“காலையிலேயே இப்படி வெய்யிலடிக்கிது.... மழை வருமானு பாத்தா வெள்ளம் தான் வருது... எதுவும் நமக்கு உதவற மாதிரி இல்லயே. உலகம் சூடாகிட்டதால இனிமேல இப்படிதான் இருக்கும்னு பேசிக்கறாங்களே உண்மையா டாக்டர் சார்?”
பீதியான குரலில் கேட்ட சேகரை, வெள்ளை வெளேறென்ற ஆடையில்மி க சுத்தமாக பளிச்சென்று காட்சியளித்த அந்த இளவயது டாக்டர் புருவங்களை சுருக்கி உற்று பார்த்தார்.சேகரின் படிய வாரப்படாத தலைமுடி,கண்களின் கீழ் கருவளையம், வறண்ட உதடுகள், கழுத்துக்கு இறங்கியிருந்த முக்கவசம்,,கசங்கிய ஆடை இவற்றை கவனித்தார் பிறகு ...தன்முக கவசத்தை சரி செய்தவாறே,
“எனக்கு சூடாக இல்லயே சேகர். ஒருவேளை உங்க முக கவசமோ அல்லது உங்க காக்கி சட்டையோ உடம்ப சூடாக்குதோ என்னவோ.சரி ஆட்டோவ எடுங்க போய்கிட்டே பேசுவோம் .”
என்றபடி ஆட்டோவில் ஏறப்போன டாக்டர் சற்று தயங்கி ஏறாமல் சற்று தள்ளி நின்றுகொண்டு.... ஏற்கனவே ட்ரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்ட சேகரிடம்,
“சேகர் உங்க மாமியார் கொரோனா டெஸ்ட் ரிசல்ட் என்ன ஆச்சு?” என்றார்
“நெகடிவ்னு வந்திடிச்சி டாக்டர்”
என்ற சொன்னவுடன் நிம்மதியுடன் ஆட்டோவில் ஏறிய டாக்டர் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
“சொல்ல மறந்துட்டேன் டாக்டர்... நாளைக்கே மறுபடியும் உங்க வீட்டுக்கு சமையல் வேலைக்கு வந்திடறனு எங்க மாமியார் சொல்ல சொன்னாங்க டாக்டர்”
சேகர் முடிப்பதற்குள் “வேணாம்பா நாங்களே இங்க சாப்பிட கூட நேரம் இல்லாமல் அலைஞ்சிகிட்டு இருக்கோம்.வீட்ல டாக்டரம்மா வேற கொரோனா பயத்துல வேலைக்கு யாரும் வர வேண்டாம்னு கார் ட்ரைவர கூட நிறுத்திட்டாங்க.எனக்கோ்ஏர்போர்ட் ல ட்யூட்டி எப்படி போறதுனு நினைச்சிட்டே இருக்குற போது தான்...நீங்க வீட்ல சும்மா தான் இருக்கீங்கனு...
....உங்க மாமியார் சொன்னது ஞாபகம் வந்துது. அதான் உங்களுக்கும் ஒரு வேல குடுத்த மாதிரி இருக்குமேனு கூப்பிட்டேன்.ஆமாம்.....கேக்க மறந்திட்டேன்...கொரோனா டெஸ்ட் எடுக்க நினைச்சவங்க.. யாராவது உங்க ஆட்டோல வந்தாங்களா என்ன? அப்படி வந்திருந்தா ஆட்டோவை சுத்தம் பண்ணனும். நீங்களும் டெஸ்ட் எடுக்கனும்”
“இதுவரைக்கும் யாரும் வரலங்க டாக்டர். என் சம்சாரம் வேல இல்லனாலும் பரவால்ல ஆட்டோ ஓட்டாத. இது குழந்தைங்க இருக்கர வீடுனு சொல்லிட்டா.அதான் நான் சவாரியே போகலங்க டாக்டர்.
பதில் திருப்தியளித்தாலும் “ ஒரு மாசமா வேலயே இல்லனா குடும்பம் எப்படி போகுது” காற்றில் கலைந்த தன் முடியை கைகளால் கோதிய படியே அக்கறையோடு கேட்டார்.
“கஷ்டம்தான் டாக்டர். வீடு வாடக ,ஆட்டோவுக்கு ட்யூ கட்டணும் ,குழந்தைங்க் ஸ்கூல் பீஸூ இதெல்லாம் யோசிச்சி தான் துணிஞ்சி இன்னிக்கு வந்துட்டேன் டாக்டர்.”
இயலாமை வார்த்தைகளில் கொப்பளிப்பதை உணர்ந்த டாக்டர் , தன் பர்சிலிருந்து புத்தம் புதிதாய் இருந்த ஐந்து இரண்டாயிரம் நோட்டு தாள்களை உருவி கைகளில் தயாராக வைத்து கொண்டார்.
ட்ராபிக் இல்லாமல் வெறிச்சென்றிருந்த சாலை சேகருக்கு ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது.பத்தே நிமிடத்தில் ஏர்போர்ட் வந்தது நம்ப முடியாமல் இருந்தது.
அடிக்கடி டாக்டருக்கு சவாரி வரலாமே மனதில் நப்பாசை எட்டிப் பார்த்தது சேகருக்கு.
“இங்க எத்தனை நாள் உங்களுக்கு ட்யூட்டி இருக்கு டாக்டர்?” மனதின் ஏக்கம் வார்த்தைகளில் அப்பட்டமாய் தெரிந்தது.
“வாரத்துக்கு மூணு நாள்.இப்படி இந்த பக்கம் நிறுத்துங்க”
சொன்ன டாக்டரிடம்...
“நீங்க எங்க போகனுனாலும் கூப்பிடுங்க டாக்டர் உடனே நான் வரேன்” தன் வருமானத்திற்கு ஒரு வழி ஏற்படுத்த பேசியவாறே டாக்டர் சொன்ன இடத்தில் ஆட்டோவை நிறுத்திய சேகரின் கைகில் பணத்தை திணித்த டாகடர்.
“கண்டிப்பா கூப்பிடறேன் சேகர். இப்போ என் வேல முடிஞ்சி நான் திரும்பிவர மூணு மணிநேரம் ஆகும். நீங்க
இங்க காத்திருக்க வேணாம்.வீட்டுக்கு போய்ட்டு வாங்க. ஆனா.. மறுபடியும் என்னை பிக் அப் பண்ண வரும்போது நல்லா. சாப்பிட்டுவிட்டு வாங்க. கையில க்ளவ்ஸ் போட்டுக்கோங்க. முக்கவசம் இதுவே போதும். ஆனா மூக்கும் வாயும் மூடி இருக்கனும். நான் உங்க கிட்ட பேச்சு குடுக்க மாட்டேன்.என்ன நீங்க தொடக் கூடாது. அதுக்குதான் இப்பவே பணத்தை குடுத்தேன்.முக்கியமா எங்க வீட்டுகிட்ட நான் இறங்கினதுமே... உங்க ஆட்டோவை சுத்தமாக கழுவணும்.அதுக்கு இப்பவே தேவையானத ரெடி பண்ணி வெச்சிடுங்க. வீட்ல யார் மேலயும் படக் கூடாது. முக கவசத்தை பாதுகாப்பா டிஸ்போஸ் பண்ணனும்.கை நல்லா கழுவிட்டு அப்புறம் குளிக்கனும் புரியுதா?”
“டாக்டர் நீங்க....”குழப்பத்துடன் பார்த்த சேகரிடம்
“ஆமாம்பா இப்போ கூட ஏர்போர்ட்ல இருக்கறவங்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கதான் போய்க்கிட்டு இருக்கேன். எனக்கான கடமை அதுதான். ஏற்கனவே நாலு முறை எனக்கே கொரோனா டெஸ்ட் எடுத்தாச்சு.சரி நேரமாச்சு நான் கிளம்பறேன்.சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.” சொல்லிவிட்டு வேகமாக சென்று கொண்டிருந்த டாக்டரை பார்த்த சேகருக்கு மனம் வலித்தது.கையிலிருந்த பணம் கனத்தது.எட்டி பார்த்த கண்ணீர் டாக்டரை மறைத்தது.