7.
ஆன்லைன் பூச்சாண்டிகள்
ஆரவின் வருகைக்காக வீட்டை பளபளவென்று சுத்தம் செய்கிறாள் வசந்தி.முதன்முதலில் ஆரவ் பிறந்த செய்தி யைக் கேட்டு அவள் எழுதிய கவிதை இன்று மனதில் அழகாக ஓடுகிறது.
புன்னகை பூக்கும் பிள்ளைச்செல்வமே...
பல்லில்லா ஈறுகள் தெரிய...
சின்னஞ்சிறு சிவந்த நாக்கு
சிரிப்பில் மேலண்ணத்தில் ஒட்ட...
கண்களை அகல விரித்து
காட்டிக்கொடுக்கிறாய் உன் கள்ளமனதை!!
மயிலிறகால் தீண்டுவதுபோல்
மயக்க வைக்கும் ஒரு பார்வை!!
மெத்தென்ற பூப்பாதங்கள்
மெல்ல தத்தி நடந்து வர...
பஞ்சு போன்ற கன்னங்களில் என் உதடுகளை
பதிக்க சொல்லி தூண்டில் போட்டு....
பூப்போல அள்ளி உன்னை
பாசத்துடன் கொஞ்ச வைத்து...
கோடி இன்பம் தருகிறாய் வள்ளல்போல்
ஈடேதும் கேட்காமலேயே!
தந்தையென்னை முத்தமிட்டு
திக்குமுக்காடவைக்கிறாய்!!
ஆனந்தம் பொங்கும் மனத்துடன்
அன்பை அனைவருக்கும் பரப்புகின்றாய்!!
பாகுபாடின்றி இவ்வுலகில்
பழகி களித்தாடிடவே...
அறியாமையை அமிழ்தம் போல்
அருந்திவிட்டு வந்தாயோ??!!
இது ஆரவ்க்கு வசந்தியின் ஸ்பெஷலான கவிதை.
ஏன் வசந்திக்கு ஆரவ் மேல் இத்தனைக் கொள்ளைப் பாசம் என்று கேட்கிறீர்களா?
ஆரவின் குட்டி அண்ணன் ஷ்ரவன் பிறந்தபோது கூட இப்படியெல்லாம் கவிதைகள் அவளுக்கு பிரவாகம் எடுக்கவில்லையே…
இன்னும் சொல்லப்போனால் வசந்தியின் செல்லமகள் நீரஜாவுக்கு கூட ஒரு வரி கவிதை வசந்தி எழுதவில்லையே…
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அறிய நாம் பலவருடங்கள் வசந்தியின் வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கவேண்டும்.
ஆம்…இருபது வயதான வசந்தித் திருமணமாகி மூன்றே மாத்த்தில் கணவருடன் வெளிநாட்டு வாழ்க்கையைத தொடங்கினாள்.வெளிநாடு வந்த புதிதல் வித்தியாசமாக எல்லாமே புதுமையாக இருந்தது.நாளடைவில் அடிக்கடி வெளியிடங்களுக்கு கணவருடன் போய் வந்ததில் நன்கு பழகிவிட்டது.
வசந்தி பிறந்த வீட்டில் ஒரே பெண்ணாக இருந்தவள். கல்லூரி படிப்பு முடித்ததும் பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர்.வசந்தியைவிட ஒன்பது வயது பெரியவன் சங்கர்.
நன்கு படித்து வெளிநாட்டில் வேலை செய்யும் சங்கருடன் திருமணம் முடிந்து விளையாட்டு போல வருடங்கள் பல வேகமாக ஓடிவிட்டன. சங்கர் பெரிய பதவியில் இருந்தாலும் பொறுமையும் குடும்ப பொறுப்பும் நிறைந்தவனாக இருந்தான். சங்கரின் ஐந்து வயது மூத்த சகோதரி கீதா தான் வசந்திக்கு ஒரே நாத்தனார்.
நாத்தனார் கீதாவிற்கு கீதாவிற்கு ஒரு மகள் பெயர் சங்கவி. சங்கர் திருமணத்தின்போதே சங்கவிக்கு பதிமூன்று வயதாகியிருந்தது. நாத்தனார் கீதா வசந்தியை தன் ஒரே மகள் சங்கவியைப் போலவே மிகவும் நேசித்தாள்.பிறந்த வீட்டில் தனியாக வளர்ந்த வசந்திக்கு கீதாவையும் சங்கவியையும் ரொம்பவும் பிடித்திருந்தது. திருமணம் முடிந்த அடுத்த வருடமே சங்கருக்கு நீரஜா பிறந்தாள்.
நீரஜா ஒரு வயது வரை வளர்ந்தது கீதாவிடம்தான்.ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் மாமியார் மாமனார் சென்னையில் இருந்தாலும் பெங்களூரில் வசிக்கும் கீதாவின் வீட்டில்தான் நீரஜா அதிகநாட்கள் தங்க வேண்டும் என்று அடம் பிடிப்பாள்.அதுபோலவே திரும்பவும் வெளிநாடு திரும்பும்போதும் ஒரே அழுகைதான் இந்த அழுகையில் சங்கவியும் சேர்ந்து கொள்வாள்.
அதனால் சங்கர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஊருக்கு தன் குடும்பத்துடன் சென்று பெற்றோரையும் சகோதரியையும் பார்ப்பது சங்கரின் வழக்கம். வருடங்கள் இவ்வளவு வேகமாகவா ஓடும் என்பது போல
சங்கவி கல்லூரி முடித்தாள்.அவள் விருப்பபடியே இரண்டு வருடங்கள் வேலை பார்த்தாள்.பிறகு சங்கவிக்கு திருமணம் கூட நல்லபடியாக முடிந்து முதல் வருடமே குழந்தை ஷ்ரவனும் பிறந்தான்.
இதனால் சங்கர் குடும்பம் சங்கவி குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா.பிறகு முதல் மொட்டை காது குத்து என்று தான் வசிக்கும் நாட்டிலிருந்து குடும்பத்துடன் இரண்டு மூன்று முறை பறந்து போய் விட்டு வந்திருந்தார்கள.
அடுத்து வந்த ஒருவருடத்தில் மீண்டும் சங்கவி இரண்டாவது குழந்தை வயிற்றில் ஆறுமாதம் ஆகியிருந்தது. ஏற்கனவே குழந்தை பிறக்கும் அந்த தேதிக்கு டிக்கட் எல்லாம் ஊருக்குப் போக முன்கூட்டியே புக் செய்தபோதுதான் கொரோனா தொற்று ஆரம்பித்தது.கூடவே வந்த லாக்டவுனால் எங்கும் போகாமல் அனைவருமே அவரவர் வாழுமிடத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை.
அதனால், இரண்டாவது குழந்தை ஆரவ் பிறந்தபோது நேரில் போய்பார்க்கவில்லையே என்ற தவிப்பு இவர்களுக்கு அதிகமாக இருந்தது.குழந்தையை வீடியோகாலில் பார்த்தாலும் மனம் ஏங்கி தவித்தது.அதனால் தனக்குத் தெரிந்த வித்த்தில் கவிதை எழுதி ஆரவ்வை வரவேற்றாள் வசந்தி.அதனால் இந்தக் கவிதையை மிகப் பத்திரமாக வைத்திருக்கிறாள் சங்கவி.
பள்ளியில் படித்து வந்த வசந்தியின் மகள் நீரஜா ஆன் லைன் வகுப்பில் இருந்தாள்.
வீட்டிலேயே இருந்த நீரஜாவுக்கு போர் அடித்தது.ஆன் லைனில் அதிக நேரம் செலவழித்தாள். முகம் தெரியாத புதிய நட்புகள் அவளுக்குக் கிடைத்திருந்தன.வசந்தி இதைப் பற்றி கவலையுடன் தன் கணவனிடம் பேசினாள். ஊரிலிருக்கும் தன் நாத்தனார் கீதாவிடமும் சொன்னாள் வசந்தி.
ஆரம்பத்தில் கொரோனா இப்போது சரியாகிவிடும் இப்போது சரியாகஇவிடும் என்ற எதிர்பார்ப்பிலேயே நாட்கள் மாதங்களாகின.
ஆரவ்வின் முதல் பிறந்த நாள் கூட வீடியோகாலில் தான் இவர்களால் பார்க்க முடிந்தது.
அதேசமயம் நீரஜா எப்போதும் ஆன்லைனில் இருப்பதையும் அவள் கவனமாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் நாத்தனார் மகள் சங்கவியிடம் நீரஜா அறியாதபடி அடிக்கடி வசந்தி சொல்லிக்கொண்டே இருந்தாள்.
அதனால்,
“ நீருமா செல்லம், இதுவரைக்கும் உங்கூட ஸ்கூல்ல படித்திராத, முன்னபின்ன தெரியாத புதியவர்களுடன் பழகுவது தவறு. ஆன்லைனில் மட்டும் தானே நீ பழகுற?அதனால அவர்களைப் பற்றி முழுக்க நமக்குத் தெரியாது. ஆன்லைன்ல நிறைய பூச்சாண்டிகள் இருக்காங்க. உங்கூட பேசறவங்க உன்னைவிட பெரியவங்களாக கூட இருக்கலாம்டா செல்லம்.சின்ன பொண்ணுமாதிரி போட்டோலாம் போட்டு ஏமாத்துவாங்க. ஆனால் அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா? ரொம்ப இனிமையாகப் பேசுவாங்க.
தனியா விட்டுட்டு அப்பா அம்மா வெளில போயிருக்கும் போது நம்பள ஏமாத்தி வீட்டை விட்டு வெளில வரவைப்பாங்க. இல்லனா நம்ப வீட்டுக்கே வந்து வா சாக்லேட் , ஐஸ் க்ரீம் குடுப்பாங்க பிடிச்சதெல்லாம் சாப்பிட குடுப்பாங்க. ஆனால்,அதுல மயக்க மருந்து கலந்திருக்கும். அத வாங்கி சாப்பட்டதும் நாம மயங்கி போய்டுவோம்.அவ்ளோதான் நம்பள கோணிப்பைல போட்டு கடத்திட்டு போய்டுவாங்கம்மா.” என்று இப்படியே தொடர்ந்து பல முறை தான் கேள்விப்படும் செய்திகளையும் சேர்ர்த்து ஆன்லைனில் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் குழந்தைகளுக்கும் புரியும்படி அடிக்கடி பேச ஆரம்பித்திருந்தாள் சங்கவி.
இதனால், இப்போதெல்லாம் நீரஜா ஆன்லைனில் அதிகநேரம் இருப்பதல்லை.நேரத்திற்கு தூங்க ஆரம்பித்தார்கள்.
சங்கரும் வசந்தியும் தினமும் உறவினர்கள் யாருடனாவது போனில் பேசிக கொண்டுதான் இருந்தார்கள்.பலப்பல வைத்தியங்கள் பகிரப்பட்டன்.கவலையும் பீதியுமான வாழ்க்கையால் வீட்டுக்குள்ளேயே அனைவரும் முடங்கியே இருந்தனர்.
தடுப்பூசி போட்டிருந்தாலும் யாருக்கும் எங்கும் போக தைரியம் இல்லை.இவர்கள் வருவதாக சொன்னாலும் வேண்டாம் அங்கேயே பத்திரமாக இருங்கள் என்ற அறிவுரையே உறவினர்களிடமிருந்து வந்தது.
ஒரு வழியாக கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தது.
பள்ளிகள் திறந்ததும் ஒன்பதாம் வகுப்பிலிருந்த நீரஜா நிறைய படிக்க வேண்டி வந்ததால் ஊருக்கு செல்வது குறைந்தது.
ஆரவ் கூட ப்ரீ கேஜி சேர்ந்துவிட்டான்.
இருந்தாலும் ஆன்லைன் பூச்சாண்டிகளின் கதைகள் நீரஜாவுக்கும் சங்கவியின் குழந்தைகளுக்கும் சொல்லப்படுவது நிற்கவில்லை.
இந்நிலையில்தான் முதன் முதலாக நாத்தனார் மகள் சங்கவி தன் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு வருவதாக சொன்னாள்.அந்த நாள் நாளைக் காலை தான் என்பதால் அவர்களுக்காகத் தான் வசந்தி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.ஆரவ்வை நேரில் பார்க்கப்போகிறோம் என்ற குதூகலம் அவர்கள் மூவருக்குமே இருந்தது.
மறுநாள் ,இவர்கள் ஏர்போர்ட்டுக்குப் போய் சங்கவியின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
சுருட்டை முடியும் பெரிய குண்டு கண்களுமாய் ஆரவ் இவர்களை முதன்முதலில் நேரில் பார்ரத்தவுடன் அவன் முகத்தில் தோன்றிய சிரிப்பும் சந்தோஷமும் வசந்தியை திக்குமுக்காட வைத்தது.பாசத்தின் வலிமை இதுதான் என்று சங்கர் பெருமையாக நினைத்தான்.ஆரவ் வசந்தியின் மடியில் உரிமையாய் வந்து கொண்டான்.
அந்த வீட்டில் குழந்தைகளின் சந்தோஷத் துள்ளல்களால் சிரிப்பொலி நிரம்பியிஇருந்தது.அன்று ஒரு நாள் சற்று ஓய்வாக இருந்துவிட்டு மறுநாள் காலையிலேயே குழந்தைகளுடன் பக்கத்தில் இருந்த ஜுராங் லேக் கார்டன்ஸிற்கு போய் ரொம்ப நேரம் விளையாடிவிட்டு வந்ததால் அனைவருமே டயர்டாக இருந்தார்கள்.கொரோனாவால் பிரிந்திருந்த உறவுகளின் பாசம் அந்த சமயம் அவர்களை பலமாக இணைத்துக் கொண்டிருந்தது. ஆரவ் இவர்களிடம் பலவருடம் பழகியவன் போல் இயல்பாக இருந்தது வசந்திக்கு சந்தோஷமாக இருந்தது.
அடுத்தநாள் காலை சமையலறையில் பிஸியாக இருந்த சங்கவிக்கு போன் வந்தது.
அவளுடைய கல்லூரித் தோழி பேசினாள். இன்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து பிறப்பட்டு சிங்கப்பூர் வருகிறாள். மறுநாள் அதிகாலை சிங்கப்பூர் வழியாக ஜப்பான் போகிறாளாம்.
சிங்கப்பூரில் 12 மணிநேரம் இருப்பாளாம்.அதனால் இந்தக் காத்திருப்பு நேரத்தில் அவளைப் போய் பார்த்துவிட்டு வர ஆசைப்பட்டாள் சங்கவி.
ஆரவும் ஷ்ரவனும் அத்தை வீட்டிலேயே இருப்பதாக சொன்னதால் .
மதிய உணவை முடித்துவிட்டு சங்கவியும் மருமகனும் மட்டும் ஏர்போர்ட்டிற்கு கிளம்பினார்கள்.
அவர்கள் சென்றதும் வீட்டில் சமையலறையில் வசந்தி பிசியாக இருந்தபோது ஹாலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“மாமி ,சமையல் பண்றீங்களா என்ன சமையல்?” பெரிய மனிதன் போல கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் ஆரவ்.
என் சங்கவி வசந்தியை மாமி என்று அழைப்பதால் இந்த குழந்தைகளும் அப்படியே அழைக்கின்றன.
“ஆரவ் செல்லத்துக்கு பிடிச்ச பருப்பு சாதம் பண்றேன்.” என்றாள் வசந்தி.
அதற்குள் பெரியவன் ஷ்ரவன் உள்ளே வந்தான்.
“எனக்கு பிடித்த செட் தோசை வடகறி பண்ண முடியுமா “ என்றான்.
வசந்திக்கு தூக்கி வாரிப்போட்டது.வடகறி செய்திருக்கிறாள் ஆனால்
இதுவரை செட்தோசை செய்ததில்லை.
“ சாரி செல்லம் “ என்ற ஷ்ரவனை மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பார்த்தாள் வசந்தி
அவனுக்கும் இவளைப் பார்த்து பாவமாக இருந்தது.
“மாமி,பரவாயில்ல.எனக்கு இட்லிக்கு ரசம் தொட்டு சாப்பிட ரொம்ப பிடிக்கும் அது செய்ய முடியுமா”என்று கொஞ்சம் இரங்கி வந்தான் ஷ்ரவன்.
“அதுக்கென்னடா தங்கம் பண்ணிட்டா போச்சு” என்று வசந்தி உற்சாகமாக சொன்னதும் குழந்தைகள் சந்தோஷமாக மீண்டும் டீவி பார்க்க ஹாலுக்கு ஓடினார்கள்.
அவர்கள் எல்லோரும் அன்று டீவி பார்தது பொழுதைக் கழித்தார்கள். எட்டு மணிக்கு இரவு உணவை முடித்த போது
ஆரவ் கேட்டான்.
“அம்மா எப்போ வருவாங்க”
“இப்போ மணி எட்டு இன்னும் டூ அவர்ஸ்ல வந்திடுவா” என்று
வசந்தி சொல்லிவிட்டு பாத்திரங்களை டிஷ்வாஷரில் போடுவதற்கு சமையலறைக்குப் போனாள்.
குழந்தைகளுடன் நீரஜாவைம் சங்கரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
சற்று நேரம் கழித்து மீண்டும் சமையலறைக்கு வந்த ஆரவ்
“மாமி , டூ அவர்ஸ் முடிஞ்சிதா” என்றான்.
“இல்ல தங்கம்,இன்னும் முடியல” என்று சிரித்துக்கொண்டே வசந்தி சொன்னதும்
“ஓகே” என்று சொல்லி ஹாலுக்கு ஓடினான் ஆரவ்..
வசந்தி சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
மீண்டும் அங்கே வந்த ஆரவ்
“அத்தை இப்போ டூ அவர்ஸ் ஆகிவிட்டதா” என்றான்.
“இன்னும் இல்லமா “ இப்படி வசந்தி சொன்னதும் ஆரவ் ஓடிவிட்டான்.
வசந்தி சிரித்துக் கொண்டே பாத்ருமை அலம்பிவிட்டு வெளியே வந்தாள்.
ஆரவ் மறுபடியும் ஓடிவந்து
“மாமி இப்போ முடிஞ்சிதா?” என்றவனை ஹாலுக்கு அழைத்து வந்த வசந்தி
கடிகாரத்தை காட்டி சின்ன முள் பெரிய முள் இப்படி வந்தாதான் டூ அவர்ஸ் முடியும் என்று விளக்கி சொன்னாள் வசந்தி.
அவன் திருப்தியாக தலையாட்டினான்.
பிறகு எல்லா வேலைகளும் முடிந்து தட்டில் பால் கோப்பைகளை எடுத்துப்போய் குழந்தைகளிடம் கொடுத்த போதும் அவன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தான் .
வசந்தி பெட்ரூமிற்கு போய் குழந்தைகளுக்கான படுக்கையை தயார் செய்துவிட்டு நைட்லாம்ப் ஆன் செய்தபோது அங்கு வந்த ஆரவ் கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது.
“மாமி, டூ அவர்ஸ் முடிஞ்சிடுத்து ஆனா அம்மா இன்னும் வரலயே”
என்று சொல்லிவிட்டு முதலில் மெதுவாக கேவ ஆரம்பித்தவன் பிறகு பெரிய குரிலில் அழ ஆரம்பித்தான்.
“அழாதே செல்லம்.வா டீவி பாக்கலாம்.இப்போ வந்திடுவா அம்மா” அவனை நம்ப வைக்க வாசல் கதவை கூட திறந்த வைத்தான் சங்கர்.
அவர்கள் சொல்லும் துளியும் வார்த்தைகளை நம்பாமல்
“டூ அவர்ஸ் முடிஞ்சிடுத்து நீங்க பொய் சொல்றீங்க.என்னை ஏமாத்தறீங்க.அம்மா இப்பவே வேணும் “ என்று ஓவென்று தரையில் புரண்டு அவன் அழுதபோது ஷ்ரவனும் பயந்துபோனான். அவன் முகமும் வாடிப் போய்விட்டது. ஆனாலும் வசந்திக்கு உதவ அவன் ஆரவ்வை கட்டியணைத்துக் கொண்டான்.அப்போதும் ,ஆரவ் அழுகையை துளியும் நிறுத்தவே இல்லை.முகம் சிவக்க அந்த அபார்ட்மென்ட் அதிர கத்தி கதறினான் ஆரவ்.
அவர்களுக்கு அவனை எப்படி சமாளிப்பது என்று ஒன்றுமே புரியவில்லை.நீரஜா விளையாட்டு காட்டி சிரிக்க வைக்க பார்த்தாள்.. நேரம் ஆக ஆக அவன் அழுகை அதிகமானது. ஆரவ்வின் உடம்பு சில்லென்று ஆகிவிட்டது.வேறு வழியில்லாமல் சங்கவிக்கு போன் செய்தான் சங்கர்.. அவளும் கணவருடன் டாக்சியில் வேகமாக வந்து சேர்ந்தாள்.அம்மாவைப் பார்த்ததும் ஆரவ்வின் அழுகை சற்று குறைந்தாலும் ரொம்ப நேரம் கேவிக் கொண்டே இருந்தான்.சங்கவி ஆரவ்வை இறுக அணைத்துக் கொண்டாள்.எல்லோரும் ஆரவ்வை சுற்றியே கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள்.
காலைல அழகாக விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை ரொம்ப நேரம் அழத்து எல்லோருக்குமே ரொம்ப வருத்தமாக போய்விட்டது.
அப்போது சட்டென்று ஞாபகம் வர ஆரவ்க்காக வாங்கி வைத்திருந்த சாக்லேட்டை எடுத்து வந்து அவனிடம் நீட்டினான் சங்கர்.
“வேண்டாம் மாமா. .அம்மாவோட பையில நிறைய சாக்லேட் இருக்கு” என்று கேவிக் கொண்டே சொல்லிவிட்டான் ஆரவ். சங்கரிடமிருந்து சாக்லேட்டை அவன் வாங்கவே இல்லை.
இருந்தாலும் அவனுக்கு சாக்லேட் வேண்டும் என்று ஆசையாக இருக்கவே தான் சொன்னதை நிரூபிப்பவன் போல உடனே தன் அம்மா சங்கவியின் கைப்பையில் சாக்லேட் எதாவது இருக்கிறதா என்று தேடினான்.ஆனால்,அங்கே சாக்லேட்டே இல்லை.
உடனே “அம்மா மாமகிட்டேந்து சாக்லேட்ட வாங்கி உன் பையில வச்சிட்டு அப்புறமா எடுத்து எனக்குக் குடுமா” ஆரவ் கேவிக்கொண்டே இப்படிச் சொன்னதும்,
முன்பின் நேரிலேயே பார்த்திராமல் ஆன்லைனில் மட்டுமே பேசி அறிமுகமாகிய சங்கரின் குடும்பம் தான்
“ஆன்லைன் பூச்சாண்டிகள்” என்று நினைத்து பயந்துதான் கதறி அழுதிருக்கிறான் ஆரவ். அதனால்தான் மயக்கமருந்து கலந்த சாக்லேட் என்று வாங்க மறுத்திருக்கிறான் என்ற உண்மையை உணர்ந்ததும் அவனுக்காக ஆசை ஆசையாய் கவிதை எழுதிய வசந்தியும் அதனை சேமித்து வைத்த சங்கவியிம் திகைத்துப் போனார்கள்.