்திருந்த தம்பியும் அவன் குடும்பமும் திலகத்தை நன்றாகவே வரவேற்றார்கள்.பழைய ஒண்டுகுடித்தன வீட்டிலிருந்து மாறி தற்போது சற்று பெரிய ஹால் ஒரு சமையலறை ஒரு படுக்கையறையுடன் கூடிய வாடகை வீட்டிற்குமாறியிருந்தான் தம்பி.
ப்ரைவேட் கம்பெனியில் அக்கவுன்டனட் உத்யோகம் பார்த்துக் கொண்டு
இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழும் தம்பி விசுவம்,திலகத்தின் கஷ்டமான சூழ்நிலையில்
“நான் இருக்கிறேன் அக்கா ” என்று ஆதரவு கொடுத்தது அவளுக்கு மனநிறைவாக இருந்தது.
கை கால் அலம்பி உடைமாற்றிவிட்டு பூஜையறைக்குப் போய் கண் மூடி தியானித்தாள்.
எதிர்பக்கம் இருந்த அப்பாவின் போட்டோவை நன்கு வணங்கினாள்.
அவளை ஒரு வேலை கூட செய்யவிடாமல் தானே எல்லாவற்றையும் கவனித்தாள் தம்பியின் மனைவி.தம்பியின் குழந்தைகளும்அவளிடம் அன்பாக வந்து கொஞ்சி விளையாடினார்கள்.
வந்ததுமே கணவருக்கு தான் இங்கிருப்பது பற்றி ஒரு கடிதம் எழுதினாள் திலகம்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அன்றுதான் அவள் நிம்மதியாகத் தூங்கினாள்.
ஆனால் நான்கு நாட்களாகியும் முரளி எந்த பதிலும் எழுதவில்லை.ஏன் அவளைத் தேடி விசாரிக்கக் கூட தம்பியின் வீட்டிற்கு வரவில்லை.
திலகத்திற்கு அவமானமாக இருந்தது. இத்தனை வருடங்கள் தன் வாழ்க்கையில் வீணாகிவிட்டதை உணர்ந்தாள்.
முரளிக்கு ஆறுதலாக இருக்கத்தான் திலகம் தன் அப்பாவை வற்புறுத்தி இந்த திருமணத்தை செய்துகொண்டாள் அவனுடையபணத்திற்காக அல்ல என்றும்
தன் தம்பி தான் காசே கொடுக்கவில்லையென்றாலும் கடைசிவரை தன்னை நல்லவிதமாக காப்பாற்றுவான் என்றும் தன் கணவனுக்குஎப்படியாவது நிரூபித்து விடவேண்டும் என்று அவமானத்தை தாங்க முடியாமல் அவள் மனம் துடியாய் துடித்தது.
அதனால் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தம்பியின் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்று மனதில் முடிவெடுத்துக்கொண்டிருந்தாள் அவள்.
அந்த நிலையில்தான் தன் அக்கா மனவேதனையுடன் இருப்பதால் வெளியில் எங்காவது சென்றால் ஆறுதலாக இருக்கும் என்று திலகத்தை தன் நண்பனின் தங்கையின் திருமணத்திற்கு தன்னுடன் அழைத்துக் கொண்டு போனான விசுவம்.
தம்பியுடன் கல்யாணத்திற்கு கிளம்பினாள் திலகம்.
மேளமும் நாதஸ்வரமும் அவள் மனதுக்குள் குதூகலத்தை கொண்டு வந்து சேர்த்தன.
அழகழகான பட்டுப் புடவைகளில் விதவிதமான நகைகள் அணிந்த பெண்கள் கும்பல் கும்பலாக சிரித்துப் பேசிக் கொண்டுஇருந்தனர்.அங்கே வந்திருந்த குழந்தைகள் தன்னை பெற்றோர் மற்றவர்களிடம் அறிமுகப் படுத்தும்போது நாணிக்கோணி நின்றுபதில் பேசினர்.
சில குழந்தைகள் பேசாமல் ஓடினர்.
திலகம் மண்டபத்தில் மெதுவாக நடந்து கூட்டம் குறைவாக இருந்த இடத்துக்கு வந்து யாருடனும் பேசாமல் அங்கு காலியாக இருந்தசேர்களில் ஒன்றில் உட்கார்ந்தாள்.அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்த விசுவமும் அமைதியாக இருந்தான்.இவர்களைப் பார்த்தும் ஒருதட்டில் காபி கப்புகளுடன் வந்த ஒருவர் திலகத்திற்கும் விசுவத்துக்கும் கொடுத்துவிட்டுப் போனார்.
இருவருமே பேசிக் கொள்ளாமல் அமைதியாக காபி குடிக்க ஆரம்பித்தனர்.
அந்த அமைதியை கலைக்கும்படியாக யாரோ இருவர் உரக்கப்பேசிக் கொண்டிருந்தார்கள்.
“வினோத் ,நீ படிச்சிட்டு வேல இல்லாம கஷ்டப்படறனு கேள்விப் பட்டேன் உண்மையா?” திலகத்துக்கு சற்று தள்ளி இருந்தநாற்காலியில் உட்கார்ந்திருந்த ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்தவழியாக நடந்து வந்த ஒரு இளைஞனை பார்த்துஉரக்கப் பேசினார்.
அவன் இதை எதிர்பார்க்காதவன் போல ஒரு நொடி கண்களை அகல விரித்து பார்த்துவிட்டு
மற்றவர்களுக்கு கேட்டுவிடக் கூடாதே என்று நினைத்தவன் போல அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு மெதுவாகப்பேசினான்.
ஆனால் அவன் பேசியது திலகத்திற்கு தெளிவாக்க் கேட்டது.
“அப்படிலாம் இல்ல மாமா. டெல்லில பெரிய கம்பெனிலேந்து வேல வந்திருக்கு. அங்க வந்து தன்னந்தனியா அம்மாவாலசமாளிக்கமுடியாது. எனக்கும் டெல்லி போகப் பிடிக்கல.அதுவும் இல்லாம என் ப்ரன்ஸ்லாம் இங்கயே வேல வாங்கிட்டாங்க மாமா.
எனக்கு இங்கயே கிடைக்கலயான்னு ஒரு மாதிரியா மட்டமா வேற பேசறாங்க மாமா.அதனால பெரிய கம்பெனியா இல்லனாலும்பரவால்ல நான் படிச்ச படிப்புக்கு ஈடாக இல்லன்னாலும் பரவால்ல இன்னும் சொல்லப்போனா ,கொஞ்சம் குறைச்சலான சம்பளமாஇருந்தாலும்கூட பரவாயில்ல .என் ப்ரண்ட்ஸ் எதிர்ல இங்கயே எதாவது ஒரு கம்பெனில வேல வாங்கிக் காட்டனும்னு ஆசைப்படறேன்மாமா.” என்று தயக்கத்துடன் தன் ஆசையை வெளியிட்டான் அவன்.
சற்று நேரம் அவனையே உற்ளுப்பார்த்துக்கொண்டிருந்தவர் நிதானமாக பேச ஆரம்பித்தார்.
“உங்கம்மா கூடப் பொறந்தவன் அண்ணன் நான்.என் தங்கைய இங்கயே பத்திரமா பாத்துக்கறேன்.
டெல்லில என் ப்ரண்ட் ஒருத்தன் குடும்பத்தோட இருக்கான்.அவன் மூலமா உனக்கு என்னால ஹெல்ப் பண்ணமுடியும்.
பெரிய கம்பெனின்னு வேற சொல்ற அதனால,நீ டெல்லில ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ பல்ல கடிச்சின்டு வேல பாரு.வேலபரமன்னட் ஆனதும் இந்த பக்கம் ட்ரான்ஸ்பர் வாங்கிக்கலாம்.
இப்போதான் உனக்கு கல்ல தின்னாலும் செரிக்கிற வயசு. இந்த வயசுல தான் ரிஸ்க் எடுத்து வெளில போய் நாலு காசு சம்பாதிக்கனும்பா.உடம்புல சக்தி இருக்கும்போது நல்ல புத்தியும் இருக்கனும்.
உனக்குத் தெரியாத்தில்ல. உங்கப்பா இறந்தபோது உனக்கு நாலு வயசு.அப்பவே என் வீட்டுக்கே வந்திடுமான்னு சொன்னேன்.ஆனாஉங்கம்மா வரல.
உங்கப்பா வேல பாத்த அதே சிமெண்ட் பேக்டரிலயே போய் பேசி ஏற்கனவே ப்லஸ்டூ வோட டைப்ரைட்டிங் கும் படிச்ச உங்கம்மாடைப்பிஸ்ட் வேலை வாங்கிட்டா. அவளோட படிப்பு தான் அவளுக்கு நம்பிக்கைய குடுத்துது.அங்கயே வேல பாத்து தனியாவே உன்னகாலேஜ்ல சேத்து படிக்க வெச்சா.மெழுகுவத்தி மாதிரி தன்னையே உருக்கி உன் அம்மா ஏற்றிய விளக்குப்பா உன்னோட படிப்பு.கேவலம் ஒரு சவாலுக்காக அத வீணாக்கிடாதப்பா”என்று மென்மையான குரலில் அவன் மனதை கரைக்க முயற்சிசெய்துகொண்டிருந்தார்.அவனும் அம்மா என்ற உயர்ந்த அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு தலையாட்டிக் கொண்டிருந்தான்.
பள்ளியில் பல சிறுவர்களுக்கு பாடம் கற்பிக்கும் திலகம் எதிர்பாராத வாழ்க்கை சூழல்களால் சிந்தித்து செயல்பட முடியாதமனசோர்விலிருந்த நிலையில்
அந்த பெரியவரின் வார்ததைகளைக் கேட்டதும் அவளுடைய அப்பாவின் கடின உழைப்பு கண்முன் வந்தது. சட்டென்று கண்களைத்துடைத்துக் கொண்டாள்.
தன் மீது சிறிதும் அக்கறையில்லாமல் தன்னை சட்டை கூட செய்யாத கணவனின் மனோபாவத்தைப் பற்றி நினைத்தபோதுமுதலிலிருந்தே அவன் குணமே அப்படித்தானே இருந்தது.
திலகம் கிடைத்ததும் முதல் மனைவியை மறந்தான் விலாசினி கிடைத்ததும் திலகத்தை மறந்தான் அவ்வளவுதான். இனி கணவனைபழிவாங்குவதற்காகவோ அல்லது அவனுக்கு எதையும் நீரூபித்துக் கொண்டோ தன் வாழ்வின் ஒரு நொடியைக் கூட வீண்டிக்க திலகம்விரும்பவில்லை.
அவனைப் பற்றிய எண்ணங்களை தூக்கி எறிந்தாள்.
தாம்பூலப்பையை வாங்கிக்கொண்டு தம்பியின் வீட்டுக்கு வந்தாள்.
பெற்றோர் ஏற்றும் கல்வி எனும் விளக்கு மட்டுமே ,வாழ்க்கையில் எப்படிப்பட்ட இருள் வந்து சூழ்ந்தாலும்
தவறான பாதைக்குப் போய்விடாமல் நல்ல வழிகாட்டும் என்று புரிந்து கொண்டாள்.அப்பா ஏற்றிய அற்புத விளக்கிலிருந்து பிற ஏழைஎளியவர் வாழ்க்கையிலும் பல தீபங்களை ஏற்ற வேண்டும் என்ற லட்சியம் அவளுக்குள் பிறந்தது.
விடுமுறை முடிந்ததும் தம்பியின் வீட்டிலிருந்தே மீண்டும் ஆசிரியப் பணிக்குப் போக ஆரம்பித்தாள்.
தம்பிக்குழந்தைகளை தன் பள்ளியிலேயே சேர்த்து அவர்களின் படிப்பிற்கான செலவுகளையும் அவளே ஏற்றுக்கொண்டாள்.தன்னுடைய சொந்த செலவுகளையெல்லாம் குறைத்து மீதி இருந்த பணத்தை தன்னுடைய எதிர்காலத்திற்காகவங்கியில் சேமித்ததோடு மேற்கொண்டு படிக்கவும் ஆரம்பித்தாள்.
வார இறுதி நாட்களில் பல ஏழைக்குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் சொல்லிக் கொடுத்தாள். ஒரே ஒரு குழந்தைக்காகஏங்கியவளைச் சுற்றி எப்போதுமே நிறைய குழந்தைகள் இருந்தார்கள்.
மேலும் முக்கியமாக அந்தக்குழந்தைகளின் ஏழைப்பெற்றோர் அவளது சேவை மனப்பான்மையை நினைத்து திலகத்தை மிக உயர்வாகமதித்து போற்றினார்கள்.